Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | இந்தியாவைக் காலனி நாடாக்குதல்

வரலாறு - இந்தியாவைக் காலனி நாடாக்குதல் | 9th Social Science : History: Colonialism in Asia and Africa

   Posted On :  06.09.2023 09:28 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

இந்தியாவைக் காலனி நாடாக்குதல்

இந்தியாவைக் காலனிநாடாக்கிய செயல்பாட்டை மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். அ. முதற்கட்டம் : வாணிக முதலாளித்துவம் ஆ. இரண்டாம் கட்டம்: தொழில்துறை முதலாளித்துவம் இ. மூன்றாம் கட்டம்: நிதி மூலதன முதலாளித்துவம்

இந்தியாவைக் காலனி நாடாக்குதல்

15ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், போர்த்துக்கல் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை நிறுவிய முதல் ஐரோப்பிய நாடானது. 1498ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டு கோழிக்கோட்டை வந்தடைந்தார். மிக விரைவில் போர்த்துகலைத் தொடர்ந்து ஏனைய ஐரோப்பிய சக்திகளும் இந்தியாவிற்கு வந்தன. 16ஆம் நூற்றாண்டு முதலாக இந்தியாவிலிருந்த ஐரோப்பிய சக்திகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:


போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகிய நான்கு முக்கிய ஐரோப்பிய சக்திகளிடையே ஏற்பட்ட போட்டியில் மூன்று கர்நாடகப் போர்களுக்குப் பின்னர் ஆங்கிலேயர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சைப் போட்டியிலிருந்து வெளியேற்றினர். ஆங்கிலேயர் அனைத்து சுதேச அரசுகளையும் கைப்பற்றினர். குறிப்பாக வலிமையான சவால்களாகத் திகழ்ந்த மைசூர் சுல்தான்களை மூன்று ஆங்கிலேயமைசூர் போர்களிலும் மராத்தியரை மூன்று ஆங்கிலேய மராத்தியப் போர்களிலும் வெற்றி கொண்டனர். 1816இல் கூர்க்கர்களையும், 1843இல் சிந்திகளையும், 1849இல் சீக்கியரையும் வென்று அவர்களின் பகுதிகளைக் கைப்பற்றினர். இவ்வெற்றிகள் இந்தியாவில் ஆங்கிலேயர் நாடாளுகின்ற சக்தியாக மாறுவதைச் சாத்தியப்படுத்தின.

 

இந்தியப் பொருளாதாரத்தைக் காலனிமயமாக்குதல்

இந்தியாவைக் காலனிநாடாக்கிய செயல்பாட்டை மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம்.

. முதற்கட்டம் : வாணிக முதலாளித்துவம்

. இரண்டாம் கட்டம்: தொழில்துறை முதலாளித்துவம்

. மூன்றாம் கட்டம்: நிதி மூலதன முதலாளித்துவம்

 

. முதற் கட்டம் : வணிக முதலாளித்துவம் (நேரடிக் கொள்ளை, 18ஆம் நூற்றாண்டு)

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஒரு சிறிய சக்தியாகவே இருந்தது. கடற்கரைப் பகுதிகளிலுள்ள தங்களது வாணிக நிலையங்களுக்கான சலுகைகளுக்காக அது இந்திய அரசர்களைச் சார்ந்திருந்தது. ஆனால் மிக விரைவாக நாட்டின் உட்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி வகைகளையும் பிற பொருள்களையும் தங்களிடம் விற்கும் உள்நாட்டு வணிகர்களோடு வலுவான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டது. இந்தியாவில் சில பகுதிகளைப் பெறுவதற்கு முன்னர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி துணி, பட்டு, வண்ணப் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய துணிகள் ஆகியவற்றில் வாணிகத்தை மேற்கொண்டு பெரும் இலாபம் ஈட்டியது. இந்திய தேசியவாதபொருளாதார நிபுணருமான ஆர்.சி. தத் நெசவுத் தொழிலானது மக்களின் தேசியத் தொழில் என்றும், நூல் நூற்றல் இலட்சக்கணக்கான பெண்கள் செய்துவந்த வேலையாகும்" என்றார். இந்தியத் துணி வகைகள் இங்கிலாந்திற்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும், சீனா, ஜப்பான், பர்மா, அரேபியா, பாரசீகம் ஆகிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கும் சென்றன. இக்காலகட்டத்தில் தான் லங்காஷையர், பர்மிங்காம் நகரங்களைச் சேர்ந்த ஜவுளி வாணிகர்கள் இந்தியத் துணிகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடைசெய்யும் சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றச் செய்தனர். இந்தியப் பருத்தி இழைத் துணிகளை யாராவது வைத்திருந்தாலோ அல்லது அவை தொடர்பான செயல்களில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு 200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.


