வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - கர்நாடகப் போர்கள் | 8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory
கர்நாடகப்
போர்கள்
18ஆம்
நூற்றாண்டில் மூன்று கர்நாடகப் போர்கள் பல்வேறு இந்திய ஆட்சியாளர்களிடையே நடைபெற்றது.
இதில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியும் எதிர் எதிர்
அணியில் இருந்தது. பாரம்பரியமாக ,ஐரோப்பாவில் பிரிட்டனும், பிரான்சும் போட்டி நாடுகள்
ஆகும். அந்நிலை இந்தியாவிலும் வணிகம் செய்வதிலும், ஆட்சி செய்வதிலும் தொடர்ந்தது. இதன்
விளைவாக தொடர் இராணுவ போட்டி தென்னிந்தியாவின் கர்நாடக பகுதியில் நடைபெற்றது. அவை கர்நாடகப்
போர்கள் எனப்படுகின்றன. இவை 1746 முதல் 1763 வரை நடைபெற்றது. இப்போரின் விளைவாக ஆங்கில
கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் அதிகாரம் வலுபெற்றது.
முதல் கர்நாடகப் போர் (1746 -1748)
ஐரோப்பாவில்
ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரில் பிரிட்டனும், பிரான்சும் எதிர் எதிர் அணிகளில்
இருந்தன. இந்த பகைமை இந்தியாவிலும் எதிரொலித்தது.
அடையாறு போர் (1746)
சென்னையின்
அடையாறு நதிக்கரையில் அமைந்துள்ள சாந்தோம் என்ற இடத்தில் கர்நாடக நவாப் அன்வாருதீனுக்கும்
பிரெஞ்சுப் படைக்கும் இடையே இப்போர் நடைபெற்றது. அன்வாருதீன் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.
கேப்டன் பாரடைஸ்தலைமையிலான மிகச் சிறிய பிரெஞ்சுப் படை மாபூஸ்கான் தலைமையிலான மிக வலிமை
வாய்ந்த நவாப் படையினை தோற்கடித்தது. நன்கு பயிற்சி பெற்ற ஐரோப்பிய படை இந்திய படையை
வெற்றி பெற்று தங்கள் மேலாண்மையை நிலைநாட்டிய முதல் நிகழ்வு இதுவே ஆகும்.
அய்-லா-சப்பேல் உடன்படிக்கை (1748)
ஐரோப்பாவில்
நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் முடிவில் ஏற்பட்ட அய்-லா - சப்பேல் உடன்படிக்கையின்
மூலம் முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்தது. இதன் படி மதராஸ் (சென்னை ) ஆங்கிலேயரிடம்
திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மாறாக வட அமெரிக்காவின் சில பகுதிகளை பிரான்சு பெற்றது.
இரண்டாம் கர்நாடகப் போர் (1749 - 1754)
கர்நாடகம்
மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனையே இப்போருக்கு முக்கிய
காரணமாக அமைந்தது. கர்நாடக நவாப் பதவிக்கு அன்வாருதீனும், சந்தா சாகிப்பும் உரிமை கோரினர்.
அதே போல் ஹைதராபாத் நிசாம் பதவிக்கு நாசிர் ஜங்கும் முசாபர் ஜங்-ம் உரிமை கோரினர்.
இதனால் தக்காண பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாகிப்பிற்கும், முசாபர் ஜங்-க்கும்
உதவி செய்தனர். ஆங்கிலேயர்கள் அன்வாருதீனுக்கும், நாசிர்ஜங்-கும் உதவினர். இப்போர்
மூலம் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும்
எண்ணினர்.
ஆம்பூர் போர் (1749)
இதன்
விளைவாக, ஆகஸ்ட் 3, 1749இல் ஆம்பூரில் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே,
சந்தா சாகிப், முசாபர் ஜங் ஆகியோரின் கூட்டுப் படைகளால் கர்நாடக நவாப் அன்வாருதீன்
தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார். அன்வாருதீனின் மகன் முகமது அலி திருச்சிராப்பள்ளிக்கு
தப்பி ஓடினார். சந்தாசாகிப்பை பிரெஞ்சுக்காரர்கள் கர்நாடக நவாப் ஆக்கினர். அதற்கு ஈடாக
பாண்டிச்சேரியை சுற்றியுள்ள 80 கிராமங்களை வெகுமதியாக பிரெஞ்சுக்காரர்களுக்கு அவர்
வழங்கினார்.
தக்காணத்திலும்
பிரெஞ்சுக்காரர்களால் நாசிர் ஜங் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார். முசாபர் ஜங் ஐதராபாத்தின்
நிசாம் ஆனார். புதிய நிசாம் பிரெஞ்சுக்காரர்களுக்கு போதிய வெகுமதி வழங்கினார். அவர்
கிருஷ்ணா நதியின் தென் பகுதிகள் அனைத்திற்கும் டியூப்ளே -யை ஆளுநராக நியமித்தார்.
1751இல் தன் மக்களால் முசாபர் ஜங் படுகொலை செய்யப்பட்டார். நாசிர் ஜங்-ன் சகோதரர் சலபத்
ஜங் பிரெஞ்சுப் படைத் தளபதி புஸ்ஸியின் உதவியுடன் ஹைதராபாத் நிசாம் ஆனார். அவர் குண்டூர்
மாவட்டத்தை தவிர வட சர்க்கார் முழுவதும் பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கினார். இதன் மூலம்
டியூப்ளே -ன் அதிகாரம் உச்ச நிலையை அடைந்தது.
