வரலாறு - சிந்து மீது அரபுப் படையெடுப்பு | 11th History : Chapter 10 : Advent of Arabs and turks
சிந்து மீது அரபுப் படையெடுப்பு
ஈராக்கின் அரபு ஆளுநர் ஹஜஜ்-பின்-யூசுஃப், கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணம் காட்டி, சிந்து அரசர் தாகிரை எதிர்த்து, தரை வழி, கடல் வழி என இரு தனித்தனி படைப் பிரிவுகளை அனுப்பினார். ஆனால் இரண்டு படைப்பிரிவுகளும் தோற்றன; அவற்றின் தளபதிகளும் கொல்லப்பட்டனர். பிறகு ஹஜஜ், கலிபாவின் அனுமதியுடன் 6000 வலுவான குதிரைப் படை, போர்த் தளவாடங்களைச் சுமந்து வந்த ஒரு பெரிய ஒட்டகப் படை ஆகியவை அடங்கிய ஒரு முழுமையான இராணுவத்தைப் 17 வயது நிரம்பிய தனது மருமகன் முகமது பின் - காசிம் தலைமையில் அனுப்பினார்.
முகமது-பின்-காசிம்
காசிமின் படை, பிராமணாபாத் வந்து சேர்ந்த நேரத்தில் சிந்துப் பகுதியில் தாகிர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். பிராமணர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியை தாகிரின் முன்னோர்கள் பெளத்த அரச வம்சத்திடமிருந்து கைப்பற்றி ஆட்சி நடத்தி வந்தனர். ராணுவம் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளில் பிராமணர்களே இருந்தனர். இதனால் அந்நகரம் பிராமணாபாத் எனப்பட்டது. அரசர் தாகிர் அவரது முதன்மை அமைச்சர் ஆகியோருக்கிடையே அப்போது கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது. முகமது காசிம் படையெடுத்தபோது, முதன்மை அமைச்சர் அவருக்குத் துரோகம் இழைத்ததால் தாகிருடைய படையின் ஒரு பகுதி விலகிக்கொண்டது. மக்களும் மன்னர் மீது அதிருப்தி அடைந்திருந்த சூழலில், முகமது–பின்-காசிம், பிராமணாபாத்தை எளிதில் கைப்பற்றினார். தாகிரை விரட்டிச் சென்ற காசிம் ரோஹ்ரியில் நிகழ்ந்த ஒரு மோதலில் அவரைக் கொன்றார். அதன் பிறகு காசிமின் படை, சிந்துவின் தேபல் துறைமுக நகரத்தை அழித்து மூன்று நாள்கள் கொள்ளையடித்தது. சிந்து மக்களைச் சரணடையுமாறு காசிம் கேட்டுக்கொண்டார்; அவர்கள் தத்தமது மதத்தைப் பின்பற்றுவதற்கு முழுப் பாதுகாப்பு தருவதாகவும் வாக்களித்தார். தான் கொள்ளை அடித்ததில் வழக்கமான ஐந்தில் ஒரு பங்கைக் கலிபாவுக்கு அனுப்பிவைத்த காசிம், எஞ்சியதைத் தனது படைவீரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
அரேபியரின் சிந்து படையெடுப்பானது ஒரு "விளைவுகளற்ற வெற்றியாகவே" குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது நாட்டின் எல்லைப்பகுதியை மட்டுமே தொட்டதோடு காசிமின் படையெடுப்பிற்குப் பின்னர் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் பல்வேறு முற்றுகைகள் இன்றி அமைதியாக இருந்தது.
கஜினி மாமுது
இதனிடையே, மத்திய ஆசியாவிலிருந்த அரபியப் பேரரசு உடைந்து, அதன் பல மாகாணங்கள், தங்களைச் சுதந்திர அரசுகளாக அறிவித்துக் கொண்டன. இவற்றில் ஒன்றுதான் சாமானித் (Shamanid) பேரரசு. பிறகு இதுவும் உடைந்து, பல சுதந்திர அரசுகள் தோன்றின. சாமானித் பேரரசில் குரசன் ஆளுநராக இருந்த துருக்கிய அடிமை அல்ப்டிஜின், 963இல் கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்த கஜினி நகரைக் கைப்பற்றி, ஒரு சுதந்திர அரசை நிறுவினார். பிறகு விரைவிலேயே அல்ப்டிஜின் இறந்துபோனார். தொடர்ந்து அவரது வாரிசாக வந்த மூவரின் தோல்வியால், உயர்குடிகள் சபுக்தஜின்னுக்கு முடிசூட்டினர்.
இந்தியாவில் இஸ்லாமிய அரசை தெற்கு நோக்கி விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை சபுக்தஜின் தொடங்கிவைத்தார். ஆப்கானிஸ்தான் ஷாஹி அரசர் ஜெயபாலரைத் தோற்கடித்து, அம்மாகாணத்தில் தனது மூத்த மகன் மாமுதை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார். 997இல் சபுக்தஜின் இறந்த போது, கஜினி மாமுது குரசனில் இருந்தார். இதனால், சபுக்தஜினின் இளைய மகன் இஸ்மாயில் வாரிசாக அறிவிக்கப்பட்டார். பிறகு, தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்தேழு வயது கஜினி மாமுது ஆட்சியில் அமர்ந்தார். கஜினி மாமுது ஆட்சிப் பொறுப்பு ஏற்றதை , ஒரு பதவியேற்பு அங்கியை அளித்தும் யாமினி - உத்-தவுலா (‘பேரரசின் வலது கை’) என்ற பட்டத்தை வழங்கியும் கலிபா அவரை அங்கீகரித்தார்.
அரபியரும் இரானியரும் இந்தியாவை 'ஹிந்த்' என்றும், இந்தியர்களை ‘ஹிந்துக்கள்’ என்றும் குறிப்பிட்டனர். இருப்பினும் இந்தியாவில் இஸ்லாமிய சமுதாயம் தோன்றிய பிறகு ‘ஹிந்து’ எனும் பெயர் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களைக் குறிப்பதாயிற்று.
கஜினி மாமுதின் தாக்குதல்கள்
32 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கஜினி மாமுது, பதினேழு முறை இந்தியா மீது தாக்குதல்களை நடத்தினார். செல்வக் களஞ்சியமாக இருந்த இந்துக் கோவில்களில் கொள்ளை அடிப்பதே முதன்மை நோக்கம். இருப்பினும் கோவில்களை இடிப்பது, சிலைகளைத் தகர்ப்பது ஆகிய நடவடிக்கைகளும் நடந்தன. இதை கஜினி மாமுதுவின் படைவீரர்கள், தங்களது கடவுளின் வெல்லப்பட முடியாத ஆற்றலின் விளைவாகக் கண்டனர். ‘பிற மதத்தினரை’ வெட்டிக் கொல்வதிலும், அவர்களது வழிபாட்டுத் தலங்களை அழிப்பதிலும் கஜினி மாமுதுவின் படையினரின் மதப்பற்று வெளிப்பட்டது. எனினும் மக்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. தங்களது உயிரையும் உடைமைகளையும் காத்துக்கொள்வதற்காக இஸ்லாமியராக மாறியவர்கள் கூட கஜினி மாமுதுவின் படையெடுப்பு முடிவுக்கு வந்ததும் தங்களின் மதத்துக்கே திரும்பினர்.
ஷாஹி அரசன் அனந்த பாலரைத் தோற்கடித்த கஜினி மாமுது, பிறகு பஞ்சாபைக் கடந்து கங்கைச் சமவெளிக்குள் நெடுந்தொலைவு உள்ளே வந்தார்; கன்னோசி சென்றடைவதற்கு முன்னர் மதுராவைச் சூறையாடினார். தொடர்ந்து கஜினி மாமுது, 1025இல் குஜராத் கடற்கரையிலுள்ள கோவில் நகரமான சோமநாதபுரத்தின் மீது படையெடுத்துக் கொள்ளையடித்தார். சோமநாத புரக் கோவில் கொள்ளை பற்றிய ஆங்கிலேய காலனிய, மற்றும் இந்திய தேசியவாதிகளின் வரலாற்றியல்கள் மாமுதுவைக் கொடும் படையெடுப்பாளராக சித்தரிக்கின்றன. கஜினியின் இக்கொள்ளைகளை, மத ஆதிக்கம் சார்ந்தவை என்று கூறுவதைவிட பெரிதும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டவை என்பதே பொருந்தும் எனப் பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். மத்திய கால இந்தியாவில் வழிபாட்டிடங்களைச் சூறையாடுவதும் கடவுள் திருவுருவங்களை அழிப்பதும் பேரரசின் ஏகபோக அதிகாரத்தின் வெளிப்பாடுகளாகவே கருதப்பட்டன. கஜினி மாமுதின் ராணுவத் தாக்குதல்களும் அவரது செயல்களும் அப்படிப்பட்டவையே. மேலும், கஜினி மாமுது கொள்ளை அடித்தது, அவரது பெரும் படையைப் பராமரிக்கிற செலவை ஈடுசெய்யும் தேவையினால் ஏற்பட்டது. துருக்கியப் படை என்பது நிரந்தரமான, தொழில் நேர்த்திப் பெற்ற படையாகும். அது தெரிந்தெடுத்து தகுதி உயர்த்தப்பட்ட வில்லாளிகள் பிரிவை மையமாகக் கொண்டு கட்டப்பட்டது; இவர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளாவர்; இவர்களுக்குப் பயிற்சியளித்து ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. இந்தியாவின் இந்து அரசாட்சிகளிலிருந்தும் ஈரானின் இஸ்லாமிய அரசாட்சிகளிலிருந்தும் அடிக்கப்பட்டப் போர்க் கொள்ளையிலிருந்து இவர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டது.
