Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | தரவுதள கருத்துருக்கள்
   Posted On :  17.08.2022 07:41 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள்

தரவுதள கருத்துருக்கள்

தரவுதளம் என்பது ஒரு கணினி அமைப்பிலிருந்து மின்னணு முறையில் பெறப்பட்டு சேமிக்கப்படுகின்ற தரவுகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுப்பு ஆகும்.

அலகு IV

பாடம் 11

தரவுதள கருத்துருக்கள்

 

கற்றலின் நோக்கங்கள்

இந்த பாடப்பகுதியை கற்றபின் மாணவர்கள் பின்வருவனவற்றை அறிந்து கொள்வார்கள்

• தரவுதளம் மற்றும் உறவுநிலை தரவுதளம் பற்றிய கருத்துருக்கள்

• தரவுதளத்தின் பல்வேறு கூறுகள்

• தரவுதள மாதிரிகளின் வகைகள்

• உறவுநிலையின் வகைகள்

• உறவுநிலை இயற்கணிதத்தின் (relational algebera) கருத்துருக்கள்


அறிமுகம்

தரவுதளம் என்பது ஒரு கணினி அமைப்பிலிருந்து மின்னணு முறையில் பெறப்பட்டு சேமிக்கப்படுகின்ற தரவுகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுப்பு ஆகும். “தரவுதளம்” என்பது DBMS, தரவுதள அமைப்பு அல்லது தரவுதளத்துடன் தொடர்புடைய பயன்பாடு போன்றவற்றை குறிப்பிடவும் பயன்படுகிறது. இவைகளுக்கிடையே உள்ள நெருங்கிய உறவுநிலையின் காரணமாக, தரவுதளம் என்ற சொல் தரவுதளம் மற்றும் தரவுதளத்தைக் கையாளுவதற்குப் பயன்படும். DBMS ஆகிய இரண்டையும் குறிப்பிட்ட பயன்படுகிறது. ஒரு பள்ளியில் வகுப்பறை பதிவேடு என்பது ஒரு தரவுதளமாகும். இதில், பெயர்கள் அகரவரிசையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. மக்கள் நிகழ்வுகளை பதிவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து தரவுதளங்கள் பரவி வருகின்றன. இங்கு நாம் மின்னணு சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்துவோம்.


1. தரவு

தரவு என்பது கணிப்பொறியில் சேமிக்கப்பட்ட அடிப்படைத் துணுக்குகளாகும். தரவு, எந்தவொரு எழுத்து, உரை, வார்த்தை அல்லது எண்ணாகவோ இருக்க முடியும்.

எடுத்துக்காட்டு : 600006, DPI வளாகம், SCERT, சென்னை, கல்லூரி சாலை


2. தகவல்

தகவல் என்பது வடிவமைக்கப்பட்ட தரவாகும். இது தரவுகளை சில குறிப்பிடத்தக்க வழியில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

எடுத்துக்காட்டு

SCERT

கல்லூரி சாலை

DPI வளாகம்

சென்னை 600006

மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் தரவுகள், சீரற்ற வார்த்தைகள் மற்றும் எண்களின் தொகுதியாக தோற்றமளிக்கிறது. எனினும் தரவானது, செயல்படுத்தப்பட்டு, திட்டமிடப்பட்டு மற்றும் வடிவமைக்கப்படும் பொழுது, அது SCERT நிறுவனத்தின் தொடர்பு முகவரியைப் பற்றிய ஒரு அர்த்தமுள்ள தகவல்களை தருகிறது.


3. தரவுதளம்

தரவுதளம் என்பது தரவுகளை எளிமையாக அணுக , நிர்வகிக்க, புதுப்பிக்கக் கூடிய, தொடர்புடைய தரவுகளின் களஞ்சியமாகும். தரவுதளம், தரவுகளை சேமிக்கும் நோக்கத்தோடு மென்பொருள் அல்லது வன்பொருளை தழுவியுள்ளது.


4. தரவுதள மேலாண்மை அமைப்பு (DBMS-DataBase Management System)

DBMS என்பது தரவுதளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு மென்பொருளாகும். இது தரவுகளை எளிமையாக சேமிக்க, செயல்படுத்த மற்றும் பகுப்பாய்வு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. DBMS, உருவாக்குதல் போன்ற பல தரவுதளத்தை வேலைகளை செய்வதற்கான இடைமுகம் (அ) கருவியை வழங்குகிறது. DBMS தரவுதளங்களுக்கு பாதுகாப்பையும் வழங்குகிறது. இது, பல பயனர்கள் உள்ள நிலையில் தரவு நிலைத்தன்மையையும் பராமரிக்கிறது.

DBMS மென்பொருளுக்கு எடுத்துக்காட்டுகள் : Foxpro, dbase.

1. தரவுதள மேலாண்மை அமைப்பின் பண்பியல்புகள்

1. அட்டவணைகளில் சேமிக்கப்பட்ட தரவுகள்

தரவுதளத்தில், தரவு எப்பொழுதும் நேரடியாக சேமிக்கிப்படுவதில்லை. தரவு தளத்தின் உள்ளே உருவாக்கப்பட்டுள்ள அட்டவணையில் தரவுகள் சேமிக்கப்பட்டிருக்கும். அட்டவணைகளுக்கு இடையே உறவுகளை ஏற்படுத்த DBMS அனுமதிக்கிறது. இது தரவுகளை மேலும் அர்த்தமுள்ளதாகவும், தொடர்புடையதாகவும் அமைக்கிறது.

