கழிவு நீக்க மண்டலம்
உடலிலிருந்து வளர்சிதை மாற்றச் செயல் மூலம் உருவாகும் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்ச்சியே கழிவு நீக்கம் ஆகும். மண்புழுவில் இச்செயல் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள நெஃப்ரீடியா எனும் நுண்ணிய, சுருண்ட இணைக் குழல்கள் மூலம் நடைபெறுகிறது. நெஃப்ரீடியாக்கள் மூன்று வகைகளாக உள்ளன அவையாவன, (படம் 4.5).
அ. தொண்டை (அல்லது) கொத்து நெஃப்ரீடியா (Pharyngeal or tufted nephridia) - 5வது முதல் 9வது கண்டங்கள் வரை உள்ளன.
ஆ. நுண் நெஃப்ரீடியா (அல்லது) தோல் நெஃப்ரீடியா (Micronephridia or Integumentary nephridia) - 14 வது கண்டம் முதல் உடலின் கடைசி கண்டம் வரையுள்ள இந்த நெஃப்ரீடியா, உடல் சுவரோடு இணைக்கப்பட்டுள்ளது. உடல் பரப்பின் மேல் இவை திறக்கின்றன.
இ. மெகா நெஃப்ரீடியா (அல்லது) இடைச் சுவர் நெஃப்ரீடியா (Meganephridia or septal nephridia) 19 வது முதல் கடைசி கண்டம் வரை உள்ளது. இவை, கண்டங்களுக்கு இடையேயான கண்ட இடைச் சுவரின் இரு பக்கங்களிலும் இணையாக அமைந்து, குடலில் திறக்கின்றன (படம் 4.5).
மெகாநெஃப்ரீடியத்தின் உள்பகுதியில் புனல் வடிவ துளை உள்ளது. இதற்கு நெஃப்ரோஸ்டோம் என்று பெயர். இப்பகுதி முழுவதும் குற்றிழைகளால் ஆனது. ஒரு மெகாநெஃப்ரீடியத்தின் நெஃப்ரோஸ்டோம் ஒரு கண்டத்திலும் மீதியுள்ள குழல் பகுதி அடுத்த கண்டத்திலும் இருக்கும். குழல் பகுதி மூன்று பிரிவுகளைக் கொண்டது. அவை குற்றிழைகளை கொண்ட பகுதி,சுரப்பு பகுதி மற்றும் தசைப்பகுதி ஆகியன ஆகும். குற்றிழைகளைக் கொண்ட நெஃப்ரோஸ்டோமினால் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் குற்றிழைகளின் இயக்கத்தால்,நெஃப்ரீடியத்தின் தசைப்பகுதிக்குள் கடத்தப்படுகின்றன. சுரப்பு பகுதி இரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்தெடுக்கிறது. இறுதியில் நெப்ரிடிய துளையின் வழியே கழிவுகள் குடல் பகுதிக்குள் தள்ளப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
நெஃப்ரீடியாக்கள் தவிர குடலின் உடற்குழி சுவரில் 'குளோரகோஜன்' (Chloragogen cells) எனும் சிறப்பு செல்கள் உள்ளன அவை குடலின் சுவரிலுள்ள இரத்தத்திலிருந்து நைட்ரஜன் கழிவுப் பொருட்களைப் பிரித்தெடுத்து உடற்குழிக்குள் விடுகின்றன. பின்னர் அக்கழிவுகள் நெஃப்ரீடியாக்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
மண்புழுக்கள் இருபால் உயிரிகளாகும். அதாவது ஆண், பெண் இனப்பெருக்க மண்டலங்கள் ஒரே உயிரியில் காணப்படும் (படம். 4.6). அவ்வாறு இருப்பினும், இருபால் உறுப்புகளும் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சியடைவதால், சுயக் கருவுறுதல் தடுக்கப்படுகிறது. அதாவது விந்தணுக்கள் அண்டணுக்களுக்கு முன்பாகவே வளர்ச்சியடைகின்றன. இவ்வாறான நிகழ்விற்கு புரோட்டான்ட்ரஸ் (Protandrous) எனப் பெயர். எனவே அயல் கருவுறுதல் நடைபெறுகிறது.
ஆண் இனப்பெருக்க மண்டலத்தில், இரண்டு இணை விந்தகங்கள் 10வது மற்றும் 11வது கண்டங்களில் உள்ளன. விந்தகங்களிலிருந்து, ஸ்பெர்மட்டோகோனியா என்னும் இனச்செல்கள் தோன்றுகின்றன.
இவை ஈரிணை விந்துப் பைகளில் விந்தணுக்களாக வளர்ச்சியடைகின்றன. மேலும், விந்தகங்கள், உள்ள அதே கண்டங்களில் இரண்டு இணை 'குற்றிழை வட்டங்கள்' (Ciliary rosettes) எனப்படும் விந்து புனல்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பக்கத்திலுள்ள புனலும் அந்தந்தப் பக்கத்தின் நீண்ட குழலான விந்து நாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 18வது கண்டம் வரை செல்லும் விந்து நாளம் (Vasa deferentia) ஆண் இனப்பெருக்கத் துளை வழியே வெளியே திறக்கிறது. ஆண் இனப்பெருக்கத் துளையில் இரண்டு இணை பீனியல் சீட்டாக்கள் உள்ளன. கலவியின்போது இவை பயன்படுகின்றன. 18 மற்றும் 19வது கண்டங்களின் இடையே ஓர் இணை புரோஸ்டேட் சுரப்பி உள்ளது. இதன் சுரப்பானது விந்தணுக்களை, ஸ்பெர்மட்டோபோர்கள் எனும் கட்டுக்களாக ஒட்டுவதற்குப் பயன்படுகிறது (படம் 4.6).
பெண் இனப்பெருக்க மண்டலம் என்பது ஓர் இணை அண்டங்களால் ஆனது. இது புழுவின் 13வது கண்டத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு அண்டகமும் விரல் போன்ற நீட்சிகளை உடையது. அதில் நீள் வரிசையில் அண்டணுக்கள் உள்ளன. அண்டகத்தின் அடியில் உள்ள அண்டகப் புனல் நீண்டு அண்டநாளமாகிறது. இருபக்கமும் உள்ள அண்ட நாளங்கள் வயிற்றுப் புற பகுதியில் ஒன்று சேர்ந்து 14வது கண்டத்தில் ஓரிணை பெண் இனப்பெருக்கத் துளைகளின் வழியே வெளியே திறக்கிறது. 7வது, 8வது மற்றும் 9வது கண்டங்களில் கண்டத்திற்கு ஒரு இணை வீதம் மூன்று இணை விந்து கொள்பைகள் (Spermathecae) உள்ளன. இவை 6வது மற்றும் 7வது கண்டங்களுக்கிடையேயும், 7வது மற்றும் 8வது கண்டங்களுக்கிடையேயும் மற்றும் 8வது மற்றும் 9வது கண்டங்களுக்கிடையேயும் வயிற்றுப் புறத்தில் திறக்கின்றன. கலவியின்போது இத்துளைகளின் வழியாக விந்தணுக்கள் பெறப்பட்டு, விந்து கொள்பையில் சேகரித்து வைக்கப்படுகிறது.
கலவியின்போது இரு புழுக்களுக்கிடையே விந்தணுக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இரு மண்புழுக்களும், தலைகளை எதிர் முனைகைளில் வைத்தவாறு, ஒரு புழுவின் ஆண் இனப்பெருக்கத்துளை வழியே வரும் விந்து அடுத்த புழுவின் விந்து கொள் பைக்குச் செல்லும் வகையில் பொருந்துகின்றன. பின்னர் விந்தணுக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. கிளைடெல்லத்தில் உள்ள சுரப்பி செல்களினால் சுரக்கப்படுகிற கருமுட்டை கூட்டில் (cocoon) முதிர்ந்த விந்தணு, அண்டணு மற்றும் ஊட்டத்திரவம் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. கருவுறுதலும் வளர்ச்சியும், மண்ணில் விடப்படுகிற கருமுட்டைக்கூட்டினுள்ளேயே நடைபெறுகின்றன. இது ஒரு வகையான மாறுதல் அமைந்த புறக்கருவுருதல் எனப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு புதிய, இளைய மண்புழுக்கள் கருமுட்டைக்கூட்டிலிருந்து வெளிவருகின்றன. மண்புழுவின் வளர்ச்சியின் போது இடைநிலை உயிரிகள் எதுவும் இல்லாததால் இது ஒரு நேர்முக வளர்ச்சியாகும்.