பாரதியார் | பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: காணி நிலம் | 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum
இயல் இரண்டு
கவிதைப்பேழை
காணி நிலம்
நுழையும்முன்
அடுக்ககங்களில் வாழும் பலர் இயற்கை தரும் இன்பத்தை எண்ணி ஏங்குகிறார்கள். 'வீடு' என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் கற்பனை செய்கிறார். இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்த்துகிறார். இயற்கையைப் பலவகைகளிலும் போற்றிடும் பாரதியின் கனவு இல்லத்தைப் பற்றி அறிவோம்.
* காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்குத்
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
தன் நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணி அருகினிலே - தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பண்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர் போலே - நிலாவொளி
முன்பு வரவேணும் - அங்குக்
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதில் படவேணும் - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம்
தென்றல் வரவேனும்,
- பாரதியார்
சொல்லும் பொருளும்
காணி -
நில அளவைக் குறிக்கும் சொல்
மாடங்கள் -
மாளிகையின் அடுக்குகள்
சித்தம் -
உள்ளம்.
பாடலின் பொருள்
காணி அளவு நிலம் வேண்டும். அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்கவேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும். இளநீரும் கீற்றும் தரும் தென்னைமரங்கள் வேண்டும்.
அங்கே முத்து போன்ற நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.
நூல் வெளி
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர். எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார். பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.