Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | பிளாட்டோ (Plato) (கி.மு (பொ .ஆ.மு.427-(கி.மு) பொ .ஆ.மு.347)
   Posted On :  03.10.2023 09:11 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை

பிளாட்டோ (Plato) (கி.மு (பொ .ஆ.மு.427-(கி.மு) பொ .ஆ.மு.347)

பிளாட்டோவின் படைப்புகள் - பிளாட்டோவின் சிந்தனை - லட்சிய அரசு (Ideal State) - நீதி பற்றிய கருத்து (Idea of Justice) - கல்வி பற்றிய கருத்தாக்கம் (Concept of Education) - மக்களாட்சி பற்றிய கருத்துக்கள் - அரசமைப்புக்களை வகைப்படுத்துதல் - குழந்தைகள் வளர்ப்பு - பிளாட்டோவின் தர்க்கவாத முறை (Plato's Dialectical Method) - மதிப்பீடு

அலகு

அரசியல் சிந்தனை



கற்றலின் நோக்கங்கள்

பிளாட்டோவின் அரசியல் சிந்தனையைப் புரிந்துகொள்ளுதல்

அவரின் சிந்தனையைத் தற்கால சூழலில் செயல்படுத்துதல்

அரசு, அரசாங்கம், நீதி, கல்வி, பொதுவுடைமை பற்றிய பிளாட்டோவின் கருத்துக்கள் மீதான அறிவைப் பெருக்குவதாகும்.


பிளாட்டோ (Plato) 

(கி.மு (பொ ..மு.427-(கி.மு) பொ ..மு.347)


சாக்ரடீசின் மாணவர் 

அகாடெமியைத் தோற்றுவித்தார் - இது முதலாவது உயர்கல்வி நிறுவனமாகும்

தற்பொழுது வரை தனது படைப்புகள் நீடித்திருக்க கூடிய முதலாவது மேற்கத்திய சிந்தனையாளர்

சாக்ரடீசைப் பற்றி நாம் அறிவதன் பெரும் பகுதி பிளாட்டோவின் படைப்புக்களால் ஆகும்

இவ்வுலகைப் புரிந்துகொள்ள கணிதம் அடிப்படையானது என்ற பிதாகரசின் கருத்தினை ஏற்றுக்கொண்டார்.

பிளாட்டோ கி.மு. 427-ல் பிறந்தார். இவர் கிரேக்க நகர அரசில் உள்ள ஏதென்சில் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் 'அரிஸ்டோகிள்ஸ்' (Aristocles) என்பதாகும். இது அவருடைய தாத்தாவின் பெயராகும். சில வரலாற்று அறிஞர்கள், பிளாட்டோவின் பயிற்சியாளரான ஆர்காசின் அரிஸ்டன் (Ariston of Argos) என்பவர் பிளாட்டோவின் பரந்த உடலமைப்பின் காரணமாக அவரை பரந்த எனப் பொருள்படும் 'பிளாட்டோன்' (Platon) எனப்பெயரிட்டு அழைத்ததாகக் கூறுகின்றனர். இவர் கிரேக்கத்தின் முன்னணித் தத்துவ ஞானிகளில் ஒருவரான சாக்ரடீசின் சீடராவார். இவருடைய காலத்தில் கிரேக்கத்தின் நகர அரசான ஏதென்சின் அரசியல் வாழ்வு பெரும் குழப்பம் நிறைந்ததாக இருந்தது. இதன் விளைவாக ஏதென்சின் அரசாங்கம் சாக்ரடீசின் போதனைகளுக்காக அவருக்கு மரணதண்டனை அளித்தது. இது பிளாட்டோவின் ஏதென்ஸ் அரசியல் பற்றிய பார்வையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

பிளாட்டோ தனது 'அகாடெமியை' (Academy) பொ..மு.387ஆம் ஆண்டுவாக்கில் தோற்றுவித்தார். அக்காலத்தில் ஏதென்சின் மிகவும் புகழ்வாய்ந்த நபரான 'அகடெமோஸ்' (Akademos) என்பவரின் பெயரால் 'அகாடெமி' அமைந்தது. இதில் பிளாட்டோ அரசியல், நன்னெறி, கணிதம் மற்றும் சமூகவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல் தத்துவத்தினைப் போதித்தார்.


பிளாட்டோவின் படைப்புகள்

குடியரசு (The Republic) (கி.மு 386), ராஜதந்திரி (The Statesman)-(கி.மு360) மற்றும் சட்டங்கள் (The Laws)-(கி.மு 347) ஆகியவை பிளாட்டோவின் மூன்று முக்கியப்படைப்புகளாகும். இப்படைப்புகளைத் தவிர பல சிறிய புத்தகங்களையும் பிளாட்டோ எழுதியுள்ளார்


பிளாட்டோவின் சிந்தனை

பிளாட்டோவின் முக்கியக் கருத்துகளை அவரது மூன்று முக்கியப் படைப்புகளில் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்.


லட்சிய அரசு (Ideal State)

'அரசு' என்பது அரசியல் அறிவியலைக் கட்டியெழுப்பும் மிக முக்கியமான கருத்தாக்கமாகும். அவரைப் பொறுத்தவரை லட்சிய அரசு (பிளாட்டோவின் கூற்றுப்படி மனிதன் வாழ்வதற்கு மிகவும் உகந்த அரசு) என்பது ஆளும் வர்க்கம், இராணுவ வர்க்கம் மற்றும் பொருளாதார வர்க்கம் என மூன்று வர்க்கங்களைக் கொண்டதாகும். இது எவ்வாறு சாத்தியம் என அவர் தனது பின்வரும் நீதி மற்றும் கல்வி பற்றிய கருத்துக்களில் விவரிக்கிறார்.


நீதி பற்றிய கருத்து (Idea of Justice)

நீதி என்பது ஒரு தனி மனிதனிடம் மட்டுமல்லாமல் அரசிடமும் இருக்கவேண்டும் என பிளாட்டோ நம்புகிறார். ஒவ்வொரு மனிதனிடமும் மூன்று தகுதிகள் வெவ்வேறு விகிதாச்சாரங்களில் இயல்பாக அமைந்திருப்பதாகக் கூறுகிறார். அவை ஒரு மனிதனின் தலைப்பகுதியை உறைவிடமாகக் கொண்ட பகுத்தறிவு, இதயத்தை உறைவிடமாகக் கொண்ட உத்வேகம் மற்றும் வயிற்றுப்பகுதியை உறைவிடமாகக் கொண்ட உணவு நாட்டம் ஆகியவை ஆகும். இவையே மனித ஆத்மாவின் மூன்று பாகங்களாகும் எனக் கூறுகிறார். முதலாவதாக, உண்மையான நீதி என்பது ஒரு மனிதனை முழுமையாக்க இம்மூன்று பகுதிகளும் தங்களின் பணிகளை சரியாகச் செய்யவேண்டும் என்றார். இரண்டாவதாக, ஒரு மனிதனிடம் உள்ள இம்மூன்று பகுதிகளும், அரசிடம் பிரதிபலிக்க வேண்டும் என்றார். ஏனென்றால் அரசு என்பது ஒட்டுமொத்த மனிதர்களையும் முழுமையாக உள்ளடக்கியதாகும். இதனால் தான் ஆளும் வர்க்கம், இராணுவ வர்க்கம் மற்றும் பொருளாதார வர்க்கம் ஆகியவற்றுடன் பிளாட்டோவின் லட்சிய அரசு உருவாக்கம் பெற்றது.


மனிதன் 

பகுத்தறிவு 

உத்வேகம்

உணவு நாட்டம் 

அரசு 

ஆளும் வர்க்கம் 

இராணுவ வர்க்கம் 

துணை வர்க்கம்


கல்வி பற்றிய கருத்தாக்கம் (Concept of Education)

குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்த பருவம் வரை மாணவர்களின் வயதுக்குத் தகுந்த பல்வேறு நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கல்வி முறையை பிளாட்டோ வடிவமைத்தார். மனிதர்களுடைய ஆன்மாவின் மூன்று பகுதிகளான பகுத்தறிவு, உத்வேகம் மற்றும் உணவு நாட்டம் ஆகியவற்றின் விகிதங்கள் அடிப்படையில் கல்வியின் உயர்நிலைகளில் வெளியேற்ற முறையினை உருவாக்கியுள்ளார். அரசின் பொருளாதாரக் கடமைகளை நிறைவேற்றத் தகுந்தோர் கண்டறியப்பட்டு ஆட்சி மற்றும் இராணுவப் பணிகளில் இருந்து பிரிக்கப்படுவர். இரண்டாம் கட்டமாக தகுதியற்றவர்கள் நீக்கப்பட்டு ஆள்வதற்குத் தகுந்தவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு பிளாட்டோவின் லட்சிய அரசினை ஆளுவதற்கான தத்துவ அரசனாக உருவாக்கப்படுகின்றனர்.


ஒவ்வொரு தத்துவ ஞானியும் அவர் வாழ்ந்த காலத்தின் வெளிப்பாடாவார். கிரேக்கத்தின் மிகப்பெரும் ஞானியான சாக்ரடீசின் படுகொலையால் பிளாட்டோ மக்களாட்சியின் மீது அவமதிப்புக் கொண்டார். அதனால் மக்களாட்சிக்குப் பதிலாக தத்துவ ஞானிகளின் ஆட்சி மீது நம்பிக்கை கொண்டார்.


மக்களாட்சி பற்றிய கருத்துக்கள்

பிளாட்டோ தனது குடியரசு என்னும் நூலில் மக்களாட்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து யாதெனில் அனைவரும் ஆள்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல. ஆள்வதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற தத்துவ அரசர்களே ஆட்சி செய்யவேண்டும். ஏதென்சின் மக்களாட்சியே தனது ஆசிரியரான சாக்ரடீஸ் கொல்லப்படக் காரணம் என பிளாட்டோ எண்ணியதே அவர் மக்களாட்சிக்குக் கண்டனம் தெரிவிக்க காரணமாகும்


அரசமைப்புக்களை வகைப்படுத்துதல்

பிளாட்டோவின் கருத்துப்படி அரசமைப்பு என்பது ஓர் சமுதாயத்திலுள்ள மக்கள் தங்களின் நலனுக்காக குறிப்பிட்ட வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதாகும். இது சமூகப் பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள், நடைமுறைகள் மற்றும் இவற்றினை மேற்பார்வையிடும் அரசியல் மற்றும் அரசாங்கத்தினை உள்ளடக்கியதாகும். பிளாட்டோதான் வாழ்ந்த காலத்தில் உலகத்தின் பல பகுதிகளில் இருந்த அரசமைப்புக்களை உள்ளவாறே விவாதித்தார். இவர் அரசமைப்புக்களை பிரபுக்களாட்சி, புகழ் விரும்புபவர் ஆட்சி, சிறுகுழு ஆட்சி, மக்களாட்சி மற்றும் கொடுங்கோலாட்சி என ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார். அவர் கூறுகையில் பிரபுக்களாட்சி தன் இயல்பிலிருந்து சிதைவுற்று புகழ் விரும்புபவர் ஆட்சியாகவும், பின்னர் அது சிறுகுழு ஆட்சியாக உருமாறி அதன் பின்னர் மக்களாட்சியாகிறது. மக்களாட்சியும் தன் பண்பிலிருந்து சிறைவுறும்போது கொடுங்கோலாட்சி ஆகிறது என்கிறார்.


குழந்தைகள் வளர்ப்பு

பிளாட்டோவின் கூற்றுப்படி குழந்தைகளை தேசியச் சொத்துக்களாகக் கருதி அவர்களின் மனப்பாங்கிற்குத் தக்கவாறு வளர்ப்பது அரசின் கடமையாகும் என்று கூறுகிறார்.


பிளாட்டோவின் தர்க்கவாத முறை (Plato's Dialectical Method)

பிளாட்டோ தனது 'குடியரசுநூலில் இம்முறையினைப் பின்பற்றினார். இவர் இந்நூலினை எழுதும் போது தம்மை ஒரு மாணவனாகக் கருதி கேள்விகள் கேட்க ஓர் ஆசிரியராக சாக்ரடீஸ் அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளார். ஓர் ஆசிரியர் அனைத்தும் அறிந்தவராக பாடத்தினை மாணவர்களுக்குக் கற்பிக்கும் "அறிவு போதனை "(Didactics)  போலன்றி 'தர்க்கவாதம்' (Dialectics) என்பது கேள்வி பதில் முறையிலானதாகும். இம்முறையில் சிலவற்றைப் பற்றிய தெளிவற்ற சிந்தனையில் மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்பர். அதற்கு ஆசிரியர்கள் அளிக்கும் பதிலில் இருந்து மீண்டும் கேள்விகள் கேட்பர். இதன்மூலமாக மாணவர்கள் தங்களின் கருத்தினை உருவாக்கவும், மறுஉருவாக்கம் செய்யவும் ஆசிரியர் உதவி செய்கிறார். இறுதியாக மாணவர்கள் ஓர் கருத்தைப் பற்றிய சரியான புரிதலுக்கு வருகின்றனர்.


மதிப்பீடு

பிளாட்டோ முதல் தத்துவஞானி மட்டுமல்லாமல் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடத்தகுந்த படைப்புகளையும் முற்காலத்தில் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். மக்களுக்குத் தொல்லை தரக்கூடிய பல்வேறு விஷயங்களைக் கேள்விகளாகக் கேட்டு அதற்கான பதில்களை அளிப்பதில் தம் பெரும் பகுதி நேரத்தைச் செலவழித்தார். அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் காலங்களைக் கடந்தும் தீவிரமான தாக்கத்தினை ஏற்படுத்துபவராக பிளாட்டோ கருதப்படுகிறார்.


11th Political Science : Chapter 7 : Political Thought : Plato (428/427 - 348/347 BCE) - Political Thought in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை : பிளாட்டோ (Plato) (கி.மு (பொ .ஆ.மு.427-(கி.மு) பொ .ஆ.மு.347) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 7 : அரசியல் சிந்தனை