பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: கிழவனும் கடலும் | 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum
இயல் இரண்டு
விரிவானம்
கிழவனும் கடலும்
நுழையும்முன்
மனிதன் இயற்கையோடு போராடிக்கொண்டே இருக்கிறான். சில நேரங்களில் வெற்றி பெறுகிறான். சில நேரங்களில் தோல்வி அடைகிறான். ஆனால் முயற்சிகள் என்றும் ஓய்வதில்லை. மனிதன் இயற்கையோடு நடத்துகிற போராட்டமே அவன் வாழ்வை அமைக்கிறது. போராடுவதில் மகிழ்ச்சியும் வெற்றியும் இருக்கிறது. மீன் பிடிக்கப் போராடும் மீனவர் ஒருவரின் வாழ்வைப் பார்ப்போமா!
கிழவனும் கடலும் (The Oldman and the Sea.) ஆங்கிலப் புதினம் தமிழில் மொழிபெயர்க்கப்பட் படக்கதையாக இங்குச் சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் 1954ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது. இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தக் கதை. இக்கதையின் நாயகன் சாண்டியாகோ. வயது முதிர்ந்த மீனவர் அவர். முன்பெல்லாம் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்பமாட்டார். ஆனால், கடந்த எண்பத்து நான்கு நாள்களாக ஏனோ அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை. மனோலின் என்னும் சிறுவன் மீன்பிடிக்கக் கற்றுக்கொள்வதற்காக முதல் நாற்பது நாள்களும் அவருடன் கடலுக்கு வந்தான். அவன், அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு பேச்சுத்துணையாகவும் இருந்தான். அவரோடு கடலுக்குப் போனால் ஒரு மீனும் கிடைப்பதில்லை என்று அவனை வேறு படகிற்கு அனுப்பிவிட்டனர் அவனது பெற்றோர். இப்போதெல்லாம் தனியாகவே மீன்பிடிக்கச் செல்கிறார் சாண்டியாகோ.
அன்று எண்பத்து ஐந்தாவது நாள்...
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார் சாண்டியாகோ.
எனக்கு மீன்கள் கிடைக்கவே கிடைக்காது என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதை மாற்றிக்காட்ட வேண்டும்.
தூண்டிலிட்டுக் காத்திருக்கிறார்.
தனியாக வந்திருக்கக் கூடாது. பேச்சுத் துணைக்கு மனோலின் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!
அடுத்த நாள் காலை.
இரவு முழுவதும் கடலில் இருந்துவிட்டேன். ஒரு மீனும் சிக்கவில்லையே! ஆனது ஆகட்டும்! இனி நான் மீன் இல்லாமல் கரை திரும்பப் போவதில்லை.
நண்பகல்
தூண்டில் கயிறு அசைகிறது
அடடே! தூண்டில் கயிற்றை ஏதோ இழுப்பது போல் இருக்கிறதே! ஏதோ மீன்தான் வந்திருக்கும் என நினைக்கிறேன்.
வா! வா! மீனே! தூண்டில் முள்ளில் உனக்காகச் சூரைமீனை மாட்டி வைத்திருக்கிறேன். சாப்பிடு, சாப்பிடு... அப்போதுதானே நீ என்னிடம் மாட்டுவாய் வா! வா! அப்படித்தான்.. வா!
தூண்டிலில் மீன் சிக்கிக்கொள்கிறது
தூண்டிலை வேகமாக இழுக்கிறதே! நிச்சயமாக இது பெரிய மீனாகத்தான் இருக்கவேண்டும்.
மீனைப் படகுக்குள் இழுக்க முயற்சி செய்கிறார். முடியவில்லை.
மீனே! ஏன் இப்படி தூண்டிலை இழுக்கிறாய்?
என்னையும் கடலுக்குள்|
'இழுத்துத் தள்ளிவிடப் பார்க்கிறாயா?
மீன் நீருக்கு மேலே வருவதும் மூழ்குவதுமாக இருக்கிறது.
மேலேயும் வராமல் ஆழத்திற்கும் செல்லாமல் படகை எங்கோ இழுத்துக் கொண்டே போகிறதே! இருக்கட்டும். இருக்கட்டும்! எப்படியும் மேலே வந்துதானே ஆக வேண்டும்!
மாலை நேரம்.
பசியும் சோர்வும் என்னை வாட்டுகின்றன. நண்பகல் தூண்டிலில் சிக்கிய மீன் நாலு மணி நேரமாக என்னிடம் ஆட்டம் காட்டுகிறதே!
மீன் அசைவின்றி இருக்கிறது. மீனுடன் போராடிய களைப்பில் சாண்டியாகோ சற்றுக் கண்ணயர்ந்து விட்டார்.
மீன் மீண்டும் தூண்டிலை இழுக்கிறது. சாண்டியாகோவின் உறக்கம் கலைகிறது.
