வரலாறு - அடிமை வம்சம் - தில்லி சுல்தானியத்தின் தோற்றம் | 11th History : Chapter 10 : Advent of Arabs and turks
தில்லி சுல்தானியத்தின் தோற்றம்
அடிமை வம்சம்
முகமது கோரி இறந்த பிறகு அதிகாரத்துக்கு மூவர் போட்டியிட்டனர். ஒருவர் குத்புதீன் ஐபக். இவர், தில்லியில் அரியணை ஏறினார்; ஆனால் அவரது மாமனார் இல்திஸ், ஆட்சிக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்தார். இந்த வம்சத்தின் மூன்று முக்கியமான ஆட்சியாளர்கள் : குத்புதீன் ஐபக், இல்துமிஷ், பால்பன்.
அடிமை வம்சத்தை மம்லக் வம்சம் என்றும் கூறுவர். மம்லக் என்பதற்கு உடைமை என்று பொருளாகும். இது, 'ஓர் அடிமை' என்பதற்கான அரபுத் தகுதிப் பெயருமாகும்.
குத்புதீன் ஐபக் (1206-1210)
குத்புதீன் ஐபக், சிறுவனாக இருந்த போதே கஜினியில் ஓர் அடிமையாக சுல்தான் முகமது கோரிக்கு விற்கப்பட்டார். அவரது திறமையையும் விசுவாசத்தையும் கண்ட முகமது கோரி, இந்தியாவில் தான் வெற்றிபெற்ற ஒரு மாகாணத்திற்கு பொறுப்பு ஆளுநராக அவரை நியமித்தார். பீகாரையும் வங்கத்தையும் கைப்பற்றுவதற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த முகமது - பின் – பக்தியார் கில்ஜி என்ற ஒரு துருக்கியத் தளபதி குத்புதீன் ஐபக்-கிற்கு உதவினார். குத்புதீன் ஐபக் நான்கு ஆண்டுகள் (1206-1210) ஆட்சி புரிந்தார்; அவர் புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெயரெடுத்தார். 1210இல் லாகூரில் சௌகான் (குதிரை போலோ) எனும் விளையாட்டின் போது நிகழ்ந்த ஒரு விபத்தில் இறந்தார்.
புகழ்பெற்ற நாளந்தா பௌத்தப் பல்கலைக் கழகத்தை அழித்தவர் பக்தியார் கில்ஜி என்று கருதப்படுகிறது. சீனப் பயணி யுவான் சுவாங் தனது பயணக் குறிப்புகளில் நாளந்தா குறித்து விரிவாகக் - குறிப்பிட்டுள்ளார். நாளந்தா நூலகத்தில் இருந்த இலக்கணம், இலக்கியம், தர்க்கம், வானியல், மருத்துவம் குறித்த நூறாயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளும் நூல்களும் துருக்கியச் சூறையாடலில் அழிந்தன.
இல்துமிஷ் (1211-1236)
சம்சுதீன் இல்துமிஷ் (1211-1236) துருக்கிய இனத்தைச் சார்ந்த குத்புதீன் ஐபக்கின் அடிமை. இல்துமிஷ்-இன் மேல் தட்டு அடிமைகள் பலரும் துருக்கிய, மங்கோலிய வழித்தோன்றல்கள். அவர்களை புக்காரா, சாமர்கண்ட், பாக்தாத் போன்ற வணிக மையங்களிலிருந்து வணிகர்கள் தில்லிக்கு அழைத்துவந்தனர். எனினும் இவர்கள் அனைவருக்குமே துருக்கியப் பட்டங்களை சம்சுதீன் இல்துமிஷ், கொடுத்தார். தனது மேல்தட்டு இராணுவ அடிமைகளையே (பண்டகன்) அவர் நம்பியிருந்தார். தொலைவிலுள்ள இடங்களில் அவர்களையே ஆளுநர்களாகவும் தளபதிகளாகவும் நியமிக்கிற வழக்கத்தையும் கைக்கொண்டார். இக்காலகட்டத்தில் மங்கோலிய இனத்தைச் சேர்ந்த அனுபவமிக்க இராணுவத் தளபதிகள் வட இந்தியாவுக்குள் குடிபெயர்ந்த போதிலும், பழைய வழக்கத்தை இல்துமிஷ் மாற்றிக்கொள்ளவில்லை.
