பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: மனம் கவரும் மாமல்லபுரம் | 6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal
இயல் இரண்டு
விரிவானம்
மனம் கவரும் மாமல்லபுரம்
நுழையும்முன்
கலைகளும் இலக்கியங்களும் ஒரு நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்துவன. தமிழர்கள் சிற்பம், ஓவியம் முதலிய கலைகளில் சிறந்திருந்தனர். காலத்தால் அழியாத கலைச் செல்வங்கள் பலவற்றைப் படைத்தனர். நூற்றாண்டுகள் பல கடந்தும் கலைநயம் குறையாமலும் அழகு சிதையாமலும் விளங்கும் கலைச்செல்வங்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்றைக் காண்போம் வாருங்கள்.
குளிர்ந்த காற்று வீசியது. வெளிச்சம் எங்கும் பரவியது. கயல் தன் கண்களை அகல விரித்துப் பார்த்தான். 'என்ன இடம் இது? நாம் எங்கே இருக்கிறோம்?' கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். அவளுக்கு முன்னாவ் ஒரு கோவில் தெரிந்தது. வியப்புடன் பார்த்தாள். 'என்ன இது? கோவில் போலவும் இருக்கிறது. தேர் போலவும் இருக்கிறதே!'
இதைப் பற்றி யாரிடம் கேட்பது எனத் திகைத்து நின்றாள். அப்போது தூரத்தில் ஒருவர் குதிரையில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தோற்றத்தில் அரசரைப் போல இருந்தார். 'இவர் யாராக இருக்கும்? சரி அருகில் வரட்டும் பார்க்கலாம்' என எண்ணினாள். குதிரை அவன் அருகில் வந்து நின்றது. குதிரையில் இருந்து அவர் இறங்கினார்.
கயல் அவரிடம், 'ஐயா! வணக்கம். தாங்கள் பார்ப்பதற்கு அரசர் போல் உள்ளீர்கள். தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டாள்.
"நான் பல்லவ மன்னன். என் பெயர் நரசிம்மவர்மன். நான் மற்போரில் சிறந்தவன். அதனால்,
எனக்கு மாமல்லன் என்னும் பெயரும் உண்டு. உன் பெயர் என்ன?"
என்று கேட்டார் அவர்.
"ஐயா, என் பெயர் ம.தி.கயல்"
"மதி கயல் என்று இரண்டு பெயர்களா உனக்கு?"
'இல்லை ஐயா, ம. தி, என்பவை என் பெயரின் தலைப்பெழுத்துகள். என் அம்மா பெயர் மங்கை. என் அப்பா பெயர் திருநாவுக்கரசு. அப்பெயர்களின் முதல் எழுத்துகளைத் தலைப்பெழுத்துகளாக வைத்துள்ளனர்."
'அப்படியா? மகிழ்ச்சி. இங்குத் தனியாக எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?"
"இது கோவிலா தேரா என்று தெரியவில்லை. அதனால்தான் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்"
என்றாள் கயல்.
"நான் உனக்கு விளக்குகிறேன் கயல். ஒரே பாறையில் செதுக்கிச் செய்யப்பட்ட கோவில் இது. இரதம் (தேர்) போன்ற வடிவத்தில் இருக்கிறது. அதனால் இதனை இரதக் கோவில் என்று அழைக்கிறார்கள்"
என்று விளக்கினார் மாமல்லர்.
கயல் சுற்றிலும் பார்த்தாள். அங்கே மொத்தம் ஐந்து இரதங்கள் இருந்தன.
"இவை என்ன ஐயா?"
என்று கேட்டாள்.
"ஐந்து இரதங்கள் உள்ளதால் இவ்விடத்திற்குப் பஞ்சபாண்டவர் இரதம் என்று பெயர். இவையெல்லாம் என் காலத்தில் உருவாக்கப்பட்டவை' என்றார் மாமல்லர்,
"வியப்பாக உள்ளதே! நீங்கள் நீண்ட காலத்துக்கு முன்பு வாழ்ந்தவர் அல்லவா?"
"ஆமாம் கயல். தான் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்."
"இவற்றை உருவாக்குவதற்குக் கற்களை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்?"
"இங்கேயே இருந்த பாறைகளில்தான் இவற்றை உருவாக்கினோம்."
தெரிந்து தெளிவோம்
மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள்
1. அர்ச்சுனன் தபசு
2. கடற்கரைக் கோவில்
3. பஞ்சபாண்டவர் ரதம்
4. ஒற்றைக்கல் யானை
5. குகைக்கோவில்
6. புலிக்குகை
7. திருக்கடல் மல்லை
8. கண்ணனின் வெண்ணெய்ப் பந்து
9. கலங்கரை விளக்கம்
'அப்படியா? இவற்றைக் கோவிலாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?"
"நான் சிறுவனாக இருந்த போது ஒருநாள் என் தந்தையுடன் இந்தக் கடற்கரைக்கு வந்தேன். இந்தப் பாறையின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தேன். இந்தப் பாறையின் நிழல் யானை போல் தரையில் விழுந்தது. என் தந்தையிடம் அதனைக் காட்டினேன். என் தந்தை, 'ஆம்,நரசிம்மா! இது யானை போலத்தான் தெரிகிறது. அதோ அந்தக் குன்றின் நிழலைப் பார். கோவில் போலத் தெரிகிறது' என்றார்.