ஓ! இரவ முழுவதும் தூக்கம் இல்லாததால் என்னை அறியாமல் தூங்கிவிட்டேனோ? இனியும் சும்மா இருக்க முடியாது.
ம்ம்...
அப்படித்தான் ஆகட்டும். மேலே வா! இன்று என்னிடம் இருந்து உன்னால் தப்பிக்கவே முடியாது.
சாண்டியாகோ தூண்டிலை இழுக்கிறார். மீன் முதன்முதலாக நீருக்கு மேலே துள்ளிக் குதிக்கிறது.
'ஆகா! தூண்டிலில் மாட்டியது நீதானா? இப்போதுதான் உன்னை முழுமையாகப் பார்க்கிறேன். அடேயப்பா! எவ்வளவு பெரிய மீன்!
மீன் படகைச் சுற்றி வட்டமிடுகிறது.
ஏ மீனே! படகைச் சுற்றிச் சுற்றி ஏன் இப்படி வட்டமிடுகிறாய்? நில், நில்! என் வலிமையை எல்லாம் திரட்டி உன்னை எதிர்க்கப் போகிறேன்.
மீண்டும் மேலே வருகிறாயா? விடமாட்டேன் நீ, எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. என் உயிர் உள்ளவரை உன்னுடன் போராடி வெற்றி பெறுவேன்.
நான் சாப்பிடவும் இல்லை, தூங்கவும் இல்லை. இத்தனை மணி நேரமாக உன்னுடன் போராடுகிறேனே! ஏன் இப்படித் துள்ளுகிறாய்?
உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீ போராடுகிறாய், நான் என் இலக்கை அடையப் போராடுகிறேன். இந்தப் போராட்டத்தின் முடிவில் ஒன்று நான் உயிரோடு இருப்பேன் அல்லது நீ இருப்பாய்.
மீன் படகுக்கு அருகில் மேலெழும்பிக் குதிக்கிறது. சாண்டியாகோ ஈட்டியால் மீனைக் குத்துகிறார்.
இறுதியாக உன்னைக் கொன்று விட்டேன். இனிமேல் தான் நிறைய வேலை இருக்கிறது, கயிறுகளில் சுருக்குகள் போட வேண்டும்.
மீனின் நீளம் அதிகமாக இருந்ததால் அதைப் படகின் பக்கவாட்டில் கட்டுகிறார்.
எனக்கு மீன் கிடைக்காது என்று எல்லோரும் சொன்னார்கள், பார்த்தீர்களா? வலை இல்லாமல் இவ்வளவு பெரிய மீனை யாராவது பிடித்தது உண்டா? விடா முயற்சியின் பயனை இன்று நான் உணர்ந்தேன்.
அப்போது படகை நோக்கிச்சுறா மீன் வருகிறது!
'நான் பிடித்த மீனைச் சாப்பிடவா வருகிறாய்!. என் ஈட்டிக்கு நீயும் இரையாக வேண்டியதுதான்.
மேலும் சில சுறாமீன்கள் வருகின்றன.
'நான் பிடித்த மீனை அவ்வளவு எளிதாகப் பறிகொடுத்துவிட மாட்டேன்....
சாண்டியாகோ சுறா மீன்களை வீழ்த்துகிறார்.
என்ன ஒரு போராட்டம்! அப்பாடா ஒருவழியாக எல்லாம் ஓய்ந்தது. இந்த மீன் செய்த அட்டகாசங்களை மனோலின் பார்த்திருக்க வேண்டும்! சரி போகட்டும். உடனே சென்று நடந்த எல்லாவற்றையும் அவனிடம் சொல்ல வேண்டும்.
கரையில்...
ஒரு வழியாகக் கரைக்கு வந்து விட்டேன். மிகவும் களைப்பாக இருக்கிறது சரி, படகை இழுத்துக் கட்டுகிறேன்.
படகோடு இருந்த மீனைப் பார்க்கிறார்.
ஆ! என்ன இது! சுறாக்கள் தின்றது போக கடைசியில் மீனின் தலையும் அதன் எலும்பும்தாம் மிஞ்சியுள்ளனவா?
வீட்டில்...
சாண்டியாகோவைக் காண மனோலின் வருகிறான்.
தாத்தா உன்னைப் பார்க்கத்தான் ஓடோடி வந்தேன்.
அடேயப்பா! எவ்வளவு பெரிய மீன் அது! மீன்பிடிப்பதில் பெரிய வீரன் தாத்தா நீ!
மனோலின் நான் பிடித்த மீனை நீ பார்த்தாயா? கடைசியில் எலும்பும் தலையும்தான் மிச்சம்!
அதனால் என்ன தாத்தா? உன் திறமையும் விடாமுயற்சியும் வென்றுவிட்டதே! இனி உன்னை யாரும் பழித்துப் பேசமுடியாது. தாத்தா! உன்னிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. இனி நான் உன்னோடுதான் மீன் பிடிக்க வருவேன்...