பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: சிறகின் ஓசை | 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum
இயல் இரண்டு
உரைநடை உலகம்
சிறகின் ஓசை
நுழையும்முன்
மனிதர்கள் பொருள் தேடுவதற்காக வேறு ஊர்களுக்குச் செல்கிறார்கள். சிலர் திரும்புகிறார்கள். சிலர் அங்கேயே தங்குகிறார்கள். மனிதர்களைப் போலவே பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன. பறவைகள் போகாத நாடுகள் இல்லை; மலைகள் இல்லை; நீர்நிலைகள் இல்லை; பறவைகளோடு கொஞ்சம் பறந்து போகலாமா!
மனிதர்கள் வெளியூர்களுக்குச் சென்று மீண்டும் தம் சொந்த ஊருக்குத் திரும்புவதை அறிவோம். அதைப் போலவே பறவைகளும் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன; குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர். நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.
பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன. சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.
வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
• தலையில் சிறகு வளர்தல்
• இறகுகளின் நிறம் மாறுதல்
• உடலில் கற்றையாக முடி வளர்தல்
ஒருவகைப் பறவை வேறுவகைப் பறவையாக உருமாறித் தோன்றும் அளவிற்குக்கூடச் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
தெரிந்து தெளிவோம்
கப்பல் பறவை சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird), இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி இலக்கியங்களிலும் செய்திகள் உள்ளன. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் நாராய் நாராய்,செங்கால் தாராய்" என்னும் பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில் உள்ள "தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.
ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.
தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது? உங்களுக்குத் தெரியுமா? சிட்டுக் குருவிதான் .
அது உருவத்தில் சிறிய இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடளே ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும். ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும். பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.
தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும். சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகன் ஆகும். சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும். அதனால்தான் விரைவாகச் செல்பவளைச் சிட்டாய்ப் பறந்து விட்டான் என்று கூறுகிறோம்.
சிட்டுக்குருவிகனின் அழிவுக்குக் காரணங்கள்
● மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.
● நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை.
● தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப் படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன. சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை.
● உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.
பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை
● ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும்.
● நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்ச்ச வேண்டும்.
● தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
காக்கைகுருவி எங்கள் சாதி - என்று பாரதியார் பாடினார். சமைப்பதற்குத் தம் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக் குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டுப் பட்டினியாக இருந்தாராம் இவர்.
இந்தியாவின் பறவை மனிதர்
இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி. தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார். அதனால், அவர் 'இந்தியாவின் பறவை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' (The fali of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.
மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்!
பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது!
என்கிறார் பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி. இவ்வுண்மையை நாமும் உணர்ந்து இயற்கையைப் போற்றிப் பறவைகளைக் காப்போம்.
பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY)
எனப்படும்.
உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் - 20