Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | தவளை – ரானா ஹெக்ஸாடேக்டைலா உள்ளுறுப்பு அமைப்பு: செரிமான மண்டலம், சுவாச மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம்,கழிவு நீக்க - இனப் பெருக்க மண்டலம்
   Posted On :  06.01.2024 04:56 am

11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்

தவளை – ரானா ஹெக்ஸாடேக்டைலா உள்ளுறுப்பு அமைப்பு: செரிமான மண்டலம், சுவாச மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம்,கழிவு நீக்க - இனப் பெருக்க மண்டலம்

தவளை – ரானா ஹெக்ஸாடேக்டைலா உள்ளுறுப்பு அமைப்பு: செரிமான மண்டலம், சுவாச மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம்,கழிவு நீக்க - இனப் பெருக்க மண்டலம்

உள்ளுறுப்பு அமைப்பு 

செரிமான மண்டலம்

தவளையின் உணவுப்பாதை, வாய் முதல் மலவாய் வரையில் நீண்டுள்ளது. இது வாய், வாய்க்குழி, தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, முன் மற்றும் பின் சிறுகுடல், மலக்குடல், பொதுக்கழிவுத்துளை ஆகிய பகுதிகளைக் கொண்டது. உணவுப்பாதை பொதுப்புழை வழியே வெளியே திறக்கிறது (படம்.4.17). அகன்ற, பெரிய வாய், வாய்க்குழியில் திறக்கிறது. தசையாலான ஒட்டும் தன்மை கொண்ட நாக்கு, வாய்க்குழியின் தரைப்பகுதியில் அமைந்துள்ளது, இது வாயின் முன் பகுதியில் இணைந்தும் பின்பகுதி இணையாமலும் உள்ளது. நாக்கின் நுனி பிளவுபட்ட முனையைக் கொண்டுள்ளது.


பூச்சிகள் உள்ளிட்ட இரையைக் கண்டவுடன் மிக விரைவில் நீளும் நாக்கில் இரை ஒட்டிக்கொண்டவுடன் நாக்கு உடனடியாக வாயினுள் இழுக்கப்பட்டு வாய் மூடப்படுகிறது. மேல்தாடையின் உட்பகுதியில், கூர்மையான, சிறிய மேல்தாடைப் பற்கள் ஒற்றை வரிசையில் அமைந்துள்ளன. (படம் 4.17) இதைத்தவிர உள்நாசித்துவாரங்களின் அருகில் இரண்டு தொகுதி வோமரைன் பற்கள் (vomerine teeth) உள்ளன. கீழ்த்தாடை பற்களற்றது.

வாய், வாய்க்குழியிலும், வாய்க்குழி தொண்டை வழியாக உணவுக்குழலிலும் திறக்கிறது. குட்டையான உணவுக்குழல் இரைப்பையில் முடிகிறது. இரைப்பையைத் தொடர்ந்து வரும் குடல், மலக்குடல் வழியாக இறுதியில் பொதுகழிவரையில் திறக்கிறது (படம்.4.18). கல்லீரலில் சுரக்கப்படும் பித்த நீர், பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. மற்றொரு செரிமானச் சுரப்பியான கணையம், கணைய நீரை உற்பத்தி செய்கிறது. இதில் செரிமான நொதிகள் உள்ளன.


பிளவுபட்ட நாக்கினால் பிடிக்கப்பட்ட உணவு, இரைப்பைச் சுவரினால் சுரக்கப்படுகிற ஹைட்ரோகுளோரிக் அமிலம், மற்றும் இரைப்பை நீரினால் செரிக்கப்படுகிறது. ஓரளவிற்குச் செரிக்கப்பட்ட உணவான, இரைப்பைபாகு (Chyme), இரைப்பையிலிருந்து முன்சிறு குடலுக்குள் செலுத்தப்படுகிறது. முன்சிறுகுடல், கல்லீரலிலிருந்து பித்த நீரையும் கணையத்திலிருந்து கணைய நீரையும் பொதுநாளம் வழியாகப் பெறுகிறது. பித்தநீர் கொழுப்பை பால்மமடையச் செய்கிறது. கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பைச் செரிக்கக் கணைய நீர் உதவுகிறது. செரித்தலின் இறுதி நிகழ்வு குடலில் நடக்கிறது. குடல் சுவரில் உள்ள விரல் போன்ற குடலுறிஞ்சிகள் மற்றும் நுண்குடலுறிஞ்சிகள் செரித்த உணவை உட்கிரகிக்கின்றன.செரிக்காத திடக்கழிவுகள் மலக்குடல் வழியாகப் பொதுக் கழிவறைக்குக் கடத்தப்படுகிறது. அங்கிருந்து பொதுக்கழிவுத்துளை வழியாகக் கழிவுகள் வெளியேறுகின்றன.


