உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் - இனக்கூட்டச் சார்பு | 12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population
இனக்கூட்டச் சார்பு (Population interaction)
வெவ்வேறு இனக்கூட்டத்தைச் சேர்ந்த உயிரினங்கள் உணவு, வாழிடம், இணை மற்றும் பிற தேவைகளுக்காக ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. இத்தகைய சார்பு வாழ்க்கை சிற்றினங்களுக்குள்ளேயோ (ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கிடையே) அல்லது வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையேயோ (வெவ்வேறு சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களுக்கிடையே) ஏற்படுகின்றன.
சிற்றினங்களுக்குள்ளே உள்ள சார்பு உயிர்வாழ்வதற்குத் தேவையான உணவு, எல்லை உணர்வு, இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக ஏற்படுகின்றன.
சிற்றினங்களுக்கிடையே உள்ள சார்பு வாழ்க்கை அட்டவணை 11.3ல் குறிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையே உள்ள சார்பு கீழ்க்கண்ட வகைகளில் இருக்கலாம்.
நடுநிலை சார்பு: வெவ்வேறு சிற்றினங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் அவை ஒன்றையொன்று பாதிப்பதில்லை.
நேர்மறை சார்பு: இத்தகைய இணை வாழ்வில் தொடர்பு கொண்டிருக்கும் எந்த உயிரும் பாதிக்கப்படுவதில்லை, மற்றும் அவ்வாழ்க்கையால், ஒன்றோ அல்லது இரண்டுமோ நன்மையடைகின்றன. பகிர்ந்து வாழும் வாழ்க்கை மற்றும் உதவி பெறும் வாழ்க்கை என இச்சார்பு வாழ்க்கை இரு வகைப்படும்.
எதிர்மறைச் சார்பு: தொடர்புடைய ஒரு உயிரினம் அல்லது இரு உயிரினங்களும் பாதிப்படையும். எடுத்துக்காட்டு போட்டி, கொன்றுண்ணுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை.
கேடு செய்யும் வாழ்க்கை (-, 0) (Amensalism) இத்தகைய சூழலியல் சார்பில், பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒரு சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினம், எந்தவித பலனும் பெறாமல் மற்றொரு சிற்றின உயிரினத்திற்குக் கேடு விளைவிக்கிறது. எடுத்துக்காட்டு: யானையின் கால்களில் அழிக்கப்படும் சிறிய உயிரினங்கள்.
பகிர்ந்து வாழும் வாழ்க்கை (+, +) (Mutualism) இவ்வகை சார்பில் தொடர்புள்ள இரண்டு வெவ்வேறு சிற்றினத்தைச் சேர்ந்த விலங்கினங்களும் ஒன்று மற்றொன்றால் பலனடைகின்றன. இவ்வாழ்க்கை முறையில் ஈடுபட்டுள்ள சிற்றினங்கள் தனித்தனியாகவும் மற்றொன்றை சாராமல் சுதந்திரமாகவும் வாழ இயலும். (தன் விருப்பபகிர்ந்து வாழும் வாழ்க்கை) அல்லது இரு சிற்றினங்களில் ஒன்றில்லாமல் மற்றொன்று வாழ இயலாமல் இருக்கலாம் (கட்டாய பகிர்ந்து வாழும் வாழ்க்கை முறை)
எடுத்துக்காட்டுகள்:
* தாவர உண்ணிகளின் பெருங்குடல் பிதுக்கம் மற்றம் சிறுகுடலில் வாழும் சில பாக்டீரியாக்கள் செல்லுலோஸ் செரித்தலுக்கு உதவுகின்றன. விருந்தோம்பி உயிரி, பாக்டீரியாக்கள் பெருகத் தேவையான பாதுகாப்பான சூழலை வழங்குகின்றன.
* தாவரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகளும், பறவைகளும், பூக்களிலிருந்து பூந்தேன் மற்றும் மகரந்தத்தைப் பெறுகின்றன. இது வேளாண்மையில் முக்கியமான நிகழ்வு ஆகும்.
அட்டவணை 11.3 இரு சிற்றின கூட்டங்களுக்கிடையேயான சார்பை பகுப்பாய்தல்
* சிறிய பறவைகள் முதலையின் பற்களைச் சுத்தப்படுத்துகின்றன. இதில் பறவைகள் உணவைப் பெறுகின்றன, மற்றும் முதலைகளின் பற்கள் சுத்தமாகின்றது.
* துறவி நண்டு தனது ஓட்டின் மீது கடல் சாமந்தியைத் (நகராத குழியுடலி) தூக்கிச் செல்கிறது. கடல் சாமந்தியின் கொட்டும் செல்களால், நண்டு பாதுகாக்கப்படுகிறது.
அதே சமயம் கடல் சாமந்தி தன் உணவைப் பெறுகிறது (படம் 11.12).
உதவி பெறும் வாழ்க்கை (+, 0) (Commensatism)
இவ்வகையான விலங்கினத் தொடர்பில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உணவிற்காக இணைந்து வாழ்கின்றன. இவற்றில் ஒரு சிற்றின உயிரி நன்மை அடைகிறது. மற்றொரு சிற்றின உயிரி நன்மையோ, தீமையோ அடைவதில்லை. சமீப காலங்களில், இவ்வகை உயிரினத் தொடர்பு உணவுக்காக மட்டுமின்றி ஆதரவு, பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் இடப்பெயர்ச்சி போன்ற தேவைகளுக்காகவும் நிகழலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுகள்
* திமிங்கலத்தின் உடலில் ஒட்டியுள்ள பர்னக்கிள்கள், விருந்தோம்பியுடன் ஆயிரக் கணக்கான மைல்கள் இடம் பெயர்வதுடன், தனக்குத் தேவையான உணவையும் நீரிலிருந்து வடிகட்டி எடுத்துக் கொள்கிறது.
* எக்ரட் (கொக்குகள்) கால்நடைகள் மேயும் பகுதியிலேயே காணப்படும். இவை கால்நடைகளால் சலனப்படுத்தப்பட்ட பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. இதில் பறவைகள் பலனடைகின்றன. ஆனால் கால்நடைகள் பாதிக்கப்படுவதில்லை (படம் 11.13).
போட்டி (- -) (Competition)
இவ்வகை உயிரினத் தொடர்பில் ஒரே சிற்றின உயிரினங்களோ, வெவ்வேறு சிற்றின உயிரினங்களோ, குறைவாக உள்ள உணவு, நீர், கூடுகட்டும் பரப்பு, இருப்பிடம், இனப்பெருக்கத்துணை மற்றும் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காகப் போட்டியிடுகின்றன. ஒரு வாழிடத்தில் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தால் அங்கு வாழும் சிற்றினங்களுக்கிடையே போட்டி நிகழுவதில்லை. இயற்கை வளம் குறையும்போது அவ்வாழிடத்தில் வாழும் பலவீனமான, குறைவான தகவமைப்புகள் உடைய அல்லது குறைவான வன்நடத்தை உள்ள உயிரினங்கள் சவாலைச் சந்திக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றன. இந்நிகழ்ச்சி ஹார்டினின் ‘போட்டித் தவிர்ப்பு (Competitive exclusion) தத்துவம்’ எனப்படும் (படம் 11.14).
போட்டியின் வீச்சு
ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரினங்களக்கிடையே போட்டி மிகக் கடுமையாக இருக்கும். ஏனெனில், அவை ஒரே வகையான உணவு மற்றும் இணை போன்ற காரணிகளுக்காகப் போராட வேண்டியுள்ளது. எ.கா.ஆந்தைகள் உணவுக்காகப் போட்டியிடுதல்.
இரு வேறு சிற்றினங்களுக்கிடையே உள்ள போட்டி, அவ்வுயிரிகள் ஒரே வளம் அல்லது பொதுவான பிற காரணிகளுக்காகச் சார்ந்திருக்கும் போது மட்டுமே நிகழ்கிறது. போட்டியின் கடுமைத் தன்மை, வெவ்வேறு சிற்றினங்களின் தேவைகளில் உள்ள ஒற்றுமையின் அளவு, வாழிடத்தில் உள்ள வளங்களின் பற்றாக்குறை போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பறவைகள் மற்றும் அணில்கள் போன்றவை கொட்டைகள் மற்றும் விதைகளுக்காகப் போட்டியிடுதல், மற்றும் பூச்சிகள் மற்றும் குளம்புயிரிகள் ஆகியவை புல்வெளிகளில் உணவுக்காகப் போட்டியிடுதல்.
ஒட்டுண்ணி வாழ்க்கை (+, -) (Parasitism)
இருவேறு சிற்றினங்களுக்கு இடையே உள்ள இவ்வகைத் தொடர்பில் ஒரு சிற்றினம் ‘ஒட்டுண்ணி' எனவும் மற்றொன்று 'விருந்தோம்பி’ எனவும் அழைக்கப்படும். ஒட்டுண்ணி, விருந்தோம்பியைப் பாதிப்பதன் மூலம் பலனடைகிறது. ஒட்டுண்ணி தனக்குத் தேவையான இருப்பிடம், உணவு மற்றும் பாதுகாப்பை விருந்தோம்பியிடமிருந்து பெறுகின்றது. ஒட்டுண்ணிகள், விருந்தோம்பியைச் சுரண்டிப் பலன் பெற உரிய தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
ஒட்டுண்ணிகள் வைரஸாகவோ (தாவர/விலங்கு வைரஸ்கள் ) நுண்ணுயிரிகளாகவோ (எடுத்துக்காட்டு, பாக்டீரியா ஒரு செல் உயிரி / பூஞ்சை), தாவர ஒட்டுண்ணியாகவோ மற்றும் விலங்கு ஒட்டுண்ணியாகவோ (தட்டைப்புழுக்கள், உருளைப்புழுக்கள், கணுக்காலிகள்) இருக்கலாம். ஒட்டுண்ணிகள், விருந்தோம்பிகளின் மேல்பரப்பில் ஒட்டிக் கொண்டோ அல்லது வசிக்கவோ செய்யலாம். (புற ஒட்டுண்ணிகள் - பேன், அட்டை) அல்லது விருந்தோம்பியின் உடலுக்குள் வாழலாம் (அக ஒட்டுண்ணிகள் - அஸ்காரிஸ், தட்டைப்புழுக்கள்). பொதுவாக அக ஒட்டுண்ணிகள் உணவுப்பாதை, உடற்குழி, பல்வேறு உறுப்புகள், இரத்தம் அல்லது பிற திசுக்களில் வாழும்.
ஒட்டுண்ணிகள் தற்காலிக அல்லது நிரந்தர ஒட்டுண்ணிகளாக இருக்கலாம். தற்காலிக ஒட்டுண்ணிகள் தன் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதியை மட்டும் ஒட்டுண்ணியாகக்கழிக்கின்றன. எ.கா. அனடோனியாவின் (நன்னீர் மட்டியின்) கிளாக்கிடியம் லார்வா, மீன்களின் உடலின் மீது ஒட்டிக்கொண்டு வாழும். நிரந்தர ஒட்டுண்ணிகள் தன் வாழ்நாள் முழுவதும் விருந்தோம்பியைச் சார்ந்து வாழ்கின்றன. எ.கா. பிளாஸ்மோடியம், எண்டமீபா, உருளைப் புழுக்கள், ஊசிப்புழு, தட்டைப் புழுக்கள் போன்றவை.
கொன்றுண்ணி வாழ்க்கை (+, -) (Predation)
இவ்வகை உயிரினச் சார்பில் ஒரு விலங்கு மற்றொரு விலங்கை உணவுக்காகக் வேட்டையாடுகிறது. ஒட்டுண்ணி வாழ்க்கை போன்று கொன்றுண்ணி வாழ்க்கையும், சமுதாய செயல்பாடுகளுக்கு முக்கியமானது ஆகும். ஆனால் இத்தொடர்பில் வேட்டையாடும் விலங்கு, தனது இரையை விடப் பெரியதாகவும் வெளியிலிருந்து இரையைப் பிடிப்பதாகவும் இருக்கிறது. ஆனால் ஒட்டுண்ணி வாழ்க்கை முறையில் ஒட்டுண்ணி தன் விருந்தோம்பியை விடச் சிறியதாகவும், அதன் உடலுக்குள் / வெளியில் இருந்து உணவை பெறவும் செய்கிறது.
கொன்றுண்ணும் தன்மை அடிப்படையில் கொன்றுண்ணி விலங்குகள் சிறப்பான வகை மற்றும் பொதுவான வகை என பிரிக்கப்படுகிறது. சிறப்பு வகை சார்ந்த கொன்றுண்ணிகள் சில குறிப்பிட்ட சிற்றின விலங்குகளை மட்டுமே வேட்டையாடுகின்றன. சிங்கம் மற்றும் மான் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பு கொன்றுண்ணி - இரை தொடர்பு எனப்படும். இதில் சிங்கம் வேட்டையாடும் விலங்கு, மான் அதன் இரையாகும். இவ்வகையான தொடர்பு ஊட்டநிலைகளுக்கிடையே உணவாற்றலைக் கடத்தவும், இனக்கூட்டத்தை நெறிப்படுத்தவும் உதவும் (படம் 11.15).