புறத்தோற்றம் (Morphology), உள்ளுறுப்பு அமைப்பு , செரிமான மண்டலம், சுவாச மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம், கழிவு நீக்க மண்டலம், இனப்பெருக்க மண்டலம், வாழ்க்கை சுழற்சி - மண்புழு - லாம்பிட்டோ மாரிட்டீ | 11th Zoology : Chapter 4 : Organ and Organ Systems in Animals
மண்புழு - லாம்பிட்டோ மாரிட்டீ
வகைப்பாட்டு நிலை
தொகுதி வளைத்தசை புழுக்கள் (Annelida)
வகுப்பு - கிளைடெல்லேட்டா (Clitellata)
வரிசை - ஒபிஸ்தோபோரா (Opisthopora)
பேரினம் - லாம்பிட்டோ (Lampito)
சிற்றினம் – மாரிட்டீ (mauritii)
மண்புழு ஒரு தரைவாழ் உயிரியாகும். முதுகு நாணற்றவைகள் பிரிவைச்சார்ந்த இவை, ஈரப்பதம் மிக்க, அழுகிய கரிமப் பொருட்கள் நிறைந்த மண்ணின் மேலடுக்குகளில் வாழ்வன. இரவு நேர உயிரிகளான மண்புழுக்கள் பகலில் மண்ணை விழுங்கி, வளைகளை உருவாக்கி அதனுள் வாழும் இயல்புடையவை. தோட்டங்களில், மண்மேலுள்ள அதன் கழிவுக் கட்டிகளான 'நாங்கூழ் கட்டிகளைக்' (Worm castings) கொண்டு அவைகளின் இருப்பிடத்தை நாம் அறியலாம். மண்புழுக்களை 'உழவனின் நண்பன்' என்று கருதுவர். பொதுவாக இந்தியாவில் மூன்று வகையான மண்புழுக்கள் காணப்படுகின்றன.
அவை,
1. லாம்பிட்டோ மாரிட்டீ (மெகஸ்கோலெக்ஸ் மாரிட்டீ)
2. பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்
3. மெடாபையர் போஸ்துமா (பெரிடிமா போஸ்துமா)
மண்புழுக்களை, மண்ணின் அடுக்குகளில் அவை வாழுமிடத்தை அடிப்படையாகக் கொண்டு, மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன 'எபிஜீயிக்' (கிரே:பூமியின் மேல்) எனப்படும் மேற்பரப்பு வாழ்விகள், (எ.கா.) பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ் மற்றும் யூட்ரிலஸ் யூஜினியே.
'அனிசிக்' (கிரே:பூமியிலிருந்து) எனப்படும் மண்ணின் மேலடுக்குகளுக்குள் வாழும் இடைமட்ட வாழ்விகள், (எ.கா.) லேம்பிட்டோ மாரிட்டீ மற்றும் லம்பிரிகஸ் டெரெஸ்ட்ரிஸ் 'என்டோஜீயிக்' (கிரே:பூமியினுள்) எனப்படும் மண்ணடுக்குகளின் ஆழத்தில் வாழும் மண்புழுக்கள் எ.கா:ஆக்டகீடோனா தர்ஸ்டோனி.
லாம்பிட்டோ மாரிட்டீ எனும் இனம் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் இனமாகும். நீண்ட, உருளை வடிவ உடல் அமைப்பு கொண்ட இவை, இருபக்க சமச்சீரமைப்பு கொண்டவையாகும். இவ்வகை மண்புழு சுமார் 80 மி.மீ முதல் 210 மி.மீ வரையிலான நீளத்தையும், 3.5 முதல் 5 மி.மீ வரையிலான விட்டத்தினையும் உடையவை. வெளிறிய பழுப்பு நிறம் கொண்ட இவற்றின் முன் முனைப் பகுதியில் ஊதா நிறப் பூச்சும் உண்டு. இதற்குப் போர்ஃபைரின் என்னும் நிறமி காணப்படுவதே காரணமாகும். புழுவின் நீண்ட உடலின் குறுக்காகப் பல சிறுபள்ளங்களால் ஆன வளைய வடிவிலான வரிப் பள்ளங்கள் உள்ளன. இவையே, புழுவின் உடலைப் பல பிரிவுகளாகப் பிரிக்கின்றன. இப்பிரிவுகளுக்கு 'கண்டங்கள்' (மெட்டாமியர்கள்) என்று பெயர் (படம் 4.2).