குத்புதீனின் அடிமையும் மருமகனுமான சம்சுதீன் இல்துமிஷ், குத்புதீன் ஐபக்கின் மகன் ஆரம் ஷா ஆட்சிக்கு வருவதைத் தடுத்து, தானே தில்லியின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். தனது ஆட்சிக்காலத்தில் அவர் குவாலியர், ரான்தம்பூர், அஜ்மீர், ஜலோர் ஆகிய இடங்களில் ராஜபுத்திரர்களுக்கிடையே நிலவிய குழப்பங்களை முடித்துவைத்தார். லாகூரிலும் முல்தானிலும் நசுருதீன் குபச்சாவின் படையை எதிர்த்து வெற்றிபெற்றார். வங்க ஆளுநர் அலிவர்தனின் சதியையும் முறியடித்தார். மங்கோலியசெங்கிஸ்கானுக்கும் மத்திய ஆசியாவின் கவாரிஸ்மி ஷா ஜலாலுதீனுக்கும் இடையே போர்ப்பகை இருந்தது. இல்துமிஷிடம் ஜலாலுதீன் ஆதரவு கேட்டார். இல்துமிஷ், அவரை ஆதரிக்க மறுத்துவிட்டார். ஜலாலுதீனை அவர், ஆதரித்திருந்தால் இந்திய வரலாறு பெரிதும் மாறி இருந்திருக்கும்; மங்கோலியர்கள் இந்தியாவை எளிதில் நாசம் செய்திருப்பார்கள். இல்துமிஷ்-இன் ஆட்சி, தில்லியில் 243 அடி உயரமுள்ள குதுப்மினார் என்ற ஒரு வெற்றித்தூணைக் கட்டிமுடித்ததற்கும் சுல்தான்கள் ஆட்சி காலத்தின் இரண்டு அடிப்படை நாணயங்களான செப்பு, வெள்ளி தங்காவை அறிமுகம் செய்ததற்கும் குறிப்பிடத்தகுந்தது
பண்டகன் என்பது பண்ட என்பதன் பன்மையாகும்; இச்சொல்லுக்குப் படை அடிமை என்று பொருள். இராணுவப் பணி அனுபவம், பேரரசருடனான நெருக்கம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தரம் பிரிக்கப்பட்டார்கள். இந்த நம்பிக்கை, அவர்கள் ஆளுநர்களாகவும் தளபதிகளாகவும் நியமிக்கப்படுவதற்கு வழிகோலியது. வட இந்தியாவில் குரித் பண்டகன், மொய்சுதீன் கோரியின் அடிமைகளாவர். இந்த அடிமைகளுக்கு சொந்தச் சமூக அடையாளம் இல்லை ; இதனால் அவர்களது எஜமானர்கள் அவர்களுக்குப் புதிய பெயர்கள் சூட்டினர்; நிஸ்பா என்பதையும் உள்ளடக்கிய அப்பெயர்கள் அவர்களது சமூக அல்லது பிரதேச அடையாளத்தைக் குறித்தன. அடிமைகள், தங்களது எஜமானர்களின் நிஸ்பாவைக் கொண்டிருந்தனர்; எனவே மொய்சுதீன் அடிமை, மொய்சு எனும் நிஸ்பாவைக் கொண்டிருப்பார்; சுல்தான் சம்சுதீன் இல்துமிஷின் அடிமை, ஷம்ஸி பண்டகன் என்று குறிப்பிடப்படுவார்.
அடிமை வம்ச மரபுகள் பலவீனமானவை என்பதால், இல்துமிஷ் இறந்த பிறகு அவரது வாரிசுகள் ஆட்சிக்கு வருவது எளிதாக இல்லை . ஒரு பத்து ஆண்டுகளுக்குள், ஒரு மகன், ஒரு மகள் (சுல்தானா இரஸியா), மற்றொரு மகன், ஒரு பேரன் எனப் பலரும் ஆட்சிக்கு வந்தனர்; இறுதியில் அவரது கடைசி மகன் சுல்தான் இரண்டாம் நசிர் அல்லுதீன் முகமது (1246-66) அரசரானார். இல்துமிஷின் வாரிசுகள் தங்கள் தந்தையாரால் நியமிக்கப்பட்ட தளபதிகளையும் ஆளுநர்களையும் எதிர்த்து போரிட்டுத்தோற்றனர். மூத்த பிரபுக்களாகிய அவர்கள் தொடர்ந்து தில்லி அரசியலில் தலையிட்டனர். இல்துமிஷ் வாரிசுகளுக்கு நிபந்தனைகள் விதித்து வந்தனர். மூத்த அரச குடும்ப அடிமைகளுக்கு மாற்றாக இளைய தலைமுறையினரை சுல்தான் நியமித்தபோது, அவர்களுக்கு முன்னே அதிகாரம் செலுத்தியவர்களுக்கு நிகரான வலிமையான ஒன்றுபட்ட சுல்தானிய அரசு பற்றி அரசருக்கிருந்த கண்ணோட்டத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை
கிழக்கே லக்னோவதி (நவீன வங்கம்), மேற்கே பஞ்சாப், சிந்து மாகாணங்களில் நியமிக்கப்பட்ட அடிமை ஆளுநர்கள் தில்லியின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி சுதந்திர அரசுகளாக அறிவித்தனர். தில்லி சுல்தானின் மைய ஆட்சிப் பகுதிகளிலிருந்த (தில்லி மற்றும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகள்) அடிமை ஆளுநர்களும், தங்களை நிலைப்படுத்திக் கொண்டும் பக்கத்திலுள்ள குறுநிலத் தலைவர்களுடன் அணி சேர்ந்தும் சுல்தானுக்குக் கட்டுப்பட மறுத்தனர். ஷம்ஸியின் அடிமைகளுக்கும் அடுத்தடுத்து வந்த தில்லி சுல்தான்களுக்கும் இடையில் இருபதாண்டுகளுக்கு மோதல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு 1254 இல், வடமேற்கில் ஷிவாலிக் ஆட்சிப் பகுதிகளின் தளபதியாக இருந்த உலுக் கான், தில்லியைக் கைப்பற்றினார். உலுக் கான், இல்துமிஷ் ஆட்சியின்போது அடிமையாகவும் இளைஞராகவும் இருந்தவர். அவர் (சுல்தானுக்குத் துணையாக இருந்த) ஆட்சி அதிகாரப் பிரதிநிதி என்று பொருள்படும், நயிப்-இ முல்க் என்று பட்டம் சூட்டிக்கொண்டார். பிறகு 1266இல் சுல்தான் கியாஸ்-உத்-தின் பால்பனாக தில்லி ஆட்சியைக் கைப்பற்றினார்.
பால்பன் (1266-1287)
பால்பன் அரசரானதும் தில்லி சுல்தானியத்தில் குழப்பங்கள் விளைவித்த பிரபுக்களின் அரசியல் சூழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன. பால்பன், தனது ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள, அடங்க மறுத்த ஆளுநர்கள் மீதும் அவர்களின் உள்ளூர் கூட்டாளிகள் மீதும் தாக்குதல் தொடுத்தார். தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தோவாபிலும் நிகழ்ந்த பால்பனின் தாக்குதல்களை பரணி குறிப்பிடுகிறார். இந்தத் தாக்குதல்களின் போது காடுகள் அழிக்கப்பட்டன; புதிய சாலைகள் அமைக்கப்பட்டன; காடுகள் அழிக்கப்பட்ட புதிய நிலங்கள், புதிதாகப் படையில் சேர்ந்த ஆஃப்கானியர்களுக்கும் மற்றவர்களுக்கும் குத்தகையில்லா நிலங்களாக (மஃப்ருஸி) வழங்கப்பட்டு, அவை பயிரிடப்பட்டன. வணிகத் தடங்களையும் கிராமச் சந்தைகளையும் பாதுகாக்கப் புதிய கோட்டைகள் கட்டப்பட்டன.
இரஸியா சுல்தானா (1236-1240) : இவர் பேரரசர் இல்துமிஷின் மகள். இரஸியா அரியணை ஏறுவதற்கு துருக்கிய பிரபுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏராளமான தடைகளைக் கடந்தே இரஸியா பேரரசியாகப் பதவி ஏற்றார். மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணி, இபின் பதூதாவின் கூற்றுப் படி ‘குதிரை மீது ஆண்கள் சவாரி செய்வதைப் போல், கையில் வில் அம்புடன், அரச பரிவாரங்கள் சூழ இரஸியாவும் சவாரி செய்தார். தனது முகத்துக்கு அவர் திரையிடவில்லை’ . இருப்பினும் அவர் மூன்றரை ஆண்டுகளே ஆட்சி புரிந்தார். ஜலாலுதீன் யாகுத் என்ற ஓர் அபிசீனிய அடிமையை அவர் குதிரை இலாயப் பணித்துறைத் தலைவராக (அமீர்-இ-அகுர்) ஓர் உயர்ந்த பதவியில் அமர்த்தினார். இது, துருக்கிய பிரபுக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. யாகுத்துக்கும் அரசி இரஸியாவுக்கும் இருந்த நெருக்கத்தைப் பெரிதுபடுத்த, பிரபுக்கள், அரசியைப் பதவியிலிருந்து இறக்க முயன்றனர். இரஸியாவுக்குப் பொதுமக்கள் ஆதரவு இருந்ததால், தில்லியில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை . தெற்குப் பஞ்சாபில் கலகக்கார ஆளுநர் அல்துனியாவைத் தண்டிப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைச் சதிகாரர்கள் பயன்படுத்தி அவரை ஆட்சியிலிருந்து அகற்றினர்.
