Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஆப்பிரிக்கா காலனியாதல்
   Posted On :  06.09.2023 09:28 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

ஆப்பிரிக்கா காலனியாதல்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதிவரை சகாராவிற்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் வெளியுலகத்தினரால் அறியப்படாமலே இருந்தன. ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளும் ஆய்ந்தறியப்படாமலே இருந்தன.

ஆப்பிரிக்கா காலனியாதல்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதிவரை சகாராவிற்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் வெளியுலகத்தினரால் அறியப்படாமலே இருந்தன. ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளும் ஆய்ந்தறியப்படாமலே இருந்தன. 1875க்குப் பின்னர், ஐரோப்பியரின் ஊடுருவலும் குடியேற்றங்களை நிறுவுதலும் பெருமளவில் நடைபெறத் தொடங்கியது. 1884-85 இல் நடைபெற்ற பெர்லின் குடியேற்ற நாட்டு மாநாட்டில் ஆப்பிரிக்காவைப் பல ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிப்பதென முடிவு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு முக்கியமான ஐரோப்பிய நாடுகளிடையே போர் ஏற்படாமல் ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிகளை ஏற்படுத்துவது சுமுகமாக நடைபெற்றது. 1881க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றிக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.

1884-85இல் நடைபெற்ற பெர்லின் மாநாடு, காங்கோ மாநாடு அல்லது மேற்கு ஆப்பிரிக்க மாநாடு எனவும் அறியப்படுகிறது. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதி வடிநிலத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகவே இம்மாநாடு கூடியது. காங்கோ நதியின் வடிநிலத்தைக் கட்டுப்படுத்த தனக்குள்ள உரிமை குறித்து விவாதிப்பதற்காகப் போர்த்துகல் கூட்டிய இம்மாநாட்டில் போர்த்துகலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பெர்லின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொதுச் சட்டம் காங்கோ நதியின் வடிநிலம் பொதுவானதெனவும் அங்கு வணிக கப்பல்களைச் செலுத்துவதற்கான உரிமை அனைத்து நாடுகளுக்கு உண்டு எனவும் பிரகடனப்படுத்தியது.

 

தென் ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் நேட்டால், கேப் காலனி ஆகிய பகுதிகளைப் பெற்றிருந்தனர். உள்நாட்டில் போயர் (Boer) என அறியப்பட்ட டச்சுக்காரர் டிரான்ஸ்வாலைச் சேர்ந்த நாடுகளையும் சுதந்திர ஆரஞ்சு நாட்டையும் பெற்றிருந்தனர். 1886இல் டிரான்ஸ்வாலில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் இங்கிலாந்தைச் சேர்ந்த சுரங்கத்தொழில் வல்லுநர்கள் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெரும் எண்ணிக்கையில் குடியேறத் தொடங்கினர். சுரங்கம் அமைக்க வந்தவர்களைக் கண்டு போயர் அச்சம் கொண்டு அவர்களை வெறுத்தனர். அவர்களை அந்நியர் (Uitlanders) என்றே அழைத்தனர். 1890இல் கேப் காலனியின் பிரதம மந்திரியான சிசில் ரோட்ஸ் டிரான்ஸ்வாலுக்கு வடக்கே ஆங்கிலேயரின் விரிவாக்கத்தை ஊக்குவித்தார். இது ஆங்கிலேயருக்கும் போயர்களுக்கும் இடையிலான உறவைச் சீர்குலைத்தது. தங்கள் அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதாகச் சுரங்க முதலாளிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக ஏற்பட்ட போயர் போர்கள் மூன்று ஆண்டுகள் (1899–1902) நடைபெற்றன. இறுதியில் போயர் படைகள் தோற்கடிக்கப்பட்டுப் பிரிட்டோரியா கைப்பற்றப்பட்டது. 1907இல் போயர் நாடுகளுக்கு முழுமையான பொறுப்பு அரசுரிமைகள் வழங்கப்பட்டன. சில வருடகால விவாதங்களுக்குப் பின்னர் முடிவாக இந்நான்கு நாடுகளும் ஒன்றாக இணைவதற்கு ஒப்புக்கொண்டதால் 1909இல் தென்னாப்பிரிக்கா எனும் நாடு உதயமானது.