ஒரு மண்புழுவின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை சுமார் 165 முதல் 190 வரை ஆகும். புழுவின் முதுகு புறத்தின் மைய நீள்வாட்டு அச்சில், அடர்த்தியான நிறமுடைய, முதுகுப்புற இரத்த நாளத்தினாலான மையக் கோடு உள்ளது. இனப்பெருக்கத் துளைகளையுடையதால் வயிற்றுப் புறப் பரப்பு சிறப்புடையதாகும். உடலின் முதல் கண்டமான, பெரிஸ்டோமியத்தின் (Peristomium) மையப் பகுதியில் வாய் அமைந்திருக்கிறது. வாயின் முன்பகுதியில். சிறு தசைத் தொங்கல் ஒன்று உள்ளது. இதற்குப் புரோஸ்டோமியம் (Prostomium) அல்லது மேலுதடு என்று பெயர். மலவாய் அமைந்துள்ள கடைசி கண்டம் பைஜிடியம் (Pygidium) என்று அழைக்கப்படுகிறது.
முதிர்ச்சியடைந்த புழுக்களில், 14 முதல் 17 வரையிலான கண்டங்களின் சுவர் சற்றே பருத்து, தடித்த தோல் சுரப்பிகளுடன் காணப்படுகிறது. இப்பகுதிக்கு 'கிளைடெல்லம்' (Clitellum) என்று பெயர். கருமுட்டைகளை உருவாக்க இப்பகுதி துணைபுரிகிறது. புழுவில் கிளைடெல்லம் இருப்பதால் அதன் உடலை, கிளைடெல்ல முன்பகுதி (1 முதல் 13 வரையிலான கண்டங்கள்) கிளைடெல்ல பகுதி (14 முதல் 17 வரையிலான கண்டங்கள்) மற்றும் கிளைடெல்ல பின்பகுதி (18 ஆம் கண்டம் முதல் இறுதி வரை) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்க முடிகிறது. முதல் கண்டம், கடைசி கண்டம் மற்றும் கிளைடெல்லம் பகுதியைத் தவிர மற்றெல்லாக் கண்டங்களிலும் ஒவ்வொரு கண்டத்தின் மையப்பகுதியில் வளையம் போன்று கைட்டினாலான உடல் சீட்டாக்கள் காணப்படுகின்றன (படம் 4.2). ஒவ்வொரு சீட்டாவும் தோலில் உள்ள சீட்டாவிற்கான பையிலிருந்து தொடங்கி, பின்வளைந்து 'S' வடிவம் கொண்டுள்ளது. சீட்டாக்களை வெளியே நீட்டவும், உள்ளிழுத்துக் கொள்ளவும் முடியும். இவற்றின் முதன்மைப் பணி இடப்பெயர்ச்சியாகும்.
