வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிறுவப்படுதல் | 8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory
ஆங்கில கிழக்கிந்திய
கம்பெனியின் ஆட்சி நிறுவப்படுதல்
பிளாசிப் போர் (1757)
வங்காள
நவாப் அலிவர்திகான் 1756இல் இறந்த பின்பு அவரது பேரன் சிராஜ்-உத்- தெளலா வங்காளத்தின்
அரியணை ஏறினார். சிராஜ்-உத்-தௌலாவின் பலவீனத்தையும், புகழற்ற நிலையையும் தனக்கு சாதகமாக்கிய
ஆங்கிலேயர்கள் அவரது அதிகாரத்தை கைப்பற்ற முனைந்தனர். ஆங்கிலேயரின்
இருட்டறை துயரச் சம்பவம் (1756)
சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறையில் ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர். மறுநாள் காலை அறையை திறந்தபோது அவர்களுள் 123 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர். இது வரலாற்றில் இருட்டறை துயரச் சம்பவம் என்றழைக்கப்படுகிறது.
இவ்வெண்ணத்தை
புரிந்துகொண்ட சிராஜ் - உத்-தௌலா அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினார். கல்கத்தாவிலுள்ள
அவர்களது குடியேற்ற பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி, வங்காளத்தின் காசிம் பஜாரில் அமைந்துள்ள
வணிக
மையத்தை கைப்பற்றினார். 1756 ஜுன் 20 அன்று ஆங்கிலேயரின் வில்லியம் கோட்டை நவாப்பிடம்
சரணடைந்தது. ஆனால் ஆங்கிலப் படைத்தளபதி இராபர்ட் கிளைவ் கல்கத்தாவை மீட்டார்.
இறுதியாக,
1757 பிப்ரவரி 9ஆம் நாள் நடைபெற்ற அலிநகர் உடன்படிக்கையின் படி சிராஜ்-உத்-தௌலா, இராபர்ட்
கிளைவின் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றார். பின்னர் மார்ச் 1757இல் பிரெஞ்சுக் குடியேற்றமான
சந்திர நாகூரை ஆங்கிலேயர் கைப்பற்றினர். பிளாசிப் போரானது சிராஜ்-உத்-தௌலா, பிரெஞ்சுக்
கூட்டணிக்கும் மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1757 ஜூன் 23ஆம் நாள்
நடைபெற்றது. இப்போரில் சிராஜ்-உத்தௌலாவின் படைகளை இராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கில
கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் தோற்கடித்தன. இப்போரின் முடிவில் ஏற்பட்ட குழப்பத்தால்
கம்பெனி வங்காள கருவூலத்தின் மூலம் கிடைத்த பெரும் செல்வத்தைக் கொண்டு இராணுவத்தை பலப்படுத்தியது.
பிளாசிப் போர் வெற்றி ஆங்கிலேயரது அரசியல் அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கிவைத்தது மட்டுமல்லாமல்
அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு அவர்களது ஆதிக்கத்தை நீடிக்கவும் செய்தது.
பக்சார் போர் (1764)
1757ஆம்
ஆண்டு பிளாசிப் போருக்குப் பின் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளில் ஆங்கிலேயர்கள்
தடையில்லா வணிக உரிமை பெற்றனர். வங்காளத்தின் '24 பர்கானா எனும் பகுதியை ஆங்கிலேயர்
பெற்றனர். பிளாசிப் போருக்கு பின் வங்காளத்தின் அரியணை ஏறிய மீர்ஜாபர் (1757-1760)
ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால் அவரை கட்டாயப்படுத்தி பதவியிலிருந்து
நீக்கி விட்டு அவரது மருமகன் மீர்காசிம் என்பவரை வங்காள நவாப் ஆக்கினர்.
மீர்காசிம்
ஆங்கிலேயருக்கு புர்த்வான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய பகுதிகளை வழங்கினார். அவர்
வங்காளத்தின் தலைநகரை மூர்ஷிதாபாத்திலிருந்து மாங்கீர்க்கு மாற்றினார். தஸ்தக் என்றழைக்கப்படும்
சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபமடைந்து
கலகத்தில் ஈடுபட்டார். ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட அவர் அயோத்திக்கு தப்பி ஓடி அடைக்கலம்
புகுந்து அங்கு சுஜா-உத்-தெளலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு
எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்.