சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - சாலை விபத்துகளுக்கான காரணங்கள் | 8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations
சாலை விபத்துகளுக்கான
காரணங்கள்
அதிக வேகம் - அதிக
வேகம் அதிக ஆபத்து. பெரும்பாலானஉயிரிழப்பு விபத்துக்கள் அதிக வேகத்தினால் தான் ஏற்படுகின்றது.
வேகத்தின் அதிகரிப்பானது விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் காயத்தின் தீவிரத்தினை
அதிகரிக்கிறது. ஒரு வாகனத்தின் பின்னால் மிக நெருக்கமாக பின்தொடர்தல் (Tailgating)
என்பது சட்டவிரோதம் மற்றும் ஆபத்தான பழக்கமும் ஆகும்.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் - மது
அருந்துவது கவனத்தைக் குறைக்கும். அதன் காரணமாக வரும் மயக்கத்தினால் பார்வை தடைபடுகின்றது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. மது அருந்தியதைக்
கண்டறிய சீரற்ற சுவாச பரிசோதனை (Random breath test) செய்யப்படுகிறது.
வாகன ஓட்டிகளின் கவனச் சிதறல் - கவனச்
சிதறல் என்பது வாகனத்தின் வெளியிலிருந்தோ உள்ளிருந்தோ ஏற்படக்கூடும். வாகனம் ஓட்டும்
போது செல்லிடப்பேசியில் பேசுவது பெரிய கவனச்சிதறலாக இந்நாட்களில் உள்ளது. செல்லிடப்பேசியில்
பேசும் செயலே மனித மூளையின் செயல்பாட்டின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கிறது. சிறு பகுதி
மட்டுமே வாகனம் செலுத்தும் செயலினைக் கையாளுகிறது. கவனக்குறைவு, வேறொன்றைச் சிந்திப்பது
(பகல்கனவு) வாகனம் ஓட்டும் போது கண்ணாடியைச்
சரிசெய்தல், வாகனத்தில் உள்ள ஒலி சாதனம், சாலையில் நடமாடும் விலங்குகள், பதாகைகள் மற்றும்
விளம்பர பலகைகள் ஆகியவை கவனச் சிதறல்களுக்கான வேறு சில காரணங்கள் ஆகும்.
சிவப்பு விளக்கில் நில்லாமை - சிவப்பு
விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம் நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பதே ஆகும்.
போக்குவரத்து சமிக்ஞைகளை (சைகை) முறையாக கடைப்பிடிக்கும் போது நேரம் சேமிக்கப்படுவதாகவும்
பயணிகள் தாங்கள் சேர வேண்டிய இடத்தைப் பாதுகாப்புடனும் உரிய நேரத்தில் சென்றடைவதாகவும்
ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு கருவிகளை தவிர்த்தல் - நான்கு
சக்கர வாகனங்களில் இருக்கைப் பட்டை (seat belt) அணிவதும் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம்
(helmets) அணிவதும் சட்டமாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் விபத்துக்களின் போது ஏற்படும்
காயங்களின் தீவிரத்தைக் குறைக்கின்றன.
பல்வேறு காரணிகள்
அ.ஓட்டுநர்கள் - அதிக
வேகத்தில் செலுத்துதல், கண்மூடித்தனமாக ஓட்டுதல், விதிகளை மீறுதல், குறியீடுகளைப் புரிந்து
கொள்ள தவறுதல், களைப்பு, சோர்வு மற்றும் மது அருந்துதல் போன்றவை.
ஆ. பாதசாரிகள் - கவனமின்மை,
கல்வியறிவின்மை , தவறான இடங்களில் சாலையைக் கடப்பது, சாலையில் நடப்பது மற்றும் போக்குவரத்து
விதிகளை கவனிக்காமல் சாலையின் குறுக்காக செல்பவர்.
இ. பயணிகள் - வாகனத்திற்கு
வெளியே உடலின் பகுதிகளை நீட்டுவது, ஓட்டுநர்களுடன் பேசுவது, படிக்கட்டுகளில் பயணம்
செய்வது, ஓடும் பேருந்தில் ஏறுவது போன்றவை.
ஈ. வாகனங்கள் - தடுத்து
நிறுத்தும் கருவி (brake) மற்றும் வாகனத் திசை திருப்பி (Steering) பழுதடைவது, சக்கரத்தில்
உள்ள டயர் (ரப்பர்) வெடித்தல், போதுமான வெளிச்சம் தராத முகப்பு விளக்குகள், அதிகப்படியான
மற்றும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்படி சுமை ஏற்றுதல்.
உ.சாலைகளின் தரம் - பழுதடைந்த
சாலைகள், குழிகளான சாலைகள், நெடுஞ்சாலைகளை இணைக்கும் அரிக்கப்பட்ட ஊரகச்சாலைகள், சட்டத்திற்கு
புறம்பான வேகத்தடைகள் மற்றும் திருப்பங்கள்.