Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம்
   Posted On :  06.09.2023 09:33 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம்

கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் இங்கிலாந்தில் ஒரு பெரிய நிலப்பிரபு ஆவார். ஆங்கில முறையை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் நிலப்பிரபுக்களை உருவாக்க அவர் திட்டமிட்டார்.

ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம்

 

வேளாண்மைச் சூழல்

கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் இங்கிலாந்தில் ஒரு பெரிய நிலப்பிரபு ஆவார். ஆங்கில முறையை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் நிலப்பிரபுக்களை உருவாக்க அவர் திட்டமிட்டார். முகலாயர் ஆட்சிக் காலத்திலேயே நிலவரியை வசூல் செய்து அரசுக்குச் செலுத்திவந்த இடைத்தரகர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்த காரன்வாலிஸ் அவர்களை நிலப்பிரபுக்களைப்போல் நடத்தினார். இதன் விளைவாக இந்தியாவில் முதன்முறையாக ஜமீன்தார்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் எனும் வர்க்கத்தார் உருவாக்கப்பட்டனர். நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய இவர்கள் தங்கள் சொத்துக்களை மற்றவர்களுக்கு விற்கவும், வாரிசாக நிலங்களைப் பெறவும் உரிமை பெற்றனர். மறுபுறம் விவசாயிகள் வெறும் குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர். கம்பெனி அரசு ஜமீன்தார்களுடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொண்டு குத்தகைதாரர்களுடன் தங்கள் விருப்பம் போல் நடந்துகொள்ள ஜமீன்தார்களுக்கு முழு சுதந்திரம் அளித்தது. வங்காளம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜமீன்தார்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்வு நிலையான நிலவரித்திட்டம் (1793) என அழைக்கப்பட்டது.

இரயத்துவாரி முறை என்பது தென்னிந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வேறுபட்ட நிலவருவாய் வரி முறையாகும். இம்முறையின்படி விவசாயி நிலத்தின் உரிமையாளர் ஆவார். அவரே வரி செலுத்துவார். இடையீட்டாளர் அல்லது நிலவரி வசூலிப்பவர் இடையீடு இல்லாமல் அரசே விவசாயியுடன் நேரடித் தொடர்பில் இருக்கும். நிலவரியை ஒரு விவசாயி முறையாகச் செலுத்தும்வரை நிலம் அவருக்குச் சொந்தமானதாக இருக்கும். நிலவரி செலுத்தத் தவறினால் அவர் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும் ஏனைய உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்துகொள்ளலாம். நிலத்தில் தனிச்சொத்துரிமை எனும் கோட்பாட்டை இரயத்துவாரிமுறை அறிமுகம் செய்தது. தனிநபருக்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டன. தனது நிலங்களை விற்கவும், அடகு வைக்கவும், குத்தகைக்கு விடவும், நிலத்தின் மீதான தனது உரிமையை வேறொருவருக்கு வழங்கவும் விவசாயி உரிமை பெற்றிருந்தார்.

 

நிலவரி வருவாயும் விவசாயிகள் வறுமைக்கு ஆளாக்கப்படுதலும்

ஆங்கிலேயரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்த நிலவரி கட்டாயமான முறைகளில் வசூல் செய்யப்பட்டது. பஞ்சக்காலங்களில் கூட நிலவரி செலுத்துவதிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை . நிலப் பிரபுக்களுக்கு குத்தகைத் தொகை வழங்கவும், அரசுக்கு நிலவரியைச் செலுத்தவும், நிலம் உட்பட்ட தங்களது சொத்துக்களை விவசாயிகள் அடமானம் வைக்கும் அல்லது விற்றுவிடும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர். அரசாங்கம் கடன் வசதிகள் செய்து தராததால், விவசாயிகள் கடன்பெற வட்டிக்கடைக்காரர்களையே சார்ந்திருந்தனர். வட்டிக்குக் கடன் வழங்குவதைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட கடன் வழங்கும் முறையைப் பின்பற்றினர். கடன் வழங்குவோர் மகஜன், சௌக்கார், போரா போன்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். தமிழ்மொழி பேசப்பட்ட பகுதிகளில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் கடன் வழங்குவதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர்.

காலனியரசு 'வேளாண்மையை வணிகமயமாக்கும் கொள்கையைப் பின்பற்றியது. வணிகப் பயிர்களான பருத்தி, சணல், வேர்க்கடலை, எண்ணெய் வித்துக்கள், கரும்பு, புகையிலை ஆகியன சந்தை நிலவரங்களுக்கு ஏற்றவாறு உணவு தானியங்களைக் காட்டிலும் இலாபகரமான விலையைப் பெற்றுத்தந்தன. இதனால் விவசாயிகள் தங்கள் கடனை அடைக்கவும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தவும், சொந்த நுகர்வுக்குத் தேவையான உணவுப் பயிர்களைக் காட்டிலும் சந்தைக்குத் தேவையான பயிர்களை மட்டுமே உற்பத்தி செய்யத் தொடங்கினர். இந்திய விவசாயி தன்னுடைய வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்யப் பன்னாட்டுச் சந்தையின் விலை நிலவரங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகியது. சந்தைச் செயல்பாடு பற்றிய அறியாமையால் பன்னாட்டுச் சந்தையோடு இணைக்கப்பட்ட உள்நாட்டுச் சந்தைகளில் வேளாண் பொருள்களுக்கான தேவை வீழ்ச்சியுற்றபோது விவசாயிகள் துயரங்களுக்கு உள்ளாயினர்.