இந்தப் போர்க் கொள்ளைகளில் கைப்பற்றப்பட்ட செல்வம் குறித்துப் பாரசீகக் குறிப்புகள் மிகைப்படுத்திக் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, 1029இல் ரேய் என்ற ஈரானிய நகரத்தைச் சூறையாடியதில் கஜினி மாமுதுவுக்கு 500,000 தினார்கள் மதிப்புள்ள ஆபரணங்கள், நாணயங்களாக 260,000 தினார்கள், 30,000 தினார்கள் மதிப்புடைய தங்க, வெள்ளிப் பாத்திரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இது போலவே, சோமநாதபுரத்தைச் (1025) சூறையாடியதில், 2 கோடி தினார் மதிப்புடைய கொள்ளைப் பொருள்கள் கஜினி மாமுதுவுக்குக் கிடைத்ததாக நம்பப்படுகிறது. வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர், “சோமநாதபுரப் படையெடுப்பு குறித்த தகவல்கள் 13ஆம் நூற்றாண்டிலிருந்து அரபு மரபுவழிப் பதிவுகளில் காணப்படுகின்றன. ஆனால், இதன் சமகால சமண மதச் சான்றுகள் இதனை உறுதிப்படுத்தவில்லை” என்கிறார். “இத்தகைய திடீர் இராணுவத் தாக்குதல்களும் கொள்ளையடிப்புகளும் பொருளாதார மற்றும் மத உருவ எதிர்ப்புத் தன்மை கொண்டதே தவிர வகுப்புவாதத் தன்மை கொண்டதல்ல. சமகாலப் போர்முறையிலிருந்து பிரிக்க முடியாத அழிவுகளையும் மத்திய கால அரசர்களின் வழக்கமான கொள்ளையிடும் தன்மையையுமே அவை வெளிப்படுத்துகின்றன” என்கிறார்.
கஜினி மாமுது இறந்த பிறகு கஜினி வம்சத்தில் உறவினர்களிடையே அரச வாரிசுரிமை தொடர்பாக முடிவற்ற மோதல்கள் நிகழ்ந்தன. இருப்பினும், 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த சுல்தான் இப்ராஹிம், 17 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த அவரது மகன் மசூத் போன்ற சில விதிவிலக்குகளும் இருந்தனர். வடக்கே கோரிகளிடமிருந்தும் மேற்கே செலிஜுக் துருக்கியரிடமிருந்தும் கஜினி வம்ச ஆட்சிக்கு நிரந்தர அபாயம் இருந்து வந்தது. இது அரசாட்சிக்குப் பேரழிவை ஏற்படுத்தியது. இதனால், கஜினி வம்சத்தின் பிற்கால ஆட்சியாளர்கள் லாகூர் பகுதியில் மட்டுமே அதிகாரம் செலுத்த முடிந்தது; இதுவும் கூட முப்பது ஆண்டுகளே நீடித்தது. 1186இல் கோரி அரசர் மொய்சுதீன் முகமது என்கிற கோரி முகமது, பஞ்சாப் மீது படையெடுத்து லாகூரைக் கைப்பற்றினார். கஜினி வம்சத்தின் கடைசி அரசர் குரவ் ஷா, 1192இல் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணத்துடன் கஜினி அரசு முடிவுக்கு வந்தது.
கணிதவியலாளரும் தத்துவஞானியும் வானியலாளரும் வரலாற்று ஆசிரியருமான அல்-பெருனி, கஜினி மாமுதுவுடன் இந்தியா வந்தார். கிதாப்-உல்-ஹிந்த் என்ற தனது நூலை இயற்றுவதற்கு முன்பு அவர் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார்; இந்து மத நூல்களையும் தத்துவ நூல்களையும் கற்றார். யூக்ளிடின் கிரேக்க நூலைக்கூட அவர் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். ஆரியபட்டரின் முக்கிய நூலான ஆர்யபட்டியம் (புவி, அதன் அச்சில் சுழல்வது இரவு பகலை ஏற்படுத்துகிறது போன்ற செய்திகளை உள்ளடக்கிய நூல்) என்பதை அவர் மேலை நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார். இந்தியாவுக்கும் பிற உலக நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தார்.
கோரி முகமது
கஜினியின் படையெடுப்புகள் கொள்ளையடிக்கும் நோக்கம் கொண்டவை. இதனை விரிவுபடுத்திக் கொள்ளையடித்த செல்வமும், திறையும் தொடர்ந்து சீராக வந்து சேர்வதை உறுதி செய்துகொள்ள படையரண் நகரங்களை கோரிகள் அமைத்தனர். கோரி முகமது, தாம் கைப்பற்றிய நிலப்பகுதிகளில் முதலீடு செய்தார். 1180களிலும் 1190களிலும் நவீன பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் அவர் காவல் அரண்களை அமைத்தார். விரைவிலேயே இந்தப் படை மையங்களில், ராணுவத்தில் சேர வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்த கூலிப்படை வீரர்கள் குடியேறினர். இப்படைவீரர்கள், சுல்தானிய அரசின் வருவாய், படை விவகாரங்களை ஒழுங்கமைக்கப் பணியமர்த்தப்பட்டனர். வட இந்தியாவில் 1190இலிருந்து சுல்தானின் படைத் தளபதிகள், அடிமைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். போர் முறையிலும் நிர்வாகத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற இந்த அடிமைகள், நிலத்தோடும் விவசாய உழைப்போடும் வீட்டு வேலைகளோடும் தொடர்புடைய அடிமைகளிலிருந்து மாறுபட்டவர்கள். தொடக்கத்தில், உச், லாகூர், முல்தான் ஆகியன குறிப்பிடத்தக்க அதிகார மையங்களாகக் கருதப்பட்டன. 1175இல் முல்தான் மீது படையெடுத்த கோரி முகமது, அதை அதன் இஸ்மாயிலி வம்ச ஆட்சியாளரிடமிருந்து கைப்பற்றினார். தொடர்ந்து உச் கோட்டையும் தாக்குதல் இன்றியே பணிந்தது. எனினும், குஜராத்தின் சாளுக்கியர் அபு மலையில் கோரி முகமதுவுக்கு ஒரு பயங்கரத் தோல்வியைக் கொடுத்தனர் (1179). இந்தத் தோல்விக்குப் பிறகு கோரி முகமது, தமது படையெடுப்பின் போக்கை மாற்றிக்கொண்டு சிந்துவிலும் பஞ்சாபிலும் தமது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார்.
பிருத்விராஜ் சௌகான்
அஜ்மீர் சௌகான்களின் இராணுவ முக்கியத்துவத்துவம் வாய்ந்த தபர்ஹிந்தா (பட்டிண்டா) கோட்டையை முகமது கோரி தாக்கினார். அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகான், தபர்ஹிந்தாவுக்கு அணிவகுத்துச் சென்று 1191இல் முதலாவது தரெய்ன் போரை நிகழ்த்தினார். இந்தப் போரில் ஒரு முழுமையான வெற்றியை பிருத்விராஜ் பெற்றார். எனினும் இதை ஓர் எல்லைப்புறச் சண்டையாக மட்டுமே கருதியதால் அங்கே தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. மேலும், கோரிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்துவார்கள் என்றும் அவர் எதிர்ப்பார்க்கவில்லை . தரெய்ன் போரில் முகமது கோரி காயமடைந்தார்; ஒரு குதிரை வீரன் அவரை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றார். பிருத்விராஜ் சௌகான் நினைத்ததற்கு மாறாக, அடுத்த ஆண்டில் (1192) முகமது கோரி அஜ்மீர் மீது மீண்டும் படையெடுத்தார். கோரியின் ஆற்றலைப் பிருத்விராஜ் குறைத்து மதிப்பிட்டார். கோரிக்கு எதிராக ஒரு சிறிய படைக் குழுவுக்குத் தலைமையேற்றுச் சென்றார். இந்த இரண்டாவது தரெய்ன் போரில், பிருத்விராஜ் தோல்வி அடைந்தார்; இறுதியில் சிறைப் பிடிக்கப்பட்டார். இந்திய வரலாற்றின் திருப்புமுனைகளுள் ஒன்றாக இந்தப் போர் அமைந்தது. போரில் வெற்றி பெற்ற கோரி, மீண்டும் அஜ்மீரின் ஆட்சியை பிருத்விராஜிடமே ஒப்படைத்தார். பின்னர், இராஜதுரோகக் குற்றம் சாட்டி, அவரைக் கொன்றார்; தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்தியப் பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக நியமித்தார்.