சுவாச மண்டலம்

நீரிலும் நிலத்திலும் இருவேறு முறைகளில் தவளைகள் சுவாசிக்கின்றன. நீரில் இருக்கும்போது, நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜன் தோலின் வழியாக விரவல் முறையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது (Cutaneous respiration). நிலத்தில் இருக்கையில், வாய்க்குழி, தோல் மற்றும் நுரையீரல் ஆகியவை சுவாசிக்கப் பயன்படுகின்றன. வாய்க்குழி (Buccal respitation) வாய்க்குழி வழி சுவாசத்தின் போது, வாய் மூடியிருக்கும் நிலையில், நாசித் துளைகள் திறந்திருக்கின்றன. வாய்க்குழியின் தரைப்பகுதி மேலும் கீழும் ஏறி இறங்குகையில் நாசித் துளைகள் வழியாகக் காற்று வெளியேற்றம் மற்றும் உள்ளேற்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நீண்ட, வெளிர்சிவப்பு நிறத்தையுடைய பை போன்ற அமைப்பு கொண்ட ஓரிணை நுரையீரல்கள் மார்பின் மேற்பகுதியில் அமைந்துள்ளன. நாசித் துளைகள் வழியாக உள்நுழையும் காற்று வாய்க்குழி மூலம் நுரையீரல்களை அடைகிறது. நுரையீரல்கள் மூலம் நடைபெறும் சுவாசம் நுரையீரல் சுவாசம் (Pulmonary respiration) எனப்படும். கோடைகால உறக்கம் (Aestivation) மற்றும் குளிர்கால உறக்கம் (Hibernation) ஆகிய நிகழ்வுகளின் போது தோலின் வழியாகச் சுவாசம் நடைபெறுகிறது


இரத்த ஓட்ட மண்டலம்

மூன்று அறைகளைக் கொண்ட இதயம், இரத்த நாளங்கள் மற்றும் இரத்தம் ஆகியவற்றைக் கொண்டு தவளையின் இரத்தச் சுற்றோட்ட மண்டலம் அமைந்துள்ளது. பெரிகார்டியம் எனும் இரட்டைச் சுவர் கொண்ட சவ்வினால் இதயம் சூழப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது. மெல்லிய சுவர் கொண்ட இரண்டு, இதய மேற்புற அறைகளுக்கு ஆரிக்கிள்கள் (ஏட்ரியம்) என்று பெயர். தடித்த சுவர் கொண்ட ஒற்றை இதயக் கீழறைக்கு வென்டிரிக்கிள் என்று பெயர். இதயத்தின் முதுகுப்புறத்தில் அமைந்துள்ள, மெல்லிய சுவருடைய முக்கோண வடிவ அறைக்குச் சைனஸ் வினோஸஸ் எனப்பெயர். இதயத்தின் வயிற்றுப் புறத்தில் குறுக்காக,


உங்களுக்குத் தெரியுமா?

மலப்புழை: பாலூட்டிகளில், உணவுப்பாதையின் இறுதியில் செரிக்காத உணவுப் பொருளை வெளியேற்ற இப்புழை அமைந்துள்ளது.


பொதுக்கழிவுத்துளை: குருத்தெலும்பு மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறப்பன முட்டையிடும் பாலூட்டிகள் ஆகியவற்றில் மலமும் சிறுநீரும் இத்துளை வழியாக வெளியேற்றப்படுகிறது. இனப்பெருக்கத்திற்காகவும் இத்துளை பயன்படுகிறது.

சாய்வாக அமைந்துள்ள தடித்த சுவர் கொண்ட ட்ரங்கஸ் ஆர்டீரியோசஸ் (பொது பெருந்தமனி) வென்ட்ரிக்கிளிலிருந்து தொடங்குகிறது. இது மேலெழும்பி இதயத்தின் மேற்புறத்தில் இடது மற்றும் வலது பெருந் தமனிகளாகப் பிரிகிறது. ஒவ்வொரு பெருந்தமனியும், தலைத்தமனி (கரோடிட்), சிஸ்டமிக் தமனி மற்றும் நுரையீரல் -தோல் தமனி என முப்பிரிவுகளாகப் பிரிகின்றது. தலைத்தமனிகள் உடலின் முன்புறப் பகுதிகளுக்கு இரத்தத்தை அளிக்கின்றன.


ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள சிஸ்டமிக் தமனிகள் சற்றே பின்னோக்கிச் சென்று முதுகுப்புற மையப்பகுதியில் ஒன்று சேர்ந்து முதுகுப்புறப் பெருந்தமனியாகிறது. உடலின் பின்பகுதிக்கு இத்தமனி இரத்தத்தை அளிக்கிறது. நுரையீரல் - தோல் தமனி, அசுத்த இரத்தத்தை நுரையீரலுக்கும், தோலுக்கும் அனுப்புகிறது. உடல் உறுப்புகளிலிருந்து வரும் ஆக்ஸிஜன் அற்ற அசுத்த இரத்தத்தை, உடலின் முன் பகுதியிலிருந்து வரும் இருமேற்பெருஞ் சிரைகள் மற்றும் பின் பகுதியிலிருந்து வரும் ஒரு கீழ்பெருஞ்சிரை ஆகியவற்றின் வழியாகச் சைனஸ் வினோஸஸ் பெறுகிறது. சைனஸ் வினோஸஸ், இதயத்தின் வலது ஆரிக்கிளுக்கு அசுத்த இரத்தத்தை அனுப்புகிறது. அதேவேளையில், இடது ஆரிக்கிள், நுரையீரல் சிரைவழியாக ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தைப் பெறுகிறது.சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போர்ட்டல் மண்டலங்கள் தவளையில் காணப்படுகின்றன (படங்கள் 4.19 மற்றும் 4.20).



தெரிந்து தெளிவோம்

பறவை மற்றும் பாலூட்டிகளில் காணப்படும் நான்கு அறைகள் கொண்ட இதயத்தைப் போல மூவறைகள் கொண்ட தவளையின் இதயம் திறன் வாய்ந்ததாக இல்லை. ஏன்?


இரத்தத்தில் சுமார் 60% அளவிற்குத் திரவப் பிளாஸ்மாவும், சுமார் 40% அளவிற்கு இரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் இரத்தத் தட்டு செல்கள் என மூவகை இரத்தச் செல்களும் உள்ளன. (படம் 4.21). இரத்தச் சிவப்பணுக்கள், சிவப்பு நிற நிறமியையும் உட்கருவையும் கொண்டு நீள்வட்ட வடிவில் உள்ளன. நிறமற்ற வெள்ளையணுக்கள் உட்கருவைக் கொண்டு வட்ட வடிவில் உள்ளன