கர்னல் பென்னிகுயிக்: பென்னிகுயிக் ஓர் இராணுவப் பொறியாளரும், குடிமைப்பணியாளரும், சென்னை மாகாணச் சட்டமன்ற மேலவை உறுப்பினரும் ஆவார். மேற்கு நோக்கி ஓடும் பெரியார் ஆற்றின் நீரை ஓர் அணையைக் கட்டி கிழக்கு நோக்கித் திருப்பினால் வைகை ஆற்றைச் சார்ந்திருக்கும் இலட்சக்கணக்கான புன்செய் நிலங்களைப் பாசன வசதி கொண்டவையாக மாற்ற முடியும் என அவர் முடிவு செய்தார். பென்னிகுயிக்கும் ஏனைய ஆங்கிலேயப் பொறியாளர்களும் இயற்கையின் சீற்றத்தையும் வனவிலங்குகள், விஷ உயிரினங்கள் ஆகியவற்றின் ஆபத்துக்களையும் எதிர்கொண்டு அணையின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபோது இடைவிடாத மழையால் இடையூறுகள் ஏற்பட்டன. ஆங்கிலேய அரசிடமிருந்து போதுமான அளவுக்கு நிதியைப் பெறமுடியாத நிலையில் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்பச் சொத்துக்களை விற்று, அப்பணத்தைக் கொண்டு அணையைக் கட்டி முடித்தார். அணைகட்டும் பணிகள் 1895இல் முடிவுற்றன. முல்லைப் பெரியார் அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை , இராமநாதபுரம் மாவட்ட வேளாண் நிலங்களுக்குத் தொடர்ந்து பாசன வசதி அளித்து வருகிறது.


 

நீர்ப்பாசனம்

ஆங்கிலேயர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல்பாதிக் காலப்பகுதியில் நீர்ப்பாசனத்தைப் புறக்கணித்தனர். 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தொடங்கி குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் பஞ்சங்களால் இலட்சக்கணக்கான மக்கள் பலியான பின்னர் சில முக்கியமான பாசனக் கால்வாய்கள் வெட்டப்பட்டன. இதன் பின்னரும் பாசனக் கால்வாய்கள் வெட்டப்படுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மிகக் குறைவாகவே இருந்தது. மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஆர்த்தர் காட்டன், பென்னிகுயிக் போன்ற ஆங்கிலேய அதிகாரிகளும் பொறியாளர்களும் மேற்கொண்ட முன்முயற்சியால் பாதுகாக்கப்பட்ட நீர்ப்பாசன கால்வாய்கள் சில இடங்களில் சாத்தியமாயின. எங்கெல்லாம் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவோ அங்கெல்லாம் ஆங்கிலேயர் அதிகமான தீர்வை வசூலித்தனர். ஏற்கெனவே கொடூரமான நிலவரி வசூலின் கீழ் இருந்த விவசாயிகள் மேன்மேலும் அவதியுற நேர்ந்தது.

 

பஞ்சங்கள்

காலனியரசின் சுதந்திர வணிகக் கொள்கையும் கடுமையான நிலவரி வசூல் முறையும் பஞ்சங்கள் தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன. 1866-1867இல் ஏற்பட்ட ஒடிசா பஞ்சம் அப்பகுதியின் வரலாற்றில் நடைபெற்ற கொடூரமான நிகழ்வாகும். இப்பஞ்சத்தில் அப்பகுதி வாழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்தனர். 1876-1878 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரும் பஞ்சம் (தமிழில் தாது வருடப் பஞ்சம் என அழைக்கப்பட்டது) தென்னிந்தியாவைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களையும் கைவினைஞர்களையும் இங்கிலாந்தின் ஏனைய குடியேற்றங்களுக்குக் குடிபெயர வைத்தது. அங்கு அவர்கள் பெருந்தோட்டங்களில் ஒப்பந்தக் கூலிகளாய் வேலை செய்தனர். இந்தியாவில் இப்பஞ்சம் ஒரு கோடியே மூன்று இலட்சம் மக்களின் உயிர்களைப் பலி கொண்டது.

