வரலாறு - அரபியர், துருக்கியரின் வருகை | 11th History : Chapter 10 : Advent of Arabs and turks
அரபியர்,
துருக்கியரின் வருகை
கற்றல் நோக்கங்கள்
• அரபியரின் சிந்துப்
படையெடுப்பு வெற்றி
பெற்றதைத் தொடர்ந்து
நிகழ்ந்த கஜினி
மாமுது, கோரி
முகமது ஆகியோரது
இராணுவத் தாக்குதலின்
விளைவுகளைக் கற்பது.
• வெவ்வேறு வம்சாவளி அரசுகளால்
நிறுவப்பட்டு, நிலைப்படுத்தப்பட்ட தில்லி சுல்தானியத்தின் (சுல்தான்
ஆட்சியின்) தன்மையை
அறிவது
.• சுல்தானிய
காலத்துச் சமூகப்
பொருளாதார நிலைமைகளை
அறிவது. • இந்தியாவில்
இலக்கியம், கலை,
இசை, கட்டடக்கலை
முதலான துறைகளில்
நிகழ்ந்த பண்பாட்டு
பரிமாற்றத்தில் இஸ்லாமிய
தாக்கத்தைப் புரிந்துகொள்வது.
அறிமுகம்
பதின்மூன்று முதல்
பதினாறாம் நூற்றாண்டு முற்பகுதி வரையான காலத்தில்
(1200 - 1550) இஸ்லாமிய
அரசு (தில்லி
சுல்தானியம்) நிறுவப்பட்டது. இதன் விளைவாக
இஸ்லாமிய நிறுவனங்களும் இஸ்லாமியப்
பண்பாடும் இந்தியாவில் காலூன்றின.
இக்காலகட்டத்தின் வரலாற்றை
வெவ்வேறு கண்ணோட்டத்தில் வரலாற்றாசிரியர்கள் விளக்கியுள்ளனர். தனிப்பட்ட சுல்தான்களின் சாதனைகளையும் தோல்விகளையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு
சுல்தானிய ஆட்சியை மதிப்பிடுவது
வழக்கம். தனிநபரை முன்வைத்து வழக்கமாக எழுதப்படும்
வரலாற்றை ஏற்க மறுக்கிற
வரலாற்றாசிரியர்கள, சுல்தானிய ஆட்சி பொருளாதாரம், பண்பாட்டு
வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது என்றும்,
இதன் மூலம்
இந்தியாவில் ஒரு பன்முகப்
பண்பாடு தோன்றுவதற்கு வழிவகுத்தது என்றும் கூறுகின்றனர். வர்க்க உறவுகளின் அடிப்படையில்
வரலாற்றைக் கணிக்கும் வரலாற்றாசிரியர்களின்
பார்வையில் மத்திய
கால அரசுகள், ஆளும்
வர்க்கத்தின் பிரதிநிதியாகவே செயல்பட்டன; எனவே, முகலாயர்
ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில் சுல்தானிய
ஆட்சியில் அமைப்பு ரீதியான முன்னேற்றம் மிகக்
குறைவு என்று கருதுகின்றனர். இவ்வாறாக, சுல்தானிய
ஆட்சியின் இயல்பை முடிவு
செய்வதில் அறிஞர்களிடையே இன்னமும் கருத்தொற்றுமை இல்லை.
இப்பாடம் இரு
நோக்கங்களைக் கொண்டுள்ளது: (அ)
சுல்தானிய ஆட்சிக்
கால அரசர்கள்,
நிகழ்வுகள், கருத்துகள்,
மக்களின் நிலை குறித்த ஒரு வழக்கமான
கற்றலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வது. (ஆ)
மாணவர்கள் அதன்
சரி, தவறுகளை சீர்தூக்கிப் பார்த்து,
புதிய வினாக்களை எழுப்புகிற விதத்தில் பாடத்தின்
உள்ளடக்கத்தை அமைத்தல்.
அரபியரின் வருகை: பின்னணி
இந்தியாவுக்கும் அரபியாவுக்கும்
இடையே வணிகத் தொடர்புகள்
ஏற்பட புவியியல்
ரீதியான அமைவிடம் உதவியது.
இஸ்லாம் தோன்றுவதற்கு
முன்பே, கடல்வழி
வணிகத்தில் அரபியர் ஈடுபட்டிருந்தனர். இந்தியாவின் கிழக்கு,
மேற்குக் கடற்கரைகளுடன் கடல்வழி
வணிகத் தொடர்புகள் கொண்டிருந்தனர். இவர்கள் தென்னிந்தியாவின் மேற்கு
(மலபார்), கிழக்குக்
(கோர மண்டல்/ சோழமண்டல) கடற்கரைகளில்
குடியேறினர். மலபார் பெண்களைத் திருமணம்
செய்துகொண்டு அங்கேயே குடியமர்ந்த
அரபியர், “மாப்பிள்ளை” என்று அழைக்கப்பட்டனர். பொ .ஆ. 712இல் மேற்கொள்ளப்பட்ட அரபியப் படையெடுப்பும்
அதைத் தொடர்ந்து நடந்த
கஜினி, கோரி
மன்னர்களின் படையெடுப்புகளும் இங்கிருந்து கொள்ளையடித்துச் சென்ற செல்வத்தைக்
கொண்டு மத்திய ஆசியாவில் அவர்கள் ஆட்சியை
வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக
இருந்தன. இதனுடன், கஜினி மாமுதுவும்,
முகமது கோரியும்
நிகழ்த்திய திடீர்த் தாக்குதல்கள், ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமிப்புக்குள்ளானவர்கள் என்ற
உறவை ஏற்படுத்தின.