கன்னோசி அரசர் ஜெயசந்திரர்
கன்னோசி அரசர் ஜெயசந்திரரை எதிர்த்துப் போர்புரிய மீண்டும் விரைவிலேயே முகமது கோரி இந்தியா வந்தார். கோரியை எதிர்த்த போரில் ராஜபுத்திரத் தலைவர்கள் யாரும் ஜெயச்சந்திரனை ஆதரிக்கவில்லை. அவர்கள் பிருதிவிராஜ் பக்கம் நின்றனர். ஜெயச்சந்திரன் மகள் சம்யுக்தாவைப் பிருதிவிராஜ் கடத்திச் சென்றதையொட்டி இருவருக்குமிடையே பகை இருந்தது. இதனால் தனிமைப்பட்டு நின்ற ஜெயசந்திராவை எளிதாக வென்ற முகமது கோரி, ஏராளமான கொள்ளைச் செல்வத்துடன் திரும்பினார். திரும்பும் வழியில், சிந்து நதிக் கரையில் தங்கியிருந்த போது, அடையாளம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டார்.
ராஜபுத்திர அரசுகள்
பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராஜபுத்திர அரசான கூர்ஜர பிரதிகார் மற்றும் ராஷ்டிரகூடர் ஆகிய வலுவான இரண்டு அரசுகள் தங்களின் அதிகாரத்தை இழந்தன. டோமர் (தில்லி), சௌகான் (ராஜஸ்தான்), சோலங்கி (குஜராத்), பரமர் (மால்வா), கடவாலா (கன்னோசி), சந்தேலர் (பந்தேல்கண்ட்) ஆகியவை வட இந்தியாவின் முக்கியமான அரச வம்சங்கள் ஆகும். முதன்மையான இரு சௌகான் அரசர்களான விக்ரகராஜ், பிருத்விராஜ், பரமர் வம்சத்தின் போஜர், கடவாலா அரசன் ஜெயசந்திரா, சந்தேலரான யசோவர்மன், கீர்த்தி வர்மன் ஆகிய அனைவரும் வலுவாக இருந்தனர்.
ராஜபுத்திரர்கள் போர்ப் பாரம்பரியம் கொண்டவர்கள். துருக்கியரும் ராஜபுத்திரரும் ஒரே மாதிரியான ஆயுதங்களையே பயன்படுத்தினர். எனினும், படை ஒழுங்கிலும் பயிற்சியிலும் ராஜபுத்திரர்கள் கவனமின்றியிருந்தனர். அதே நேரத்தில் நிலைமைகளுக்குத் தக்கவாறு உத்திகள் வகுப்பதில் துருக்கியர் வல்லவர்களாயிருந்தனர். துருக்கிய குதிரைப் படை, இந்திய குதிரைப் படையை விட மேம்பட்டதாயிருந்தது. ராஜபுத்திரப் படை யானைகளை மையப்படுத்தி இருந்தது. யானைகளுடன் ஒப்பிடுகிறபோது குதிரைகள் பன்மடங்கு வேகம் கொண்டவை. இது, போரில் துருக்கியர்களுக்குச் சாதகமாக அமைந்தது. எனவே, அவர்கள் பகைவரை எளிதில் வென்றனர்.
லட்சுமணர் கோவில், விஸ்வநாதர் கோவில், கந்தரியா மகாதேவர் கோவில் உள்பட பல கோவில்களைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற கஜூராஹோ கோவில் வளாகம், கஜுராஹோவிலிருந்து ஆட்சிபுரிந்த பந்தேல்கண்ட் சந்தேலர்களால் கட்டப்பட்டது.