Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | புறத்தோற்றம் (Morphology) - மண்புழு - லாம்பிட்டோ மாரிட்டீ
   Posted On :  06.01.2024 01:21 am

11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்

புறத்தோற்றம் (Morphology) - மண்புழு - லாம்பிட்டோ மாரிட்டீ

மண்புழு ஒரு தரைவாழ் உயிரியாகும். முதுகு நாணற்றவைகள் பிரிவைச்சார்ந்த இவை, ஈரப்பதம் மிக்க, அழுகிய கரிமப் பொருட்கள் நிறைந்த மண்ணின் மேலடுக்குகளில் வாழ்வன.

மண்புழு - லாம்பிட்டோ மாரிட்டீ 

மண்புழு ஒரு தரைவாழ் உயிரியாகும். முதுகு நாணற்றவைகள் பிரிவைச்சார்ந்த இவை, ஈரப்பதம் மிக்க, அழுகிய கரிமப் பொருட்கள் நிறைந்த மண்ணின் மேலடுக்குகளில் வாழ்வன. இரவு நேர உயிரிகளான மண்புழுக்கள் பகலில் மண்ணை விழுங்கி, வளைகளை உருவாக்கி அதனுள் வாழும் இயல்புடையவை. தோட்டங்களில், மண்மேலுள்ள அதன் கழிவுக் கட்டிகளான 'நாங்கூழ் கட்டிகளைக்' (Worm castings) கொண்டு அவைகளின் இருப்பிடத்தை நாம் அறியலாம். மண்புழுக்களை 'உழவனின் நண்பன்' என்று கருதுவர். பொதுவாக இந்தியாவில் மூன்று வகையான மண்புழுக்கள் காணப்படுகின்றன.

அவை,

1. லாம்பிட்டோ மாரிட்டீ (மெகஸ்கோலெக்ஸ் மாரிட்டீ)

2. பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்

3. மெடாபையர் போஸ்துமா (பெரிடிமா போஸ்துமா)


மண்புழுக்களை, மண்ணின் அடுக்குகளில் அவை வாழுமிடத்தை அடிப்படையாகக் கொண்டு, மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன 'எபிஜீயிக்' (கிரே:பூமியின் மேல்) எனப்படும் மேற்பரப்பு வாழ்விகள், (.கா.) பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ் மற்றும் யூட்ரிலஸ் யூஜினியே.

'அனிசிக்' (கிரே:பூமியிலிருந்து) எனப்படும் மண்ணின் மேலடுக்குகளுக்குள் வாழும் இடைமட்ட வாழ்விகள், (.கா.) லேம்பிட்டோ மாரிட்டீ மற்றும் லம்பிரிகஸ் டெரெஸ்ட்ரிஸ் 'என்டோஜீயிக்' (கிரே:பூமியினுள்) எனப்படும் மண்ணடுக்குகளின் ஆழத்தில் வாழும் மண்புழுக்கள் .கா:ஆக்டகீடோனா தர்ஸ்டோனி


புறத்தோற்றம் (Morphology)

லாம்பிட்டோ மாரிட்டீ எனும் இனம் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் இனமாகும். நீண்ட, உருளை வடிவ உடல் அமைப்பு கொண்ட இவை, இருபக்க சமச்சீரமைப்பு கொண்டவையாகும். இவ்வகை மண்புழு சுமார் 80 மி.மீ முதல் 210 மி.மீ வரையிலான நீளத்தையும், 3.5 முதல் 5 மி.மீ வரையிலான விட்டத்தினையும் உடையவை. வெளிறிய பழுப்பு நிறம் கொண்ட இவற்றின் முன் முனைப் பகுதியில் ஊதா நிறப் பூச்சும் உண்டு. இதற்குப் போர்ஃபைரின் என்னும் நிறமி காணப்படுவதே காரணமாகும். புழுவின் நீண்ட உடலின் குறுக்காகப் பல சிறுபள்ளங்களால் ஆன வளைய வடிவிலான வரிப் பள்ளங்கள் உள்ளன. இவையே, புழுவின் உடலைப் பல பிரிவுகளாகப் பிரிக்கின்றன. இப்பிரிவுகளுக்கு 'கண்டங்கள்' (மெட்டாமியர்கள்) என்று பெயர் (படம் 4.2).


