சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பாதுகாப்பு நடவடிக்கைகள் | 8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations
பாதுகாப்பு
நடவடிக்கைகள்
•எப்பொழுதும் இடதுபுறமாகவே செல்வது: வாகனம்
ஓட்டும் போது சாலையின் இடப்பக்கமாக செல்வதுடன் எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு
வழிவிடுதல் வேண்டும்.
•வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகம் குறைத்தல் : வளைவுகளில்
கவனமாகவும் மெதுவாகவும் செல்வது நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும்.
•தலைக்கவசம் அணிவது: இரு
சக்கர வண்டியில் ஏறுவதற்கு முன் தலைக்கவசம் அணிவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
•வேகவரம்பை ஒருபோதும் மீறக்கூடாது: வேகத்திற்கான
வரம்பு அப்பகுதியின் போக்குவரத்துநிலையுடன்தொடர்புடையது. எனவே குறிப்பிடப்பட்டுள்ள
வேகவரம்பின் படியே செல்ல வேண்டும்.
•சரியான இடைவெளிவிட்டு பின் தொடரவும்: முன்
செல்லும் வாகனத்திலிருந்து போதுமான இடைவெளியை நாம் கடைபிடிக்காததால் மோதல்கள் ஏற்படுகின்றன.
எனவே கனரக வாகனங்களிலிருந்து ஒரு பாதுகாப்பான இடைவெளியை விட்டு பின் செல்ல வேண்டும்.
பின்புறம் நோக்கு கண்ணாடி மற்றும் பக்கவாட்டு கண்ணாடியில் தெரியாத இடமான பார்வை மறைவு
இடத்தில் (blind spot) இருந்து விலகி இருக்கவும்.
•நெடுஞ்சாலைகளில்
சாலையின் ஓரமாக வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்த்து வாகனம் நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட
இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். பழுதுகளை சரிசெய்யும் போது வாகனங்களின்
நிறுத்த விளக்குகளையும் முக்கோண எச்சரிக்கை பலகைகளையும் பயன்படுத்த வேண்டும்.
•சாலை குறியீடுகளைப் பின்பற்றுதல்: சாலை
குறியீடுகள் பெரும்பாலும் படங்களாக இருப்பதால் புரிந்து கொள்வது கடினம் அல்ல.
• இதர பாதுகாப்புக் குறிப்புகள்: மது
அருந்திவிட்டு ஒருபோதும் வாகனம் ஓட்டுதல் கூடாது. வாகனம் ஓட்டும் பொழுது ஒருபோதும்
செல்லிடப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது. அதிக சத்தம் நிறைந்த இசையினைக் கேட்பதைத் தவிர்க்கவும்,
சாலையில் பாதை தடத்தை (Lane) மாற்றுவதற்கு முன்பு கண்ணாடி வழியே பின்னால் ஏதேனும் வாகனங்கள்
வருகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். மகிழுந்து ஓட்டும்பொழுது எப்பொழுதும் இருக்கைப்பட்டை
அணிய வேண்டும். வாகனம் ஓட்டும்போது எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும். பாதசாரிகளையும்
பிற ஓட்டுனர்களையும் திட்டுதல் அல்லது சத்தமிடுதல் கூடாது.
•பாதசாரிகளுக்காக: பாதசாரிகள் கடக்கும் பாதையில் (வரிக்கோடு) மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும். போக்குவரத்துச் சமிக்ஞைகளில் செலவிடும் இரண்டு நிமிட நேரம் உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் மதிப்புள்ளதாகும். சிவப்பு மற்றும் மஞ்சள் விளக்கு ஒளிரும் போது சாலையைக் கடக்கக்கூடாது. சாலையின் நடுவில் நடப்பதைத் தவிர்த்துச் சாலையின் ஓரத்தில் நடக்கவும்.
108 அவசரகால சேவை : இது ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் (மருத்துவ ஊர்தி),
காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள் ஆகியவற்றை அளிக்கும் ஒரு அவசரகால சேவையாகும். சாலையில்
யாரேனும் பாதிக்கப்பட்டதைக் கண்டால் பதற்றப்படவேண்டாம். உதவிக்கு 108 என்ற எண்ணினையும்
சாலை விபத்துகளுக்கு 103 என்ற எண்ணினையும் அழைக்கவும்.
கட்டாயக் குறியீடுகள்
போக்குவரத்துக்
குறியீடுகளின் முதல் வகை கட்டாயக் குயியீடுகள் ஆகும். கட்டாய குறியீடுகளை மீறுவது சாலை
மற்றும் போக்குவரத்துத் துறையினால் சட்டப்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
எச்சரிக்கை குறியீடுகள்
சாலை
வழி மற்றும் போக்குவரத்துத் துறையால் மொத்தம் 40 போக்குவரத்து எச்சரிக்கை குறியீடுகள்
சேர்க்கப்பட்டுள்ளன. எச்சரிக்கை குறியீடுகளின் முக்கியப் செயல்பாடு சூழ்நிலைக்கேற்ப
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகும்.
மத்தியில் உள்ள இடைவிடப்பட்ட வெள்ளைக் கோடு: இது சாலையின் அடிப்படைக் குறியீடு ஆகும். இக் குறியீடு உள்ள இடத்தில் சாலையில் தடம் (Lane) மாறலாம், வாகனங்களை முந்தி செல்லலாம் அல்லது பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் U - திருப்பத்தில் திரும்பலாம்.
தொடர்ச்சியான வெள்ளைக்கோடு: இவை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் காணப்படும். வாகனங்களை முந்தவோ, தடம் மாறவோ, அனுமதியில்லை என்பதைக் குறிக்கின்றது. இடதுபுறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.
தொடர்ச்சியான ஒரு மஞ்சள் கோடு: வெளிச்சம் (visibility) குறைவான பகுதிகளில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. வாகனங்களை முந்திச் செல்லலாம் மற்றும் இடதுபுறம் மட்டுமே வாகனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள்: ஆபத்தான மற்றும் இருவழி போக்குவரத்து உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது தடம் மாறுவதை கண்டிப்பாகத் தடைசெய்கிறது. மேலும் நாம் நமது தடத்திற்குள்ளாக வாகனங்களை முந்திச் செல்லலாம்.
நிறுத்தக் கோடு: பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன்பாக குறியிடப்பட்டிருக்கும். அவை போக்குவரத்துச் சமிக்ஞைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டிய பகுதியைக் குறிக்கின்றது.
தொடர்ச்சியான மற்றும் இடைவிடப்பட்ட கோடுகள்: இடைவிடப்பட்ட கோட்டின் பக்கமாக ஓட்டும் போது பிற வாகனங்களை முந்திச்செல்லலாம். ஆனால் தொடர்ச்சியான கோட்டின் பக்கமாக செல்லும் போது பிற வாகனங்களை முந்திச்செல்லக் கூடாது.