    

சென்னை மாகாணத்தில் 1876 - 1878ஆம் ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு முன்னதாக வறட்சி நிலவியது. காலனியரசு உணவு தானிய வாணிகத்தில் பின்பற்றிய தலையிடாக் கொள்கை நிலைமையை மேலும் மோசமாக்கியது. எடுத்துக்காட்டாக சென்னை மாகாணத்தில் இப்பஞ்சத்தால் மிக மோசமான பாதிப்புக்குள்ளான கஞ்சம், விசாகப்பட்டினம் ஆகிய இரு மாவட்டங்களிலிருந்து இப்பஞ்சக்காலத்திலும் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்வது தொடர்ந்து நடைபெற்றது. பஞ்சத்தைத் தொடர்ந்து வழக்கம் போல் பிளேக் (இறந்துபோன எலிகளால் பரவும் கொள்ளைநோய்), நீர்க் கோப்புடன் கூடிய கடுமையான காய்ச்சல் போன்ற பல தொற்றுநோய்கள் பரவி ஏற்கெனவே பட்டினியால் பலவீனமடைந்த மக்களைத் தாக்கிக் கொன்றன. இப்பஞ்சத்தைப் பற்றிய நினைவுகள் இன்றளவும் நாட்டுப்புறப் பாடல்களிலும் நீண்ட கதைப்பாடல்களிலும் நின்று நிலவுகின்றன.

 

ஒப்பந்தக் கூலி முறை

ஒப்பந்தக் கூலி முறையானது பெற்ற கடனுக்காக உழைப்பை நல்கும் ஒரு ஒப்பந்த முறையாகும். இதன் மூலம் 35 இலட்சம் இந்தியர்கள் பல ஆங்கிலேயக் குடியேற்றங்களுக்குப் பெரும் பண்ணைகளில் (பெரிதும் கரும்புத் தோட்டங்களில்) வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இம்முறை 1843இல் இந்தியாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது தொடங்கப்பட்டு, 1920 வரை நீடித்தது. இதனால் பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் புலம் பெயர்ந்து இந்தியப் பெருங்கடல் (ரீயூனியன், மொரீசியஸ்) முதலாக பசிபிக் பெருங்கடல் (பிஜித் தீவுகள்) வரை பரவி, இந்தோ கரீபிய, இந்தோ -ஆப்பிரிக்க மக்கள் தொகை பெருகுவதற்குக் காரணமாயினர்.

ஒப்பந்தக் கூலிமுறை -என்பது தண்டனைக்குரிய ஓர் ஒப்பந்த முறையாகும். இவ்வொப்பந்தத்தின்படி ஒப்பந்தக் கூலியான ஒருவர் வேலை செய்ய மறுத்தாலோ, வேலைக்கு வராமல் போனாலோ, அவருடைய முதலாளியின் ஆணைகளுக்குப் பணிய மறுத்தாலோ பணியிடத்தில் காணப்படாவிட்டாலோ அவர் ஊதியம் மறுக்கப்படுதல் அல்லது சிறைத் தண்டனைகளுக்கு உள்ளாவார்.

1842-1870 ஆகிய ஆண்டுகளுக்கிடையே மொத்தம் 5,25,482 இந்தியர்கள் இங்கிலாந்து, பிரான்சு ஆகியவற்றுக்குச் சொந்தமான காலனிகளில் குடியேறினர். அவர்களில் 3,51,401 பேர் மொரீசியசுக்கும், 76,691 பேர் டிமெராராவுக்கும், 42,519 பேர் டிரினிடாடுவுக்கும், 15,169 பேர் ஜமைக்காவுக்கும், 6,448 பேர் நேட்டாலுக்கும், 15,005 பேர் ரீயூனியனுக்கும் சென்றனர். ஏனைய பிரெஞ்சு காலனிகளுக்கு 16,341 பேர் சென்றனர். ஏற்கெனவே மொரீசியஸ் சென்ற 30,000 நபர்களையும் இலங்கை , மலேசியா ஆகிய இடங்களுக்கு சட்டத்திற்குப் புறம்பாகப் பிரெஞ்சுக் காலனிகளுக்கும் அனுப்பப்பட்டவர்களையும் மேற்சொன்ன புள்ளிவிவரக் கணக்கில் சேர்க்கவில்லை. இவ்வாறாக 1870களில் ஒப்பந்தக் கூலிமுறை, இந்தியத் தொழிலாளர்களைக் கடல் கடந்த காலனிகளுக்கு அனுப்புவது, சட்டரீதியாக ஐரோப்பியக் காலனிகளிலுள்ள பெரும் பண்ணைகளுக்கு அடிமை உழைப்பை வழங்கியது.


பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சங்கள்: 1770ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சம் மிகப் பெருமளவில் ஒரு கோடி மக்களின் அல்லது ஏறத்தாழ வங்காள மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரின் உயிரைக் குடித்தது. இவ்வாறுதான் ஆங்கிலேயரது ஆட்சி இந்தியாவில் தொடங்கியது. இதைப் போலவே ஆங்கிலேயரது ஆட்சி முடியும் தருவாயில் 1943இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் முப்பது இலட்சம் மக்களைப் பலி கொண்டது. 1998இல் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் ஒரு சிறுவனாகக் கொல்கத்தாவின் வீதிகளில் பஞ்சத்தால் மனிதர்கள் செத்து மடிந்ததைப் பார்த்தார். அது குறித்து அவர் வழக்கமான ஆய்வுப்பாதையிலிருந்து விலகிப் புதிய பரிமாணத்தில் ஆய்வு செய்துள்ளார்.


9th Social Science : History: Colonialism in Asia and Africa : Economic Impact of British Rule in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம் - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்