Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | கரப்பான் பூச்சி - பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா - செரிமான மண்டலம், சுவாசமண்டலம், சுற்றோட்ட மண்டலம், நரம்பு மண்டலம், கழிவுநீக்க மண்டலம், இனப்பெருக்க மண்டலம்
   Posted On :  06.01.2024 02:34 am

11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்

கரப்பான் பூச்சி - பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா - செரிமான மண்டலம், சுவாசமண்டலம், சுற்றோட்ட மண்டலம், நரம்பு மண்டலம், கழிவுநீக்க மண்டலம், இனப்பெருக்க மண்டலம்

கரப்பான் பூச்சி - பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா - செரிமான மண்டலம், சுவாசமண்டலம், சுற்றோட்ட மண்டலம், நரம்பு மண்டலம், கழிவுநீக்க மண்டலம், இனப்பெருக்க மண்டலம்

புறத்தோற்றம்



செரிமான மண்டலம்

கரப்பான் பூச்சியின் செரிமான மண்டலமானது உணவுக்குழலையும் செரிமானச் சுரப்பிகளையும் உள்ளடக்கியதாகும். உடற்குழியில் அமைந்துள்ள உணவுப் பாதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே முன்குடல், நடுக்குடல் மற்றும் பின்குடலாகும் (படம். 4.10). முன்குடல் பகுதியில் வாய்முன்குழி, வாய், தொண்டை மற்றும் உணவுக்குழலைக் கொண்டுள்ளது. இது பின்பகுதியில் பைபோன்ற தீனிப்பையில் முடிவடைகிறது. அது உணவை சேமிக்க உதவுகிறது. தீனிப்பையைத் தொடர்ந்து அரைவைப்பை அல்லது புரோவென்ட்ரிகுலஸ் அமைந்துள்ளது. இப்பையின் வெளி அடுக்கில் தடித்த வட்டத்தசைகளும், உள்ளடுக்கில் தடித்த கியூட்டிக்கிளும் சேர்ந்து கைட்டின் நிரம்பிய பற்கள் எனப்படும் ஆறு தகடுகளை உருவாக்கியுள்ளன. உணவுத்துகள்கள் அரைவைப் பையில் நன்கு அரைக்கப்படுகின்றன.


அரைவைப்பையை அடுத்துக் குட்டையான குறுகலான சுரப்புத் தன்மையுடைய நடுக்குடல் அமைந்துள்ளது. முன் மற்றும் நடுக்குடல் இணையுமிடத்தில் எட்டு, விரல் போன்ற குழல்களாலான கல்லீரல் நீட்சிகள் அல்லது வயிற்றுபுற நீட்சிகள் (hepatic caecae or enteric caecae) அமைந்துள்ளன. நடுக்குடலும், பின்குடலும் இணையுமிடத்தில் சுமார் 100 - 150 எண்ணிக்கையில் மஞ்சள் நிறமுடைய, மெல்லிய இழை போன்ற மால்பீஜியன் நுண்குழல்கள் (Malpighian tubules) காணப்படுகின்றன. இவை ஹீமோலிம்ப் திரவத்திலுள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. பின்குடல் நடுக்குடலை விட அகன்றுள்ளது. இது சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் என மூன்று பகுதிகளைக் கொண்டது. மலக்குடல், மலப் புழை வழியாக வெளியே திறக்கிறது. உமிழ்நீர்ச் சுரப்பிகள், சுரப்புச் செல்கள் மற்றும் கல்லீரல் நீட்சிகள் ஆகியவை செரிமானச் சுரப்பிகள் ஆகும். ஓர் இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் தீனிப்பையின் பக்கத்திற்கொன்றாக உள்ளன.நடுக்குடலிலுள்ள சுரப்புச் செல்கள் மற்றும் கல்லீரல் நீட்சிகள் சுரப்பு நீரைச் சுரக்கின்றன.


சுவாசமண்டலம்

கரப்பான் பூச்சியின் சுவாச மண்டலம் தரைவாழ் பூச்சியினங்கள் அனைத்தையும் விடச் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. (படம்.4.11). கரப்பான் பூச்சியின் சுவாசம் பல கிளைகளைக் கொண்ட மூச்சுக்குழல்கள் (trachea) மூலம் நடைபெறுகிறது.


தெரிந்து தெளிவோம்

கரப்பான் பூச்சியின் சுவாச மண்டலத்தில் சுவாச துளைகள் மற்றும் மூச்சுக்குழல்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. மண்புழுவின் சுவாச மண்டலத்தை விட இது அதிக திறன் உடையது ஏன்? மனிதனின் செயல்மிகு நிகழ்ச்சியாக உள்ள உட்சுவாசம் கரப்பான் பூச்சிகளில் இயல்பு நிகழ்ச்சியாக இருப்பது ஏன்?

மூச்சுக்குழல்கள் உடலின் பக்கவாட்டில் உள்ள 10 துளைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இத்துளைகளுக்கு ஸ்பைரக்கிள்கள் (spiracles) அல்லது ஸ்டிக்மேட்டா (Stigmata) அல்லது சுவாசத்துளைகள் என்று பெயர். இந்தச் சுவாசத்துளைகளைத் திறக்கவும் மூடவும் வால்வுகள் உண்டு. இவ்வால்வுகளைச் சுருக்குத்தசைகள் இயக்குகின்றன. மூச்சுக்குழல்கள் பல கிளைகளாகப் பிரிந்து சிறு நுண் குழல்களாக மாற்றம் அடைகிறது. அவற்றிற்கு மூச்சு நுண்குழல்கள் அல்லது ட்ரக்கியோல்கள் (tracheoles) என்று பெயர். மூச்சு நுண்குழல்கள் முழுவதும் நிறமற்ற திரவத்தினால் (ஹீமோலிம்ப்) நிரப்பப்பட்டுள்ளது. இத்திரவத்தின் வழியாகவே காற்று பரிமாற்றம் நடைபெறுகிறது. உடல் தசைகள் அதிகமாகச் செயல்படும் பொழுது தசைகளின் ஆக்சிஜன் தேவையை ஈடுசெய்வதற்காக இத்திரவம் திசுக்களுக்குள் செல்வதால் ஆக்ஸிஜன் விரவல் துரிதமாக நடைபெறுகிறது. சுவாச மண்டலத்தில் காற்று செல்லும் பாதை:



சுற்றோட்ட மண்டலம்

கரப்பான்பூச்சியில் திறந்த வகை இரத்த ஓட்ட மண்டலம் காணப்படுகிறது. (படம் 4.12) இரத்த நாளங்கள் சரியாக வளர்ச்சியடையாமல் உள்ளது. இதன் உடற்குழி முழுவதும் நிறமற்ற இரத்தமான ஹீமோலிஃம்ப் (Haemolymph) தடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.


கரப்பான்பூச்சியின் உள்ளுறுப்புகள் அனைத்தும் உடற்குழியிலுள்ள ஹீமோலிஃம்பில் மிதக்கின்றன. நிறமற்ற ஹீமோலிஃம்பில் பொதுவாகப் பிளாஸ்மா மற்றும் செல் விழுங்கும் தன்மையுடைய இரத்தச் செல்களும் (Haemocytes) உள்ளன. கரப்பான்பூச்சியின் இதயம் தசைச்சுவர் கொண்ட நீண்ட குழலாக மார்புப்பகுதி முதல் வயிற்றுப்பகுதி வரை நீண்டுள்ளது. இதயம் பதின்மூன்று அறைகளைக் கொண்டுள்ளது ஒவ்வொரு அறையின் இரண்டு புறங்களிலும் ஆஸ்டியா (Ostia) எனும் துளைகள் காணப்படுகின்றன. உடற்குழியிலுள்ள இரத்தமானது ஆஸ்டியாக்கள் மூலம் இதயத்திற்குள் நுழைந்து மீண்டும் மேல்நோக்கி உள்குழிகளில் (Sinuses) செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு கண்டத்திலும் இதயத்தின் இரண்டு பக்கங்களிலும் ஒரு ஜோடி முக்கோண வடிவ அலரித்தசைகள் (மொத்தம் 12 இணை) அமைந்துள்ளன. இத்தசைகளே இரத்த ஓட்டத்திற்கு முக்கிய காரணமாகின்றன. மேலும் கரப்பான் பூச்சியின் உணர் கொம்பு நீட்சியின் அடியிலுள்ள துடிக்கும்பை (Pulsatile Vesicle) இரத்தத்தைப் பாய்ச்சுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

கரப்பான் பூச்சிகள் 45 நிமிடங்கள் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும். நீருள் மூழ்கிய நிலையில் அரைமணி நேரம் வரை வாழக்கூடியன. தன்னுடலின் நீரிழப்பை ஒழுங்குபடுத்த அவ்வப்போது சுவாசத்தை தற்காலிகமாக நிறுத்தும் பண்பும் கொண்டன.


நரம்பு மண்டலம்

கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலத்தில், உணவுக்குழல் மேல் நரம்புசெல் திரள் (Supra oesophageal ganglion) () மூளை, உணவுக்குழல் கீழ் நரம்புசெல் திரள் (Sub oesophageal ganglion), உணவுக்குழல் சூழ் நரம்பு வளையம் (circum- oesophageal ring) மற்றும் நரம்புசெல் திரள்களைக் கொண்ட வயிற்றுப்புற இரட்டை நரம்புவடம் (Ganglionated double ventral nerve cord) ஆகியவை உள்ளன (படம் 4.13). மூளை அல்லது உணவுக்குழல் மேல் நரம்புச்செல் திரளானது உணர்ச்சி அறியும் உறுப்பாகவும் (sensory), நாளமில்லாச்சுரப்பி மையமாகவும் (endocrine centre) பணியாற்றுகிறது. இயக்கு மையமாகச் செயல்படும் தொண்டைகீழ் நரம்பு செல் திரள், வாய் உறுப்புகள், கால்கள் மற்றும் இறக்கைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. அரைவைத்தாடை, துருவுத்தாடை மற்றும் கீழுதட்டுக் கண்டங்களின் இணை நரம்புச்செல் திரள்கள் இணைந்து உணவுக்குழல் கீழ் நரம்புச்செல் திரளை உருவாக்கியுள்ளன.


உணவுக்குழல் மேல் நரம்புசெல் திரள் மற்றும் உணவுக்குழல் கீழ் நரம்பு செல் திரள் ஆகிய இரண்டும் ஓரிணை நரம்பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இது உணவுக்குழல் சூழ் நரம்பிணைப்பு என்றழைக்கப்படுகிறது. வயிற்றுப் புற மையக்கோட்டில் செல்லும் நரம்புசெல் திரள்களைக் கொண்ட இரட்டை நரம்புவடமானது திடத்தன்மையுடையது. உணவுக்குழல் கீழ் நரம்புசெல் திரளிலிருந்து தொடங்கும் இந்த இரட்டை நரம்புவடம் 7வது வயிற்றுக் கண்டம் வரை நீண்டு காணப்படுகிறது. மூன்று மார்புக்கண்டங்களிலும் தலா ஒரு நரம்புசெல் திரளும், வயிற்றுப்பகுதியில் ஆறு நரம்புச்செல் திரள்களும் உள்ளன.