பால்பனும் சட்ட ஒழுங்கும்
கங்கை, யமுனை நதிகள் இடையிலான தோவாப் பகுதிகளில் சட்ட ஒழுங்கு நிலைமை சீர்குலைந்தது. ராஜபுத்திர ஜமீன்தார்கள் கோட்டைகள் அமைத்தனர்; சுல்தானின் ஆணைகளை மீறினர். வட மேற்கில், மேவாரைச் சுற்றிய அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மியோ என்ற ஓர் இஸ்லாமியச் சமூகம் கொலையிலும் கொள்ளையிலும் ஈடுபட்டிருந்தது. இதை ஒரு சவாலாக ஏற்ற பால்பன் தாமே முன்னின்று மேவாரைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார். அவரின் படை வீரர்கள், மியோக்களைத் தேடிப் பிடித்துக் கொன்றனர். தோவாப் பகுதியில் ராஜபுத்திர அரண்கள் அழிக்கப்பட்டன; காடுகள் அழிக்கப்பட்டன. சாலைகளைப் பாதுகாக்கவும் கலகங்களைக் கையாளவும் அப்பகுதி முழுவதிலும் ஆஃப்கன் படை வீரர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
துக்ரில் கானை தண்டிக்கின்ற தாக்குதல்
பால்பன், கலகங்களை ஈவிரக்கமின்றி ஒடுக்கினார். தனக்குப் பிடித்த ஓர் அடிமையான துக்ரில் கானை வங்கத்தின் ஆளுநராக நியமித்தார். ஆனால், விரைவிலேயே துக்ரில் கான் வெளிப்படையாகவே கலகம் செய்தார். அதை ஒடுக்குவதற்கு, பால்பன் அனுப்பிவைத்த அவத் ஆளுநர் அமின் கான், பணிந்து பின்வாங்கினார். இதனால் ஆத்திரமடைந்த பால்பன் மேலும் இரு படைப் பிரிவுகளை அனுப்ப அவையும் தோல்வியைத் தழுவின. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தப் பின்னடைவுகளால் அவமானப்பட்ட பால்பன், தாமே வங்கத்திற்குச் சென்றார். பால்பன் நெருங்கிவிட்டதைக் கேள்வியுற்ற துக்ரில் கான் தப்பியோடினார். பால்பன், அவரைப் பின் தொடர்ந்து முதலில் லக்நௌதிக்கும் பிறகு திரிபுராவை நோக்கியும் சென்றார். அங்கே துக்ரில் கானைப்பிடித்த பால்பனின் படைவீரர்கள் அவரைக் கொன்றனர். பிறகு வங்கத்தின் ஆளுநராக பால்பனின் மகன் புக்ரா கான் நியமிக்கப்பட்டார். பால்பன் இறந்த பிறகு புக்ரா கான் ஒரு சுதந்திர அரசாட்சியாகப் பிரிந்து போனாரேயன்றி தந்தையின் அரியணையைக் கோரவில்லை. இதனால் தில்லியில் ஒரு தலைமை நெருக்கடி ஏற்பட்டது; மேலும், அவரது மகன் கைகுபாத், சிற்றின்பத்தில் வீழ்ந்து கிடந்தார்.
மங்கோலிய அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள்
மங்கோலியர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக தனது ராணுவத்தை பால்பன் பலப்படுத்திக் கொண்டார். படிண்டா, சுனம், சாமானா ஆகிய இடங்களில் இருந்த கோட்டைகளில் கூடுதல் படைகளை நிலைநிறுத்தி வலுப்படுத்தினார். அதே நேரத்தில், ஈரானின் மங்கோலிய பொறுப்பு ஆளுநரும் செங்கிஸ் கானின் பேரனுமான ஹுலுக் கானுடன் நல்லுறவைப் பேணுவதற்கு அவர் முயற்சி செய்தார். சட்லெஜுக்கு அப்பால் முன்னேறி வரமாட்டோம் என்ற வாக்குறுதியை மங்கோலியரிடமிருந்து பால்பன் பெற்றார். இதை, 1259 இல் தில்லிக்கு ஒரு நல்லெண்ணக் குழுவை அனுப்பிவைத்து உலுக்கான் குறிப்பால் உணர்த்தினார். மங்கோலியத் தாக்குதல்களிலிருந்து எல்லைப் பகுதிகளைக் காப்பதற்காக தனது விருப்பத்துக்குரிய மகன் முகமது கானுக்கு முல்தானின் ஆளுநர் பொறுப்பு அளித்திருந்தார் பால்பன். உலுக்கானுடன் நட்புறவு இருந்தபோதிலும் ஒரு மங்கோலிய ரோடு ஏற்பட்ட ஒரு மோதலில் முகமது கான் கொல்லப்பட்டார். இதனால் மனமுடைந்த பால்பன், 1286இல் இறந்து போனார்.