உடலின் புறத்தே, வாய், மலவாய். முதுகுப்புறத் துளைகள், விந்துகொள்பை திறப்புகள், இனப்பெருக்கத் திறப்புகள் மற்றும் நெஃப்ரீடிய துளைகள் (கழிவு நீக்கத் துளைகள்) ஆகிய பல புறத் துளைகள் உள்ளன. பத்தாவது கண்டத்திலிருந்தே முதுகுப் புறத் துளைகள் காணப்படுகின்றன. இத்துளைகளின் வழியாக உடற்குழி திரவம் வெளியேறி உடலினை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்கிறது. அதுமட்டுமல்லாது உடலின் மீதான நுண்ணுயிரிகளின் தொற்றுகளிலிருந்தும் இத்திரவம் பாதுகாக்கிறது. 6 வது மற்றும் 7வது, 7வது மற்றும் 8வது, 8வது மற்றும் 9வது ஆகிய கண்டங்களுக்கிடையே மூன்று இணை சிறு, வயிற்றுப் புற பக்கவாட்டுத் துளைகள் காணப்படுகின்றன. இவையே விந்துகொள்பை திறப்புகள் ஆகும். 14வது கண்டத்தின் வயிற்றுப் பகுதியில் ஓரிணை பெண் இனப்பெருக்கத் துளைகளும் 18 வது கண்டத்தின் பக்க-வயிற்றுப் பகுதியில் ஓரிணை ஆண் இனப்பெருக்கத்துளைகளும் காணப்படுகின்றன. கழிவு நீக்கத்திற்கான நெஃப்ரீடியத்துளைகள், எண்ணற்றவை. சில முன் பகுதி கண்டங்களைத் தவிர, உடலின் பிற எல்லாக் கண்டங்களிலும் உள்ள இத்துளைகளின் வழியாக வளர்சிதை மாற்றக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
மண்புழுவின் உடற்சுவர் மிகவும் ஈரத்தன்மையுடன், மெல்லியதாகவும், மென்மையானதகாவும், தோல்போன்றும் மீள் தன்மையுடனும் உள்ளது. இச்சுவரில்,கியுட்டிகிள், எபிடெர்மிஸ், தசைகள் மற்றும் உடற்குழி எபிதீலியம் ஆகிய அடுக்குகள் உள்ளன.
எபிடெர்மிஸ் அடுக்கில், ஆதரவு செல்கள், சுரப்பு செல்கள், அடிப்படை செல்கள் மற்றும் உணர்வு செல்கள் ஆகியவை உள்ளன. உணவுக்குழலுக்கும் உடற்சுவருக்கும் இடையே உள்ள அகன்ற உடற்குழி நீர்மச் சட்டகமாக செயலாற்றுகிறது. உடற்குழி திரவத்தில் உள்ள சீலோமோசைட்டு செல்கள், இழப்புமீட்டல், நோய் தடைக்காப்பு மற்றும் காயங்கள் குணமாதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுவனவாகும். மண்புழுவில் உள்ள உடற்குழி திரவம் பால்போன்றும், காரத் தன்மையுடனும் இருக்கும். இதனுள் துகள்களுடைய செல்கள், (லியோசைட்டுகள்) அமீபோசைட்டுகள், மியூகோசைட்டுகள் மற்றும் லியூகோசைட்டுகள் ஆகியவை உள்ளன.
மண்புழுவின் உணவு மண்டலத்தில், உணவுப் பாதை மற்றும் செரிமான சுரப்பிகள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. வாய் முதல் மலவாய் வரையில் நீண்ட நேரான குழலாக உணவுப் பாதை செல்கிறது (படம் 4.3). வாய், 1வது மற்றும் 2வது கண்டங்களில் உள்ள வாய்க்குழியில் (Buccal cavity) திறக்கிறது. வாய்க்குழியைத் தொடர்ந்து 3வது மற்றும் 4வது 4வது கண்டங்களில் தடித்த தசையாலான தொண்டைப்பகுதி (Pharynx) உள்ளது. (படம் 4.3). இப்பகுதியைச் சுற்றிலும்
உங்களுக்குத் தெரியுமா?
குடல் பிதுக்கம். மெட்டாபையர் போஸ்துமாவின் 26 வது கண்டத்தில் ஓரிணை குட்டையான கூம்புவடிவ வெளிப்பிதுக்கம் காணப்படுகிறது. இதற்கு குடல் பிதுக்கங்கள் என்று பெயர். 22ஆம் கண்டம் வரை இது நீள்கிறது. ஸ்டார்ச் செரிப்பதற்கு உதவும் அமைலோலைடிக் நொதியைச் சுரக்கும், செரிமான சுரப்பியாக இதுசெயற்படுகிறது. லாம்பிட்டோ மாரிட்டீ போன்ற பல வகை மண்புழுக்களில் குடல் பிதுக்கங்கள் காணப்படுவதில்லை.
