Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | ஆங்கிலேய-மராத்திய போர்கள்

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - ஆங்கிலேய-மராத்திய போர்கள் | 8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory

   Posted On :  07.06.2023 09:17 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

ஆங்கிலேய-மராத்திய போர்கள்

மூன்றாம் பானிபட் போர் தோல்வியால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க மராத்தியர்கள் முயற்சித்தனர். அதன் விளைவாக பத்தாண்டுகளுக்கு பிறகு தங்கள் மீதான டெல்லி முகலாயர்களின் கட்டுப்பாட்டை மீட்டனர்.

ஆங்கிலேய-மராத்திய போர்கள்

மூன்றாம் பானிபட் போர் தோல்வியால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க மராத்தியர்கள் முயற்சித்தனர். அதன் விளைவாக பத்தாண்டுகளுக்கு பிறகு தங்கள் மீதான டெல்லி முகலாயர்களின் கட்டுப்பாட்டை மீட்டனர். எனினும் பேஷ்வா கட்டுப்பாட்டில் இருந்த பழைய மராத்தாஸ் கூட்டமைப்பு கிட்டத்தட்ட ஐந்து சுதந்திரமான மாநிலங்களுக்கு வழிவகுத்தது. அவர்கள், புனாவில் பேஷ்வா, பரோடாவில் கெய்க்வாட், நாக்பூரில் போன்ஸ்லே, இந்தூரில் ஹோல்கர், மற்றும் குவாலியரில் சிந்தியா போன்றோர்களாவர். பேஷ்வா அரசாங்கம் உள்நாட்டு போட்டியாளர்களால் பலவீனப்படுத்தப்பட்டது, மற்ற நான்கு தலைவர்கள் ஒருவரையொருவர் அடிக்கடி விரோதமாக எதிர்த்தனர். இருந்தபோதிலும், மராத்தியர்கள் பலம் வாய்ந்த சக்தியாகவே இருந்தனர். மராட்டியர்களுக்கிடையிலிருந்த, இம்மோதல்களை பிரிட்டிஷார் அவர்களது விரிவாக்க கொள்கைக்கு சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டனர்.



முதல் ஆங்கிலேய-மராத்தியப்போர் (1775-1782)

மராத்தியர்களின் பேஷ்வா, நாராயண ராவின் இறப்புக்குப் பிறகு அடுத்த பேஷ்வா யார் என்ற உரிமை பிரச்சனையில் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் தலையிட வேண்டியிருந்தது. நாராயண ராவ் இறந்த பிறகு, ரகுநாத ராவ் (ராகோபா) பேஷ்வா ஆனார். ஆனால் அவரது அதிகாரத்திற்கு எதிராக பூனாவிலிருந்த ஒரு குழு நானா பட்னாவிஸ் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தது. அக்குழு நாராயண ராவின் மறைவுக்குப்பின் அவரது மனைவியான கங்கா பாய்க்கு பிறந்த குழந்தையை (இரண்டாம் மாதவ ராவ்) பேஷ்வாவாக அங்கீகரித்தது. மேலும் அவருடைய பெயரில் ஆட்சிக் குழுவொன்றும் அமைத்தது. அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்த ரகுநாத ராவ் பிரிட்டிஷ் உதவியை அணுகினார். இதன்படி, 1775ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் ரகுநாத ராவுக்கும் இடையே சூரத் ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் சூரத் உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள வில்லை. இருப்பினும் தலைமை ஆளுநரான வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை . பூனாவின் பாதுகாப்பரசுடன் ஒரு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் பூனாவுக்கு கர்னல் அப்டனை அனுப்பியது. அதன்படி, அப்டன் 1776ஆம் ஆண்டு பூனாவின் பாதுகாப்பரசுடன் புரந்தர் ஒப்பந்தத்தை செய்துகொண்டார். ஆயினும், பம்பாயில் ஆங்கில அரசாங்கத்தின் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.

1781ஆம் ஆண்டில், வாரன் ஹேஸ்டிங்ஸ் கேப்டன் பாப்ஹாமின் தலைமையின்கீழ் பிரிட்டிஷ் துருப்புக்களை அனுப்பினார். அவர் மராத்தியத் தலைவரான மகாதாஜி சிந்தியாவை பல போர்களில் தோற்கடித்து குவாலியரைக் கைப்பற்றினார். 1782ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே சால்பை ஒப்பந்தம் கையெழுத்தானது.

