வகைப்பாட்டு நிலை, புறத்தோற்றம், செரிமான மண்டலம், சுவாசமண்டலம், சுற்றோட்ட மண்டலம், நரம்பு மண்டலம், கழிவுநீக்க மண்டலம், இனப்பெருக்க மண்டலம் - கரப்பான் பூச்சி - பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா | 11th Zoology : Chapter 4 : Organ and Organ Systems in Animals
கரப்பான் பூச்சி - பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா
வகைப்பாட்டு நிலை
தொகுதி - கணுக்காலிகள் (Arthropoda)
வகுப்பு - பூச்சிகள் (Insecta)
வரிசை - பிளாட்டோடியா (Blattodea)
பேரினம் – பெரிப்பிளனெட்டா (Periplaneta)
சிற்றினம் – அமெரிக்கானா (americana)
உலகெங்கும் பரவியுள்ள கரப்பான் பூச்சி, பூச்சி இனத்திற்குரிய அனைத்து அடிப்படை பண்புகளையும் பெற்றுள்ள உயிரியாகும். பொதுவாக இப்பூச்சி அடர்சிவப்பு கலந்த பழுப்பு நிறம் அல்லது கருப்பு நிற உடலைக் கொண்டது. இதன் முதல் மார்புக் கண்டத்தில் மட்டும் விளிம்பில் பழுப்புநிறப் பட்டைகள் காணப்படும். இவை பொதுவாக இரவில் உலவும் அனைத்துண்ணியாகும். ஈரம் மிகுந்த மற்றும் வெப்பமான பொருள் சேமிப்பு பகுதிகளிலும், குறிப்பாகச் சமையல் அறைகள், உணவுதானியச் சேமிப்புக் கிடங்குகள், அடுமனை, உணவகங்கள், விடுதிகள், கழிவுநீர் தேங்குமிடம் மற்றும் பொது இடங்களிலும் பெரிதும் காணப்படுகின்றன. பெரிப்பிளனேட்டா மிக வேகமாக ஓடும் (Cursorial) பூச்சியினமாகும். முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கக்கூடிய ஒருபால் உயிரிகளான இவை பெற்றோர் பாதுகாப்பு பணியை செய்யக்கூடிய உயிரிகளாகும். காலரா, வயிற்றுப்போக்கு, காசநோய் மற்றும் டைபாய்டு காய்ச்சலை உண்டாக்கக்கூடிய தீங்கு தரும் நுண்ணுயிரிகளை எடுத்துச் செல்வதால் "நோய்க் கடத்திகள்' (Vectors) என்றும் இவை அழைக்கப்படுகின்றன.
முதிர்ந்த கரப்பான் பூச்சி சுமார் 2-4 செ.மீ நீளமும் 1 செ.மீ அகலமும் உடையது. இவற்றின் உடல் முதுகு - வயிற்றுப் புற அச்சுவாக்கில் தட்டையாகவும், இருபக்கச் சமச்சீரமைப்புடையதாகவும் உடற்கண்டங்களை உடையதாகவும் காணப்படுகிறது. உடல் தலை, மார்பு மற்றும் வயிறு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மொத்த உடலும் உறுதியான பழுப்பு நிறமுடைய கைட்டினால் ஆன புறச்சட்டகத்தால் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கண்டத்திலும் ஸ்கிளிரைட்டுகள் எனப்படும் கடினமான தட்டுகள் காணப்படுகின்றன. இவை மெல்லிய மீள்தன்மையுள்ள இணைப்புகள் (அ) ஆர்த்தோடியல் சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளன. முதுகுப்புறமுள்ள ஸ்கிளீரைட்டுகளுக்கு 'டெர்கிட்கள்' (Tergites) என்றும் வயிற்றுப் புறத்தில் உள்ளவற்றிற்கு 'ஸ்டர்னைட்டுகள்' (Sternites) என்றும் பெயர். பக்க வாட்டில் உள்ள ஸ்கிளிரைட்டுகளுக்கு, 'புளூரைட்கள்' (Pleurites) என்று பெயர்.
கரப்பான்பூச்சியின் தலைப்பகுதி சிறிய, முக்கோண வடிவமுடையது. உடலின் நீள்வச அச்சிற்குச் செங்குத்தாகத் தலை அமைந்துள்ளது. வாய் உறுப்புகள் அனைத்தும் கீழ்நோக்கி அமைந்திருக்கும். இத்தகைய அமைவிற்கு 'ஹைப்போநேத்தஸ்' (Hypognathous) வகை என்று பெயர். முன்புறமுள்ள ஆறு கண்டங்களின் இணைவால் தலை ஆக்கப்பட்டுள்ளது. மேலும் வளையும் தன்மையுடைய கழுத்தின் (படம் 4.8) உதவியால் அனைத்துப் பக்கங்களிலும் தலையால் அசைய முடிகிறது. இதன் தலைப்பகுதியில் ஓர் இணை சிறுநீரக வடிவம் கொண்ட, அசையாத ஒட்டிய கூட்டுக்கண்களும், ஓர் இணை உணர்கொம்பு நீட்சிகளும் மற்றும் வாய் உறுப்புத் தொகுப்புகளும் காணப்படுகின்றன.
உணர்கொம்புகளில் உள்ள உணர் செல்கள் சுற்றுச்சூழல் தன்மையினைத் தொடர்ந்து கண்காணிக்க உதவுகின்றன. இதன் வாய் உறுப்பிலுள்ள இணையுறுப்புகள், கடித்து, மென்று உண்ணும் வகையைச் சார்ந்தது. இதற்கு 'மான்டிபுலேட்' அல்லது 'ஆர்த்தோப்டீரஸ்' வகை என்று பெயர். ஒரு மேலுதடு (Labrum), ஓர் இணை அரைவைத் தாடைகள் (Mandibles), ஓர் இணைத் துருவுத்தாடைகள் (Maxillae), ஒரு கீழுதடு (Labium) மற்றும் நாக்கு (Hypopharynx அல்லது Lingua) (படம் 4.9) ஆகியவை வாய் உறுப்புகளில் அடங்கியுள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
தரையில் வாழும் பூச்சி இனங்களிலேயே கரப்பான் பூச்சிகள் மிக வேகமாக ஓடும் தன்மையுடையவை. இதன் வேகம் சுமார் 5.4கிமீ/மணி.
மார்புப் பகுதியானது 'முன்மார்பு' (Prothorax) 'நடுமார்பு' (Mesothorax) மற்றும் 'பின்மார்பு' (Metathorax)க் கண்டங்களால் ஆனது. மார்புக் கண்டங்களில் பெரியது முன்மார்புக் கண்டமாகும். இது தலைப்பகுதியுடன் குறுகலான கழுத்துப் பகுதியால் (Cervicum) இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மார்புக் கண்டத்திலும் ஓர் இணை நடக்கும் கால்கள் அமைந்துள்ளன. மொத்தம் ஆறு கால்களைப் பெற்றுள்ளதால் இவற்றிற்கு ஆறுகாலிகள் (hexapoda) (hexa = ஆறு, poda = கால்) என்று பெயர். ஒவ்வொரு காலும் ஐந்து கணுக்களால் ஆனது. அவை முறையே காக்சா (பெரியது), ட்ரொக்காண்டர் (சிறியது), ஃபீமர் (நீண்டு அகன்றது), டிபியா (தடித்து நீண்டது) மற்றும் டார்ஸஸ் ஆகும். கடைசி கணுவான டார்ஸஸில் அசையும் தன்மையுடைய ஐந்து இணைப்புகள் உள்ளன. அவற்றிற்கு 'போடோமியர்கள்' அல்லது 'டார்சோமியர்கள்' என்று பெயர். கரப்பான் பூச்சியில் இரண்டு இணை இறக்கைகள் காணப்படுகின்றன. எலைட்ரா அல்லது டெக்மினா என்றழைக்கப்படும் முதல் இணை இறக்கைகள் நடுமார்பு கண்டத்தில் இருந்து தொடங்கி, ஓய்வு நிலையில் பின் இறக்கைகளை மூடிப் பாதுகாக்கிறது. பின்மார்புக் கண்டத்திலிருந்து தொடங்கும் இரண்டாம் இணை இறக்கைகள் பறத்தலுக்கு உதவுகின்றன.
கரப்பான் பூச்சியின் வயிற்றுப்பகுதி பத்துக் கண்டங்களால் ஆனது. ஒவ்வொரு வயிற்றுக் கண்டமும் மேற்புறம் டெர்கத்தினாலும் கீழ்ப்புறம் ஸ்டெர்னத்தினாலும் ஆக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பக்கவாட்டில் உள்ள சவ்வு போன்ற புளூராக்கள் இணைக்கின்றன.
பெண் கரப்பான்பூச்சியின் 7வது உடற்கண்டத்தில் உள்ள ஸ்டெர்னம் தகடு படகு வடிவம் கொண்டது. இது எட்டு மற்றும் ஒன்பதாவது ஸ்டெர்னத்துடன் சேர்ந்து இனப்பெருக்கப்பையாக (brood or genital pouch) உருவாகிறது. இப்பையின் முன்பகுதி பெண் இனப்பெருக்கத்துளை (gonopore), விந்து கொள்பைத்துளை (spermathecal pores) மற்றும் கொல்லேடிரல் சுரப்பிகளைக் கொண்டுள்ளது. இதன் பின்பகுதியில் கருமுட்டை அறை (ootheca) உள்ளது. இங்கு தான் கக்கூன் எனப்படும் கருமுட்டைக்கூடு உருவாகிறது. ஆண் பூச்சிகளில் இனப்பெருக்கப் பையானது (genital pouch) வயிற்றின் பின் பகுதியில் அமைந்துள்ளது. இப்பையைச் சுற்றிலும் முதுகுப்புறத்தில் 9 மற்றும் 10வது டெர்கம் தகடுகளும் வயிற்றுப் புறத்தில் ஸ்டெர்னம் 9வது தகடும் மூடியுள்ளன. இந்தப்பகுதியில் முதுகுப்புறத்தில் மலவாயும், வயிற்றுப்புறத்தில்ஆண்இனப்பெருக்கத்துளையும் அமைந்துள்ளன. ஆண் மற்றும் பெண் உயிரிகளின் இனப்பெருக்கத்துளையைச் சுற்றியுள்ள ஸ்கிளீரைட்டுகளுக்கு 'கோனோபோபைஸிஸ்' (Gonapophysis) என்று பெயர்.
ஆண் பூச்சியின் 9வது கண்ட ஸ்டெர்னத்தில் ஓர் இணை மெல்லிய குட்டையான மலவாய் நீட்சிகள் (anal styles) காணப்படுகின்றன. ஆனால் பெண் பூச்சிகளில் இவை காணப்படுவதில்லை. அதே சமயம் ஆண் மற்றும் பெண் பூச்சிகளின் 10வது கண்டத்தில் இணைந்த, இழைபோன்ற ஓர் இணை மலப்புழைத் தண்டுகள் (anal cerci) காணப்படுகின்றன. இத்தண்டுகள் காற்று மற்றும் நில அதிர்வுகளை உணரும் உறுப்புகளைக் கொண்டுள்ளது. ஆண் பூச்சிகளின் 7வது கண்ட ஸ்டெர்னத்தில் உள்ள ஓர் இணை பெரிய, அசையும் இணைப்பு கொண்ட முட்டை வடிவத் தகடு (gynovalvular plates) பெண் பூச்சியிடமிருந்து ஆண் பூச்சிகளை எளிமையாக வேறுபடுத்த உதவுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
பூச்சியினங்களிலேயே மிகவும் தொன்மையான விலங்கு கரப்பான் பூச்சியாகும். இது ஏறத்தாழ 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான கார்போனிஃபெரஸ் காலத்தைச் சார்ந்தது.
கரப்பான் பூச்சியின் செரிமான மண்டலமானது உணவுக்குழலையும் செரிமானச் சுரப்பிகளையும் உள்ளடக்கியதாகும். உடற்குழியில் அமைந்துள்ள உணவுப் பாதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே முன்குடல், நடுக்குடல் மற்றும் பின்குடலாகும் (படம். 4.10). முன்குடல் பகுதியில் வாய்முன்குழி, வாய், தொண்டை மற்றும் உணவுக்குழலைக் கொண்டுள்ளது. இது பின்பகுதியில் பைபோன்ற தீனிப்பையில் முடிவடைகிறது. அது உணவை சேமிக்க உதவுகிறது. தீனிப்பையைத் தொடர்ந்து அரைவைப்பை அல்லது புரோவென்ட்ரிகுலஸ் அமைந்துள்ளது. இப்பையின் வெளி அடுக்கில் தடித்த வட்டத்தசைகளும், உள்ளடுக்கில் தடித்த கியூட்டிக்கிளும் சேர்ந்து கைட்டின் நிரம்பிய பற்கள் எனப்படும் ஆறு தகடுகளை உருவாக்கியுள்ளன. உணவுத்துகள்கள் அரைவைப் பையில் நன்கு அரைக்கப்படுகின்றன.
அரைவைப்பையை அடுத்துக் குட்டையான குறுகலான சுரப்புத் தன்மையுடைய நடுக்குடல் அமைந்துள்ளது. முன் மற்றும் நடுக்குடல் இணையுமிடத்தில் எட்டு, விரல் போன்ற குழல்களாலான கல்லீரல் நீட்சிகள் அல்லது வயிற்றுபுற நீட்சிகள் (hepatic caecae or enteric caecae) அமைந்துள்ளன. நடுக்குடலும், பின்குடலும் இணையுமிடத்தில் சுமார் 100 - 150 எண்ணிக்கையில் மஞ்சள் நிறமுடைய, மெல்லிய இழை போன்ற மால்பீஜியன் நுண்குழல்கள் (Malpighian tubules) காணப்படுகின்றன. இவை ஹீமோலிம்ப் திரவத்திலுள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. பின்குடல் நடுக்குடலை விட அகன்றுள்ளது. இது சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் என மூன்று பகுதிகளைக் கொண்டது. மலக்குடல், மலப் புழை வழியாக வெளியே திறக்கிறது. உமிழ்நீர்ச் சுரப்பிகள், சுரப்புச் செல்கள் மற்றும் கல்லீரல் நீட்சிகள் ஆகியவை செரிமானச் சுரப்பிகள் ஆகும். ஓர் இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் தீனிப்பையின் பக்கத்திற்கொன்றாக உள்ளன.நடுக்குடலிலுள்ள சுரப்புச் செல்கள் மற்றும் கல்லீரல் நீட்சிகள் சுரப்பு நீரைச் சுரக்கின்றன.