குறிப்பு

தலையில்லாமல் கரப்பான்பூச்சி உயிர் வாழும்

கரப்பான்பூச்சியின் தலைப்பகுதி நீக்கப்பட்ட பின்பும் ஒரு வாரம் வரை உயிர் வாழும் தனித்திறன் பெற்றுள்ளது. திறந்த சுற்றோட்ட மண்டலத்தினால் வளிமண்டலத்திலுள்ள காற்றினை சுவாசத் துளைகளின் வழியாக நேரடியாக சுவாசிக்கும் முறையை பெற்றுள்ளதே இதற்குக் காரணமாகும். தலை மற்றும் வாய்ப் பகுதி இல்லாத நிலையிலும், சுவாசச் செயல் நடைபெறுவதால் உயிர் வாழ்கிறது. ஆனால் தேவைக்கேற்ப வாய் வழியாக நீர் மற்றும் உணவு அருந்த முடியாத காரணத்தினால் உயிரிழக்கிறது.


கரப்பான் பூச்சியில் உணர்கொம்பு நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேலுதடு, துருவுத்தாடை நீட்சிகள், கீழுதடு நீட்சிகள் மற்றும் மலப்புழைத் தண்டுகள் ஆகியவை உணர் உறுப்புகளாகச் செயல்படுகின்றன. உணர்கொம்பு நீட்சிகள், துருவுத்தாடை நீட்சிகள் மற்றும் மலப்புழைத் தண்டுகள் ஆகியவற்றில் தொடு உணர்விகள் (Thigmo receptor) உள்ளன. மணங்களை நுகரும் நுகர்ச்சி உணர்விகள் உணர் கொம்பு நீட்சிகளிலும், சுவை உணரும் உணர்விகள் அரைவைத்தாடை நீட்சிகளிலும் கீழுதட்டிலும் அமைந்துள்ளன.


தெரிந்து தெளிவோம்

கணுக்காலிகளின் கண்கள் கூட்டுக்கண்கள் என அழைக்கப்படும். இதில் ஓம்மட்டிடியம் எனப்படும் எண்ணற்ற ஒரே மாதிரியான அமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு ஓம்மட்டிடியமும் தனித்தனி பார்வை உணர்வியாக செயல்படுகின்றன. கூட்டுக்கண்களுக்கும் தனிக்கண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது? ஏன் கரப்பான் பூச்சியின் மொசைக் பார்வை, குறைவான தெளிவுத்திறன் கொண்டதாக உள்ளது?


காலின் முதல் நான்கு கணுக்களில் வெப்ப உணர்விகள் (Thermo receptors) உள்ளன. காற்று மற்றும் நில அதிர்வுகளை, உணரும் கார்டோடோனல் (Chordotonal receptor) உணர்விகள் மலப்புழைத் தண்டுகளில் அமைந்துள்ளன. கரப்பான்பூச்சியின் தலையின் முதுகுப்புற பரப்பில் அமைந்துள்ள ஓர் இணைச் கூட்டுக் கண்கள் ஒளி உணர்வியாக (Photo receptor organ) செயல்படுகின்றன. ஒவ்வொரு கண்ணிலும் சுமார் 2000 எளிய கண்களான 'ஓம்மட்டிடியா' காணப்படுகின்றன. இதன் வழியாகவே கரப்பான்பூச்சிகள் பொருளின் பல பிம்பத்தை உணர்கின்றன. இத்தகைய பார்வைக்கு மொசைக் பார்வை (முழுமையற்ற பகுதிப்பார்வை) என்று பெயர். இப்பார்வையில் உணர்தன்மை அதிகமிருப்பினும் குறைவான தெளிவு திறன் கொண்டதாகவே உள்ளது


கழிவுநீக்க மண்டலம்

கரப்பான் பூச்சியின் முதன்மை கழிவு நீக்க உறுப்பாக மால்பீஜியன் நுண்குழல்கள் செயலாற்றுகின்றன. உடலிலுள்ள நைட்ரஜன் கழிவுப்பொருட்களை யூரிக் அமில வடிவத்தில் இவை வெளியேற்றுகின்றன. யூரிக் அமிலமாகக் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதனால் கரப்பான்பூச்சிகள் யூரிகோடெலிக் (யூரிக் அமில நீக்கிகள்) உயிரிகளாகும். கூடுதலாக, கொழுப்பு உறுப்புகள், நெஃப்ரோசைட்டுகள், கியூட்டிகிள் மற்றும் யூரிகோஸ் சுரப்பிகள் ஆகியவையும் கழிவு நீக்கத்திற்கு உதவுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா?

நடுக்குடலுக்கும், பின்குடலுக்கும் இடையே உள்ள நுண்குழல்களை மார்சல்லோ மால்பிஜி என்பவர் முதலில் விளக்கினார். அப்போது அவற்றை வாசாவெரிகோஸ் என்று அழைத்தார். பிற்காலத்தில் மெக்கல் என்பவர் அவற்றை மால்பீஜியன் நுண்குழல்கள் என்று அழைத்தார்.


மால்பீஜியன் நுண்குழல்கள் பொதுவாக மெல்லிய, நீண்ட நூலிழை போன்ற வடிவத்துடன் மஞ்சள் நிறமாகக் காணப்படுகின்றன. இக்குழல்கள் உணவுப்பாதையில் நடுக்குடல் மற்றும் பின்குடல் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளன. எண்ணிக்கையில் 100-லிருந்து 150 வரை உள்ள இந்நுண்குழல்கள் 6-லிருந்து 9- தொகுப்புகளாக உள்ளன. ஒவ்வொரு நுண்குழலும் சுரப்புச் செல்கள் மற்றும் குற்றிழைச் செல்களை (ciliated cells) கொண்டவை. இவற்றால் சேகரிக்கப்படும் கழிவுகள் பின்குடல் வழியாக வெளியேற்றப்படுகின்றன. மால்பீஜியன் நுண்குழல்களில் உள்ள சுரப்புச் செல்கள் நீர், உப்பு, மற்றும் நைட்ரஜன் கழிவுகளை ஹீமோலிம்பிலிருந்து பிரித்தெடுத்து நுண்குழலின் உட்பகுதிக்கு அனுப்புகிறது. நுண்குழலின் செல்கள் நீர் மற்றும் கனிம உப்புக்கழிவுகளை மீண்டும் உறிஞ்சுகின்றன. அதேசமயத்தில் நுண்ணிழைகள் சுருங்குவதனால் நைட்ரஜன் கழிவுகள் சிறுகுடல் பகுதிக்குக் கடத்தப்பட்டு அதிகப்படியான நீர் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள கழிவுப்பொருட்கள் மலக்குடலுக்குள் செல்லும்போது ஏறத்தாழத் திடத்தன்மை பெற்ற யூரிக் அமிலம், மலக்கழிவுகளோடு சேர்த்து வெளியேற்றப்படுகிறது.


இனப்பெருக்க மண்டலம்

கரப்பான்பூச்சி ஒருபால் உயிரியாகும். இதில் ஆண், பெண் உயிரிகள் தனித்தனியாக உள்ளன. இவற்றில் இனப்பெருக்க உறுப்புகள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் ஓர் இணை விந்தகங்கள், ஓர் இணை விந்து நாளங்கள், விந்து உந்து நாளம், காளான் வடிவச்சுரப்பி (Utricular gland), கான்குளோபேட் சுரப்பி (Conglobate / phallic gland) மற்றும் புற ஆண் இனப்பெருக்க உறுப்பு ஆகிய பகுதிகள் உள்ளன. மூன்று கதுப்புகளைக் கொண்ட ஓர் இணை விந்தகங்கள் 4 மற்றும் 6வது வயிற்றுக்கண்டங்களின் பக்கவாட்டில், பக்கத்திற்கு ஒன்றாகக் காணப்படுகின்றன (படம். 4.14). ஒவ்வொரு விந்தகத்திலிருந்தும் உருவாகும் மெல்லிய விந்துநாளம் விந்துபைகள் வழியாக விந்து உந்து நாளத்தில் திறக்கிறது. நீண்ட விந்து உந்துநாளம் உயிரியின் மலப்புழைக்குக்கீழ் உள்ள ஆண் இனப்பெருக்கத் துளையில் திறக்கிறது. காளான் வடிவச்சுரப்பி (யூட்ரிகுலார் சுரப்பி) ஆண் இனப்பெருக்க மண்டலத்துடன் இணைந்த ஒரு பெரிய துணை இனப்பெருக்கச் சுரப்பியாகும். இது விந்து உந்து நாளத்தின் முன் பகுதியில் திறக்கிறது.விந்தணுக்களைச் சேமிக்கும் விந்துபைகள் (seminal vesicles), விந்து உந்து நாளத்திற்கு வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ளது.


விந்தணுக்கள் விந்துபையில் ஸ்பர்மட்டோஃபோர் என்னும் கற்றைகளாகச் சேமிக்கப்படுகின்றன. கான்குளோபேட் சுரப்பியும் (ஃபாலிக் சுரப்பி) இனப்பெருக்கத் துளையின் அருகில் திறக்கின்றன. இதன் பணி இதுவரை அறியப்படவில்லை. புணர்ச்சியில் துணை புரிவதற்காகக் கைட்டினாலான சமச்சீரற்ற வடிவம் கொண்ட ஃபேலோமியர் ஆண் இனப்பெருக்கத் துளை அருகே உள்ளன. ஒரு போலி ஆண்குறி உறுப்பும் காணப்படுகிறது.

ஓர் இணை அண்டகங்கள், கலவிக்கால்வாய் (vagina), இனப்பை (Genital pouch), கொல்லேட்ரியல் சுரப்பி, விந்துகொள்பை (Spermatheca) ஆகியன பெண் கரப்பான் பூச்சியின் இனப்பெருக்க மண்டல உறுப்புகளாகும். ஓர் இணை அண்டகங்கள் 2 லிருந்து 6 வது வயிற்றுக் கண்டங்களின் பக்கவாட்டில் பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அண்டகமும் 8 அண்டக்குழல்களால் ஆனவை. இதனுள் தொடர் வரிசையில் வளர்ச்சியடையும் முட்டைகள் உள்ளன. ஒவ்வொரு அண்டகத்தின் பக்கத்திலிருந்தும் உருவாகும் அண்டநாளங்கள் உடலின் மையப்பகுதியில் ஒன்றிணைந்து அண்டபொது நாளம் எனப்படும் கலவிநாளத்தை தோற்றுவிக்கிறது. கலவிநாளம் இனப்பையில் திறக்கிறது. கலவிநாளத்தின் செங்குத்துப் பிளவே பெண் இனப்பெருக்கத்துளை எனப்படுகிறது. 6வது வயிற்றுக்கண்டத்தில் உள்ள ஓர் இணை விந்து கொள்பைகள் இனப்பையின் முதுகுப்புறத்திலுள்ள மையத்துளை வழியாகத் திறக்கிறது. கலவியின் போது அண்டங்கள் இனப்பைக்குள் விழுகின்றன. பின்னர் அங்கு விந்துச் செல்களால் கருவுறுகின்றன. நன்கு கிளைத்த ஓர் இணை வெண்ணிறக் கொல்லேட்ரியல் சுரப்பிகள் அண்டகத்தின் பின்பகுதியில் உள்ளது. இச்சுரப்பியே, கருமுட்டைகளைப் பாதுகாக்கும் ஊத்திகா எனும் கருமுட்டைக்கூட்டைச் சுரக்கிறது. படகு வடிவமான இனப்பை 7, 8 மற்றும் 9வது வயிற்றுக்கண்டத் தகடுகளால் உருவாக்கப் பட்டதாகும். இனப்பை இரு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கலவிநாளம் திறக்கும் அறை இனப்பெருக்க அறை என்றும், கருமுட்டைகூடு உருவாகும் அறை, கருமுட்டைகூடு அறை என்றும் அழைக்கப்படுகின்றன. பெண் பூச்சிகளில் 3 இணை கைட்டின் ஓடுகள் ஒன்றிணைந்து கோனோபோஃபைசிஸ் எனும் அமைப்பாகப் பெண்  புழையை சூழ்ந்துள்ளது. முட்டையீட்டுவாயில் (Ovipositor) என்னும் இது முட்டைகளை முட்டைக் கூட்டிற்குள் செல்ல வழி செய்கிறது (படம் 4.14).

கரப்பான் பூச்சியின் கருமுட்டைக்கூடுகள் (Ootheca) அடர்சிவப்பிலிருந்து கரும்பழுப்பு நிறமுடையவை. 12மி.மீ நீளமும் 16 முட்டைகளையும் கொண்ட இக்கூடு, ஏதாவதொரு பொருளின் மேல், குறிப்பாக உணவுப்பொருட்கள் அருகில் அதிக ஈரப்பதமிக்க, இடுக்குகள், வெடிப்புகள் அருகில் ஒட்டவைக்கப்படுகிறது. ஒரு கரப்பான்பூச்சி தன் வாழ்நாளான ஒன்று முதல் இரண்டாண்டுகளில் சுமார் 15-லிருந்து 40 கருமுட்டைக் கூடுகளை உற்பத்தி செய்கின்றது.


உங்களுக்குத் தெரியுமா?

டிப்ளோப்டீரா பங்க்டேடா சிற்றினத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சிகள் தன் குஞ்சுகளுக்காக அடர்த்தியான படிக பாலை உற்பத்தி செய்கின்றன. மியான்மர், சீனா, ஃபிஜி, ஹவாய் மற்றும் இந்தியாவில் காணப்படும் இவற்றின் பால், எதிர்காலத்தில் சிறந்த உணவாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

இக்கூடுகளுக்குள்ளேயே சுமார் 5-13 வாரங்களுக்கு கரு வளர்ச்சியடைகிறது. இதன் கருவளர்ச்சி, இறக்கையற்ற படிநிலைகளைக் கொண்டிருப்பதால், கரப்பான் பூச்சி பாராமெட்டாபோலஸ் (Paurametabolus) வகை எனப்படுகிறது. முதிர் உயிரிகளை ஒத்த இறக்கையற்ற வளர்உயிரிகள் (Nymph) வளர் உருமாற்றத்தின் வழியாக முதிர் உயிரியாகின்றன. இவ்வாறு முதிர் உயிரியாக மாறுவதற்கு முன் இறக்கைகளற்ற வளர் உயிரி சுமார் 13 முறை தோலுரித்துக் (Ecdysis) கொள்கிறது.


கரப்பான் பூச்சியின் பெரும்பான்மையான சிற்றினங்கள் பரவலான வகைகள் ஆகும். மொத்தமுள்ள சுமார் 4600 இனங்களில் சுமார் 30 சிற்றினங்கள் மனித வாழிடங்களோடு தொடர்புடையன. சுமார் 4 சிற்றினங்கள் தீங்கு உயிரிகளாக நன்கு அறியப்பட்டுள்ளன. அவை உணவுப்பொருட்களைச் சிதைத்து மாசடையச் செய்கிறது. கரப்பான் பூச்சிகள் பல பாக்டீரியா நோய்களைக் கடத்துகின்றன. அவை இருப்பதே சுகாதாரக் குறைவிற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. பலருக்கு ஆஸ்துமா நோய் வருவதற்கும் இப்பூச்சி காரணமாகிறது.


11th Zoology : Chapter 4 : Organ and Organ Systems in Animals : Anatomy of Cockroach (Periplaneta americana): Digestive, Respiratory, Circulatory, Nervous, Excretory, Reproductive system in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் : கரப்பான் பூச்சி - பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா - செரிமான மண்டலம், சுவாசமண்டலம், சுற்றோட்ட மண்டலம், நரம்பு மண்டலம், கழிவுநீக்க மண்டலம், இனப்பெருக்க மண்டலம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்