2. மிகைமை (தேவைக்கு அதிகமானவற்றை) குறைத்தல்)

நவீன உலகில் வன்வட்டுகளின் விலை மிகவும் குறைவு. ஆனால் முந்தைய காலங்களில் வன்வட்டுகள் மிகவும் விலை உயர்ந்தவை, ஆகையால் தரவுதளத்தில் உள்ள தேவையற்ற தரவுகள் பெரிய சிக்கலாக இருந்தது. ஆனால் DBMS தரவுகளை பிரித்தாளும் இயல்பு நிலையைப் பின்பற்றி தேவையற்ற தரவுகள் மீண்டும் இடம்பெறுவதைக் குறைக்கிறது.

3. தரவுகளின் நிலைத்தன்மை

தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படும் மற்றும் பராமரிக்கப்படும் நேரடி தரவின் (Live data) நிலைத்தன்மையை பராமரிப்பது ஒரு சவாலாக மாறும். ஆனால் DBMS தானாகவே அதை கையாளுகிறது.

4. பல பயனர்கள் மற்றும் ஒத்த அணுகுதலை ஆதரித்தல்

DBMS பல பயனர்களை ஒரே நேரத்தில் ஒரு தரவின் மீது வேலை (தரவுகளைப் புதுப்பித்தல், செருகுதல், நீக்குதல்) செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும் தரவின் நிலைத்தன்மைப் பராமரிப்பை கையாளுகிறது.

5. வினவல் மொழி

DBMS ஒரு எளியவினவல் மொழியை பயனருக்கு வழங்குகிறது. இதைப்பயன்படுத்தி தரவுத்தளத்திலிருந்து தரவுகளை எளிமையாக பெறவும், சேர்க்கவும், நீக்கவும், புதுப்பிக்கவும் முடியும்.

6. பாதுகாப்பு

DBMS, தரவின் பாதுகாப்பை கவனித்துக் கொள்கிறது. அங்கீகாரமற்ற அணுகுதலில் இருந்து தரவுகளுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. வழக்கமான DBMSல் , பல்வேறு அணுகலுக்கான அனுமதியுடன் பயனர் கணக்குகளை நாம் உருவாக்கமுடியும். இதனைப் பயன்படுத்தி பயனர் அணுகுதலை கட்டுப்படுத்தி நம்முடைய தரவுகளை எளிமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.

7. DBMS பரிவர்தனைகளை ஆதரித்தல்

இது நிகழ் உலக பயன்பாடுகளில் தரவு ஒருமைப்பாட்டை கையாள மற்றும் நிர்வகிக்க நம்மை அனுமதிக்கிறது. இங்கு பல்புரியாக்கம் (mutithreading) விரிவாக பயன்படுகிறது.

2. DBMS-ன் நிறைகள்

• பயன்பாட்டு நிரல்களைப் பிரித்தல்

• தரவுப்பிரதிகளை (Duplication) அல்லது தரவு மிகையைக் குறைத்தல்

• வினவல் மொழியைப் பயன்படுத்தி தரவை எளிமையாக திரும்பப் பெறுதல்

• தரவை உருவாக்கும் நேரம் மற்றும் பராமரித்தலைக் குறைத்தல்

3. DBMS-ன் கூறுகள்

தரவுத்தள மேலாண்மை அமைப்பு (DBMS) பின்வரும் ஐந்து கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. வன்பொருள்

2. மென்பொருள்

3. தரவு

4. வழிமுறைகள்/செயல்முறைகள்

5. தரவுத்தள அணுகல் மொழிகள்


1. வன்பொருள்: கணினி, வன்வட்டு, தரவுக்கான உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் மற்றும் தரவைச் சேமிக்கப் பயன்டும் வேறு பாகங்கள்

2. மென்பொருள்: அனைத்தையும் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான நிரலின் கூறு ஆகும். DBMS மென்பொருளானது தரவுத்தள அணுகல் மொழிகளைப் புரிந்து கொள்ள மற்றும் இயக்கத்திற்கான தரவுத்தள கட்டளைகளை நிரல் பெயர்க்க தகுதி வாய்ந்தது.

3. தரவு: இது DBMS ஐ வடிவமைப்பதற்கான வளம் ஆகும். DBMS தரவுகளை சேமிக்கவும், பயன்படுத்தவும் உருவாக்கப்படுகிறது.

4. வழிமுறைகள் / செயல்முறைகள் : இது தரவுத்தள மேலாண்மை அமைப்பை பயன்படுத்துவதற்கான பொதுவான கட்டளைகள் ஆகும். அதாவது, DBMS ஐ நிறுவுதல், தரவுத்தளங்களின் பிரதி எடுத்தலை (Backups) நிர்வகித்தல், அறிக்கை தயாரித்தல் போன்றவை ஆகும்.

5.தரவுத்தள அணுகல் மொழிகள்: இவை தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட தரவுகளை அணுகுதல், சேர்த்தல், புதுப்பித்தல் மற்றும் நீக்குதல் போன்ற கட்டளைகளை எழுதுவதற்கு பயன்படும் மொழிகள் ஆகும். 


12th Computer Science : Chapter 11 : Database concepts and MySql : Database Concepts : Database Concepts in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள் : தரவுதள கருத்துருக்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள்