உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் - தகவமைப்புகள் | 12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population

   Posted On :  24.03.2022 06:24 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்

தகவமைப்புகள்

உயிரியலில், தகவமைப்பு என்பது உயிரினங்களை அதன் சுற்றுச்சூழலுக்குப் பொருத்தமானதாக மாற்றும் பரிணாம நிகழ்ச்சி ஆகும். இது உயிரினங்களின் பரிணாமத்தகுதியை அதிகரித்து, அதனைச் சூழலுக்கேற்ப மாற்றும்.

தகவமைப்புகள் 

உயிரியலில், தகவமைப்பு என்பது உயிரினங்களை அதன் சுற்றுச்சூழலுக்குப் பொருத்தமானதாக மாற்றும் பரிணாம நிகழ்ச்சி ஆகும். இது உயிரினங்களின் பரிணாமத்தகுதியை அதிகரித்து, அதனைச் சூழலுக்கேற்ப மாற்றும். ஒவ்வொரு உயிரினத்திலும், பணியோடு தொடர்பு கொண்ட, புறத்தோற்றப் பண்பு அல்லது தகவமைப்புப் பண்பு பராமரிக்கப்படுகிறது. இப்பண்பு இயற்கை தேர்வு உருவாக்கியதாகும். 

உடல் அமைப்பு சார்ந்தவை, நடத்தை சார்ந்தவை மற்றும் உடற்செயலியல் சார்ந்தவை என தகவமைப்புப் பண்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


அ) உடல் அமைப்பு சார்ந்த தகவமைப்புகள்

உயிரினங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள அமைப்புகள் (உறுப்புகள்) அவற்றின் சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ள பெரிதும் உதவுகின்றன. உறை வெப்பநிலையில் வாழ்வதற்கேற்ப பாலூட்டிகள் கனத்த உரோமத்தைக் கொண்டுள்ளன என்பது இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். நிறமாற்றம் (Camouflage) மற்றும் ஒப்புமைப்போலி (Mimicry) போன்றவை இயற்கையின் மிகச் சிறந்த தகவமைப்பு முறைகள் ஆகும். நிறம் மாறும் விலங்குகள் சுற்றுச் சூழலின் நிறத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதால் அவற்றை எளிதாகக் கண்டறிய முடியாது. ஊர்வன விலங்கான பச்சோந்தி மற்றும் பூச்சியினத்தைச் சேர்ந்த குச்சிப்பூச்சி ஆகியன இவ்வகைத் தகவமைப்பை பெற்றவையாகும். இதனால், அவை எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளவும், இரையைப் பிடிக்கவும் முடிகிறது. குதிரையின் கால்கள் புல்வெளிகளிலும் தரைச்சூழல்களிலும் வேகமாக ஓடுவதற்கேற்ப அமைந்துள்ளது.


ஆ) நடத்தை சார்ந்த தகவமைப்புகள் 

விலங்குகளின் செயல்கள் மற்றும் நடத்தைகள் ஆகியவை உள்ளார்ந்த அல்லது கற்றுக்கொண்ட பண்புகள் ஆகும். தங்களின் உயிர்வாழ்க்கைக்காக, விலங்கினங்கள் நடத்தை சார்ந்த பண்புகள் அல்லது தகவமைப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன. கொன்றுண்ணிகளிடமிருந்து தப்பித்தல், மறைவான இடங்களில் உறங்குதல், காலநிலை மாறும் போது அடைக்கலம் தேடுதல் மற்றும் உணவு வளங்களைத் தேடித் திரிதல் ஆகியவை நடத்தை சார்ந்த சில பண்புகளாகும். வலசைபோதல் மற்றும் கலவி ஆகிய இரண்டும் முக்கியமான நடத்தை சார்ந்த தகவமைப்பு வகைகள் ஆகும். வலசைபோதல் நிகழ்ச்சி, விலங்கினங்கள், புதிய வளங்களைக் கண்டறியவும், அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்கவும் உதவும். கலவி என்பது இனப்பெருக்கத்திற்கான துணையை கண்டறிவதற்கான பல நடத்தை செயல்களின் தொகுப்பு ஆகும். இரவு வாழ் விலங்குகள் பகல் நேரங்களில் பூமிக்கு அடியில் வாழ்கின்றன அல்லது செயலற்றுக் இருக்கின்றன. இது அவ்விலங்கின் உணவூட்டம் மற்றும் செயல்முறை அல்லது வாழ்க்கை முறை அல்லது நடத்தையின் மாறுபாடு ஆகும்.

நடத்தையியல் என்பது, இயற்கையான சூழலில் விலங்கினங்களின் நடத்தை குறித்துப் படிக்கும் அறிவியல் பிரிவு ஆகும்.


இ) உடற்செயலியல் சார்ந்த தகவமைப்புகள்

இவை விலங்கினங்கள் தமக்குரிய தனித்துவமிக்க, சிறுவாழிடத்தை உள்ளடக்கிய சூழலில் சிறப்பாக வாழ்வதற்கு உதவும் தகவமைப்புகள் ஆகும். எடுத்துக்காட்டாக, வேட்டையாடவும், இறைச்சியைக் கிழிக்கவும் வசதியாக சிங்கங்களுக்கு கோரைப் பற்களும் பச்சை மாமிசத்தை செரிப்பதற்கான செரிமான மண்டலமும் அமைந்துள்ளன. குளிர்கால உறக்கம் மற்றும் கோடைகால உறக்கம் ஆகியவை விலங்குகளின் இரண்டு மிகச் சிறந்த உடற்செயலியல் சார்ந்த தகவமைப்புகள் ஆகும். இவ்விரண்டும் வெவ்வேறு வகை செயலற்ற தன்மை ஆனாலும், இச்செயல்களின் போது விலங்குகளின் வளர்சிதை மாற்ற வீதம் மிகக் குறைவாக இருப்பதால் அவற்றால் நீண்ட காலம் உணவு உண்ணாமலும், நீர் அருந்தாமலும் வாழ முடிகிறது. நீர் மற்றும் நில வாழிடங்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கென வெவ்வேறு வகை சுற்றுச்சூழல் நிலைகளைக் கொண்டுள்ளன. எனவே அங்கு வாழும் விலங்கினங்கள் தங்களுக்கான வாழிடங்களையும், சிறு வாழிடங்களையும் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக, பொருத்தமான தகவமைப்புப் பண்புகளை உருவாக்கி கொள்கின்றன. 


நீரில் வாழும் விலங்குகளின் தகவமைப்புகள் 

1. மீன்களின் இடுப்புத் துடுப்பு மற்றும் முதுகுத் துடுப்புகள் சமநிலைப் படுத்தவும், வால் துடுப்பு சுக்கானாகவும் (திசை மாற்றி) செயல்படுகின்றன.

2. மீன்களின் உடலில் உள்ள தசைகள்தொகுப்புகளாக (மையோடோம்கள்) இருப்பதால் அவை இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகின்றன. 

3. படகு போன்ற உடல் அமைப்பு நீரில் வேகமாக நீந்த உதவுகிறது. 

4. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனைச் சுவாசிக்க மீன்களின் செவுள்கள் உதவுகின்றன. 

5. காற்று நிரம்பிய காற்றுப் பைகள் மிதவைத்  தன்மைக்கு உதவுகின்றன. 

6. பக்கக்கோட்டு உணர்வுறுப்பு, அழுத்த உணர்வேற்பியாகச் செயல்படுகிறது. இவ்வமைப்பு நீரில் உள்ள பொருட்களை, எதிரொலியைப் பயன்படுத்திக் கண்டறியப் பயன்படும். 

7. கோழைச் சுரப்பிகளை அதிகமாகக் கொண்ட தோல், செதில்களால் மூடப்பட்டுள்ளது. 

8. கழிவுநீக்க உறுப்புகள் மூலம் இவை நீர் மற்றும் அயனிகள் சமநிலையைப் பேணுகின்றன. 


நிலவாழ் விலங்குகளின் தகவமைப்புகள் 

1. மண்புழு மற்றும் நிலவாழ் பிளனேரியாக்கள் போன்றவை வளை தோண்டுதல், சுருளுதல், சுவாசம் போன்ற பிற செயல்பாடுகளுக்காக ஈரப்பதம் மிக்க சூழலைத் தருவதற்காக உடலின் மேற்பரப்பில் கோழையைச் சுரக்கின்றன. 

2. கணுக்காலிகளில் சுவாசப் பரப்புகளுக்கு மேல் வெளிப்புறப் போர்வையும், நன்கு வளர்ச்சி பெற்ற மூச்சுக்குழல் மண்டலமும் காணப்படுகின்றன. 

3. முதுகெலும்பிகளின் தோலில் நன்கு பாதுகாக்கப்பட்ட சுவாசப் பரப்புகளுடன் பல செல் அடுக்குகளும் உள்ளன. இவை நீரிழிப்பைத் தடுக்க உதவுகின்றன. 

4. சில விலங்குகள், கழிவு நீக்கத்தின் போது ஏற்படும் நீரிழிப்பை ஈடு செய்ய உணவிலிருந்து நீரைப் பெறுகின்றன. 

5. பறவைகள் அதிக உணவு கிடைக்கும் மழைகாலம் துவங்கும் முன்பே கூடு கட்டுதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றன. வறண்ட காலத்தில் பறவைகள் அரிதாகவே இனப்பெருக்கம் செய்கின்றன.

6. தோல் மற்றும் சுவாசமண்டலம் உதவியினால் ஆவியாக்கிக் குளிர வைப்பதன் மூலமும் அதிக அடர்த்தியுள்ள சிறுநீரை உருவாக்குவதன் மூலமும் அதன் உடல் எடையில் 25% நீரிழப்பைத் தாங்கும் திறன் பெற்றிருப்பதன் மூலமும் ஒட்டகங்கள் நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றன.


Tags : Organisms Reproductive and Population உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்.
12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population : Adaptations Organisms Reproductive and Population in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : தகவமைப்புகள் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்