சுவாசமண்டலம்
கரப்பான் பூச்சியின் சுவாச மண்டலம் தரைவாழ் பூச்சியினங்கள் அனைத்தையும் விடச் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. (படம்.4.11). கரப்பான் பூச்சியின் சுவாசம் பல கிளைகளைக் கொண்ட மூச்சுக்குழல்கள் (trachea) மூலம் நடைபெறுகிறது.
தெரிந்து தெளிவோம்
கரப்பான் பூச்சியின் சுவாச மண்டலத்தில் சுவாச துளைகள் மற்றும் மூச்சுக்குழல்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. மண்புழுவின் சுவாச மண்டலத்தை விட இது அதிக திறன் உடையது ஏன்? மனிதனின் செயல்மிகு நிகழ்ச்சியாக உள்ள உட்சுவாசம் கரப்பான் பூச்சிகளில் இயல்பு நிகழ்ச்சியாக இருப்பது ஏன்?
மூச்சுக்குழல்கள் உடலின் பக்கவாட்டில் உள்ள 10 துளைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இத்துளைகளுக்கு ஸ்பைரக்கிள்கள் (spiracles) அல்லது ஸ்டிக்மேட்டா (Stigmata) அல்லது சுவாசத்துளைகள் என்று பெயர். இந்தச் சுவாசத்துளைகளைத் திறக்கவும் மூடவும் வால்வுகள் உண்டு. இவ்வால்வுகளைச் சுருக்குத்தசைகள் இயக்குகின்றன. மூச்சுக்குழல்கள் பல கிளைகளாகப் பிரிந்து சிறு நுண் குழல்களாக மாற்றம் அடைகிறது. அவற்றிற்கு மூச்சு நுண்குழல்கள் அல்லது ட்ரக்கியோல்கள் (tracheoles) என்று பெயர். மூச்சு நுண்குழல்கள் முழுவதும் நிறமற்ற திரவத்தினால் (ஹீமோலிம்ப்) நிரப்பப்பட்டுள்ளது. இத்திரவத்தின் வழியாகவே காற்று பரிமாற்றம் நடைபெறுகிறது. உடல் தசைகள் அதிகமாகச் செயல்படும் பொழுது தசைகளின் ஆக்சிஜன் தேவையை ஈடுசெய்வதற்காக இத்திரவம் திசுக்களுக்குள் செல்வதால் ஆக்ஸிஜன் விரவல் துரிதமாக நடைபெறுகிறது. சுவாச மண்டலத்தில் காற்று செல்லும் பாதை:
சுற்றோட்ட மண்டலம்
கரப்பான்பூச்சியில் திறந்த வகை இரத்த ஓட்ட மண்டலம் காணப்படுகிறது. (படம் 4.12) இரத்த நாளங்கள் சரியாக வளர்ச்சியடையாமல் உள்ளது. இதன் உடற்குழி முழுவதும் நிறமற்ற இரத்தமான ஹீமோலிஃம்ப் (Haemolymph) தடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.
கரப்பான்பூச்சியின் உள்ளுறுப்புகள் அனைத்தும் உடற்குழியிலுள்ள ஹீமோலிஃம்பில் மிதக்கின்றன. நிறமற்ற ஹீமோலிஃம்பில் பொதுவாகப் பிளாஸ்மா மற்றும் செல் விழுங்கும் தன்மையுடைய இரத்தச் செல்களும் (Haemocytes) உள்ளன. கரப்பான்பூச்சியின் இதயம் தசைச்சுவர் கொண்ட நீண்ட குழலாக மார்புப்பகுதி முதல் வயிற்றுப்பகுதி வரை நீண்டுள்ளது. இதயம் பதின்மூன்று அறைகளைக் கொண்டுள்ளது ஒவ்வொரு அறையின் இரண்டு புறங்களிலும் ஆஸ்டியா (Ostia) எனும் துளைகள் காணப்படுகின்றன. உடற்குழியிலுள்ள இரத்தமானது ஆஸ்டியாக்கள் மூலம் இதயத்திற்குள் நுழைந்து மீண்டும் மேல்நோக்கி உள்குழிகளில் (Sinuses) செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு கண்டத்திலும் இதயத்தின் இரண்டு பக்கங்களிலும் ஒரு ஜோடி முக்கோண வடிவ அலரித்தசைகள் (மொத்தம் 12 இணை) அமைந்துள்ளன. இத்தசைகளே இரத்த ஓட்டத்திற்கு முக்கிய காரணமாகின்றன. மேலும் கரப்பான் பூச்சியின் உணர் கொம்பு நீட்சியின் அடியிலுள்ள துடிக்கும்பை (Pulsatile Vesicle) இரத்தத்தைப் பாய்ச்சுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
கரப்பான் பூச்சிகள் 45 நிமிடங்கள் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும். நீருள் மூழ்கிய நிலையில் அரைமணி நேரம் வரை வாழக்கூடியன. தன்னுடலின் நீரிழப்பை ஒழுங்குபடுத்த அவ்வப்போது சுவாசத்தை தற்காலிகமாக நிறுத்தும் பண்பும் கொண்டன.
நரம்பு மண்டலம்
கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலத்தில், உணவுக்குழல் மேல் நரம்புசெல் திரள் (Supra oesophageal ganglion) (அ) மூளை, உணவுக்குழல் கீழ் நரம்புசெல் திரள் (Sub oesophageal ganglion), உணவுக்குழல் சூழ் நரம்பு வளையம் (circum- oesophageal ring) மற்றும் நரம்புசெல் திரள்களைக் கொண்ட வயிற்றுப்புற இரட்டை நரம்புவடம் (Ganglionated double ventral nerve cord) ஆகியவை உள்ளன (படம் 4.13). மூளை அல்லது உணவுக்குழல் மேல் நரம்புச்செல் திரளானது உணர்ச்சி அறியும் உறுப்பாகவும் (sensory), நாளமில்லாச்சுரப்பி மையமாகவும் (endocrine centre) பணியாற்றுகிறது. இயக்கு மையமாகச் செயல்படும் தொண்டைகீழ் நரம்பு செல் திரள், வாய் உறுப்புகள், கால்கள் மற்றும் இறக்கைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. அரைவைத்தாடை, துருவுத்தாடை மற்றும் கீழுதட்டுக் கண்டங்களின் இணை நரம்புச்செல் திரள்கள் இணைந்து உணவுக்குழல் கீழ் நரம்புச்செல் திரளை உருவாக்கியுள்ளன.
உணவுக்குழல் மேல் நரம்புசெல் திரள் மற்றும் உணவுக்குழல் கீழ் நரம்பு செல் திரள் ஆகிய இரண்டும் ஓரிணை நரம்பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இது உணவுக்குழல் சூழ் நரம்பிணைப்பு என்றழைக்கப்படுகிறது. வயிற்றுப் புற மையக்கோட்டில் செல்லும் நரம்புசெல் திரள்களைக் கொண்ட இரட்டை நரம்புவடமானது திடத்தன்மையுடையது. உணவுக்குழல் கீழ் நரம்புசெல் திரளிலிருந்து தொடங்கும் இந்த இரட்டை நரம்புவடம் 7வது வயிற்றுக் கண்டம் வரை நீண்டு காணப்படுகிறது. மூன்று மார்புக்கண்டங்களிலும் தலா ஒரு நரம்புசெல் திரளும், வயிற்றுப்பகுதியில் ஆறு நரம்புச்செல் திரள்களும் உள்ளன.
குறிப்பு
தலையில்லாமல் கரப்பான்பூச்சி உயிர் வாழும்
கரப்பான்பூச்சியின் தலைப்பகுதி நீக்கப்பட்ட பின்பும் ஒரு வாரம் வரை உயிர் வாழும் தனித்திறன் பெற்றுள்ளது. திறந்த சுற்றோட்ட மண்டலத்தினால் வளிமண்டலத்திலுள்ள காற்றினை சுவாசத் துளைகளின் வழியாக நேரடியாக சுவாசிக்கும் முறையை பெற்றுள்ளதே இதற்குக் காரணமாகும். தலை மற்றும் வாய்ப் பகுதி இல்லாத நிலையிலும், சுவாசச் செயல் நடைபெறுவதால் உயிர் வாழ்கிறது. ஆனால் தேவைக்கேற்ப வாய் வழியாக நீர் மற்றும் உணவு அருந்த முடியாத காரணத்தினால் உயிரிழக்கிறது.
கரப்பான் பூச்சியில் உணர்கொம்பு நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேலுதடு, துருவுத்தாடை நீட்சிகள், கீழுதடு நீட்சிகள் மற்றும் மலப்புழைத் தண்டுகள் ஆகியவை உணர் உறுப்புகளாகச் செயல்படுகின்றன. உணர்கொம்பு நீட்சிகள், துருவுத்தாடை நீட்சிகள் மற்றும் மலப்புழைத் தண்டுகள் ஆகியவற்றில் தொடு உணர்விகள் (Thigmo receptor) உள்ளன. மணங்களை நுகரும் நுகர்ச்சி உணர்விகள் உணர் கொம்பு நீட்சிகளிலும், சுவை உணரும் உணர்விகள் அரைவைத்தாடை நீட்சிகளிலும் கீழுதட்டிலும் அமைந்துள்ளன.
தெரிந்து தெளிவோம்
கணுக்காலிகளின் கண்கள் கூட்டுக்கண்கள் என அழைக்கப்படும். இதில் ஓம்மட்டிடியம் எனப்படும் எண்ணற்ற ஒரே மாதிரியான அமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு ஓம்மட்டிடியமும் தனித்தனி பார்வை உணர்வியாக செயல்படுகின்றன. கூட்டுக்கண்களுக்கும் தனிக்கண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது? ஏன் கரப்பான் பூச்சியின் மொசைக் பார்வை, குறைவான தெளிவுத்திறன் கொண்டதாக உள்ளது?
காலின் முதல் நான்கு கணுக்களில் வெப்ப உணர்விகள் (Thermo receptors) உள்ளன. காற்று மற்றும் நில அதிர்வுகளை, உணரும் கார்டோடோனல் (Chordotonal receptor) உணர்விகள் மலப்புழைத் தண்டுகளில் அமைந்துள்ளன. கரப்பான்பூச்சியின் தலையின் முதுகுப்புற பரப்பில் அமைந்துள்ள ஓர் இணைச் கூட்டுக் கண்கள் ஒளி உணர்வியாக (Photo receptor organ) செயல்படுகின்றன. ஒவ்வொரு கண்ணிலும் சுமார் 2000 எளிய கண்களான 'ஓம்மட்டிடியா' காணப்படுகின்றன. இதன் வழியாகவே கரப்பான்பூச்சிகள் பொருளின் பல பிம்பத்தை உணர்கின்றன. இத்தகைய பார்வைக்கு மொசைக் பார்வை (முழுமையற்ற பகுதிப்பார்வை) என்று பெயர். இப்பார்வையில் உணர்தன்மை அதிகமிருப்பினும் குறைவான தெளிவு திறன் கொண்டதாகவே உள்ளது.
கரப்பான் பூச்சியின் முதன்மை கழிவு நீக்க உறுப்பாக மால்பீஜியன் நுண்குழல்கள் செயலாற்றுகின்றன. உடலிலுள்ள நைட்ரஜன் கழிவுப்பொருட்களை யூரிக் அமில வடிவத்தில் இவை வெளியேற்றுகின்றன. யூரிக் அமிலமாகக் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதனால் கரப்பான்பூச்சிகள் யூரிகோடெலிக் (யூரிக் அமில நீக்கிகள்) உயிரிகளாகும். கூடுதலாக, கொழுப்பு உறுப்புகள், நெஃப்ரோசைட்டுகள், கியூட்டிகிள் மற்றும் யூரிகோஸ் சுரப்பிகள் ஆகியவையும் கழிவு நீக்கத்திற்கு உதவுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
நடுக்குடலுக்கும், பின்குடலுக்கும் இடையே உள்ள நுண்குழல்களை மார்சல்லோ மால்பிஜி என்பவர் முதலில் விளக்கினார். அப்போது அவற்றை வாசாவெரிகோஸ் என்று அழைத்தார். பிற்காலத்தில் மெக்கல் என்பவர் அவற்றை மால்பீஜியன் நுண்குழல்கள் என்று அழைத்தார்.
மால்பீஜியன் நுண்குழல்கள் பொதுவாக மெல்லிய, நீண்ட நூலிழை போன்ற வடிவத்துடன் மஞ்சள் நிறமாகக் காணப்படுகின்றன. இக்குழல்கள் உணவுப்பாதையில் நடுக்குடல் மற்றும் பின்குடல் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளன. எண்ணிக்கையில் 100-லிருந்து 150 வரை உள்ள இந்நுண்குழல்கள் 6-லிருந்து 9- தொகுப்புகளாக உள்ளன. ஒவ்வொரு நுண்குழலும் சுரப்புச் செல்கள் மற்றும் குற்றிழைச் செல்களை (ciliated cells) கொண்டவை. இவற்றால் சேகரிக்கப்படும் கழிவுகள் பின்குடல் வழியாக வெளியேற்றப்படுகின்றன. மால்பீஜியன் நுண்குழல்களில் உள்ள சுரப்புச் செல்கள் நீர், உப்பு, மற்றும் நைட்ரஜன் கழிவுகளை ஹீமோலிம்பிலிருந்து பிரித்தெடுத்து நுண்குழலின் உட்பகுதிக்கு அனுப்புகிறது. நுண்குழலின் செல்கள் நீர் மற்றும் கனிம உப்புக்கழிவுகளை மீண்டும் உறிஞ்சுகின்றன. அதேசமயத்தில் நுண்ணிழைகள் சுருங்குவதனால் நைட்ரஜன் கழிவுகள் சிறுகுடல் பகுதிக்குக் கடத்தப்பட்டு அதிகப்படியான நீர் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள கழிவுப்பொருட்கள் மலக்குடலுக்குள் செல்லும்போது ஏறத்தாழத் திடத்தன்மை பெற்ற யூரிக் அமிலம், மலக்கழிவுகளோடு சேர்த்து வெளியேற்றப்படுகிறது.