பொதுவாக மண்புழுக்கள் தம் இடப்பெயர்ச்சிக்கு அவற்றின் உடல் தசைகள், சீட்டாக்கள் மற்றும் வாய்க்குழி அறை ஆகியவற்றையே பயன்படுத்துகின்றன. உடற்சுவரில் எபிடெர்மல் அடுக்குக்கு கீழ் வெளிவட்டத் தசைகள் மற்றும் உள் நீள் வசத்தசைகள் அமைந்துள்ளன. வட்டத்தசைகள் சுருங்கும் வகையில் மண்புழுவின் உடல் நீளமானதாகவும் குறுகலானதாகவும் மாறுகிறது. நீள் வசத்தசைகள் சுருங்கும்போது உடல்குட்டையானதாகவும் அகலமானதாகவும் மாற்றுகிறது. இத்தசைகள் மாறி மாறி சுருங்கிவிரிவதனால் மண்புழுக்கள் நகர்கின்றன. இதற்கு உதவியாயிருப்பது உடற்குழி திரவத்தின் பாயும் தன்மையேயாகும். எனவே தான் இது நீர்மசட்டகம் எனப்படுகிறது. சுருக்கம் மற்றும் நீட்சிகளால் வரும் அலை இயக்கத்திற்கு வாய்குழி அறை மற்றும் சீட்டாக்களின் நெம்புகோல் போன்றசெயலும் உதவுகிறது.
தொண்டை சுரப்பிகள் காணப்படுகின்றன. 5வது கண்டத்தில் உள்ள சிறிய குறுகலான உணவுக்குழல் (Oesophagus) 6வது கண்டத்தில் உள்ள தசையாலான அரைவைப் பையில் (Gizzard) முடிகிறது. அழுகிய இலைகளையும் மண் துகள்களையும் அரைக்க அப்பகுதி உதவுகிறது. 7 வது கண்டத்தில் குடல் (Intestine) தொடங்கி கடைசி கண்டம் வரை நீண்டுள்ளது. குடலின் முதுகுப்புறச் சுவரில் இரத்த நாளங்கள் நிறைந்த மடிப்பு காணப்படுகின்றது. இது 'டிப்லோசோல்' (Typhlosole) என்று அழைக்கப்படுகிறது. இம்மடிப்புகளினால் குடலின் உறிஞ்சும் பரப்பு அதிகரிக்கிறது. உள் எபிதீலிய அடுக்கில் தூண் செல்களும் சுரப்பு செல்களும் அடங்கியுள்ளன. உணவுப் பாதை, மலப் புழை வழியே வெளியே திறக்கிறது.
உண்ணப்பட்ட, கரிம பொருட்கள் நிரம்பிய மண், உணவு மண்டலத்தின் வழியே செல்கையில், செரிமான நொதிகளின் செயல்பாட்டால், அதிலுள்ள பெரிய, சிக்கலான மூலக்கூறுகள் எளிய, உட்கிரகிக்கக் கூடிய மூலக்கூறுகளாக மாற்றப்படுகின்றன. குடலின் சவ்வுவழியே இம்மூலக்கூறுகள் உட்கிரகிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. செரிக்காத மண் துகள்கள் மலப் புழை வழியே 'நாங்கூழ் கட்டிகளாக' (Vermicasts) வெளியேற்றப்படுகின்றன. தொண்டைப் பகுதி சுரப்பு செல்கள் (உமிழ் நீர் சுரப்பிகள்), குடலின் சுரப்பு செல்கள் ஆகியவை உணவைச் செரிப்பதற்கான செரிமான நொதிகளைச் சுரக்கின்றன.