"ஆமாம் அப்பா! அந்தக் குன்றைக் கோவிலாகவும்,
இந்தக் குன்றைக் கோவில் முன் நிற்கும் யானை போலவும் மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே' என்றேன். 'நல்ல சிந்தனை. இவை இரண்டை மட்டும் அல்ல, இங்குள்ள ஒவ்வொரு குன்றையும் சிற்பமாக மாற்றலாம். ஒவ்வொரு பாறையையும் தந்தி, சிங்கம், யானை என்று மாற்றுவோம். இந்தக் கடற்கரையையே சிற்பக்கலைக் கூடமாக மாற்றிவிடலாம்' என்று கூறினார் என் தந்தை"
என்று சொல்லி முடித்தார் மாமல்லர்.
*உங்கள் தந்தையும் அரசரா?' என்று கேட்டாள் கயல்.
'ஆமாம் கயல். எனக்கு முன்பு பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர் என் தந்தை மகேந்திரவர்ம பல்லவர். அவர் காலத்தில் இந்தச் சிற்பப் பணி தொடங்கியது. என்காலம், என்மகனின் காலம், என் பேரனின் காலம்வரை நடைபெற்றது. நான்கு தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை இந்தச் சிற்பங்கள்" என்று பெருமிதத்துடன் கூறினார் மாமல்லர்.
"இந்தச் சிற்பங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறதே" என்றாள் கயல்.
"சிற்பக் கலையின் உச்சத்தை நீ பார்க்க வேண்டுமா? என்னுடன் வா!"
என்று கூறிக் கயலை அழைத்துச் சென்றார் மாமல்லர்.
இருவரும் அர்ச்சுனன் தபசுச் சிலைக்கு அருகில் வந்து நின்றனர். அங்குப் பாறையில் இருந்த சிற்பங்களைக் கண்டு கயல் வியந்து போனாள். 'ஐயா! இந்தப் பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல அழகாக உள்ளன" என்றாள்.
ஆம் கயல். இவற்றுக்குப் புடைப்புச் சிற்பங்கள் என்று பெயர். இந்த இரண்டு பாறைகளிலும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன."
அதில் ஒருவர் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி, வணங்குவது போல ஒரு சிற்பம் உள்ளது. அவரது உடல் மெலித்து, எலும்புகளும் நரம்புகளும் வெளியே தெரிவது போல அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.
ஆம் கயல். அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி இது. இந்தச் சிற்பம் உள்ளதால்தான், இப்பாறைக்கு அர்ச்சுனன் தபசு' என்று பெயர். இதனைப் 'பகீரசன் தவம்' என்றும் கூறுவர்.
'அப்படியா! இந்த இடத்தில் இரண்டு பாறைகளுக்கு இடையில் நீர் வடிந்து வந்த தடம் தெரிகிறதே?"
ஆம் கயல். அங்கே ஆகாயகங்கை பூமிக்கு வருவது போல அமைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் இதன் வழியாக மழைநீர் பாய்ந்து வரும். அப்போது உண்மையிலேயே கங்கை ஓடி வருவதைப் போல இருக்கும்" என்றார் மாமல்லர்.
"இங்கே யானைச்சிற்பங்கள் அழகாக உள்ளன. சிங்கம்,
புலி, அன்னப்பறவை, உடும்பு, குரங்குகள் என எல்லாமே உயிருள்ளவை போலச் செதுக்கப்பட்டுள்ளன. இங்கே பாருங்கள்! மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம். அது பார்ப்பதற்கு உண்மையிலேயே மான் ஒன்று இருப்பதைப் போலவே தோன்றுகிறது" என்று வியப்புடன் கூறினாள் கயல்.
"இங்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன கயல். இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது"
என்றார் மாமல்லர்.
"இந்த ஊரின் பெயர் என்ன ஐயா? " என்று ஆர்வத்தோடு கேட்டாள் கயல்.
"இதுதான் தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாகிய மாமல்லபுரம்"
தெரிந்து தெளிவோம்
சிற்பக் கலை வடிவமைப்புகள் நான்கு வகைப்படும்.
குடைவரைக் கோயில்கள்
ஒற்றைக் கல் கோயில்கள்
கட்டுமானக் கோயில்கள்
புடைப்புச் சிற்பங்கள்
இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்.
கயல் சிந்தித்தவாறு
"உங்கள் பெயர் மாமல்லன். இந்த ஊரின் பெயர் மாமல்லபுரம். இரண்டுக்கும் ஏதோ ஒற்றுமை உள்ளதே" எனக் கேட்டாள்.
ஆம் கயல். இந்த ஊர் உருவாக எனது கேள்விதான் காரணம் என்பதால் என் தந்தை என் பெயரையே இந்த ஊருக்கு வைத்துவிட்டார். இக்காலத்தில் இவ்வூரை மகாபலிபுரம் எனவும் அழைக்கிறார்கள்".
. "உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா!"
எனக்கும்தான் கயல். உன்னோடு பேசிக் கொண்டிருந்ததில் என் இளமைக் காலத்திற்கே சென்றுவிட்டது போல உணர்கிறேன். மிக்க மகிழ்ச்சி மங்கை திருநாவுக்கரசு கயல்."
அப்போது
"கயல், கயல் எழுந்திரு. இன்று மாமல்லபுரத்திற்குக் கல்விச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று கூறினாயே! இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாய். தூக்கத்தில் எங்கள் பெயரை வேறு சொல்லிக் கொண்டிருக்கிறாய்" என்னும் தாயின் குரல் கேட்டுக் கண் விழித்தாள் கயல்.
"இவ்வளவும் கனவா? நேற்று மாமல்லபுரத்தைப் பற்றி ஆசிரியர் கூறிய செய்திகளை நினைத்துக் கொண்டே தூங்கினேன். அதனால் இவை எல்லாம் கனவில் வந்துள்ளன. கனவில் கண்டவற்றை இன்று நேரில் காணப்போகிறேன்" என்று எண்ணி மகிழ்வுடன் சுற்றுலா செல்லத் தயாரானாள் கயல்.