வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மைசூரும், ஆங்கிலேய ஆட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பும் | 8th Social Science : History : Chapter 2 : From Trade to Territory
மைசூரும், ஆங்கிலேய ஆட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பும்
ஹைதர் அலியின் தலைமையில் மைசூர் சமஸ்தானம் தென்னிந்திய வரலாற்றில் மிகப்பெரிய எழுச்சியை பெற்றது. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி விரிவாக்கத்திற்கு எதிராக ஹைதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் முக்கிய பங்காற்றினர். இருவரும் வீரதீரத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்தனர். 1761இல் ஹைதர் அலிமைசூர் சமஸ்தானத்தின் உண்மையான ஆட்சியாளரானார். மேலும் அவர் ஆங்கிலேயருக்கு வலிமைமிக்க எதிரியாகவும் திகழ்ந்தார்.
முதல் ஆங்கிலேய-மைசூர் போர் (1767-1769)
காரணங்கள்
•ஹைதர் அலியின் வளர்ச்சி, அவர் பிரெஞ்சுக்காரர்களிடம் கொண்டிருந்த நட்புறவு ஆகியன ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.
•ஹைதர் அலிக்கு எதிராக மராத்தியர்கள், ஹைதராபாத் நிசாம், ஆங்கிலேயர்கள் இணைந்து முக்கூட்டணியை ஏற்படுத்தினர்.
போரின் போக்கு
தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலப் படை உதவியுடன் ஹைதராபாத் நிசாம் 1767இல் மைசூர் மீது படையெடுத்தார். ஆங்கிலப் படையை ஹைதர் அலி தோற்கடித்து மங்களூரை கைப்பற்றினார். 1769 மார்ச் மாதம் ஹைதர் அலி மதராஸ் மீது படையெடுத்தார். இதனால் ஆங்கிலேயர்கள் 1769 ஏப்ரல் 4இல் அவரிடம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
மதராஸ் உடன்படிக்கை (1769)
போரின் முடிவில் மதராஸ் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது அதன்படி போருக்கு முன்னர் இருந்த பகுதிகளை இருதரப்பினரும் திரும்பப்பெற்றனர். மற்ற நாடு தாக்கும் பட்சத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்வது என உறுதி செய்துகொள்ளப்பட்டது.
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் (1780-1784)
காரணங்கள்
•1769 இல் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றத் தவறினர்.
•1771இல் மராத்தியர்கள் ஹைதர் அலி மீது படையெடுத்த போது மதராஸ் உடன்படிக்கையின் படி ஆங்கிலேயர்கள் ஹைதர் அலிக்கு உதவவில்லை.
•ஹைதர் அலியின் ஆட்சிக்குட்பட்ட பிரெஞ்சு குடியேற்ற பகுதியான மாஹியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இந்நிகழ்வு ஆங்கிலேயருக்கு எதிராக ஹைதர் அலி, ஹைதராபாத் நிசாம், மராத்தியர்களின் முக்கூட்டணியை உருவாக்கியது.
போரின் போக்கு
1781இல் ஆங்கிலேய படைத் தளபதி சர் அயர்கூட் ஹைதர் அலியை பரங்கிப்பேட்டை (போர்டோ நோவா) என்ற இடத்தில் தோற்கடித்தார். மேலும் மைசூர் படைகள் சோளிங்கர் என்ற பகுதியிலும் தோல்வியை தழுவியது. போரின் போது புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஹைதர் அலி 1782இல் இறந்தார். அவரின் இறப்புக்குப் பின் அவரது மகன் திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக போரினைத் தொடர்ந்தார். 1783இல் திப்பு ஆங்கிலேய படைத்தளபதியான பிரிகேடியர் மேத்யூஸ் மற்றும் அவரது படை வீரர்களையும் கைது செய்தார். இது பின்னாளில் திப்புவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
மங்களூர் உடன்படிக்கை (1784)
1784 மார்ச் 7இல் ஆங்கிலேயருக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே இவ்வுடன்படிக்கை கையெழுத்தானது. இருபிரிவினரும் போரில் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப அளிப்பதும், போர்க் கைதிகளை ஒப்படைப்பதும் என உடன்பாடு ஏற்பட்டது.
இதன் மூலம் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ்புதிதாக உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆதிக்கத்தை வலிமை மிக்க எதிரிகளான மராத்தியர்கள் மற்றும் ஹைதர் அலியிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டார். இச்சமயத்தில் அமெரிக்காவில் தங்கள் குடியேற்றங்களை பிரிட்டன் இழந்த போதிலும், வாரன் ஹேஸ்டிங்ஸ் எதையும் இந்தியாவில் இழக்கவில்லை. மாறாக இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிப் பகுதிகளை ஒருங்கிணைத்தார்.