விளைவுகள்

•போரின் முடிவில் இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரகுநாத ராவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. •பிரிட்டிஷ் அரசுக்கு சால்செட் பகுதி வழங்கப்பட்டது.

•இந்திய அரசியலில் சால்பை ஒப்பந்தம் பிரிட்டிஷாருக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது.

•பிரிட்டிஷாருக்கும் மராத்தியர்களுக்கும் இடையே அடுத்த இருபது ஆண்டுகளுக்கு சமாதான உறவு நீடித்தது.

மராத்தியர்களின் உள்நாட்டு விவகாரம்

முதல் மராத்தியப் போரின் முடிவில் மராத்தியர்களின் உள்விவகார பிரச்சனை மேலும் மோசமடைந்தது. நானா பட்னாவிஸின் அதிகார வளர்ச்சியைக் கண்டு மகாதாஜி சிந்தியா பொறாமை கொண்டார். இதன் காரணமாக ஆங்கிலேயரின் ஆதரவை அவர் பெற முற்பட்டார். இளம் பேஷ்வாவான இரண்டாம் மாதவ ராவ் மராத்தியர்களிடையே நல்லுறவை மேம்படுத்த முயன்றார், ஆனால் அவரால் மராத்தியத் தலைவர்களின் ஆதிக்கப் போட்டியை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், மகாதாஜி சிந்தியா 1794இல் இறந்தபின் அவருடைய மருமகன் தெளலத் ராவ் சிந்தியா பதவியேற்றார். சிந்தியாவின் மரணம் பூனாவில் நானா பட்னாவிஸின் அதிகாரத்தை இழக்கச் செய்தது. மேலும் ஆங்கிலேயர்கள் தங்களது செல்வாக்கை வடஇந்தியாவில் விரிவுபடுத்த வலிகோலியது. பேஷ்வா இரண்டாம் மாதவ ராவ் 1795ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட பிறகு, ரகுநாதராவின் வலிமையற்ற மகனான இரண்டாம் பாஜிராவ் பேஷ்வா ஆனார். இத்தருணத்தில் 1800இல் நானா பாட்னாவிஸ் மரணம் பிரிட்டிஷாருக்கு மேலும் நன்மை அளிப்பதாக இருந்தது.

ஜஸ்வந்த் ராவ் ஹோல்கர் மற்றும் தெளலத் ராவ் சிந்தியா ஆகியோர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்த சூழ்நிலையில், பேஷ்வா ஹோல்கருக்கு எதிராக சிந்தியாவை ஆதரிப்பதாகவும், பேஷ்வாவும் சிந்தியாவும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதாகவும் ஒப்புக்கொண்டனர். இதன் விளைவாக 1802இல் ஹோல்கர், பேஷ்வாவுக்கு எதிராக படையெடுத்து, சிந்தியா மற்றும் பேஷ்வாவின் கூட்டுப் படைகளை தோற்கடித்தார். முடிவில் பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த வெல்லெஸ்லி பிரபுவை அணுகினார். பேஷ்வாவை வரவேற்ற வெல்லெஸ்லி பிரபு, அவரோடு 1802இல் பஸ்ஸின் உடன்படிக்கையை செய்துகொண்டார். இவ்வுடன்படிக்கையின்படி துணைப்படை திட்டத்தை பேஷ்வா ஏற்றுக்கொண்டார். மேலும் ஆங்கிலேயர்கள் ஆர்தர் வெல்லஸ்லியின் உத்தரவின் கீழ் பூனாவை நோக்கி படையெடுத்துச் சென்று மராத்தியத் தலைவர் ஹோல்கரின் படைகளை தாக்கி அழித்தனர்.


