பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal
கற்பவை கற்றபின்
1. பாடப்பகுதியில் இடம்பெற்ற அதிகாரங்களில் உள்ள குறட்பாக்களுள் ஐந்தனை பொருளுடன் எழுதி வந்து வகுப்பில் பகிர்க.
விடை
விருந்தோம்பல் : விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவு அல்லது பொதுவாக, உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பது. அதாவது, விருந்தினர், அந்நியர்களை வரவேற்று விருந்தோம்பி மகிழ்விப்பதாகும்.
1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தேம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
பொருள் : வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம் வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆகும்.
2. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
பொருள் : தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
3. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
பொருள் : நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
கள்ளாமை : தனக்கு உரிமையில்லாத மற்றவர் உடைமையை அவரறியாமல் கைக்கொள்ளவோ வஞ்சித்து எடுத்துக் கொள்ளவோ, எண்ணாதிருத்தலும் அங்ஙனம் செய்யாதிருத்தலும் கள்ளாமை ஆகும்.
1. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
பொருள் : பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
2. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
பொருள் : அருளைப் பெரிதாகக் கருதி அன்புடையவராய் நடத்தல் பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை .
3. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
பொருள் : நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும். கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.
2. திருக்குறன் உலகப் பொதுமறை எனப்படுவது ஏன்? வகுப்பில் பேசுக.
விடை
திருக்குறள் உலகப்பொதுமறை :
(i) திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ‘தமிழுக்குக் கதி’ எனச் சிறப்பிக்கப்படுவது. (க-கம்பராமாயணம், தி – திருக்குறள்) நம் தாய்மொழியான தமிழ்மொழிக்கு மணிமகுடம் போன்றது. புகழ்பெற்ற இலக்கியமாகும். திருக்குறள் நூலானது திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ்மொழியில் இயற்றப்பட்ட நூலாகும். மேலும், திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.
(ii) இந்நூல் உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்துள்ளமையால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.
(iii) உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் பெற்றுள்ளது. இதுவரை 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.