Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | உரைநடை: தமிழர் பெருவிழா

பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தமிழர் பெருவிழா | 6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal

   Posted On :  30.06.2023 07:30 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்

உரைநடை: தமிழர் பெருவிழா

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல் : உரைநடை: தமிழர் பெருவிழா | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

உரைநடை உலகம்

தமிழர் பெருவிழா


 

நுழையும்முன்

விரும்பிக் கொண்டாடுவது விழா எனப்படும். உறவுகள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாக்கள் மனத்திற்கு மகிழ்வைத்தரும்; மனிதரிடையே ஒற்றுமையை வளர்க்கும். தமிழரின் நாகரிகம், வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. விழாக்கள் நமது பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கின்றன. தமிழருக்கே உரிய சிறப்பான விழாவைப் பற்றி அறிவோம் வாருங்கள்.


இயற்கையோடு இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கைமுறை ஆகும். இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு. தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும். இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.

கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத்திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே, இத்திருவிழாவை அறுவடைத்திருவிழா என்றும் அழைப்பர். அந்தச் சமயத்தில் இயற்கை அன்னை பசுமையான ஆடை உடுத்தி, பல நிறப் பூக்களைச் சூடி இருப்பாள். காயும் கனியும் கரும்பும் எங்குப் பார்த்தாலும் வினைந்து காட்சி தரும்.

உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் தன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே, இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். பொங்கல் திருநாள் இரண்டு நான்கள் முதல் நான்கு நான்கள் வரை கொண்டாடப்படுகிறது. இது வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபடுகிறது.

போகித்திருநாள்

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" (நன்னூல் நூற்பா-462 ) என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.

தெரிந்து தெளிவோம்

வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

பொங்கல் திருநாள்

தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும். இத்திருநாளன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர். மாவிலைத் தோரணம் கட்டுவர். புதுப்பானையில் புத்தரிசியோடு வெல்லம், முந்திரி, நெய் சேர்த்துப் பொங்கலிடுவர். பொங்கல் என்பதற்குப் பொங்கிப்பெருகி வருவது என்று பொருள் பொங்கல் பொங்கி வரும் வேளையில் "பொங்கலோ பொங்கல்" என்று மங்கல ஒலி எழுப்பிப் போற்றுவர். "பொங்கல் பொங்கி வருவதுபோல் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிப் பெருகும்" என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். பின்னர், தலைவாழை இலையிட்டுப் பொங்கலைப் படைப்பர், கரும்பு, மஞ்சள் கொத்து, தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வைத்து வழிபடுவர். வினைச்சலுக்குக் காரணமான கதிரவனை நன்றியோடு வணங்கி மகிழ்வர். சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் அளித்துத் தாமும் உண்டு மகிழ்வர்.

தெரிந்து தெளிவோம்

தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்


பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு. உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கலன்று மாடுகளை நீராட்டுவர். கொம்புகளைச் சீவி வண்ணங்கள் தீட்டுவர். மாடுகளின் கழுத்திலே மணிகளைக் கட்டுவர். பூவும் தழையும் சூட்டுவர். மாட்டுக்கு மஞ்சள், குங்குமம் இடுவர். பொங்கல், தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு போன்றவற்றைப் படைத்து வழிபடுவர். மாட்டுப்பொங்கல் நாளிலோ அதற்கு அடுத்த நாளிலோ சில ஊர்களில் மஞ்சுவிரட்டு நடைபெறும். மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது.

தெரிந்து தெளிவோம்

திருவள்ளுவர் கி.மு (பொ..மு) 31இல் பிறந்தவர். எனவே, திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31ஐக் கூட்டிக்கொள்ள வேண்டும். (.கா.) 2018 + 31 - 2049

காணும் பொங்கல்

மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர். மேலும் பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர். விளையாட்டுப் போட்டிகன் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.

இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல் விழா ஆகும். உலகு எங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

தெரிந்து தெளிவோம்

அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது. குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.

Tags : Term 2 Chapter 2 | 6th Tamil பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal : Prose: Tamilar PeruVila Term 2 Chapter 2 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல் : உரைநடை: தமிழர் பெருவிழா - பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்