ஆற்காட்டுப் போர் (1751)
இத்தருணத்தில் டியூப்ளே, முகமது அலி தஞ்சம்புகுந்ததிருச்சி கோட்டையை முற்றுகையிட ஒரு படையை அனுப்பினார். இம்முயற்சியில் சந்தா சாகிப்பும் (கர்நாடக நவாப்) தன்னை பிரெஞ்சுப் படைகளோடு இணைத்துக் கொண்டார். இச்சமயத்தில் ஆற்காட்டை தாக்க இராபர்ட் கிளைவ் கம்பெனியிடம் அனுமதி கோரினார். ஆங்கிலேய கவர்னர் சாண்டர்ஸ், இராபர்ட் கிளைவ்-ன் திட்டத்திற்கு அனுமதி வழங்கினார். 200 ஆங்கில படையினர், 300 இந்திய படை வீரர்களுடன் கிளைவ் ஆற்காட்டை தாக்கி கைப்பற்றினார்.
ஆங்கில படைத்தளபதி ஸ்டிரங்கர் லாரன்ஸ் உதவியுடன் கிளைவ் ஆரணி, காவேரிபாக்கம் ஆகிய இடங்களில்
பிரெஞ்சுப் படைகளை தோற்கடித்தார். அதேசமயத்தில், சந்தாசாகிப் திருச்சியில் கொலை செய்யப்பட்டார்.
அன்வாருதீனின் மகன் முகமது அலி ஆங்கிலேயரின் உதவியுடன் ஆற்காட்டு நவாப் ஆனார். இத்தோல்வியால்
பிரான்சு நாட்டு அரசாங்கம் டியூப்ளே வை பாரிசுக்கு திரும்ப அழைத்தது.
பாண்டிச்சேரி உடன்படிக்கை (1755)
டியூப்ளேவைத்
தொடர்ந்து பிரெஞ்சு ஆளுநராக பதவியேற்ற கோதேயூ ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையினை
செய்து கொண்டார். இதன் படி இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்
கூடாது எனவும், போருக்கு முன்னர் இருந்த பகுதிகள் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்
எனவும் கூறப்பட்டது. மேலும் புதிய கோட்டைகளை கட்டக் கூடாது எனவும் கூறப்பட்டது. இவ்வுடன்படிக்கை
மூலம் ஆங்கிலேயர் மேலும் வலிமை பெற்றனர்.
இரண்டாம்
கர்நாடகப் போர் ஒரு முடிவற்ற நிலையை உணர்த்தியது. முகமது அலியை கர்நாடக நவாப் ஆக நியமித்ததின்
மூலம் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்கள் மேலாண்மையை நிலைநாட்டினர். ஹைதராபாத்தில் பிரெஞ்சுக்காரர்கள்
வலிமையுடன் காணப்பட்டாலும் இப்போர் அவர்கள் தக்காணப் பகுதியில் வலிமை குன்றியவர்கள்
என்பதை நிரூபித்தது.
மூன்றாம் கர்நாடகப் போர் (1756 - 1763)
ஐரோப்பாவில்
வெடித்த ஏழாண்டுப் போர் இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.
இச்சமயத்தில் ஆங்கில படைத் தளபதி இராபர்ட் கிளைவ் பிளாசிப் போரின் மூலம் வங்காளத்தில்
ஆங்கில ஆதிக்கத்தை நிறுவியதுடன் மூன்றாம் கர்நாடகப் போருக்கு தேவையான நிதியையும் வழங்கினார்.
இப்போரில்
பிரெஞ்சு படைகளை வழி நடத்த கவுண்-டி- லாலியை பிரெஞ்சு அரசாங்கம் நியமித்தது. அவர் கடலூரில்
உள்ள செயிண்ட் டேவிட் கோட்டையை எளிதாக கைப்பற்றினார். கர்நாடகப் பகுதியிலிருந்து ஆங்கிலேயரை
விரட்ட தன்னுடன் இணையுமாறு புஸ்ஸிக்கு, கவுண்-டி- லாலி உத்தரவிட்டார். புஸ்ஸி ஐதராபத்திலிருந்து
புறப்பட்ட தருணத்தை பயன்படுத்தி வட சர்க்கார் (ஆந்திர பிரதேசம், ஒடிசா) பகுதிகளை கைப்பற்ற
கர்னல் போர்டை வங்கத்திலிருந்து இராபர் கிளைவ் அனுப்பினார்.
வந்தவாசிப் போர் (1760)
1760
ஜனவரி 22ல் நடைப்பெற்ற இப்போரில் ஜெனரல் அயர் கூட் தலைமையிலான ஆங்கிலேயப் படை லாலி
தலைமையிலான பிரெஞ்சுப் படையை முற்றிலும் தோற்கடித்தது. பின்னர் ஓர் ஆண்டுகள் இந்தியாவிலிருந்த
அனைத்துக் குடியேற்றங்களையும் பிரெஞ்சுக்காரர்கள் இழந்தனர். கவுண்டிலாலி பிரான்சு நாட்டுக்கு
திரும்ப அழைக்கப்பட்டு சிறையிலிடப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டார்.
பாரிஸ் உடன்படிக்கை (1763)
ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போர் பாரிசு உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது. அதன்படி பாண்டிச்சேரி உட்பட இந்தியாவிலிருந்த பிரெஞ்சு குடியேற்றங்கள் அனைத்தும் பிரெஞ்சுக்காரர்கள் வசம் திரும்ப கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கள் பகுதிகளை பலப்படுத்தவும், படைகளை பெருக்கவும் தடைவிதிக்கப்பட்டது. இதன் மூலம் பிரெஞ்சு ஆதிக்கம் இந்தியாவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.