இரண்டாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் (1803-1805)

பேஷ்வா துணைப்படைத் திட்டதை ஏற்றுக்கொண்ட பிறகு, தௌலத் ராவ் சிந்தியா மற்றும் ரகோஜி போன்ஸ்லே ஆகியோர் மராத்திய சுதந்திரத்தை காப்பாற்ற முயற்சித்தனர். ஆங்கிலேயரின் இராணுவம் ஆர்தர் வெல்லஸ்லியின் தலைமையில், அஸ்ஸே மற்றும் அரகான் பகுதியில் சிந்தியா மற்றும் போன்ஸ்லே ஆகியோரின் கூட்டுப் படைகளை தோற்கடித்தது. இவ்வெற்றிக்குப்பின் சிந்தியாவுடன் சுர்ஜீஅர்ஜுகான் ஒப்பந்தத்தையும், போன்ஸ்லேவுடன் தியோகான் ஒப்பந்தத்தையும் 1803 இல் ஆங்கிலேயர்கள் செய்துகொண்டனர். ஆனால் போரில் ஈடுபடாத யஸ்வந்த் ராவ் ஹோல்கர் (ஜஸ்வந்த் ராவ் ஹோல்கர் எனவும் அழைக்கப்படுகிறார்) இன்னும் ஆங்கிலேயர்களுக்கு அடிபணியவில்லை. பின்னர் 1804இல் ஜெய்ப்பூர் பிரதேசத்தை ஹோல்கர் சூறையாடும் போது ஆங்கிலேயர்கள் அவருக்கு எதிராக போர் தொடுத்தனர். ஆங்கிலேயருக்கு எதிராக யஷ்வந்த ராவ் ஹோல்கர் இந்திய ஆட்சியாளர்களை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது. இறுதியில் மராத்தியர்கள் தோற்கடிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களுக்கு கப்பம் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் மராத்திய தலைவர்கள் ஒருவருக்கொருவர் பிரிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர்.

விளைவுகள்

•இப்போருக்கு பின் மராத்தியர்களின் வலிமை காலப்போக்கில் பலவீனமடைந்தது.

•இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலையாய சக்தியாக மாறத்தொடங்கியது.


மூன்றாவது ஆங்கிலேய-மராத்தியப் போர் (1817-1818)

தங்களது மேலாண்மையை மீண்டும் பெற முயன்ற மராத்தியர்களோடு ஆங்கிலேயர்கள் மூன்றாவதாக ஒரு போரில் ஈடுபட்டனர். இப்போர், இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராத்திய சாம்ராஜ்யத்திற்கு இடையே இறுதி மற்றும் தீர்க்கமான மோதலாக அமைந்தது. இப்போர், ஆங்கில படைவீரர்கள் மராத்திய பகுதிகளை ஆக்கிரமிக்கும் போது தொடங்கியது. இந்த ஆக்கிரமிப்பில் தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்ஸ் பிரபுவுக்கு, ஜெனரல் தாமஸ் ஹிஸ்லாப் தலைமையின் கீழ் ஒரு படைப்பிரிவு உதவியது. பேஷ்வா இரண்டாம் பாஜி ராவின் படைகளை தொடர்ந்து, நாக்பூரின் இரண்டாம் மூதோஜி போன்ஸ்லேவும், இந்தூரின் மூன்றாம் மல்ஹர் ராவ்ஹோல்கரும் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். ஆனால் குவாலியரின் தெளலத் ராவ் சிந்தியா மட்டும் நடுநிலை வகித்தார். காட்கி, கோர்கான் ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களில் பேஷ்வா தோற்கடிக்கப்பட்டார், பேஷ்வாவின் படைகள் பல இடங்களில் அவர் பிடிபடுவதைத் தடுத்து நிறுத்தின. இதனைத் தொடர்ந்து சித்தாபால்டி போரில் போன்ஸ்லேவும், மகித்பூர் போரில் ஹோல்கரும் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

விளைவுகள்

•இப்போரின் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது மற்றும் பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.

•பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் பெரும்பாலான பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.

•தோற்கடிக்கப்பட்ட போன்ஸ்லே மற்றும் ஹோல்கரின், மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.

•மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய்வழங்கப்பட்டது.

Tags : From Trade to Territory | Chapter 2 | History | 8th Social Science வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory : Anglo-Maratha Wars From Trade to Territory | Chapter 2 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை : ஆங்கிலேய-மராத்திய போர்கள் - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை