Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஆசியாவில் குடியேற்றமடைதல் (தென்கிழக்காசியா)

வரலாறு - ஆசியாவில் குடியேற்றமடைதல் (தென்கிழக்காசியா) | 9th Social Science : History: Colonialism in Asia and Africa

   Posted On :  06.09.2023 09:28 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

ஆசியாவில் குடியேற்றமடைதல் (தென்கிழக்காசியா)

இரண்டாம் உலகப் போரிலிருந்துதான் 'தென்கிழக்காசியா' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. மலேயா, டச்சு கிழக்கிந்தியா, பர்மா, சயாம், பிரெஞ்சு இந்தோசீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய பகுதிகளின் தொகுப்பையே இச்சொல் சுட்டுகின்றது.

ஆசியாவில் குடியேற்றமடைதல் (தென்கிழக்காசியா)

 

தென்கிழக்காசியா

இரண்டாம் உலகப் போரிலிருந்துதான் 'தென்கிழக்காசியா' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. மலேயா, டச்சு கிழக்கிந்தியா, பர்மா, சயாம், பிரெஞ்சு இந்தோசீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய பகுதிகளின் தொகுப்பையே இச்சொல் சுட்டுகின்றது. இவற்றில் சயாம் (தாய்லாந்து) மட்டும் சுதந்திர நாடாக இருக்க மற்ற பகுதிகள் டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் ஆகியோரிடையே பங்கிடப்பட்டன.

 

மலேயா தீபகற்பம்

ஐரோப்பிய வணிகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் நறுமணப் பொருள்களுக்காக இந்தியப் பெருங்கடலைக் கடந்து தென்கிழக்காசியா சென்றனர். போர்த்துகீசியர் தங்கள் அரசருக்காக மலாக்காவின் மாபெரும் பன்னாட்டு வணிக வளாகத்தைக் கைப்பற்றியபோது ஸ்ரீவிஜய மற்றும் மஜபாகித பேரரசுகள் சிதறுண்டு பல சிற்றரசுகளாயின. கோவாவையும் மலாக்காவையும் கைப்பற்றிய போர்த்துகீசிய வீரர் அல்புகர்க்கும் அவருக்குப் பின்வந்தோரும் நறுமணப் பொருள்கள் வணிகத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் அந்நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு சங்கிலித் தொடர்போல் பாதுகாப்பு மதிற்சுவர்களுடன் கூடிய கப்பற்படைப் பாதுகாப்பு கொண்ட வணிக மையங்களை நிறுவினர். தொடக்கத்தில் சுதேச அரசுகளின் நிர்வாகத்தில் அவர்கள் தலையிடவில்லை . டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் வருகையானது போர்த்துகீசியரின் இருப்புக்குச் சவாலாக மாறியது. இம்மூன்று ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான ஆதிக்கப் போட்டிகள் பதினேழாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளாயின.


டச்சுக்காரர் 1641ஆம் ஆண்டு மலாக்காவைக் கைப்பற்றி அங்கிருந்த போர்த்துகீசியக் குடியேற்றங்களை ஆக்கிரமிக்கும் பணியைத் தொடங்கினர். 1619இல் பட்டாவியாவில் (தற்போதைய ஜகார்த்தா) ஒரு தளத்தை ஏற்படுத்திய பின்னர் அருகேயிருந்த சுதேச சுல்தானியரின் வாரிசுரிமைப் பிரச்சனைகளில் தலையிடத் தொடங்கினர். 1682இல் ஆங்கிலேயரை பான்டம் என்னுமிடத்திலிருந்து வெளியேற்றி, படிப்படியாக ஜாவாவைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். அதற்கு முன்னதாகவே 1623இல் அம்பாய்னா படுகொலைக்குப் பின்னரும் 1667இல் மக்காசாரைக் கைப்பற்றியதன் மூலமாகவும் ஆங்கிலேயரை நறுமணத் தீவுகளிலிருந்து வெளியேற்றி, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி சீனாவுடனான வணிகத்தில் தனது கவனத்தைத் திருப்புமாறு செய்திருந்தனர். மணிலாவை வெற்றிகொண்டதில் தொடங்கி, பின்னாளில் பரந்து விரிந்தஸ்பானியகிழக்கிந்தியப் பிராந்தியத்தை உருவாக்கி, ஸ்பெயின் நாட்டவர் தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர்.

 

ஆங்கிலேய - டச்சுக்காரர் போட்டி

பிரான்சிஸ் லைட் என்பவர் பினாங்குத் தீவை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். 1786இல், பினாங்குத் தீவின் வடகிழக்கு முனையில் ஜார்ஜ் டவுன் என்ற பெயரில் ஒரு குடியேற்றம் உருவாக்கப்பட்டதோடு மலேயா தீபகற்பத்தில் ஆங்கிலேயரின் விரிவாக்கம் தொடங்கியது. டச்சுக்காரருடன் ஏற்பட்ட போட்டியின் விளைவாக 1819இல் ஸ்டாம்போர்டு ராஃபில்ஸ் என்பவர் சிங்கப்பூரை ஆங்கிலேயரின் முக்கிய வணிக மையமாக உருவாக்கினார். இருந்தபோதிலும் 1824இல் மேற்கொள்ளப்பட்ட ஆங்கிலோ - டச்சு உடன்படிக்கையால் போட்டி மனப்பாங்கு தணிந்தது. இவ்வுடன்படிக்கை தென்கிழக்காசியாவில் இவ்விரு சக்திகளின் விருப்பங்கள் எவை என்பதைத் தெளிவாக வரையறை செய்தது. 1826 வாக்கில் சிங்கப்பூரும் மலாக்காவும் பினாங்கோடு இணைக்கப்பட்டு நீரிணைப்பகுதி குடியிருப்புகள் (Straits Settlements) உருவாக்கப்பட்டன.

1874 முதல் 1895 வரை ஆகிய ஆண்டுகளுக்கிடையே எஞ்சியிருந்த ஐந்து சுதேச அரசுகளிடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இப்பிரச்சனையில் தலையிட்ட ஆங்கிலேயர் ஒவ்வொரு சுல்தானோடும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒவ்வொரு சுல்தானுடைய அவையிலும் ஓர் ஆங்கிலேயஸ்தானிகர் (Resident) நியமிக்கப்பட்டார். ஆங்கிலேய ஸ்தானிகர்கள் வழங்கும் ஆலோசனைப்படி சுல்தான்கள் செயல்பட வேண்டியிருந்தது. 1896ஆம் ஆண்டு இவற்றில் நான்கு அரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஐக்கிய மலாய் நாடுகள் உருவாக்கப்பட்டது. 1900இல் நீரிணைப்பகுதி குடியிருப்புகள், ஐக்கிய மலாய் நாடுகள், ஜகோர் ஆகியவை ஆங்கிலேயர் வசமிருந்தன. இப்பகுதியின் மக்கள்தொகை பத்து இலட்சமாக இருந்தது. அதில் சரிபாதி மலாய் இன மக்களாவர். மற்றவர்கள் சீனர்களாவர். பெரும்பாலான வர்த்தகர்கள், பண்ணை வைத்திருப்போர், துறைமுகங்களிலும் பண்ணைகளிலும் பணி செய்யும் தொழிலாளர்கள் ஆகியோர் சீனர்களாவர். பொருளாதாரத்தில் மலேயா செழிப்புற்றுத் திகழ்ந்தது.

 

இந்தோனேசியா

டச்சுக்காரர் 1640ஆம் ஆண்டிற்கு முன்னர் ஜாவாவையும் சுமத்ராவையும் ஆக்கிரமித்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில்தான் கிழக்கிந்தியாவின் பிற வெளிப்புறத் தீவுகளில் ஆங்கிலேயர் வசமிருந்த வடக்கு போர்னியோ, புருனே, சராவக் பகுதிகளைத் தவிர்த்து ஏனையவற்றைக் கைப்பற்றினர். தொடக்கத்தில் அரசியலில் நாட்டம் கொண்டிராத டச்சுக்காரர் இந்தோனேசியாவை இரக்கமின்றிச் சுரண்டினர். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்களால் ஆளப்படும் மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பெரும்பாலான இந்தோனேசியர் மீனவர்களாகவும், சிறு விவசாயிகளாகவும் ஐரோப்பியரின் சர்க்கரை, புகையிலை, தேயிலை, காப்பித் தோட்டத் தொழிலாளர்களாகவும் இருந்தனர். பண்ணைகளிலும் ஏனைய தொழில்களிலும் செய்யப்பட்டிருந்த பெருமளவிலான முதலீடு, 1900இல் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் ஆகியவற்றால் இந்தோனேசியா டச்சுக்காரர்களுக்குப் பெருமதிப்புள்ள காலனியாகியது.

