வாழ்க்கை சுழற்சி
லாம்பிட்டோ மாரிட்டீ இனப் புழுக்களின் வாழ்க்கை சுழற்சி, கருமுட்டையிலிருந்து தொடங்குகின்றது. கருமுட்டைகள் கருமுட்டைக்கூடுகளில் பாதுகாப்பாக இடப்படுகின்றன. கருமுட்டைக்கூடுகளின் அடைகாக்கும் காலமான ஏறத்தாழ 14 முதல் 18 நாட்களுக்குப்பிறகு இளம் புழுக்கள் (Juveniles) வெளிவருகின்றன. 15 நாட்களில் இவ்விளம் புழுக்கள் கிளைடெல்லம் அற்ற புழுக்களாக முதல் படி வளர்ச்சியை அடைகின்றன (படம். 4.7). இரண்டாம் படி வளர்ச்சி 15 முதல் 17 நாட்கள் வரை நடைபெறுகின்றது. இதன் இறுதியிலேயே இவை கிளைடெல்லத்தைப் பெறுகின்றன. இனப்பெருக்கத் திறன் பெற்ற முதிர்ச்சியடைந்த மண் புழுக்கள் கலவிக்குப்பின் பத்து நாட்களில் கருமுட்டைக்கூடுகளை மண்ணில் இடுகின்றன. இவ்வாறாக, லாம்பிட்டோ மாரிட்டீ இன மண் புழுவின் வாழ்க்கை சுழற்சி 60 நாட்களில் முழுமை பெறுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
இழப்பு மீட்டல்: மண்புழுவின் அனைத்து முக்கிய உறுப்புகளும் முதல் 20 கண்டங்களில் அமைந்துள்ளன. 20வது கண்டத்திற்குப் பின் மண்புழு வெட்டப்படுமேயானால், முன்பகுதி, பின்பகுதியை புதிதாக உருவாக்கிக் கொள்ளும். வெட்டப்பட்ட பின்பகுதி சில நாட்களில் சிதைந்து விடும்.