வரலாறு - கில்ஜிகள் (1290-1320) | 11th History : Chapter 10 : Advent of Arabs and turks
கில்ஜிகள் (1290-1320)
ஜலாலுதீன் கில்ஜி (1290-1296):
பால்பனின் மகன் கைகுபாத் அரசராகும் தகுதியற்றவராக இருந்தார். இதனால் அவரது மூன்று வயது மகன் கைமார்ஸ் அரச கட்டிலில் அமர்த்தப்பட்டார். பேரரசின் அமைச்சர்கள், பொறுப்பு ஆளுநர் போன்றோரை நியமிப்பதில் ஒத்த கருத்து ஏற்படவில்லை; இதையொட்டிப் பிரபுக்கள் சதி செய்தனர். இக்குழப்பத்திலிருந்து ஒரு புதிய தலைவராகப், படைத் தளபதி மாலிக் ஜலாலுதீன் கில்ஜி மேலெழுந்தார். கைகுபாத்தின் பெயரால் அரசாட்சி செய்த ஜலாலுதீன், அவரைக் கொல்வதற்கு ஒரு அதிகாரியை அனுப்பினார். விரைவிலேயே ஜலாலுதீன் முறைப்படி அரசரானார். ஜலாலுதீன் ஓர் ஆஃப்கானியர்; துருக்கியர் அல்லர் என்ற அடிப்படையில் அவருக்கு எதிர்ப்பிருந்தது. உண்மையில் கில்ஜிகள், ஆஃப்கானிஸ்தானில் துருக்கிய ஆட்சி நிறுவப்படுவதற்கு முன்பே அங்கு குடியமர்ந்தவர்கள்; எனவே அவர்கள் ஆஃப்கானியமயமான துருக்கியர்களாவர். எப்படியிருப்பினும், பிரபுக்கள் பலரையும் விரைவிலேயே ஜலாலுதீன் வசப்படுத்திவிட்டார். இதனால், கில்ஜிகள் மீது தொடக்கத்தில் அவர்களுக்கு இருந்த வெறுப்பு மறைந்து அவர் பல சண்டைகளில் வெற்றிபெற்றார், மேலும் தமது முதிய வயதில் கூட மங்கோலியக் கூட்டங்களை எதிர்த்து அணிவகுத்த அவர், இந்தியாவுக்குள் அவர்கள் நுழைவதை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தினார் (1292)
மங்கோல் என்ற பெயர், மங்கோலிய மொழி பேசக்கூடிய மத்திய ஆசிய நாடோடிக் குழுக்கள் அனைத்தையும் குறிக்கும். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அவர்கள் செங்கிஸ் கான் தலைமையில் ஒரு மிகப் பெரிய அரசாட்சியை நிறுவினர். நவீன ரஷ்யாவின் பெரும்பகுதி, சீனா, கொரியா, தென் கிழக்கு ஆசியா, பாரசீகம், இந்தியா, மத்தியக் கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றை அவரது அரசாட்சி உள்ளடக்கி இருந்தது. அவர்களின் விரைவான குதிரைகளும் சிறந்த குதிரைப் படை உத்திகளும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்கும் மனப்பாங்கும் அரசியலைச் சூழ்ச்சித் திறத்துடன் கையாளும் செங்கிஸ்கானின் திறனும் மங்கோலியரின் வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
காராவின் பொறுப்பு ஆளுநரான ஜலாலுதீன் கில்ஜியின் ஓர் உடன் பிறந்தார் மகனும் மருமகனுமான அலாவுதீன், இச்சமயத்தில் மால்வா மீது படையெடுத்தார்; இந்தப் படையெடுப்பில் பெருமளவு செல்வம் கிடைத்தது. இந்த வெற்றி, தக்காணத்திலிருந்த யாதவ அரசின் தலைநகர் தேவகிரியைச் சூறையாடுவதற்கான ஓர் உந்துதலை அவருக்கு அளித்தது. டெல்லி திரும்பிய அலாவுதீனின் ஏற்பாட்டில் ஜலாலுதீன் கொல்லப்பட்டார் அலாவுதீன் அரியணை ஏறினார். இவ்வாறாக, ஜலாலுதீனின் ஆறாண்டுக் கால ஆட்சி 1296இல் முடிவுக்கு வந்தது.