 

பர்மா

ஆங்கிலேயர் மூன்று போர்களைத் தொடுத்த பின்னர் பர்மாவைக் கைப்பற்றினர். 1886 முதல் 1937 வரை இந்தியாவின் ஒரு பகுதியாகவே பர்மா இருந்தது. ஒரு துணைநிலை ஆளுநரால் நிர்வகிக்கப்பட்டது. நியமன உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றக் குழு அவருக்கு உதவியது. பர்மா தேக்கு பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மேலும் தனது செழிப்பு மிகுந்த மண்வளத்தால் அரிசி ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகவும் திகழ்ந்தது. தென்னிந்தியாவின் பல பகுதிகள் பர்மாவிலிருந்து இறக்குமதியாகும் அரிசியைச் சார்ந்திருந்தன. இரண்டாம் உலகப்போரின்போது பர்மா ஜப்பானியர் வசமானபோது தென்னிந்தியாவில் அரிசிக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டு பஞ்சமே உருவானது.

 

இந்தோ - சீனா


பிரெஞ்சுக்காரர் இந்தோ-சீனாவை மக்களின் வலுவான எதிர்ப்புக்குப் பின்னரே கைப்பற்றினர். 1858இல் முயற்சிகளைத் தொடங்கியபோதும், இந்தோ-சீன ஒன்றியத்தை 1887இல் தான் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். இந்தோ-சீனா என்பது ஆனம், டோங்கிங், கம்போடியா, கொச்சின் - சீனா ஆகிய பகுதிகளைக் கொண்டதாகும். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் லாவோஸ் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் கொச்சின்சீனா மட்டுமே பிரான்சின் காலனியாக நேரடிக் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. ஏனைய நான்கும் பிரான்சின் பாதுகாப்பில் இருந்தனவாகும்.

இம்முறையின் கீழ், சுதேச மன்னர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பர், ஆனால் பிரெஞ்சு ஸ்தானிகரின் ஆலோசனையின்படி அவர்கள் நிர்வாகம் செய்ய வேண்டும். பிரெஞ்சு அரசாங்கத்தின் தலைநகராக ஹனாய் இருந்தது. அரிசி, ரப்பர், கோதுமை ஆகியன முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாக இருந்தன. லாவோஸ் வளர்ச்சி பெறாமலேயிருந்தது.

 

பிலிப்பைன்ஸ்


பிலிப்பைன்ஸ் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பானியரால் ஆளப்பட்டது. தனது மொழி, பண்பாடு, மதம் ஆகியவற்றை ஸ்பெயின் அம்மக்களின் மீது தினித்தது. அதன் விளைவாக மக்களில் கணிசமான பகுதியினர் ரோமன் கத்தோலிக்கர் ஆயினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடையே தேசிய உணர்வு வளர்ந்தது. 1872, 1896 ஆகிய ஆண்டுகளில் முக்கியக் கிளர்ச்சிகள் வெடித்தன. ஆனால் அவை ஸ்பானிய காலனிய அரசால் நசுக்கப்பட்டன. 1898இல் கியூபாவுக்கு எதிரான போரில் ஸ்பெயினை அமெரிக்கா தோற்கடித்தது. அதன் விளைவாகப் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் காலனியானது.

 

சயாம் (தாய்லாந்து)

தாய்லாந்து மேலைநாடுகளின் அதிகார அரசியலால் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டாலும் அந்நியர்களால் ஆளப்படவில்லை . 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 1910 வரை தொடர்ந்த நிர்வாகச் சீர்திருத்தங்கள் அந்நாட்டில் ஓரளவுக்குச் சுதந்திரமாக இயங்கும் மியூங் என்று அழைக்கப்பட்ட நகரங்களில் மேற்கத்திய பாணியிலான நிர்வாக முறையை ஏற்படுத்தின. எனினும், தாய்லாந்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களில் மேற்கத்திய சக்திகள் தொடர்ந்து தலையிட்டன.

Tags : History வரலாறு.
9th Social Science : History: Colonialism in Asia and Africa : Colonisation of Asia (South East Asia) History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : ஆசியாவில் குடியேற்றமடைதல் (தென்கிழக்காசியா) - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்