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் (1790-1792)
காரணங்கள்
•மங்களூர் உடன்படிக்கைகுப்பின் ஆங்கிலேயருக்கு எதிராக வெளிநாடுகளுடன் கூட்டணி அமைக்கும் பொருட்டு பிரான்சு, மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு திப்பு சுல்தான் தன்னுடைய தூதுவர்களை அனுப்பினார்.
•ஆங்கிலேய கூட்டணியில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தை திப்பு சுல்தான் 1789இல் தாக்கினார்.
•இச்சமயத்தில் திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர்கள், ஹைதராபாத் நிசாம் மற்றும் மராத்தியர்களுடன் இணைந்து மூவர் கூட்டணியை உருவாக்கினர்.
போரின் போக்கு
இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இப்போரில் திப்பு சுல்தான் தனியாக எதிர்த்து போராடினார். இப்போர் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. தளபதி மேடோஸ் தலைமையிலான தாக்குதல் தோல்வியில் முடிந்தது. ஆகையால் 1790இல் தலைமை ஆளுநர் காரன்வாலிஸ் தானாகவே படையை வழிநடத்தினார். ஸ்ரீரங்கப்பட்டினத்தை தாக்குவதற்கு தடையாக இருந்த அனைத்து மலைக் கோட்டைகளையும் அவர் கைப்பற்றினார். நம்பிக்கை இழந்த திப்பு சுல்தான் ஆங்கிலேயரிடம் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். அதனை ஏற்றுக்கொண்ட காரன்வாலிஸ் 1792இல் ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கையை திப்பு சுல்தானுடன் செய்து கொண்டார்.
ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை (1792)
•இவ்வுடன்படிக்கையின்படி, திப்பு தன்னுடைய ஆட்சிப்பகுதியில் பாதி பகுதியை ஆங்கிலேயருக்கு ஒப்படைத்தார்.
•போர் இழப்பீட்டு தொகையாக 3.6 கோடி செலுத்த வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு மகன்களை ஆங்கிலேயரிடம் பிணைக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டும் என திப்பு சுல்தான் கட்டாயப்படுத்தப்பட்டார்.
•இதன் மூலம் ஆங்கிலேயர்கள் மலபார், குடகு மலை, திண்டுக்கல் மற்றும் பாரமஹால் (கோயம்புத்தூர், சேலம்) ஆகிய பகுதிகளைப் பெற்றனர்.
நான்காம் ஆங்கிலேய - மைசூர் போர் (1799)
திப்பு சுல்தான் 1792இல் ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கையின் மூலம் காரன்வாலிஸ் பிரபுவால் அவமரியாதை செய்ததை மறக்கவில்லை .
காரணங்கள்
•திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக இம்முறையும் வெளிநாட்டு கூட்டணிக்காக அரேபியா, துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கு தன்னுடைய தூதர்களை அனுப்பினார்.
•அச்சமயத்தில் எகிப்து மீது படையெடுத்த நெப்போலியனுடன் திப்பு தொடர்பு வைத்திருந்தார்.
•பிரெஞ்சு அலுவலர்கள் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு வருகை புரிந்து அவர்கள் ஜாக்கோபியன் கழகத்தை நிறுவினார்கள், மேலும் அங்கு சுதந்திர மரம் ஒன்றும் நடப்பட்டது.
போரின் போக்கு
1799இல் வெல்லெஸ்லி பிரபு திப்புவின் மீது போர் தொடுத்தார். இது குறுகிய காலத்தில் நடந்த, கடுமையான போராக இருந்தது. திட்டமிட்டபடி மைசூரின் மேற்கே பம்பாய் இராணுவம் தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் படையெடுத்தது. இச்சமயத்தில் மெட்ராஸ் இராணுவம் தலைமை ஆளுநரின் சகோதரர் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையில் திப்பு சுல்தானை தாக்கியது. திப்பு தன்னுடைய தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு பின் வாங்கினார். 1799 மே 4ஆம் நாள் ஸ்ரீரங்கப்பட்டிணம் கைப்பற்றப்பட்டது. திப்பு சுல்தான் வீரதீரமாக போரிட்டாலும் இறுதியில் கொல்லப்பட்டார். இவ்வாறாக நான்காம் மைசூர் போர் முடிவுக்கு வந்தது. மேலும் ஒட்டுமொத்த மைசூரும் ஆங்கிலேயர் முன்பாக சரணடைந்தது.
போருக்கு பின் மைசூர்
•கனரா, வயநாடு, கோயமுத்தூர், தாராபுரம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர் இணைத்து கொண்டனர்.
•மீண்டும் இந்து உயர் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார் மைசூர் அரியணை ஏறினார்.
•திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர்.