ஒரு மண்புழுவின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை சுமார் 165 முதல் 190 வரை ஆகும். புழுவின் முதுகு புறத்தின் மைய நீள்வாட்டு அச்சில், அடர்த்தியான நிறமுடைய, முதுகுப்புற இரத்த நாளத்தினாலான மையக் கோடு உள்ளது. இனப்பெருக்கத் துளைகளையுடையதால் வயிற்றுப் புறப் பரப்பு சிறப்புடையதாகும். உடலின் முதல் கண்டமான, பெரிஸ்டோமியத்தின் (Peristomium) மையப் பகுதியில் வாய் அமைந்திருக்கிறது. வாயின் முன்பகுதியில். சிறு தசைத் தொங்கல் ஒன்று உள்ளது. இதற்குப் புரோஸ்டோமியம் (Prostomium) அல்லது மேலுதடு என்று பெயர். மலவாய் அமைந்துள்ள கடைசி கண்டம் பைஜிடியம் (Pygidium) என்று அழைக்கப்படுகிறது.

முதிர்ச்சியடைந்த புழுக்களில், 14 முதல் 17 வரையிலான கண்டங்களின் சுவர் சற்றே பருத்து, தடித்த தோல் சுரப்பிகளுடன் காணப்படுகிறது. இப்பகுதிக்கு 'கிளைடெல்லம்' (Clitellum) என்று பெயர். கருமுட்டைகளை உருவாக்க இப்பகுதி துணைபுரிகிறது. புழுவில் கிளைடெல்லம் இருப்பதால் அதன் உடலை, கிளைடெல்ல முன்பகுதி (1 முதல் 13 வரையிலான கண்டங்கள்) கிளைடெல்ல பகுதி (14 முதல் 17 வரையிலான கண்டங்கள்) மற்றும் கிளைடெல்ல பின்பகுதி (18 ஆம் கண்டம் முதல் இறுதி வரை) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்க முடிகிறது. முதல் கண்டம், கடைசி கண்டம் மற்றும் கிளைடெல்லம் பகுதியைத் தவிர மற்றெல்லாக் கண்டங்களிலும் ஒவ்வொரு கண்டத்தின் மையப்பகுதியில் வளையம் போன்று கைட்டினாலான உடல் சீட்டாக்கள் காணப்படுகின்றன (படம் 4.2). ஒவ்வொரு சீட்டாவும் தோலில் உள்ள சீட்டாவிற்கான பையிலிருந்து தொடங்கி, பின்வளைந்து 'S' வடிவம் கொண்டுள்ளது. சீட்டாக்களை வெளியே நீட்டவும், உள்ளிழுத்துக் கொள்ளவும் முடியும். இவற்றின் முதன்மைப் பணி இடப்பெயர்ச்சியாகும்.

உடலின் புறத்தே, வாய், மலவாய். முதுகுப்புறத் துளைகள், விந்துகொள்பை திறப்புகள், இனப்பெருக்கத் திறப்புகள் மற்றும் நெஃப்ரீடிய துளைகள் (கழிவு நீக்கத் துளைகள்) ஆகிய பல புறத் துளைகள் உள்ளன. பத்தாவது கண்டத்திலிருந்தே முதுகுப் புறத் துளைகள் காணப்படுகின்றன. இத்துளைகளின் வழியாக உடற்குழி திரவம் வெளியேறி உடலினை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்கிறது. அதுமட்டுமல்லாது உடலின் மீதான நுண்ணுயிரிகளின் தொற்றுகளிலிருந்தும் இத்திரவம் பாதுகாக்கிறது. 6 வது மற்றும் 7வது, 7வது மற்றும் 8வது, 8வது மற்றும் 9வது ஆகிய கண்டங்களுக்கிடையே மூன்று இணை சிறு, வயிற்றுப் புற பக்கவாட்டுத் துளைகள் காணப்படுகின்றன. இவையே விந்துகொள்பை திறப்புகள் ஆகும். 14வது கண்டத்தின் வயிற்றுப் பகுதியில் ஓரிணை பெண் இனப்பெருக்கத் துளைகளும் 18 வது கண்டத்தின் பக்க-வயிற்றுப் பகுதியில் ஓரிணை ஆண் இனப்பெருக்கத்துளைகளும் காணப்படுகின்றன. கழிவு நீக்கத்திற்கான நெஃப்ரீடியத்துளைகள், எண்ணற்றவை. சில முன் பகுதி கண்டங்களைத் தவிர, உடலின் பிற எல்லாக் கண்டங்களிலும் உள்ள இத்துளைகளின் வழியாக வளர்சிதை மாற்றக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

11th Zoology : Chapter 4 : Organ and Organ Systems in Animals : Morphology of Earthworm (Lampito mauritii) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் : புறத்தோற்றம் (Morphology) - மண்புழு - லாம்பிட்டோ மாரிட்டீ - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 4 : விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்