குரசன் நாட்டு
(கிழக்கு ஈரான்)
ஷா, பின்னர் செங்கிஸ்கான் ஆகியோர்
ஆஃப்கானிஸ்தான் மீது
படையெடுத்ததும், வட
இந்திய சுல்தான்
ஆட்சிக்கு ஆஃப்கானிஸ்தானுடனிருந்த உறவுகளைத் துண்டித்தன. மங்கோலியப் படையெடுப்புகள், கோரி சுல்தானிய
ஆட்சியையும் கஜினியையும் அழித்து உச், மற்றும்
முல்தானின் அரசர்
சுல்தான் நசுருதீன் குபாச்சாவின் (1206-28) கருவூலத்தைக்
காலியாக்கின. இவ்வாறாக,
வட இந்தியாவில்
தமது செல்வாக்கை விரிவுபடுத்துகிற நல்வாய்ப்பு சுல்தான் இல்துமிஷுக்கு இருந்தது.
இது, தில்லியைத் தலைநகராகக் கொண்டு இந்திய
மாகாணங்களை இஸ்லாமிய ஆட்சியாளர்கள்
ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் ஆள்வதற்கு வழிவகுத்தது.
இக்காலகட்டத்தை இஸ்லாமிய ஆட்சிக் காலம் என்று விவரிப்பது வழக்கம். இருப்பினும் மத்திய இந்தியாவை ஆட்சி செய்த இவர்கள், பல்வேறு பிரதேசங்களையும் இனங்களையும் சேர்ந்தவர்களாவர்; அரபியரும், துருக்கியரும், பாரசீகத்தவரும், மத்திய ஆசியரும் இராணுவத்திலும் நிர்வாகத்திலும் பங்கு கொண்டிருந்தனர். இல்துமிஷ் ஓர் இல்பாரி துருக்கியர் (Ilbari Turk) என்பதோடு அவரது இராணுவ அடிமைகள் பலரும் புக்காரா, சாமர்கண்ட், பாக்தாத் ஆகிய இடங்களைச் சேர்ந்த வணிகர்களால் தில்லிக்கு அழைத்துவரப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டோர் துருக்கிய, மங்கோலிய வழி வந்தவர்களாவர். பிற இனங்களைச் சேர்ந்த அடிமைகளும் (குறிப்பாக, மத்திய இந்தியாவின் மிஹிரிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்ட ஹிந்து கான்) இருந்தனர் என்றாலும், இல்துமிஷ் அவர்கள் அனைவருக்கும் துருக்கியப் பெயர்களையே சூட்டினார்.
இக்காலகட்ட (1206-1526) தில்லி சுல்தானியம் ஒரே மரபைச் சேர்ந்த ஆட்சியாளர்களால் ஆளப்படவில்லை. அதன் ஆட்சியாளர்கள் ஐந்து வெவ்வேறு வம்சங்களைச் சேர்ந்தவர்கள் அ) அடிமை வம்சம் (1206-1290), ஆ) கில்ஜி வம்சம் (1290-1320), இ) துக்ளக் வம்சம் (1320-1414), ஈ) சையது வம்சம் (1414-1451), உ) லோடி வம்சம் (1451-1526).
டெல்லி சுல்தானியர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகள்
•
அல்-பெருனி : தாரிக்-அல்-ஹிந்த் (அரபு மொழியில் எழுதப்பட்ட இந்திய தத்துவஞானமும் மதமும்)
• மின்ஹஜ் உஸ் சிராஜ்: தபகத்-இ-நசிரி (1260) (அரபு மொழியில் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய வரலாறு)
• ஜியாவுத்தின் பாரனி : தாரிக்-இ-பெரோஸ் ஷாஹி (1357) பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு
• அமிர் குஸ்ரு: மிஃப்தா உல் ஃபுதூ (ஜலாலுதீன் கில்ஜியின் வெற்றிகள்); கஜைன்; உல் ஃபுதூ (அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள் - பாரசீக மொழியில்)
• துக்ளக் நாமா (பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு)
• சம்ஸ்-இ-சிராஜ் அஃபிஃப்: தாரிக் இ
ஃபெரோஜ் ஷாஹி (தில்லி சுல்தானியம் பற்றிப் பாரசீக மொழியிலுள்ள பாரனியின் குறிப்புகளை ஒட்டியது)
• குலாம் யாஹ்யா பின் அஹ்மத்: தாரிக் இ-முபாரக் ஷாஹி (சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது)
• ஃபெரிஷ்டா : இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு (பாரசீக மொழி)
பாரசீக வரலாற்று ஆவணங்கள், தில்லி சுல்தானியம் குறித்து மிகைப்படுத்திக் கூறுகின்றன. குறிப்பிட்ட சுல்தானின் ஆட்சியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த அவற்றின் கருத்துகள் எந்த விமர்சனமும் இன்றி நவீன கல்விப்புலத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளன - சுனில் குமார், Emergence of Delhi Sultanate