ஜூலு பூர்வக்குடிகள் தங்களின் போர்த் திறனுக்காகப் பெயர் பெற்றவர்கள். புகழ் பெற்ற போராளிகளான சாக்கா ஜூலு போன்றவர்களால் பிரதி நிதித்துவப்படுத்தப்ப ட்டவர்கள். தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜூலு மக்களுக்கென ஒரு பெரிய நாட்டை உருவாக்குவதில் சாக்கா ஜூலு முக்கியப் பங்காற்றினார். ஜூலு பகுதிகளைக் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள் அப்பகுதிகளைப் பதிமூன்று தலைமையுரிமைப் பகுதிகளாகப் பிரித்தனர்.


ஜூலுக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறவேயில்லை. அவர்கள் தென்னாப்பிரிக்காவில் ஆழமாக நிலைகொண்டுவிட்ட இனப்பாகுபாட்டிற்கு எதிராக ஒரு நூற்றாண்டு காலம் போராட நேர்ந்தது.

 

ரோடிசியா

1889ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் தென் ஆப்பிரிக்க கம்பெனி எனும் நிறுவனம் நிலங்களைக் கைப்பற்றும் நோக்கில் 600 நபர்களைக் கொண்ட நீண்ட பயணமொன்றை மேற்கொண்டது. ஒவ்வொருவருக்கும் 3000 ஏக்கர் பண்ணை நிலம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது. ஐரோப்பியர்கள் வந்திருப்பது தங்கத்திற்காக மட்டுமே என ஆப்பிரிக்க அரசரை ஏமாற்றி நம்ப வைத்தனர். ஆனால் அவர்கள் பிச்சுனாலந்துப் (போட்ஸ்வானா) பகுதி முழுவதையும் காலனியாக மாற்றும் தீர்மானகரமான திட்டத்துடனே வந்திருந்தனர். அடுத்த பத்து ஆண்டுகளில் ஆப்பிரிக்கர்களின் எதிர்ப்பு நசுக்கப்பட்டது. வெள்ளையினக் குடியேறிகளுக்குப் பண்ணை நிலங்கள் வழங்கப்பட்டன. இருப்புப்பாதைப் போக்குவரத்தும் தந்தி முறையும் மேம்படுத்தப்பட்டன. இக்குடியேற்றம் பின்னர் சிசில் ரோட்ஸ் பெயரால் ரோடிசியா என அழைக்கப்பட்டது.

 

மேற்கு ஆப்பிரிக்கா

கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப்பகுதி அரசுகள் 1854இல் ஆங்கிலேயரின் காலனியானது. நைஜீரியாவின் கடற்கரைப் பகுதி அடிமைச் சந்தையாகப் பயன்படுத்தப்பட்டது. 1886இல் ராயல் நைஜர் கம்பெனி உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த நிறுவனம் 1900இல் ஆங்கிலேய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா

மேற்கு ஆப்பிரிக்காவில் செனகல் பிரான்சின் தளமாக இருந்துவந்தது. பின்னாளில் பிரான்சுக்குச் சொந்தமாகிய கினியா, ஐவரி கோஸ்ட், டகோமெய் ஆகியவை சகாராவுக்கு தெற்கேயிருந்த பகுதிகளோடு இணைக்கப்பட்டன.

 

காங்கோ


பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு காங்கோவைக் கைப்பற்ற ஆர்வம் கொண்டிருந்தார். எனவே பெர்லின் மாநாடு இரண்டாம் லியோபோல்டுக்கு, காங்கோ பகுதியில் தன்னாட்சியரசை ஏற்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியது. காங்கோ பகுதியின் மதிப்பு மிக்க பொருள்களான ரப்பர், தந்தம் ஆகியவற்றின் வணிகத்தில் இவ்வரசுக்கு முற்றுரிமையும் வழங்கப்பட்டது. இப்பொருள்கள் கொடுரமான முறைகளில் சேகரிக்கப்பட்டன. ஆப்பிரிக்கர் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்குப் பொருள்களை வழங்கத் தவறினால் கசையடியும், கை, கால் துண்டிக்கப்படுதலும் தண்டனைகளாயின. ஆப்பிரிக்காவின் பொருளாதாரம் சுரண்டப்படுவதாக மக்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்ததால் பெல்ஜிய அரசாங்கம் பிரச்சனையில் தலையிட்டது . லி யோபோல்டு பதவி விலக  நிர்ப்பந்திக்கப்பட்டார். 1908இல் காங்கோவின் "இறையாண்மை " லியோபோல்டிடமிருந்து பெல்ஜியம் அரசுக்குக் கைமாறியது.

 

கிழக்கு ஆப்பிரிக்கா

ஆங்கிலேயர்: 1886இல் ஜான்ஜிபார் சுல்தானுக்குச் சொந்தமான பல பகுதிகள் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகியவற்றின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. தொடக்கத்தில் சில ஆண்டுகள் இங்கிலாந்தின் பகுதிகள் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியால் நிர்வகிக்கப்பட்டது. ஆனால் 1895இல் ஆங்கில அரசே நிர்வாகப் பொறுப்பையேற்று கிழக்கு ஆப்பிரிக்கப் பாதுகாவலர் (Protectorate) ஆட்சியை உருவாக்கியது. அது கென்யா, உகாண்டா, ஜான்ஜிபார் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. உகாண்டாவின் பெரும்பகுதியானது காபகா எனும் அரசர் ஆண்ட புகாண்டா பகுதியாகும்.

ஜெர்மானியர்: ஜெர்மானியர், ஜெர்மானிய கிழக்கு ஆப்பிரிக்கா எனப் பின்னர் உருவான பகுதியில் தங்கள் ஆட்சியை நிறுவினர். பெல்ஜிய அரசர் லியோபோல்டு காங்கோவில் நடந்துகொண்டதைப் போலவே ஆப்பிரிக்கர்களை, ஜெர்மனியர்கள் பொருளாதாரச் சுரண்டலுக்கு உள்ளாக்கினர். இது பல கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது. இவற்றில் மிகவும் முனைப்பான எழுச்சி மஜி-மஜி எழுச்சியாகும் (1905-1907).

 

போர்த்துகீசியரின் அங்கோலா மற்றும் மொசாம்பிக்

போர்த்துகீசியர்கள் தென்ஆப்பிரிக்காவின் மேற்கு, கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருந்த அங்கோலா, மொசாம்பிக் ஆகிய காலனிகளையும் அவற்றுடன் போர்த்துகீசிய கினியாவையும் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே பயன்படுத்தி வந்தனர்.

 

லைபீரியாவிலும் எத்தியோப்பியாவிலும் ஆப்பிரிக்கர் ஆட்சி

ஐரோப்பியரின் காலனியாதிக்கத்திற்கு உட்படாமல் தப்பித்த இரு ஆப்பிரிக்க நாடுகள் லைபீரியா, எத்தியோப்பியா ஆகியவை மட்டுமே. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரரசர் மெனிலிக் அமெரிக்காவை விட்டு வெளியேறிய கருப்பின மக்களின் ஓர் குடியிருப்பாக லைபீரியா உருவாக்கப்பட்டது. எத்தியோப்பியா அதன் பாரம்பரிய அரசியல் அமைப்புடன், பேரரசர் மெனிலிக் என்பவரால் ஆளப்பட்டது.


9th Social Science : History: Colonialism in Asia and Africa : Colonisation of Africa in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : ஆப்பிரிக்கா காலனியாதல் - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்