அலாவுதீன் கில்ஜி (1296-1316):
அலாவுதீனும் பிரபுக்களும்
அலாவுதீன், எதிரிகளை ஒழித்து தில்லியில் தமது இடத்தைப் பலப்படுத்திக்கொள்வதில் முதலாண்டு முழுவதும் கழித்தார். விரைவிலேயே அவர், பிரபுக்கள் மீது ஒரு உறுதியான பிடியை வைத்துக்கொள்வதில் தமது கவனத்தைச் செலுத்தினார். உயர் அதிகாரிகள் பலரையும் பணி நீக்கம் செய்தார். குறிப்பாக, ஜலாலுதீனுக்கு எதிராகத் தங்களின் விசுவாசத்தை மாற்றிக்கொண்டு, சந்தர்ப்பத்துக்கேற்பத் தம்மிடம் இணைந்த பிரபுக்களிடத்தில் அவர் மிகக் கடுமையாக நடந்துகொண்டார்.
மங்கோலிய அச்சுறுத்தல்கள்
மங்கோலியப் படையெடுப்புகள் அலாவுதீனுக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தன. அவரது இரண்டாவது ஆட்சி ஆண்டில் (1298) மங்கோலியர் தில்லியை உக்கிரமாகத் தாக்கினர். அலாவுதீனின் படையால் அவர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை. அடுத்த ஆண்டில் மேலும் அதிக படைகளுடன் மங்கோலியர் மீண்டும் தாக்கிய போது, தில்லியின் புறநகர மக்கள் நகரத்துக்குள் தஞ்சமடைந்தனர். இந்தச் சவாலை அலாவுதீன், தானே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் விளைவாக நிகழ்ந்த மோதலில் மங்கோலியர் நிலைகுலைந்தனர். இருப்பினும் 1305இல் தோஆப் சமவெளிப் பகுதியின் வழியே நுழைந்து மீண்டும் தாக்கினர். இம்முறை மங்கோலியரை தோற்கடித்த சுல்தானின் படை, அதிக எண்ணிக்கையில் அவர்களைச் சிறைப்பிடித்துக் கொன்றது. ஆனாலும் மங்கோலியர் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. கடைசி மங்கோலியத் தாக்குதல் 1307-08இல் நிகழ்ந்தது. இது மிகப் பிரமாண்டமாக இருந்தது. ஆனாலும், மங்கோலியருக்குக் கிடைத்த கடுமையான பதிலடி, அதன் பிறகு அவர்கள் உள்ளே நுழைந்து தாக்காதவாறு தடுத்தது.
இராணுவத் தாக்குதல்கள்
சுல்தானியம் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்கு, அதன் வட இந்திய நிலப்பரப்புக்களின் வேளாண் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை. இது, கொள்ளைப் பொருள் தேடி இடைவிடாமல் அவர்கள் நடத்திய சூறையாடல்களால் தெளிவாகிறது. தேவகிரி (1296, 1307,1314), குஜராத் (1299-1300), ரான்தம்பூர் (1301), சித்தூர் (1303), மால்வா (1305) ஆகிய இடங்களின் மீது அலாவுதீன் நடத்திய தாக்குதல்கள், அவருடைய ராணுவ, அரசியல் அதிகாரத்தைப் பறைசாற்றவும், செல்வவளத்தைப் பெருக்கவுமே நடத்தப்பட்டன. தீபகற்பத்தில் அவருடைய முதல் இலக்கு மேற்கு தக்காணத்தில் இருந்த தேவகிரியாகும்.
1307ஆம் ஆண்டு, தேவகிரி கோட்டையைக் கைப்பற்றுவதற்காக மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு பெரும் படையை அலாவுதீன் அனுப்பினார். இதைத் தொடர்ந்து, தெலுங்கானா பகுதியிலிருந்த வாரங்கல்லின் காகதீய அரசர் பிரதாபருத்ரதேவா 1309இல் தோற்கடிக்கப்பட்டார். 1310இல் தோல்வியடைந்த ஹொய்சாள அரசர் மூன்றாம் வீரவல்லாளன், அவரது செல்வங்கள் அனைத்தையும் தில்லித் துருப்புகளிடம் ஒப்படைத்தார்.