நரம்பு மண்டலம்

தவளையின் நரம்பு மண்டலத்தை மூன்று தொகுப்புகளாகப் பிரிக்கலாம். அவையாவன, மைய நரம்பு மண்டலம் (CNS), புறநரம்பு மண்டலம் (PNS) மற்றும் தானியங்கி நரம்பு மண்டலம் (ANS). புறநரம்பு மண்டலத்தில் 10 இணை மூளை நரம்புகளும், 10 இணை தண்டுவட நரம்புகளும் அடங்கும். தானியங்கு நரம்பு மண்டலத்தைப் பரிவு நரம்பு மண்டலம் மற்றும் இணைபரிவு நரம்பு மண்டலம் என மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை வயிற்று உறுப்புகளின் தானியங்கு தசைகளைக் கட்டுப்படுத்துகின்றன. மைய நரம்பு மண்டலம், மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியதாகும். மண்டை ஓட்டிற்குள் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மூளையைச் சுற்றிப் பயாமேட்டர் மற்றும் டியுராமேட்டர் எனும் இரு மூளை சவ்வுகள் சூழ்ந்துள்ளன. மூளையானது முன்மூளை, நடுமூளை மற்றும் பின்மூளை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரிதான முன்மூளை (Prosencephalon) நுகர்ச்சி கதுப்புகள், பெருமூளை அரைக்கோளங்கள், டீலன் செஃபலான் மற்றும் டையன்செஃபலான்


ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. நுகர்ச்சி கதுப்புகளின் முன்பகுதி குறுகி தனித்தும் பின்பகுதி இணைந்தும் காணப்படும். இக்கதுப்புகளுக்குள் நுகர்ச்சி வென்ட்ரிக்கிள்கள் எனப்படும் சிறுகுழிகள் உள்ளன. நடுமூளையில் (Mesencephalon), இரு பெரிய பார்வை கதுப்புகள் உண்டு. இவற்றில் உள்ள குழிகளுக்கு பார்வை வென்டிரிக்கிள்கள் (Optic ventricles) என்று பெயர். பின்மூளையில் (Rhombencephalon), சிறுமூளை மற்றும் முகுளம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. சிறுமூளை குறுகலான மெல்லிய குறுக்கு பட்டையாகப் பின் மூளையின் மேல் பகுதியில் காணப்படுகிறது. இதன் பின் முகுளம் அமைந்துள்ளது. இம்முகுளம் ஃபொராமன் மேக்னம் எனும் பெருந்துளையின் வழியாகத் தண்டுவடமாய்த் தொடர்கிறது. முதுகுப்புறத்தேயுள்ள முதுகெலும்புத் தொடர் தண்டுவடத்தைச் சூழ்ந்து பாதுகாக்கிறது (படம் 4.22)


கழிவு நீக்க - இனப் பெருக்க மண்டலம்

கழிவு நீக்க உறுப்புகள்

நைட்ரஜன் கழிவுப்பொருட்கள் வெளியேற்றம், நீர் மற்றும் உப்பு சமநிலைப்பேணுதல் போன்றவை நன்கு வளர்ச்சியடைந்த கழிவு நீக்க மண்டலத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஓரிணை சிறுநீரகங்கள், ஓரிணை சிறுநீரக நாளங்கள், சிறுநீர்ப்பை மற்றும் பொதுக்கழிவுத்துளை ஆகியன இம்மண்டலத்தில் அடங்கும். அடர் சிவப்பு நிறம் கொண்ட, தட்டையான, நீண்ட சிறுநீரகங்கள் உடற்குழியில் முதுகெலும்புத் தொடரின் பக்கத்திற்கொன்றாக அமைந்துள்ளன. சிறுநீரகங்கள் மீசோநெஃப்ரிக் வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் பல நெஃப்ரான்கள் எனும் செயல் அலகுகள் உள்ளன. இவை இரத்தத்திலுள்ள நைட்ரஜன் கழிவுப் பொருட்களைப் பிரித்து யூரியாவாக வெளியேற்றுகின்றன. எனவே தவளைகள் யூரியோடெலிக் வகை (யூரியா நீக்கி) உயிரிகளாகும். சிறுநீரகங்களிலிருந்து தோன்றும் ஓரிணை சிறுநீரக நாளங்கள் பொதுக்கழிவுப்பையில் திறக்கின்றன. அதைப்போன்றே, மலக்குடலுக்குக் கீழே மெல்லிய சுவருடைய ஒற்றைச் சிறுநீர்ப்பையும் பொதுக்கழிவறையில் திறக்கிறது.


இனப்பெருக்க உறுப்புகள்

ஓரிணை விந்தகங்கள் ஆண் இனப்பெருக்க உறுப்புகளாகும். ஒவ்வொரு விந்தகமும் மீசார்க்கியம் (Mesorchium) என்னும் பெரிட்டோனிய சவ்வு மடிப்புகள் மூலம் சிறுநீரகங்கள் மற்றும் முதுகுப்புற சுவரில் இணைக்கப்பட்டுள்ளது விந்தகங்களிலிருந்து தோன்றும் விந்து நுண்குழல்கள் பீட்டர் கால்வாய்கள் (Bidder's canal) இறுதியில் அந்தந்தப் பக்கத்துச் சிறுநீரக நாளங்களில் திறக்கின்றன. இதனால் சிறுநீரக நாளம் பொதுவான கழிவுநீக்க - இனப்பெருக்கப் பாதையாகிப் பொதுக்கழிவறையில் திறக்கிறது (படம் 4.23).


ஓரிணை அண்டகங்கள் பெண் இனப்பெருக்க உறுப்புகளாகும். (படம் 4.24) மீசோவேரியம் (Mesovarium) என்னும் பெரிட்டோனிய சவ்வு மடிப்புகள், அண்டகங்களை சிறுநீரகங்கள் மற்றும் முதுகுப்புற சுவரில் இணைத்துள்ளன. சிறுநீரகங்களின் பக்கவாட்டில் ஓரிணை சுருண்ட அண்ட நாளங்கள் அமைந்திருக்கின்றன. அண்ட நாளம் ஒவ்வொன்றும் முன்புறத்தில் உடற்குழியில் திறக்கக்கூடிய புனல் வடிவத் திறப்பையும் (Ostia), பொதுக்கழிவுப் பையில் திறக்கும் பின் பகுதியையும் கொண்டுள்ளன.


ஆண் தவளைகளில் காணப்படுவது போலன்றி, பெண் தவளைகளில் அண்ட நாளங்கள் சிறுநீரக நாளங்களிலிருந்து தனித்துக் காணப்படுகின்றன. அண்ட நாளங்கள், பொதுக்கழிவுப் பையில் திறப்பதற்கு முன்பாகச் சற்று விரிவடைந்து ஒரு அண்டப்பையாக உருவாகியுள்ளது. உயிரியில் இருந்து வளர்ச்சியடைந்த முட்டைகள், பொதுக் கழிவுத்துளை வழியாக வெளியேற்றப்படுவதற்கு முன்பு வரை தற்காலிகமாக அண்டப்பையில் சேமித்து வைக்கப்படுகின்றன. தவளையில் புறக்கருவுறுதல் நடைபெறுகிறது. கருவுறுதலுக்குப் பின் சில நாட்களிலேயே கருமுட்டைகளிலிருந்து தலைப்பிரட்டை என்னும் சிறிய வளர் இளவுயிரிகள் (tadpole) வெளிவருகின்றன. இவை உடலில் சேமிக்கப்பட்டுள்ள கருவுணவையே உணவூட்டத்திற்குச் சார்ந்துள்ளன. இவை படிப்படியாக வளர்ந்தபின் மூன்று இணை செவுள்களைப் பெறுகின்றன. தலைப்பிரட்டை வளர்ந்து முதிர்ந்து காற்றை சுவாசிக்கும், ஊனுண்ணும் முதிர் தவளையாகிறது (படம் 4.25). இம்மாற்ற நிகழ்வுகளே வளர் உருமாற்றம் எனப்படும். உடலில் கால்கள் வளர்ச்சியடைகின்றன. வால், செவுள்கள் ஆகியவை மறைந்து விடுகின்றன. வாய் அகன்று, தாடைகளும் பற்களும் வளர்ச்சியடைகின்றன. நுரையீரல் செயல்படத் துவங்குகிறது. இவ்வாறு முதிர் தவளை உருவாகிறது.

11th Zoology : Chapter 4 : Organ and Organ Systems in Animals : Anatomy of Frog : Digestive, Respiratory, Circulatory, Nervous, Excretory, Reproductive system in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் : தவளை – ரானா ஹெக்ஸாடேக்டைலா உள்ளுறுப்பு அமைப்பு: செரிமான மண்டலம், சுவாச மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம்,கழிவு நீக்க - இனப் பெருக்க மண்டலம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்