Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | இனக்கூட்டத்தின் இயல்புகள்

உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் - இனக்கூட்டத்தின் இயல்புகள் | 12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population

   Posted On :  21.05.2022 05:17 am

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்

இனக்கூட்டத்தின் இயல்புகள்

ஒரு அலகுப் பரப்பில், குறிப்பிட்ட காலத்தில் வாழும் இனக்கூட்டத்தின் அளவு இனக்கூட்ட அடர்த்தி எனப்படும்.

இனக்கூட்டத்தின் இயல்புகள்


இனக்கூட்டத்தின் அடர்த்தி (Population density) 

ஒரு அலகுப் பரப்பில், குறிப்பிட்ட காலத்தில் வாழும் இனக்கூட்டத்தின் அளவு இனக்கூட்ட அடர்த்தி எனப்படும். இயற்கையான வாழிடத்தில் வாழும் ஒரு சிற்றினத்தின் மொத்த எண்ணிக்கை அதன் இனக்கூட்ட அடர்த்தி எனப்படும். ஒரு இனக்கூட்டத்தின் அளவினைப் பல்வேறு முறைகளில் அளவிடலாம். அவை மொத்த எண்ணிக்கை (உயிரினங்களின் உண்மையான எண்ணிக்கை),எண்ணிக்கை அடர்த்தி (ஒரு அலகுப் பரப்பு அல்லது கொள்ளளவில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை ) மற்றும் உயிர்த்திரள் அடர்த்தி (ஒரு குறிப்பிட்ட பரப்பு அல்லது கொள்ளளவில் உள்ள உயிர்த்திரள் அடர்த்தி) ஆகும். ஒரு சிற்றினத்தைச் சேர்ந்த இனக்கூட்டத்தின் அடர்த்தியை ஒரு சிற்றினத்திற்குக் கிடைக்கக்கூடிய வாழிடத்தின் உண்மையான பரப்பினைக் கொண்டும் குறிக்கலாம். ஒரு இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்களின் அளவு ஒப்பீட்டளவில் சீராக இருந்தால் அதன் அடர்த்தியை உயிரினங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வெளிப்படுத்தலாம் (எண்ணிக்கை அடர்த்தி).




பிறப்பு வீதம் (Natality) 

பிறப்பு வீத அதிகரிப்பால் இனக்கூட்ட அளவு அதிகரிக்கிறது. பிறத்தல், பொரித்தல், முளைத்தல் அல்லது பிளவுறுதல் ஆகிய செயல்களின் காரணமாக புதிய உயிரினங்கள் உருவாவதை வெளிப்படுத்துவதே பிறப்பு வீதம் ஆகும். இனப் பெருக்கத்தின் இரண்டு முக்கிய காரணிகள் கருவுறும் திறன் (Fertility) மற்றும் இனப்பெருக்கத் திறன் (Fecundity) ஆகியவை ஆகும். பிறப்பு வீதத்தை சீரமைக்கப்படாத பிறப்பு வீதம் மூலம் வெளிப்படுத்தலாம். சீரமைக்கப்படாத பிறப்பு வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பெண் உயிரிக்குப் பிறக்கும் உயிரிகளின் எண்ணிக்கை ஆகும்.



இறப்பு வீதம் (Mortality)

இறப்பு வீதம் என்பது பிறப்பு வீதத்துக்கு எதிரான இனக்கூட்டத்தொகை குறைப்புக் காரணி ஆகும். இறப்பு வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் இழக்கப்படும் உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். பொதுவாக இறப்பு வீதம் என்பது குறித்த இறப்பு வீதமாக வெளிப்படுத்தப்படும். அதாவது குறிப்பிட்ட கால கட்டம் கடந்த பின்பு ஒரு மூல இனக்கூட்டத்தில் இறந்துவிட்ட உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். சீரமைக்கப்படாத இறப்பு வீதத்தை கீழ்க்கண்ட சூத்திரத்தால் கணக்கிடலாம். 



ஒரு உயிரினத் தொகையின் இறப்பு வீதம் அதன் அடர்த்தியால் நிர்ணயிக்கப்படுகிறது. உயிரினத் தொகையின் அடர்த்தி அதிகமாகும்போது இட நெருக்கடி, கொன்று தின்னும் பண்பு அதிகரித்தல் மற்றும் நோய் பரவல் காரணமாக இறப்பு வீதமும் அதிகரிக்கிறது.

இறப்பு வீதம் சிற்றினத்திற்கேற்ப மாறுபடும். கூடுகள், முட்டைகள் அல்லது இளம் உயிரினங்கள் ஆகியன அழிவதற்குக் காரணமான புயல், காற்று, வெள்ளம் கொன்று தின்னிகள், விபத்துக்கள் மற்றும் பெற்றோரால் தனித்து விடப்படுதல் ஆகிய பலகாரணிகள் இறப்பு வீதத்தைத் தூண்டுகின்றன.


இனக்கூட்டப் பரவல் (Population dispersion) 

தடை ஏற்படும் வரை தொடர்ந்து அனைத்துத் திசைகளிலும் இனக்கூட்டம் பரவும் இயல்புடையது. இதனை உள்ளே வருதல் (உள்ளேற்றம்) இனக்கூட்டதிலிருந்து வெளியேறுதல் (வெளியேற்றம்) ஆகிய நிகழ்வுகளால் உணரலாம். 


வலசை போதல் 

வலசைபோதல் என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும், மீண்டும் பழைய இடத்திற்குமான பெருமளவிலான உயிரினங்களின் தனித்துவமான இயக்கத்தை / நகர்வைக் குறிக்கும். சைபீரியாவில் வாழும் சைபீரியக் கொக்குகள், கடுமையான பனிக்காலக் குளிரைத் தவிர்க்கும் பொருட்டு சைபீரியாவிலிருந்து தமிழ்நாட்டின் வேடந்தாங்கலுக்கு வருகை தந்து பின்பு வசந்த காலத்தின்போது திரும்பச் செல்கின்றன. சால்மன் போன்ற மீன்கள் கடல் நீரிலிருந்து நன்னீருக்கும் (நன்னீர் நோக்கி வலசைபோதல் - அனாட்ராமஸ்) விலாங்கு போன்ற மீன்கள், நன்னீரிலிருந்து கடல் நீருக்குமாய் (கடல் நீர் நோக்கி வலசைபோதல் - கட்டாட்ராமஸ்) வலசை போகின்றன.


குடிப்பெயர்ச்சி / வெளியேற்றம்

இயற்கையான சூழலில் இடநெருக்கடி காரணமாக வெளியேற்றம் நிகழ்கிறது. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உயிரினத் தொகையைக் கட்டுப்படுத்தி, அவ்வாழிட வளங்களின் வரையறையற்ற பயன்பாட்டைத் தடுக்கும் தகவமைப்புப் பண்பு ஆகும். மேலும் இது புதிய வாழிடங்களைக் கண்டறியவும் பயன்படும். 


குடியேற்றம் / உள்ளேற்றம்

குடியேற்றம் காரணமாக இனக்கூட்டத்தின் அளவு அதிகரிக்கும். இனக்கூட்டத்தின் அளவு தாங்கு திறனை விட அதிகரித்தால் உள்ளேறிய உயிரினங்களின் இறப்பு வீதம் அதிகரிக்கும் அல்லது உயிரினங்களின் இனப்பெருக்கத்திறன் குறையும். 

உள்ளேற்றம் மற்றும் வெளியேற்றம் ஆகிய இரண்டு நிகழ்வுகளும் தட்ப, வெப்பநிலை மற்றும் பிற உயிரற்ற மற்றும் உயிர்க் காரணிகளால் தூண்டப்படுகின்றன.


Tags : Organisms Reproductive and Population உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்.
12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population : Population Attributes Organisms Reproductive and Population in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : இனக்கூட்டத்தின் இயல்புகள் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்