Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | புறத்தோற்றம் - கரப்பான் பூச்சி - பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா
   Posted On :  06.01.2024 02:27 am

11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்

புறத்தோற்றம் - கரப்பான் பூச்சி - பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா

முதிர்ந்த கரப்பான் பூச்சி சுமார் 2-4 செ.மீ நீளமும் 1 செ.மீ அகலமும் உடையது.

உலகெங்கும் பரவியுள்ள கரப்பான் பூச்சி, பூச்சி இனத்திற்குரிய அனைத்து அடிப்படை பண்புகளையும் பெற்றுள்ள உயிரியாகும். பொதுவாக இப்பூச்சி அடர்சிவப்பு கலந்த பழுப்பு நிறம் அல்லது கருப்பு நிற உடலைக் கொண்டது. இதன் முதல் மார்புக் கண்டத்தில் மட்டும் விளிம்பில் பழுப்புநிறப் பட்டைகள் காணப்படும். இவை பொதுவாக இரவில் உலவும் அனைத்துண்ணியாகும். ஈரம் மிகுந்த மற்றும் வெப்பமான பொருள் சேமிப்பு பகுதிகளிலும், குறிப்பாகச் சமையல் அறைகள், உணவுதானியச் சேமிப்புக் கிடங்குகள், அடுமனை, உணவகங்கள், விடுதிகள், கழிவுநீர் தேங்குமிடம் மற்றும் பொது இடங்களிலும் பெரிதும் காணப்படுகின்றன. பெரிப்பிளனேட்டா மிக வேகமாக ஓடும் (Cursorial) பூச்சியினமாகும். முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கக்கூடிய ஒருபால் உயிரிகளான இவை பெற்றோர் பாதுகாப்பு பணியை செய்யக்கூடிய உயிரிகளாகும். காலரா, வயிற்றுப்போக்கு, காசநோய் மற்றும் டைபாய்டு காய்ச்சலை உண்டாக்கக்கூடிய தீங்கு தரும் நுண்ணுயிரிகளை எடுத்துச் செல்வதால் "நோய்க் கடத்திகள்' (Vectors) என்றும் இவை அழைக்கப்படுகின்றன


புறத்தோற்றம்

முதிர்ந்த கரப்பான் பூச்சி சுமார் 2-4 செ.மீ நீளமும் 1 செ.மீ அகலமும் உடையது. இவற்றின் உடல் முதுகு - வயிற்றுப் புற அச்சுவாக்கில் தட்டையாகவும், இருபக்கச் சமச்சீரமைப்புடையதாகவும் உடற்கண்டங்களை உடையதாகவும் காணப்படுகிறது. உடல் தலை, மார்பு மற்றும் வயிறு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


மொத்த உடலும் உறுதியான பழுப்பு நிறமுடைய கைட்டினால் ஆன புறச்சட்டகத்தால் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கண்டத்திலும் ஸ்கிளிரைட்டுகள் எனப்படும் கடினமான தட்டுகள் காணப்படுகின்றன. இவை மெல்லிய மீள்தன்மையுள்ள இணைப்புகள் () ஆர்த்தோடியல் சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளன. முதுகுப்புறமுள்ள ஸ்கிளீரைட்டுகளுக்கு 'டெர்கிட்கள்' (Tergites) என்றும் வயிற்றுப் புறத்தில் உள்ளவற்றிற்கு 'ஸ்டர்னைட்டுகள்' (Sternites) என்றும் பெயர். பக்க வாட்டில் உள்ள ஸ்கிளிரைட்டுகளுக்கு, 'புளூரைட்கள்' (Pleurites) என்று பெயர்.

கரப்பான்பூச்சியின் தலைப்பகுதி சிறிய, முக்கோண வடிவமுடையது. உடலின் நீள்வச அச்சிற்குச் செங்குத்தாகத் தலை அமைந்துள்ளது. வாய் உறுப்புகள் அனைத்தும் கீழ்நோக்கி அமைந்திருக்கும். இத்தகைய அமைவிற்கு 'ஹைப்போநேத்தஸ்' (Hypognathous) வகை என்று பெயர். முன்புறமுள்ள ஆறு கண்டங்களின் இணைவால் தலை ஆக்கப்பட்டுள்ளது. மேலும் வளையும் தன்மையுடைய கழுத்தின் (படம் 4.8) உதவியால் அனைத்துப் பக்கங்களிலும் தலையால் அசைய முடிகிறது. இதன் தலைப்பகுதியில் ஓர் இணை சிறுநீரக வடிவம் கொண்ட, அசையாத ஒட்டிய கூட்டுக்கண்களும், ஓர் இணை உணர்கொம்பு நீட்சிகளும் மற்றும் வாய் உறுப்புத் தொகுப்புகளும் காணப்படுகின்றன.

உணர்கொம்புகளில் உள்ள உணர் செல்கள் சுற்றுச்சூழல் தன்மையினைத் தொடர்ந்து கண்காணிக்க உதவுகின்றன. இதன் வாய் உறுப்பிலுள்ள இணையுறுப்புகள், கடித்து, மென்று உண்ணும் வகையைச் சார்ந்தது. இதற்கு 'மான்டிபுலேட்' அல்லது 'ஆர்த்தோப்டீரஸ்' வகை என்று பெயர். ஒரு மேலுதடு (Labrum), ஓர் இணை அரைவைத் தாடைகள் (Mandibles), ஓர் இணைத் துருவுத்தாடைகள் (Maxillae), ஒரு கீழுதடு (Labium) மற்றும் நாக்கு (Hypopharynx அல்லது Lingua) (படம் 4.9) ஆகியவை வாய் உறுப்புகளில் அடங்கியுள்ளன.



உங்களுக்குத் தெரியுமா?

தரையில் வாழும் பூச்சி இனங்களிலேயே கரப்பான் பூச்சிகள் மிக வேகமாக ஓடும் தன்மையுடையவை. இதன் வேகம் சுமார் 5.4கிமீ/மணி.

மார்புப் பகுதியானது 'முன்மார்பு' (Prothorax) 'நடுமார்பு' (Mesothorax) மற்றும் 'பின்மார்பு' (Metathorax)க் கண்டங்களால் ஆனது. மார்புக் கண்டங்களில் பெரியது முன்மார்புக் கண்டமாகும். இது தலைப்பகுதியுடன் குறுகலான கழுத்துப் பகுதியால் (Cervicum) இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மார்புக் கண்டத்திலும் ஓர் இணை நடக்கும் கால்கள் அமைந்துள்ளன. மொத்தம் ஆறு கால்களைப் பெற்றுள்ளதால் இவற்றிற்கு ஆறுகாலிகள் (hexapoda) (hexa = ஆறு, poda = கால்) என்று பெயர். ஒவ்வொரு காலும் ஐந்து கணுக்களால் ஆனது. அவை முறையே காக்சா (பெரியது), ட்ரொக்காண்டர் (சிறியது), ஃபீமர் (நீண்டு அகன்றது), டிபியா (தடித்து நீண்டது) மற்றும் டார்ஸஸ் ஆகும். கடைசி கணுவான டார்ஸஸில் அசையும் தன்மையுடைய ஐந்து இணைப்புகள் உள்ளன. அவற்றிற்கு 'போடோமியர்கள்' அல்லது 'டார்சோமியர்கள்' என்று பெயர். கரப்பான் பூச்சியில் இரண்டு இணை இறக்கைகள் காணப்படுகின்றன. எலைட்ரா அல்லது டெக்மினா என்றழைக்கப்படும்  முதல் இணை இறக்கைகள் நடுமார்பு கண்டத்தில் இருந்து தொடங்கி, ஓய்வு நிலையில் பின் இறக்கைகளை மூடிப் பாதுகாக்கிறது. பின்மார்புக் கண்டத்திலிருந்து தொடங்கும் இரண்டாம் இணை இறக்கைகள் பறத்தலுக்கு உதவுகின்றன.

கரப்பான் பூச்சியின் வயிற்றுப்பகுதி பத்துக் கண்டங்களால் ஆனது. ஒவ்வொரு வயிற்றுக் கண்டமும் மேற்புறம் டெர்கத்தினாலும் கீழ்ப்புறம் ஸ்டெர்னத்தினாலும் ஆக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பக்கவாட்டில் உள்ள சவ்வு போன்ற புளூராக்கள் இணைக்கின்றன.

பெண் கரப்பான்பூச்சியின் 7வது உடற்கண்டத்தில் உள்ள ஸ்டெர்னம் தகடு படகு வடிவம் கொண்டது. இது எட்டு மற்றும் ஒன்பதாவது ஸ்டெர்னத்துடன் சேர்ந்து இனப்பெருக்கப்பையாக (brood or genital pouch) உருவாகிறது. இப்பையின் முன்பகுதி பெண் இனப்பெருக்கத்துளை (gonopore), விந்து கொள்பைத்துளை (spermathecal pores) மற்றும் கொல்லேடிரல் சுரப்பிகளைக் கொண்டுள்ளது. இதன் பின்பகுதியில் கருமுட்டை அறை (ootheca) உள்ளது. இங்கு தான் கக்கூன் எனப்படும் கருமுட்டைக்கூடு உருவாகிறது. ஆண் பூச்சிகளில் இனப்பெருக்கப் பையானது (genital pouch) வயிற்றின் பின் பகுதியில் அமைந்துள்ளது. இப்பையைச் சுற்றிலும் முதுகுப்புறத்தில் 9 மற்றும் 10வது டெர்கம் தகடுகளும் வயிற்றுப் புறத்தில் ஸ்டெர்னம் 9வது தகடும் மூடியுள்ளன. இந்தப்பகுதியில் முதுகுப்புறத்தில் மலவாயும், வயிற்றுப்புறத்தில்ஆண்இனப்பெருக்கத்துளையும் அமைந்துள்ளன. ஆண் மற்றும் பெண் உயிரிகளின் இனப்பெருக்கத்துளையைச் சுற்றியுள்ள ஸ்கிளீரைட்டுகளுக்கு 'கோனோபோபைஸிஸ்' (Gonapophysis) என்று பெயர்.

ஆண் பூச்சியின் 9வது கண்ட ஸ்டெர்னத்தில் ஓர் இணை மெல்லிய குட்டையான மலவாய் நீட்சிகள் (anal styles) காணப்படுகின்றன. ஆனால் பெண் பூச்சிகளில் இவை காணப்படுவதில்லை. அதே சமயம் ஆண் மற்றும் பெண் பூச்சிகளின் 10வது கண்டத்தில் இணைந்த, இழைபோன்ற ஓர் இணை மலப்புழைத் தண்டுகள் (anal cerci) காணப்படுகின்றன. இத்தண்டுகள் காற்று மற்றும் நில அதிர்வுகளை உணரும் உறுப்புகளைக் கொண்டுள்ளது. ஆண் பூச்சிகளின் 7வது கண்ட ஸ்டெர்னத்தில் உள்ள ஓர் இணை பெரிய, அசையும் இணைப்பு கொண்ட முட்டை வடிவத் தகடு (gynovalvular plates) பெண் பூச்சியிடமிருந்து ஆண் பூச்சிகளை எளிமையாக வேறுபடுத்த உதவுகிறது.



உங்களுக்குத் தெரியுமா?

பூச்சியினங்களிலேயே மிகவும் தொன்மையான விலங்கு கரப்பான் பூச்சியாகும். இது ஏறத்தாழ 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான கார்போனிஃபெரஸ் காலத்தைச் சார்ந்தது.

11th Zoology : Chapter 4 : Organ and Organ Systems in Animals : Morphology of Cockroach (Periplaneta americana) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் : புறத்தோற்றம் - கரப்பான் பூச்சி - பெரிப்பிளனெட்டா அமெரிக்கானா - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்