புறத்தோற்றம்
படகு போன்ற தவளையின் உடல், நீரில் நீந்துவதற்கு ஏற்றதாக உள்ளது. முதுகுப்புற வயிற்றுப் புற அச்சு வாக்கில் தட்டையாக்கப்பட்ட தவளையின் உடலானது தலை மற்றும் உடல் எனும் இருபகுதிகளைக் கொண்டது. உடலின் மேல் போர்த்தப்பட்டுள்ள மென்மையான வழுவழுப்பு தன்மை மிக்க தோல், தளர்வாக உடலோடு இணைக்கப்பட்டுள்ளது. முதுகுப்புறத்திலுள்ள தோல், அடர் பச்சை நிறத்தையும், வயிற்றுப் புறத்தில் வெளிறிய நிறத்தையும் கொண்டது. முக்கோண வடிவிலான இதன் தலையின், முன் முனைப்பகுதி சற்றே நீண்டு கூர்முகமாகி உள்ளது. முன்முனைப்பகுதியில் அகன்ற பெரிய வாய் அமைந்துள்ளது. கூர்முகப்பகுதியின் முதுகுப்புறத்தில் மையக்கோட்டின் இருபுறமும் பக்கத்திற்கொன்றாக புறநாசித் துளைகள் உள்ளன (படம்.4.15). புற நாசித் துளைக்கு சற்று பின்னே பெரிய, ஓர் இணைக் கண்கள் புடைத்த நிலையில் காணப்படுகின்றன. இமைகள் கண்களைப் பாதுகாக்கின்றன. மொத்தமுள்ள மூன்று இமைகளில் மேலிமை அசைவற்றது. அசையக்கூடிய கீழ்இமை கண்களைப் பாதுகாக்கிறது. நீரில் இருக்கும் போது தவளையின் கண்களை மூன்றாவது இமையான ஒளி ஊடுருவக்கூடிய நிக்டிடேட்டிங் சவ்வு பாதுகாக்கிறது. தவளையின் கண்களுக்குப் பின்னால் இரண்டு பக்கங்களிலும் செவிப்பறை காணப்படுகின்றன, தவளைகளில் புறச்செவி, கழுத்து மற்றும் வால் ஆகியவை இல்லை .
உங்களுக்குத் தெரியுமா?
வரிசை - அனுரா (தவளைகள் மற்றும் தேரைகள்)
தாவிச் செல்வதற்கு ஏற்ப நீண்ட பின்னங்கால்களை தவளையும் தேரைகளும் பெற்றுள்ளன. தவளைகள், நீர், நிலம் மற்றும் மரங்கள் மீதும் வாழ்வன. சில சிற்றினங்களில் பெற்றோர் பாதுகாப்பு பண்பும் காணப்படுகிறது.
உடல்பகுதியில் ஓர் இணை முன்னங்கால்களும் ஓர் இணை பின்னங்கால்களும் உள்ளன. முதுகுப்புறத்தின் பின்முனையில் பின்னங்கால்களுக்கிடையே செரிமான, சிறுநீரக இனப்பெருக்கப் பொதுக்கழிவுப் புழை (Cloaca) அமைந்துள்ளது. குட்டையான மற்றும் தடிமனான முன்னங்கால்கள் உடல் எடையைத் தாங்கக் கூடியதாக உள்ளது. தாவலின் முடிவில் தரையிறங்கும் போது நிலத்தில் ஊன்ற இக்கால்கள் பயன்படுகின்றன. முன்னங்காலில் மேற்கை, முன் கை மற்றும் கை ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. கையில் நான்கு விரல்கள் உண்டு. பின்னங்கால்கள் நீண்டு பெரியதாக உள்ளன. இதில் தொடை, கீழ்க்கால் மற்றும் பாதம் என மூன்று பகுதிகள் உண்டு. பாதத்தில் விரலிடைச் சவ்வு கொண்ட ஐந்து விரல்களும் ஆறாவது விரல் எனக் கருதப்படுகிற சிறிய புடைப்பும் காணப்படுகிறது. நீரில் இருக்கும்போது நீந்துவதற்கும் நிலத்தில் தாவிக் குதிப்பதற்குமான தகவமைப்பாக பின்னங்கால்கள் அமைந்துள்ளது. தவளை, ஓய்வு நிலையில் தன் பின்னங்கால்களை 'Z' வடிவத்தில் மடித்து வைத்துக் கொள்கிறது.
இனப்பெருக்க காலங்களில் தவளைகளில் பால்வழி வேறுபாட்டு தன்மை தெளிவாகத் தெரிகிறது (படம். 4.16). ஆண் தவளையில், ஓரிணை குரல் பையும் (Vocal sac), முன்னங்கால் முதல் விரலின் கீழே கலவித் திண்டும் (Nuptial pad) நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. குரல்பை தவளையின் கரகர ஒலியை (croaking sound) அதிகப்படுத்த உதவுகிறது. பெண் தவளைகளில் குரல்பை மற்றும் கலவித் திண்டு காணப்படுவதில்லை.