கரப்பான்பூச்சி ஒருபால் உயிரியாகும். இதில் ஆண், பெண் உயிரிகள் தனித்தனியாக உள்ளன. இவற்றில் இனப்பெருக்க உறுப்புகள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் ஓர் இணை விந்தகங்கள், ஓர் இணை விந்து நாளங்கள், விந்து உந்து நாளம், காளான் வடிவச்சுரப்பி (Utricular gland), கான்குளோபேட் சுரப்பி (Conglobate / phallic gland) மற்றும் புற ஆண் இனப்பெருக்க உறுப்பு ஆகிய பகுதிகள் உள்ளன. மூன்று கதுப்புகளைக் கொண்ட ஓர் இணை விந்தகங்கள் 4 மற்றும் 6வது வயிற்றுக்கண்டங்களின் பக்கவாட்டில், பக்கத்திற்கு ஒன்றாகக் காணப்படுகின்றன (படம். 4.14). ஒவ்வொரு விந்தகத்திலிருந்தும் உருவாகும் மெல்லிய விந்துநாளம் விந்துபைகள் வழியாக விந்து உந்து நாளத்தில் திறக்கிறது. நீண்ட விந்து உந்துநாளம் உயிரியின் மலப்புழைக்குக்கீழ் உள்ள ஆண் இனப்பெருக்கத் துளையில் திறக்கிறது. காளான் வடிவச்சுரப்பி (யூட்ரிகுலார் சுரப்பி) ஆண் இனப்பெருக்க மண்டலத்துடன் இணைந்த ஒரு பெரிய துணை இனப்பெருக்கச் சுரப்பியாகும். இது விந்து உந்து நாளத்தின் முன் பகுதியில் திறக்கிறது.விந்தணுக்களைச் சேமிக்கும் விந்துபைகள் (seminal vesicles), விந்து உந்து நாளத்திற்கு வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ளது.
விந்தணுக்கள் விந்துபையில் ஸ்பர்மட்டோஃபோர் என்னும் கற்றைகளாகச் சேமிக்கப்படுகின்றன. கான்குளோபேட் சுரப்பியும் (ஃபாலிக் சுரப்பி) இனப்பெருக்கத் துளையின் அருகில் திறக்கின்றன. இதன் பணி இதுவரை அறியப்படவில்லை. புணர்ச்சியில் துணை புரிவதற்காகக் கைட்டினாலான சமச்சீரற்ற வடிவம் கொண்ட ஃபேலோமியர் ஆண் இனப்பெருக்கத் துளை அருகே உள்ளன. ஒரு போலி ஆண்குறி உறுப்பும் காணப்படுகிறது.
ஓர் இணை அண்டகங்கள், கலவிக்கால்வாய் (vagina), இனப்பை (Genital pouch), கொல்லேட்ரியல் சுரப்பி, விந்துகொள்பை (Spermatheca) ஆகியன பெண் கரப்பான் பூச்சியின் இனப்பெருக்க மண்டல உறுப்புகளாகும். ஓர் இணை அண்டகங்கள் 2 லிருந்து 6 வது வயிற்றுக் கண்டங்களின் பக்கவாட்டில் பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளன. ஒவ்வொரு அண்டகமும் 8 அண்டக்குழல்களால் ஆனவை. இதனுள் தொடர் வரிசையில் வளர்ச்சியடையும் முட்டைகள் உள்ளன. ஒவ்வொரு அண்டகத்தின் பக்கத்திலிருந்தும் உருவாகும் அண்டநாளங்கள் உடலின் மையப்பகுதியில் ஒன்றிணைந்து அண்டபொது நாளம் எனப்படும் கலவிநாளத்தை தோற்றுவிக்கிறது. கலவிநாளம் இனப்பையில் திறக்கிறது. கலவிநாளத்தின் செங்குத்துப் பிளவே பெண் இனப்பெருக்கத்துளை எனப்படுகிறது. 6வது வயிற்றுக்கண்டத்தில் உள்ள ஓர் இணை விந்து கொள்பைகள் இனப்பையின் முதுகுப்புறத்திலுள்ள மையத்துளை வழியாகத் திறக்கிறது. கலவியின் போது அண்டங்கள் இனப்பைக்குள் விழுகின்றன. பின்னர் அங்கு விந்துச் செல்களால் கருவுறுகின்றன. நன்கு கிளைத்த ஓர் இணை வெண்ணிறக் கொல்லேட்ரியல் சுரப்பிகள் அண்டகத்தின் பின்பகுதியில் உள்ளது. இச்சுரப்பியே, கருமுட்டைகளைப் பாதுகாக்கும் ஊத்திகா எனும் கருமுட்டைக்கூட்டைச் சுரக்கிறது. படகு வடிவமான இனப்பை 7, 8 மற்றும் 9வது வயிற்றுக்கண்டத் தகடுகளால் உருவாக்கப் பட்டதாகும். இனப்பை இரு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கலவிநாளம் திறக்கும் அறை இனப்பெருக்க அறை என்றும், கருமுட்டைகூடு உருவாகும் அறை, கருமுட்டைகூடு அறை என்றும் அழைக்கப்படுகின்றன. பெண் பூச்சிகளில் 3 இணை கைட்டின் ஓடுகள் ஒன்றிணைந்து கோனோபோஃபைசிஸ் எனும் அமைப்பாகப் பெண் புழையை சூழ்ந்துள்ளது. முட்டையீட்டுவாயில் (Ovipositor) என்னும் இது முட்டைகளை முட்டைக் கூட்டிற்குள் செல்ல வழி செய்கிறது (படம் 4.14).
கரப்பான் பூச்சியின் கருமுட்டைக்கூடுகள் (Ootheca) அடர்சிவப்பிலிருந்து கரும்பழுப்பு நிறமுடையவை. 12மி.மீ நீளமும் 16 முட்டைகளையும் கொண்ட இக்கூடு, ஏதாவதொரு பொருளின் மேல், குறிப்பாக உணவுப்பொருட்கள் அருகில் அதிக ஈரப்பதமிக்க, இடுக்குகள், வெடிப்புகள் அருகில் ஒட்டவைக்கப்படுகிறது. ஒரு கரப்பான்பூச்சி தன் வாழ்நாளான ஒன்று முதல் இரண்டாண்டுகளில் சுமார் 15-லிருந்து 40 கருமுட்டைக் கூடுகளை உற்பத்தி செய்கின்றது.
உங்களுக்குத் தெரியுமா?
டிப்ளோப்டீரா பங்க்டேடா சிற்றினத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சிகள் தன் குஞ்சுகளுக்காக அடர்த்தியான படிக பாலை உற்பத்தி செய்கின்றன. மியான்மர், சீனா, ஃபிஜி, ஹவாய் மற்றும் இந்தியாவில் காணப்படும் இவற்றின் பால், எதிர்காலத்தில் சிறந்த உணவாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
இக்கூடுகளுக்குள்ளேயே சுமார் 5-13 வாரங்களுக்கு கரு வளர்ச்சியடைகிறது. இதன் கருவளர்ச்சி, இறக்கையற்ற படிநிலைகளைக் கொண்டிருப்பதால், கரப்பான் பூச்சி பாராமெட்டாபோலஸ் (Paurametabolus) வகை எனப்படுகிறது. முதிர் உயிரிகளை ஒத்த இறக்கையற்ற வளர்உயிரிகள் (Nymph) வளர் உருமாற்றத்தின் வழியாக முதிர் உயிரியாகின்றன. இவ்வாறு முதிர் உயிரியாக மாறுவதற்கு முன் இறக்கைகளற்ற வளர் உயிரி சுமார் 13 முறை தோலுரித்துக் (Ecdysis) கொள்கிறது.
கரப்பான் பூச்சியின் பெரும்பான்மையான சிற்றினங்கள் பரவலான வகைகள் ஆகும். மொத்தமுள்ள சுமார் 4600 இனங்களில் சுமார் 30 சிற்றினங்கள் மனித வாழிடங்களோடு தொடர்புடையன. சுமார் 4 சிற்றினங்கள் தீங்கு உயிரிகளாக நன்கு அறியப்பட்டுள்ளன. அவை உணவுப்பொருட்களைச் சிதைத்து மாசடையச் செய்கிறது. கரப்பான் பூச்சிகள் பல பாக்டீரியா நோய்களைக் கடத்துகின்றன. அவை இருப்பதே சுகாதாரக் குறைவிற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. பலருக்கு ஆஸ்துமா நோய் வருவதற்கும் இப்பூச்சி காரணமாகிறது.