பிறகு மாலிக் காஃபூர் தமிழ் நாட்டுக்குப் புறப்பட்டார். கனத்த மழை, வெள்ளத்தால் காஃபூர் முன்னேறுவது தடைப்பட்டபோதும். சிதம்பரம், திருவரங்கம் ஆகிய கோவில் நகரங்களையும், பாண்டியர் தலைநகரம் மதுரையையும் சூறையாடினார். தமிழ்ப் பிரதேசங்களிலிருந்த இஸ்லாமியர், மாலிக் காஃபூரை எதிர்த்து, பாண்டியர் தரப்பில் நின்று போரிட்டனர் என்பது இங்குக் குறிப்பிடத்தகுந்தது. 1311இல் ஏராளமான செல்வக் குவியலுடன் மாலிக் காஃபூர், தில்லி திரும்பினார்.
அலாவுதீன் உள்நாட்டு சீர்திருத்தங்கள்
பரந்த நிலப்பரப்புகளைவென்றதைத் தொடர்ந்து, அரசை நிலைப்படுத்தும் நோக்கில் விரிவான நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரபுக்கள் குவித்துவைத்திருந்த செல்வம், அவர்களுக்கு ஓய்வையும் சதிகள் செய்வதற்கான வசதி வாய்ப்புகளையும் அளிப்பதாக அலாவுதீன் கருதினார். அவர் எடுத்த முதல் நடவடிக்கை அதை அவர்களிடமிருந்து பறித்ததுதான். சுல்தானின் ஒப்புதலோடு மட்டுமே பிரபுக் குடும்பங்களுக்கிடையில் திருமண உறவுகள் அனுமதிக்கப்பட்டன. பரிசாகவோ, மதம் சார்ந்த அறக்கொடையாகவோ அளிக்கப்பட்டுச் சொத்துரிமை அடிப்படையில் வைத்திருந்த கிராமங்களை மீண்டும் அரச அதிகாரத்தின் கீழ் கொண்டுவர சுல்தான் ஆணையிட்டார். கிராம அலுவலர்கள் அனுபவித்துவந்த மரபுரிமைகளைப் பறித்து, பரம்பரை கிராம அலுவலர்களின் அதிகாரங்களைத் தடை செய்தார். ஊழல் வயப்பட்ட அரச அலுவலர்களைக் கடுமையாகத் தண்டித்தார். மதுவும் போதை மருந்துகளின் பயன்பாடும் தடை செய்யப்பட்டன. சூதாட்டமும் தடை செய்யப்பட்டது; சூதாடிகள் நகரத்துக்கு வெளியே விரட்டப்பட்டனர். இருப்பினும் மது விலக்கு பெருமளவில் மீறப்பட்டதால், கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் கட்டாயம் அலாவுதீனுக்கு ஏற்பட்டது.
உழவர்களிடமிருந்து நிலவரிகள் நேரடியாக வசூலிக்கப்பட்டன. இதனால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரிகள் வசூலிக்கும் உரிமை பறிபோனது. அலாவுதீன் விதித்த வரிச்சுமை செல்வர்கள் மீது இருந்ததேயன்றி ஏழைகள் மீது அல்ல. தனது பேரரசின் அனைத்துப் பகுதிகளுடனும் தொடர்பில் இருப்பதற்காக அலாவுதீன் அஞ்சல் முறையை ஏற்படுத்தினார்.
நாற்பதின்மர் (சகல்கானி) : தகுதியிலும் வரிசையிலும் சுல்தானை அடுத்துப் பிரபுக்கள் இருந்தனர். அரசை நிர்வகிப்பதில் அவர்கள் ஒரு தீர்மானகரமான பங்கு வகித்தனர். பிரபுக்களே ஆளும் வர்க்கமாக இருந்தபோதிலும் அவர்கள், துருக்கியர், பாரசீகர், அரபியர், எகிப்தியர், இந்திய முஸ்லீம்கள் போன்ற வெவ்வேறு இனக்குழுக்களிலிருந்தும் இனங்களிலிருந்தும் வந்தனர். இல்துமிஷ், நாற்பதின்மர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அவர்களிலிருந்து தெரிவு செய்து இராணுவத்திலும் குடிமை நிர்வாகத்திலும் நியமித்தார். இல்துமிஷ் இறந்த பிறகு, ருக்னுத்தின் ஃபெரோஸை அரசனாக்க வேண்டும் என்ற இல்துமிஷின் விருப்பத்தைப் புறந்தள்ளும் அளவுக்கு அந்த நாற்பதின்மர் குழு வலுமிக்கதாயிற்று. இரஸியா, தனது நலன்களைக் காத்துக்கொள்வதற்காக, அபிசீனிய அடிமை யாகுத் தலைமையில் துருக்கியரல்லாத பிரபுக்களையும் இந்திய முஸ்லீம் பிரபுக்களையும் கொண்ட ஒரு குழு அமைத்தார். எனினும் இதை, அவ்விருவரையும் கொலை செய்ய வைத்த துருக்கிய பிரபுக்கள் எதிர்த்தனர். இவ்வாறாக, அரசரின் மூத்த மகனே ஆட்சிக்கு வாரிசு என்ற விதி இல்லாத நிலையில் அரசுரிமை கோரிய ஏதோ ஒருவர் தரப்பில் பிரபுக்கள் சேர்ந்துகொண்டனர். இது, சுல்தானைத் தெரிந்தெடுக்க உதவியது அல்லது ஆட்சி நிலைகுலைவதற்குப் பங்களித்தது. பிரபுக்கள் பல குழுக்களாக சுல்தானுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டனர். எனவே அந்த நாற்பதின்மர் அமைப்பு சுல்தானியத்தின் நிலைத்தன்மைக்குப் பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி, அதை பால்பன் ஒழித்தார்; இதன் மூலம் “துருக்கிய பிரபுக்கள்” ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது ஆணையை மீறுகிற பிரபுக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்தார். அலாவுதீன் கில்ஜி, ஒற்றர்களைப் பணியமர்த்தி, துருக்கியப் பிரபுக்களின் கள்ளத்தனமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் தம்மிடம் நேரடியாகத் தெரிவிக்குமாறு பணித்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.
சந்தைச் சீர்திருத்தங்கள்
அலாவுதீன் ஒரு பெரிய, திறமை வாய்ந்த படையைப் பராமரிக்க வேண்டியிருந்தது. படை வீரர்களுக்குக் கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான் அலாவுதீன் ஆவார். படை வீரர்களுக்குக் குறைந்த ஊதியமே அளிக்கப்பட்டது; இதனால், விலைகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டியிருந்தது. அத்தியாவசியப் பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளச்சந்தை, பதுக்கல் குறித்த விவரங்களைச் சேகரிப்பதற்கு விரிவான ஒற்றாடல் வலைப்பின்னலை ஏற்படுத்தினார். சந்தைகளில் நடந்த கொடுக்கல்- வாங்கல், வாங்குவது, விற்பது, பேரங்கள் என அனைத்து விவரங்களையும் ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டார். அத்தியாவசியப் பொருள்களின் விலை குறித்துச் சந்தை கண்காணிப்பாளர்களும் அறிக்கை அளிப்பவர்களும் ஒற்றர்களும் அவருக்கு அன்றாடம் அறிக்கை அளித்தல் வேண்டும். விலை ஒழுங்குமுறை விதிகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஏதேனும் எடைக் குறைவு கண்டுபிடிக்கப்பட்டால், விற்பவரின் உடலிலிருந்து அதற்குச் சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண் முன்னேயே வீசப்பட்டது.
அலாவுதீன் வாரிசுகள்
அலாவுதீன், தனது மூத்த மகன் கிசர் கானை தமது வாரிசாக நியமித்தார். இருப்பினும் அந்நேரத்தில் அலாவுதீனின் நம்பிக்கைக்குரியவராக மாலிக் காஃபூர் இருந்தார். எனவே, மாலிக் காஃபூர் தாமே அரசாங்க அதிகாரத்தை எடுத்துக்கொண்டார். ஆனால் ஆட்சிக்கு வந்த வெறும் முப்பத்தைந்தே நாள்களில் பிரபுகளால் அவர் கொல்லப்பட்டார். இதன் பிறகு வரிசையாகக் கொலைகள் நிகழ்ந்தன. இதன் காரணமாக மங்கோலியருக்கு எதிரான பல படையெடுப்புகளில் பங்கேற்ற திறமைசாலியான காஸி மாலிக், 1320இல் கியாசுதீன் துக்ளக் ஆக ஆட்சியில் அமர்ந்தார். பதவியிலிருந்த கில்ஜி ஆட்சியாளர் குஸ்ரௌவைக் கொன்றதன் மூலம் கில்ஜி வம்சத்திலிருந்து எவரும் அரசுரிமை கோருவதைத் தடுத்தார். இவ்வாறாக, 1414 வரையிலும் நீடித்த துக்ளக் வம்சத்தின் ஆட்சி தொடங்கியது.