சிறப்பு சுவாச உறுப்புகளான செவுள்கள், நுரையீரல்கள் போன்றவை மண்புழுவில் கிடையாது. உடற்சுவரின் வழியாகவே சுவாசம் நடைபெறுகிறது. தோலின் புறப்பரப்பு, அதிக இரத்த நாளங்களைக் கொண்டிருப்பதால் காற்று பரிமாற்றம் எளிதில் நடைபெறுகிறது. வெளிக் காற்றிலுள்ள ஆக்சிஜன் தோலினை ஊடுருவிச் சென்று இரத்தத்தை அடைகிறது. அதைப்போலவே கார்பன் டைஆக்ஸைடு இரத்தத்திலிருந்து வெளியேறுகிறது. காற்று பரிமாற்றம் நடைபெற ஏதுவாகக் கோழை மற்றும், உடற்குழி திரவத்தால் தோல் ஈரப்பதத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
இரத்த ஓட்ட மண்டலம்
லாம்பிட்டோ மாரிட்டீயில், மூடியவகை இரத்த ஓட்ட மண்டலம் உள்ளது. இம்மண்டலத்தில், இரத்த நாளங்கள், இரத்த நுண் நாளங்கள் மற்றும் பக்கவாட்டு இதயங்கள் ஆகியவை அடங்கியுள்ளன (படம்.4.4). இரண்டு பெரிய மைய இரத்த நாளங்கள் உணவுக்குழலின் மேலும், கீழும் உடல் நீளத்திற்கும் செல்கின்றன. அவை முறையே முதுகுப்புற இரத்தநாளம், வயிற்றுப் புற இரத்தநாளம் என்று அழைக்கப்படுகின்றன. முதுகுப்புற இரத்த நாளத்தில் உள்ள ஓர் இணை வால்வுகள் பின்னோக்கிய இரத்த ஓட்டத்தைத் தடுக்க உதவுகிறது. வயிற்றுப் புற இரத்தநாளத்தில் வால்வுகள் இல்லை. இந்நாளம் சுருங்கி விரியும் தன்மையற்றது. ஆதலால் இரத்தம் பின்னோக்கிச் செல்கிறது.
முதுகுப்புற இரத்தநாளம், வயிற்றுப் புற இரத்த நாளத்துடன், உடலின் முன்பகுதியில், எட்டு இணை இணைப்பு நாளங்களால் (Commissural vessels) (அ) பக்கவாட்டு இதயங்களால் (Lateral hearts) இணைக்கப்பட்டுள்ளன. இவை 6வது முதல் 13 வது கண்டம் வரையில் அமைந்துள்ளன. இவை உணவுப்பாதையின் இருபுறமும் செல்லும். இவற்றின் மூலம் முதுகுப்புற நாளத்திலிருந்து வயிற்றுப் புற நாளத்திற்கு இரத்தம் செலுத்தப்படுகிறது. உடலின் பல்வேறு உறுப்புகளிலிருந்து முதுகுப்புற இரத்தநாளம் இரத்தத்தைப் பெறுகின்றது. வயிற்றுப் புற இரத்த நாளம் பல்வேறு உறுப்புகளுக்கு இரத்தத்தை அளிக்கின்றது. உடலின் முன்பகுதி கண்டங்களில் உள்ள இரத்தச் சுரப்பிகளினால் சுரக்கப்படும் இரத்தச் செல்களும், ஹீமோகுளோபினும், பிளாஸ்மாவில் கரைந்து இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தை அளிக்கிறது.
மண்புழுவின் மூளையானது, இரு கதுப்புகளைக் கொண்ட நரம்பு செல் திரள்களினால் ஆனது. இதற்கு 'தொண்டை மேல் நரம்பு செல் திரள்கள்' (Supra- pharyngeal ganglia) என்று பெயர். புழுவின் 3 வது கண்டத்தில் தொண்டையின் முதுகுப்புறச் சுவரின் மேல் பகுதியில் அவை உள்ளன. 4வது கண்டத்தில் தொண்டையின் கீழ்ப்பகுதியில், 'தொண்டை கீழ் நரம்பு செல் திரள்' உண்டு. மூளையையும் தொண்டை கீழ் நரம்பு செல் திரளையும் (Sub - pharyngeal ganglia) ஓர் இணை, தொண்டை சூழ் இணைப்பு நரம்புகள் இணைக்கின்றன (படம் 4.4). இந்நரம்புகள் பக்கத்திற்கொன்றாக, தொண்டையின் இரு பக்கங்களில் செல்வதால் உணவுப் பாதையின் முன்பகுதியில் நரம்பு வளையம் உருவாகிறது. தொண்டை கீழ் நரம்பு செல் திரளிலிருந்து வயிற்றுப் புற இரட்டை நரம்பு வடம் தொடங்கிப் பின்னோக்கிச் செல்கிறது. பெறப்படும் உணர்ச்சிகளை உணர்தல் மற்றும் அதற்கேற்பத் தசைகளின் இயக்கத்திற்குக் கட்டளை அனுப்புவது ஆகியவற்றை மூளையும், நரம்பு வளையத்திலுள்ள நரம்புகளும் ஒருங்கிணைக்கின்றன.
மண்புழுவின் உணர்விகளை, நரம்புடன் இணைக்கப்பட்ட ஒடுங்கிய தூண் செல்களின் குழு தூண்டுகிறது. ஒளி உணர்விகள் (Photo receptors) உடலின் முதுகுபரப்பில் உள்ளன. சுவை உணர்விகள் (Gustatory receptors) மற்றும் நுகர்ச்சி உணர்விகள் (Olfactory receptors) வாய்க் குழியில் உள்ளன. தொடு உணர்விகள், (Tactile receptors) வேதி உணர்விகள் (Chemo receptors) மற்றும் வெப்ப உணர்விகள் (Thermoreceptors)ஆகியவை புரோஸ்டோமியத்திலும் உடற்சுவரிலும் அமைந்துள்ளன.
தெரிந்து தெளிவோம்
கண், காது, மூக்கு போன்ற எந்த வித தனி அமைப்புமின்றி தன் வாழிடத்தை மண்புழு எவ்வாறு உணர்ந்து கொள்கிறது?
கழிவு நீக்க மண்டலம்
உடலிலிருந்து வளர்சிதை மாற்றச் செயல் மூலம் உருவாகும் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்ச்சியே கழிவு நீக்கம் ஆகும். மண்புழுவில் இச்செயல் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள நெஃப்ரீடியா எனும் நுண்ணிய, சுருண்ட இணைக் குழல்கள் மூலம் நடைபெறுகிறது. நெஃப்ரீடியாக்கள் மூன்று வகைகளாக உள்ளன அவையாவன, (படம் 4.5).
அ. தொண்டை (அல்லது) கொத்து நெஃப்ரீடியா (Pharyngeal or tufted nephridia) - 5வது முதல் 9வது கண்டங்கள் வரை உள்ளன.
ஆ. நுண் நெஃப்ரீடியா (அல்லது) தோல் நெஃப்ரீடியா (Micronephridia or Integumentary nephridia) - 14 வது கண்டம் முதல் உடலின் கடைசி கண்டம் வரையுள்ள இந்த நெஃப்ரீடியா, உடல் சுவரோடு இணைக்கப்பட்டுள்ளது. உடல் பரப்பின் மேல் இவை திறக்கின்றன.
இ. மெகா நெஃப்ரீடியா (அல்லது) இடைச் சுவர் நெஃப்ரீடியா (Meganephridia or septal nephridia) 19 வது முதல் கடைசி கண்டம் வரை உள்ளது. இவை, கண்டங்களுக்கு இடையேயான கண்ட இடைச் சுவரின் இரு பக்கங்களிலும் இணையாக அமைந்து, குடலில் திறக்கின்றன (படம் 4.5).
மெகாநெஃப்ரீடியத்தின் உள்பகுதியில் புனல் வடிவ துளை உள்ளது. இதற்கு நெஃப்ரோஸ்டோம் என்று பெயர். இப்பகுதி முழுவதும் குற்றிழைகளால் ஆனது. ஒரு மெகாநெஃப்ரீடியத்தின் நெஃப்ரோஸ்டோம் ஒரு கண்டத்திலும் மீதியுள்ள குழல் பகுதி அடுத்த கண்டத்திலும் இருக்கும். குழல் பகுதி மூன்று பிரிவுகளைக் கொண்டது. அவை குற்றிழைகளை கொண்ட பகுதி,சுரப்பு பகுதி மற்றும் தசைப்பகுதி ஆகியன ஆகும். குற்றிழைகளைக் கொண்ட நெஃப்ரோஸ்டோமினால் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் குற்றிழைகளின் இயக்கத்தால்,நெஃப்ரீடியத்தின் தசைப்பகுதிக்குள் கடத்தப்படுகின்றன. சுரப்பு பகுதி இரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்தெடுக்கிறது. இறுதியில் நெப்ரிடிய துளையின் வழியே கழிவுகள் குடல் பகுதிக்குள் தள்ளப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
நெஃப்ரீடியாக்கள் தவிர குடலின் உடற்குழி சுவரில் 'குளோரகோஜன்' (Chloragogen cells) எனும் சிறப்பு செல்கள் உள்ளன அவை குடலின் சுவரிலுள்ள இரத்தத்திலிருந்து நைட்ரஜன் கழிவுப் பொருட்களைப் பிரித்தெடுத்து உடற்குழிக்குள் விடுகின்றன. பின்னர் அக்கழிவுகள் நெஃப்ரீடியாக்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
இனப்பெருக்க மண்டலம்
மண்புழுக்கள் இருபால் உயிரிகளாகும். அதாவது ஆண், பெண் இனப்பெருக்க மண்டலங்கள் ஒரே உயிரியில் காணப்படும் (படம். 4.6). அவ்வாறு இருப்பினும், இருபால் உறுப்புகளும் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சியடைவதால், சுயக் கருவுறுதல் தடுக்கப்படுகிறது. அதாவது விந்தணுக்கள் அண்டணுக்களுக்கு முன்பாகவே வளர்ச்சியடைகின்றன. இவ்வாறான நிகழ்விற்கு புரோட்டான்ட்ரஸ் (Protandrous) எனப் பெயர். எனவே அயல் கருவுறுதல் நடைபெறுகிறது.
ஆண் இனப்பெருக்க மண்டலத்தில், இரண்டு இணை விந்தகங்கள் 10வது மற்றும் 11வது கண்டங்களில் உள்ளன. விந்தகங்களிலிருந்து, ஸ்பெர்மட்டோகோனியா என்னும் இனச்செல்கள் தோன்றுகின்றன.
இவை ஈரிணை விந்துப் பைகளில் விந்தணுக்களாக வளர்ச்சியடைகின்றன. மேலும், விந்தகங்கள், உள்ள அதே கண்டங்களில் இரண்டு இணை 'குற்றிழை வட்டங்கள்' (Ciliary rosettes) எனப்படும் விந்து புனல்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பக்கத்திலுள்ள புனலும் அந்தந்தப் பக்கத்தின் நீண்ட குழலான விந்து நாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 18வது கண்டம் வரை செல்லும் விந்து நாளம் (Vasa deferentia) ஆண் இனப்பெருக்கத் துளை வழியே வெளியே திறக்கிறது. ஆண் இனப்பெருக்கத் துளையில் இரண்டு இணை பீனியல் சீட்டாக்கள் உள்ளன. கலவியின்போது இவை பயன்படுகின்றன. 18 மற்றும் 19வது கண்டங்களின் இடையே ஓர் இணை புரோஸ்டேட் சுரப்பி உள்ளது. இதன் சுரப்பானது விந்தணுக்களை, ஸ்பெர்மட்டோபோர்கள் எனும் கட்டுக்களாக ஒட்டுவதற்குப் பயன்படுகிறது (படம் 4.6).
பெண் இனப்பெருக்க மண்டலம் என்பது ஓர் இணை அண்டங்களால் ஆனது. இது புழுவின் 13வது கண்டத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு அண்டகமும் விரல் போன்ற நீட்சிகளை உடையது. அதில் நீள் வரிசையில் அண்டணுக்கள் உள்ளன. அண்டகத்தின் அடியில் உள்ள அண்டகப் புனல் நீண்டு அண்டநாளமாகிறது. இருபக்கமும் உள்ள அண்ட நாளங்கள் வயிற்றுப் புற பகுதியில் ஒன்று சேர்ந்து 14வது கண்டத்தில் ஓரிணை பெண் இனப்பெருக்கத் துளைகளின் வழியே வெளியே திறக்கிறது. 7வது, 8வது மற்றும் 9வது கண்டங்களில் கண்டத்திற்கு ஒரு இணை வீதம் மூன்று இணை விந்து கொள்பைகள் (Spermathecae) உள்ளன. இவை 6வது மற்றும் 7வது கண்டங்களுக்கிடையேயும், 7வது மற்றும் 8வது கண்டங்களுக்கிடையேயும் மற்றும் 8வது மற்றும் 9வது கண்டங்களுக்கிடையேயும் வயிற்றுப் புறத்தில் திறக்கின்றன. கலவியின்போது இத்துளைகளின் வழியாக விந்தணுக்கள் பெறப்பட்டு, விந்து கொள்பையில் சேகரித்து வைக்கப்படுகிறது.
கலவியின்போது இரு புழுக்களுக்கிடையே விந்தணுக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இரு மண்புழுக்களும், தலைகளை எதிர் முனைகைளில் வைத்தவாறு, ஒரு புழுவின் ஆண் இனப்பெருக்கத்துளை வழியே வரும் விந்து அடுத்த புழுவின் விந்து கொள் பைக்குச் செல்லும் வகையில் பொருந்துகின்றன. பின்னர் விந்தணுக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. கிளைடெல்லத்தில் உள்ள சுரப்பி செல்களினால் சுரக்கப்படுகிற கருமுட்டை கூட்டில் (cocoon) முதிர்ந்த விந்தணு, அண்டணு மற்றும் ஊட்டத்திரவம் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. கருவுறுதலும் வளர்ச்சியும், மண்ணில் விடப்படுகிற கருமுட்டைக்கூட்டினுள்ளேயே நடைபெறுகின்றன. இது ஒரு வகையான மாறுதல் அமைந்த புறக்கருவுருதல் எனப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு புதிய, இளைய மண்புழுக்கள் கருமுட்டைக்கூட்டிலிருந்து வெளிவருகின்றன. மண்புழுவின் வளர்ச்சியின் போது இடைநிலை உயிரிகள் எதுவும் இல்லாததால் இது ஒரு நேர்முக வளர்ச்சியாகும்.
வாழ்க்கை சுழற்சி
லாம்பிட்டோ மாரிட்டீ இனப் புழுக்களின் வாழ்க்கை சுழற்சி, கருமுட்டையிலிருந்து தொடங்குகின்றது. கருமுட்டைகள் கருமுட்டைக்கூடுகளில் பாதுகாப்பாக இடப்படுகின்றன. கருமுட்டைக்கூடுகளின் அடைகாக்கும் காலமான ஏறத்தாழ 14 முதல் 18 நாட்களுக்குப்பிறகு இளம் புழுக்கள் (Juveniles) வெளிவருகின்றன. 15 நாட்களில் இவ்விளம் புழுக்கள் கிளைடெல்லம் அற்ற புழுக்களாக முதல் படி வளர்ச்சியை அடைகின்றன (படம். 4.7). இரண்டாம் படி வளர்ச்சி 15 முதல் 17 நாட்கள் வரை நடைபெறுகின்றது. இதன் இறுதியிலேயே இவை கிளைடெல்லத்தைப் பெறுகின்றன. இனப்பெருக்கத் திறன் பெற்ற முதிர்ச்சியடைந்த மண் புழுக்கள் கலவிக்குப்பின் பத்து நாட்களில் கருமுட்டைக்கூடுகளை மண்ணில் இடுகின்றன. இவ்வாறாக, லாம்பிட்டோ மாரிட்டீ இன மண் புழுவின் வாழ்க்கை சுழற்சி 60 நாட்களில் முழுமை பெறுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
இழப்பு மீட்டல்: மண்புழுவின் அனைத்து முக்கிய உறுப்புகளும் முதல் 20 கண்டங்களில் அமைந்துள்ளன. 20வது கண்டத்திற்குப் பின் மண்புழு வெட்டப்படுமேயானால், முன்பகுதி, பின்பகுதியை புதிதாக உருவாக்கிக் கொள்ளும். வெட்டப்பட்ட பின்பகுதி சில நாட்களில் சிதைந்து விடும்.