Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு | 8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory

   Posted On :  07.06.2023 09:20 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு

ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு நான்கு முதன்மை நிறுவனங்களாக இயங்கியது. அவை குடிமைப்பணிகள், இராணுவம், காவல், மற்றும் நீதித்துறை ஆகும்.

இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு

ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு நான்கு முதன்மை நிறுவனங்களாக இயங்கியது. அவை குடிமைப்பணிகள், இராணுவம், காவல், மற்றும் நீதித்துறை ஆகும்.


குடிமைப் பணிகள்

'சிவில் சர்வீஸ் (குடிமைப் பணிகள்) என்ற வார்த்தை முதன் முதலில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் பயன்படுத்தப்பட்டது. இது குடிமைப் பணி ஊழியர்களை, இராணுவ அதிகாரிகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டியது. சட்டங்களை முறையாக செயல்படுத்துதல், வரி வசூலித்தல் ஆகியன குடிமைப் பணியின்ப்பணியாக இருந்தது. ஆரம்பத்தில் வியாபார ரீதியாக இருந்த குடிமைப் பணிகள் பின்னர் பொதுப்பணியாக மாறியது. முதலில் பொதுப்பணியின் நியமனங்கள் அனைத்தும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர் அவையின் தனியுரிமையாக இருந்தது. ஆனால், நியமனம் செய்யப்பட்ட பொது பணியாளர்கள் லஞ்சம், ஊழல், சட்ட விரோத வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அதனால் தலைமை ஆளுநராக காரன் வாலிசு 1786இல் பதவியேற்ற போது தனியார் வணிகத்திற்கு எதிராக சட்டங்களை இயற்றினார். கம்பெனி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி, உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்களாக அவர்களை மாற்றினார்.

1798இல் இந்திய கவர்னர் ஜெனரலாக பதவியேற்றுக் கொண்ட வெல்லெஸ்லி பிரபு, அரசு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இவர் 1800இல் கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் மொழி, இலக்கியம், அறிவியல் ஆகிய துறையில் பயிற்சி வழங்குவதற்காக ஒரு கல்லூரியை நிறுவினார். அதேவேளையில் கம்பெனியின் இயக்குநர்கள் இதனை ஏற்க மறுத்து, 1806இல் இங்கிலாந்தில் உள்ள ஹெய்லிபரி என்ற இடத்தில் கிழக்கிந்திய கல்லூரியை நிறுவினர்.

போட்டி தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன் முதலில் 1833ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் அறிமுகப்படுத்தியது. ஆனால் கம்பெனியின் இயக்குநர் அவையால் நியமனம் செய்யப்படாதவர்கள் போட்டித் தேர்வினை எழுத தகுதியற்றவர்கள் எனப்பட்டது. எனவே இந்த முறையானது, நியமனம் மற்றும் போட்டித் தேர்வு முறை என்றழைக்கப்பட்டது. திறந்த முறையிலான போட்டித் தேர்வு முறையில் கம்பெனி ஊழியர்களை தேர்ந்தெடுப்பது 1853ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறை 1858ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டது. போட்டித் தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது 23 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1858ஆம் ஆண்டு ஹெய்லி பரியில் இருந்த கிழக்கிந்திய கல்லூரி அகற்றப்பட்டது. மேலும் குடிமை பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு குடிமைப்பணியாளர் தேர்வாணையம் வசமானது. 1860ஆம் ஆண்டு ஒரு ஒழுங்கு முறை ஆணையின் மூலம் தேர்வெழுத அதிகபட்ச வயது 22 ஆக குறைக்கப்பட்டது. மேலும் 1866இல் 21 ஆகவும் 1876இல் 19 ஆக குறைக்கப்பட்டது.

1861ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்திய ஆட்சிப் பணி சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் சில உயர் நிர்வாக பதவிகள் மற்றும் நீதித்துறை பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய ஒதுக்கீடு செய்திருந்தது. பின்னர் இப்பதவிகள் இந்திய ஆட்சிப் பணிகளாக மாற்றப்பட்டன. வயது வரம்பு குறைப்பு மற்றும் இலண்டனுக்கு சென்று தேர்வு எழுதுதல் ஆகிய காரணங்களால் வசதி படைத்த இந்தியர்கள் மட்டுமே ஐ.சி.எஸ் தேர்வை எழுதக் கூடிய சூழ்நிலை நிலவியது. 1869இல் சுரேந்திரநாத் பானர்ஜி, ரமேஷ் சந்திர தத், மற்றும் பிகாரி லால் குப்தா ஆகிய மூன்று இந்தியர்கள் ஐசிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றனர்.