1750களிலும் 1760 களின் தொடக்கத்திலும் இராபர்ட் கிளைவ் பழைய முகலாயப் பேரரசின் செல்வச் செழிப்பு மிக்க பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். கிழக்கிந்தியக் கம்பெனி, இராபர்ட் கிளைவ் சுதேச அரசுகளைக் கட்டாயப்படுத்திச், சில சலுகைகளைப் பெற்றது. தனது பொருள்கள் இடம் விட்டு இடம் செல்கையில் செலுத்த வேண்டிய வரிகளிலிருந்து விலக்கு பெற்றது. ஆனால் அதே வரியை இந்திய வணிகர்கள் செலுத்தி ஆக வேண்டும். பிளாசி போருக்குப் (1757) பின்னர் கம்பெனி 1.2 மில்லியன் பவுண்டுகளைப் பெற்றது. இராபர்ட் கிளைவ் மட்டுமே 31,500 பவுண்டுகளை பெற்றிருந்தார். அதைத் தவிரவும் ஆண்டுக்கு 27,000 பவுண்டுகள் வருமானத்தைத் தரும் ஜாகீரையும் பெற்றார். பக்ஸார் போருக்குப் (1764) பின்னர் முர்ஷிதாபாத் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டது. 1765 இல் கம்பெனி நில வரிவசூல் செய்யும் உரிமையைப் பெற்று முகலாயப் பேரரசிற்கு இடைத்தரகரானது.

 

. இரண்டாம் கட்டம்: தொழில்துறை முதலாளித்துவம் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதி)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கம்பெனி ஒரு சில பகுதிகளை ஆளுகின்ற சக்தியாக உருவெடுத்தது. இக்காலப்பகுதியில் இந்தியாவானது இங்கிலாந்து நாட்டு துணிகளுக்கான சந்தையாகவும் கச்சாப் பொருள்களுக்கான மூலாதாரமாகவும் மாற்றப்பட்டது. கம்பெனி அரசு பின்பற்றிய விரிவாக்கக் கொள்கை பிராந்திய அரசுகளோடு பல போர்கள் மூள்வதற்கு வழிவகுத்தது. இப்போர்களுக்கான செலவுகள் இந்தியாவின் மீது சுமத்தப்பட்டன.

 

. மூன்றாம் கட்டம் : நிதிமூலதன முதலாளித்துவம் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதி)

இக்கட்டத்தில் மேலாண்மை முகவர் நிறுவனங்கள், ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனங்கள், நாணயமாற்று வங்கிகள் ஆகியவை செழித்தோங்கின. இங்கிலாந்தில் உபரியாக இருந்த பெருமளவிலான நிதியை முதலீடு செய்வதற்கான வழிகளைக் கண்டறிய முயன்ற கம்பெனி அரசு, இருப்புப்பாதை அமைத்தல், அஞ்சல் துறை, நீர்ப்பாசனம், நவீன வங்கித்துறை, கல்வித்துறை ஆகியவற்றில் மிகப் பெருமளவிலான முதலீட்டினைச் செய்தது. கொண்டு செல்லப்பட்ட நிதியின் கணிசமான பகுதி இருப்புப்பாதை அமைக்கும் தொழிலில் முதலீடு செய்யப்பட்டது. ரயில் போக்குவரத்து, ஆங்கிலப்படைகள் நாட்டின் பல பகுதிகளுக்கு விரைவாகச் செல்வதற்கு உதவியது. மேலும் இந்தியச் சந்தையின் பெரும்பகுதியைக் கைப்பற்றவும் உதவியது. இந்தியாவில் அடிமைமுறை 1843இல் ஒழிக்கப்பட்டுவிட்டதால் கம்பெனி ஒப்பந்தக்கூலி முறையை அறிமுகம் செய்தது.

Tags : History வரலாறு.
9th Social Science : History: Colonialism in Asia and Africa : Colonisation of India History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : இந்தியாவைக் காலனி நாடாக்குதல் - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்