உங்களுக்குத் தெரியுமா

1863இல் ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் சத்தியேந்திரநாத் தாகூர். இவர் கவிஞர் இரபீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் ஆவார்.

பின்னர், ஐசிஎஸ் தேர்விற்கான வயது வரம்பை உயர்த்துவும் தேர்வினை இந்தியாவிலேயே நடத்தவும் கம்பெனியிடம் இந்தியர்கள் கோரிக்கை வைத்தனர். இதன்விளைவாக 1892இல் குறைந்தபட்ச வயதினை 21ல் இருந்து 23ஆக உயர்த்தப்பட்டது. மேலும் 1912இல் அரசு பணியைப்பற்றி ஆராய்வதற்காக இஸ்லிங்டன் பிரபு என்பவரின் தலைமையில் ஒரு அரச ஆணையம் (ராயல் கமிஷன்) நிறுவப்பட்டது. இதன் உறுப்பினர்களாக இந்தியர்களான கோபால கிருஷ்ண கோகலே, சர் அப்துர் ரஹிம் மற்றும் நான்கு ஆங்கிலேயர்களும் இடம் பெற்றிருந்தனர். 1917இல் இவ்வாணையம் தனது பரிந்துரையை வெளியிட்டது. அப்பரிந்துரைகள் இந்தியர்களின் கோரிக்கையை ஓரளவிற்கு பூர்த்தி செய்வதாக இருந்தது மட்டுமல்லாமல் குடிமை பணி தேர்வை இந்திய மயமாக்கியது.

1918இல் இந்திய ஆட்சிப் பணியில் 33 சதவீதம் இந்தியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும், படிப்படியாக இவற்றை அதிகரிக்கவும் மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு ஆகியோர் பரிந்துரைத்தனர். 1923இல் ஏற்படுத்தப்பட்ட மற்றொரு (ராயல் கமிஷன்) அரச ஆணையத்திற்கு லீ பிரபு தலைவராக நியமிக்கப்பட்டார். இது இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய காடுகள் பணி ஆகிய அனைத்து நியமனங்களும் இந்தியாவுக்கான அரசுச் செயலரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றை உடனடியாக நிறுவுவதற்கும் லீ தலைமையிலான குழு பரிந்துரை செய்தது.

1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மத்தியில் கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றும், மாகாணங்களில் - மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றும் உருவாக வழிவகை செய்தது. அதேபோல் ஒரு சில மாகாணங்கள் ஒன்றிணைந்து மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கவும் வழிவகை செய்தது. ஆங்கிலேயருக்கு உதவி செய்யவே இந்த குடிமைப்பணி அமைப்பு உருவாக்கப்பட்டாலும், சுதந்திர இந்தியாவின் இந்திய ஆட்சிப் பணிஅமைப்பு உருவாவதற்கு இந்த முறை அடித்தளமாக அமைந்தது.


இராணுவம்

இது இந்தியாவின் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் இரண்டாவது முக்கிய தூணாக விளங்கியது. கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்த்தது, அதற்கு சிப்பாய் இராணுவம் என்று பெயர். இந்த இராணுவ வீரர்களுக்கு, ஐரோப்பிய அதிகாரிகளின் உத்தரவை போர்க்களத்தில் நிறைவேற்ற, ஐரோப்பிய இராணுவத்திற்கு இணையாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆரம்ப காலத்தில் வங்காளம், பம்பாய், மதராஸ் ஆகிய மூன்று மாகாணங்களிலும் தனித்தனியாக மூன்று படைப்பிரிவை ஏற்படுத்தியிருந்தனர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியினை நிறுவுவதிலும், விரிவுபடுத்துவதிலும் இராணுவத்தின் பங்களிப்பு சிறப்பானதாகும் ஆங்கில சிப்பாய்களை விட இந்திய சிப்பாய்களுக்கு குறைந்த சம்பளமும் , தினப்படியும் வழங்கப்பட்டது. உதாரணமாக 1856ஆம் ஆண்டு மூன்று இந்திய படைவீரர்கள் மாத சம்பளமாக மொத்தம் ரூபாய் 300 மட்டுமே பெற்றனர். 1857ஆம் ஆண்டு கம்பெனி இராணுவம் 86 சதவீதம் இந்தியர்களை கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இராணுவ உயர் பதவி அனைத்தும் ஆங்கிலேயர் வசமே இருந்தன. இந்தியர்களுக்கான உயர் பதவி சுபேதார் மட்டுமே ஆகும்.

ஆங்கில இராணுவத்தின் வலிமை

•பிளாசிப் போர் 1757: ஐரோப்பிய காலாட்படை - 1950, ஐரோப்பிய பீரங்கி படை - 100, ஆங்கிலேய மாலுமிகள் - 50, இந்திய சிப்பாய்கள் - 2100, வங்காளத்தில் இருந்த ஆங்கில இராணுவம் - 6000.

•1857இல் இந்திய இராணுவத்தில் 3,11,400 வீரர்களில் 2,65,900 வீரர்கள் இந்தியர்களாக இருந்தனர். உயர் பதவி அலுவலர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள் ஆவர்.


காவல் துறை

1765இல் வங்காளத்தில் திவானி (வரிவசூல்) உரிமையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்ற போது சர்க்கார் (கிராம மாவட்டங்கள்) என்ற ஆட்சிப் பிரிவுக்கு பொறுப்பு வகித்த பௌஜ்தார் வசம் முகலாய காவல்துறை சென்றது. அப்போது, நகரங்களை நிர்வகிக்கும் காவல் அலுவலர்களாக கொத்வால் இருந்தார். அதேவேளையில் கிராமங்கள் கிராம காவலாளிகளால் பாதுகாக்கப்பட்டது அவர்களை ஜமீன்தார்கள் சம்பளம் வழங்கி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியவர் காரன்வாலிஸ் பிரபு ஆவார். ஜமீன்தார்களை காவல் பணிகளிலிருந்து விடுவித்த காரன்வாலிஸ் 1791இல் முறையான காவல் துறையை உருவாக்கினார். அவர் தரோகா என்பவரை தலைவராகக் கொண்ட சரகங்கள் அல்லது தானாக்கள் என்ற காவல் பகுதிகளை ஏற்படுத்தினார். அவர்கள் கிராமங்களிலும் காவல் பணி செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது. கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் 'சௌகிதார்கள் என்றழைக்கப்பட்டனர். பெரு நகரங்களில் பழைய முறையான கொத்வால் காவல் பணியே தொடர்ந்தது. மேலும் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு தரோகா நியமிக்கப்பட்டார். இந்த தரோகா முறை 1802இல் மதராஸ் மாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்குவதற்கு முன்னர், அனைத்து தானாக்களும் மாவட்ட நீதிபதியின் பொது மேற்பார்வையில் இருந்தது. அதன் பின் 1808இல் ஒவ்வொரு தானாவிற்கும் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார். பின்னர் காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல் துறையில் முக்கிய பணியானது ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சதி செய்வதை தடுத்தாலும், குற்றங்களை கையாள்வதும் ஆகும்.


நீதித்துறை அமைப்பு

1772இல் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு வரிவசூல் செய்வதையும், நீதி வழங்கும் அதிகாரத்தையும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக் கொண்டது. அதன் விளைவாக சிவில் நீதிமன்றம் என்றழைக்கப்பட்ட திவானி அதாலத் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் என்றழைக்கப்பட்ட பௌஜ்தாரி அதாலத் ஆகியன ஏற்படுத்தப்பட்டன.

1773ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி கல்கத்தாவில் ஒரு உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்நீதிமன்றத்திற்கு ஒரு முதன்மை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளையும் பிரிட்டிஷ் மன்னர் நியமித்தார். இந்நீதி மன்றம் சிவில், குற்றவியல், திருச்சபை, மற்றும் பிரத்தியோக வழக்குகளை விசாரித்தது. கல்கத்தாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாதிரியில் 1801இல் மதராஸிலும், 1823இல் பம்பாயிலும் உச்ச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. 1832இல் வில்லியம் பெண்டிங் பிரபு ஜூரி (நீதி அதிகார முறை) முறையை வங்காளத்தில் கொண்டு வந்தார். சட்டங்களை தொகுக்க இந்திய சட்ட ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. 1861ஆம் ஆண்டு இந்திய உயர்நீதி மன்ற சட்டத்தின் படி கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் பழைய உச்சநீதிமன்றங்களுக்கு பதிலாக மூன்று உயர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

உங்களுக்குத் தெரியுமா?

வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.

மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி சர் திருவாரூர் முத்துசாமி ஆவார்.

Tags : From Trade to Territory | Chapter 2 | History | 8th Social Science வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory : The British Administrative Organisation in India From Trade to Territory | Chapter 2 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை : இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 2 : வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை