Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | உயிர்த் தொகை மற்றும் அவற்றின் பரவல் குறித்த கோட்பாடுகள்
   Posted On :  24.03.2022 06:18 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்

உயிர்த் தொகை மற்றும் அவற்றின் பரவல் குறித்த கோட்பாடுகள்

உயிர்த் தொகை என்பது, ஒரே மாதிரியான அல்லது பொதுவான தாவரங்கள் மற்றும் காலநிலையைக் கொண்ட புவியின் பெரும் பரப்பு ஆகும்.

உயிர்த் தொகை மற்றும் அவற்றின் பரவல் குறித்த கோட்பாடுகள் 

உயிர்த் தொகை என்பது, ஒரே மாதிரியான அல்லது பொதுவான தாவரங்கள் மற்றும் காலநிலையைக் கொண்ட புவியின் பெரும் பரப்பு ஆகும். பூமியில் உயிரினங்கள் நிலைத்து வாழ்வதில் இவை முக்கியப் பங்கேற்கின்றன. அப்பகுதியில் உள்ள மண், காலநிலை, தாவரங்கள் மற்றும் விலங்குகளால் உயிர்த்தொகை வரையறுக்கப்படுகின்றது. உயிர்த்தொகைகள் ஓரிடத்தின் இயற்பியல் - வேதியியல் காலநிலைக்கேற்ப உருவான தனித்துவமான உயிரிய சமுதாயங்களைக் கொண்டுள்ளன. உயிர்த்தொகை கண்டங்களுக்கிடையே கூடப் பரவியிருக்கின்றன. எனவே உயிர்த்தொகை என்பது வாழிடம் என்ற சொல்லை விட அகன்ற பொருள் கொண்டதாகும். ஒரு உயிர்த்தொகை பல்வேறு வகையான வாழிடங்களைக் கொண்டிருக்கும். ஒரு உயிர்த்தொகையில் வாழும் உயிரினங்களின் வகைகள் மற்றும் அதன் தகவமைப்புக்ளைத் தீர்மானிப்பது வெப்பநிலை, ஒளி மற்றும் நீர் வளம் ஆகிய காரணிகள் ஆகும் (படம் 11.4).



உயிர்த்தொகையின் பண்புகள்

* இருப்பிடம் /புவியியல் நிலை (அட்சக்கோடு மற்றும் தீர்க்கக்கோடு)

* காலநிலை மற்றும் இயற்பியல் - வேதியியல் சூழல் 

* முதன்மையாகக் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள்  

* உயிர் தொகைகளுக்கிடையே உள்ள எல்லையைத் துல்லியமாக வரையறை செய்யமுடியாது. புல்வெளி மற்றும் வன உயிர்த்தொகைகளில், சந்திக்கும் / இடைநிலைப் பகுதிகள் உள்ளன (படம் 11.5).



நீர் உயிர்த்தொகை

உயிர்க்கோளத்தில் 71% நீர் உயிர்த்தொகையே காணப்படுகிறது. நீர் உயிர்த்தொகையில் மில்லியன் கணக்கான மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரிகள் வாழ்கின்றன. கடலோர மண்டலங்களின் காலநிலைகளில் நீர்நிலைகள் தாக்கத்தை ஏற்படுத்துக்கின்றன.

புவியில் உள்ள நீர் உயிர்த் தொகை 

1. நன்னீர் (ஏரிகள், குளங்கள், ஆறுகள்) 

2. உவர் நீர் (கழிமுகப் பகுதி, ஈரநிலங்கள்) 

3. கடல் நீர் (பவளப்பாறைகள், மேற்கடற் பகுதிகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகள்)

நிலம் சார்ந்த உயிர்த்தொகை 

இவை பூமியின் தனிப்பட்ட நிலப்பகுதியில் வெவ்வேறு மண்டலங்களில் வாழும் பெருமளவிலான விலங்குகள் மற்றும் தாவர சமுதாயங்கள் ஆகும். இவற்றுள் புல்வெளிகள், பனிச்சமவெளிப் பகுதிகள், பாலைவனம், வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் இலையுதிர் ஊசியிலைக் காடுகள் ஆகியவை அடங்கும். நிலவாழ் உயிர்த்தொகையில் அதிக அளவு தாவரங்கள் காணப்படுகின்றன. இங்கு நிலவும் பருவநிலை, தாவரங்கள் பெருக்கத்தையும், தாவரப் பெருக்கம், இங்கு வாழும் உயிரினங்களையும் தீர்மானிக்கிறது. இப்பகுதியில். அந்தந்த உயிர்த்தொகைக்கு ஏற்ப முதன்மை சிற்றினங்களும் (Keystone) மற்றும் அடையாளம் காட்டும் சிற்றினங்களும் (Indicator species) காணப்படுகின்றன. இவை அந்தந்த உயிர்த்தொகைக்கான தனித்துவமான சிற்றினங்களாகும். நிலம் சார்ந்த உயிர்த் தொகை பருவ நிலையைக் கட்டுப்படுத்துவதோடு உணவு மற்றும் ஆக்சிஜன் வழங்கும் ஆதாரமாகவும் CO2 குறைப்பனாகவும் பயன்படுகிறது. 

பூமியில் உள்ள முக்கிய உயிர்த்தொகைகள் 

பனிச்சமவெளி உயிர்த்தொகை, பசுமைமாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை, புல்வெளி உயிர்த்தொகை,உயர்மலைச்சாரல், வன உயிர்த்தொகை மற்றும் பாலைவன உயிர்த்தொகை


பனிச்சமவெளி உயிர்த்தொகை (Tundra Biome) 

• இப்பகுதி, ஆசியாவின் வடக்குப்பகுதி, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மரங்களற்ற சமவெளி ஆகும்.

• குறுகிய பகல் பொழுதைக் கொண்ட குளிர்காலம் நீண்டதாகவும், நீண்ட பகல் பொழுதைக் கொண்ட கோடைக்காலம் குறுகியதாகவும் உள்ளது. 

• மழையளவு ஆண்டுக்கு 250 மிமீக்கும் குறைவாக உள்ளது. இப்பகுதி நிலைத்த உறைபனி மண்டலமாகும். 

• குட்டையான வில்லோ மரங்கள், பூச்சமரங்கள், பாசிகள், புற்கள், கோரைகள் ஆகிய தாவர இனங்கள் இங்கு காணப்படுகின்றன. 

• கலைமான்கள், ஆர்ட்டிக் முயல்கள், கஸ்தூரி எருது மற்றும் லெம்மிங்குகள் ஆகியவை பனிச்சமவெளியில் வாழும் தாவர உண்ணிகள் ஆகும். ஆர்ட்டிக் நரி, ஆர்ட்டிக் ஓநாய், சிவிங்கி பூனை (Bobcat) மற்றும் பனி ஆந்தை ஆகியவை இங்கு வாழும் முக்கிய விலங்குண்ணிகள் ஆகும். கடலோரப் பகுதிகளில் துருவக் கரடிகள் வாழ்கின்றன. 

• இங்கு குளிர்காலம் கடுமையாக இருப்பதால் பல விலங்குகள் வலசைபோகும் பண்பைக் கொண்டுள்ளன. கடலோரப் பறவைகள் மற்றும் வாத்துகள் போன்ற நீர்ப்பறவைகள் கோடைக்காலங்களில் பனிச்சமவெளிகளில் வசிக்கும்; குளிர்காலங்களில் தெற்கு நோக்கி வலசை போகும். 


பசுமை மாறா ஊசியிலைக் காடுகள் (டைகா உயிர்த்தொகை) (Taiga Biome)

• டைகா என்பது, பனிச்சமவெளியின் தென் பகுதியில், 1300-1450 கி.மீ அளவில் பரந்து காணப்படும் பகுதி ஆகும். 

• இப்பகுதி அதிகக் குளிர்மிக்க, நீடித்த குளிர்காலம் கொண்டது. கோடைகால வெப்பநிலை 10°C முதல் 21°C வரை இருக்கும். 

• இங்கு ஆண்டு மழையளவு 380-1000 மி.மீ ஆகும். 

• இப்பகுதியில் ஸ்புரூஸ், ஃபிர் மற்றும் பைன் போன்ற ஊசியிலை மரங்கள் காணப்படுகிறது. இப்பகுதி மரத் தொழிற்சாலைகளுக்கான மூல வளங்களாகும். 

• மூக்கு மான், கடம்பை மான் மற்றும் கலைமான்கள் போன்ற வலசைபோகும் தாவர உண்ணிகள் இப்பகுதியின் முக்கிய விலங்குகள் ஆகும். குளிர் காலங்களில் இப்பகுதியில் வாழும் கடமான் மற்றும் கலைமான்கள் போன்றவை கோடைகாலங்களில் பனிச்சமவெளி நோக்கியும், குளிர் காலங்களில் ஊசியிலைக் காடுகளை நோக்கியும் வலசை போகின்றன சிறிய தாவர உண்ணி பாலூட்டிகள், அணில்கள், வெண்பனி முயல்களான மற்றும் முக்கிய விலங்குண்ணிகளான பைன் மார்டென்கள், மரஓநாய்கள், பழுப்பு நிறக் கரடிகள், கருப்புக் கரடிகள், சிவிங்கிப் பூனை மற்றும் ஓநாய்கள் ஆகியன இப்பகுதியில் வாழ்கின்றன. (படம் 11.6).



உங்களுக்குத் தெரியுமா?

வரலாற்றின் பக்கங்களில், கால மாற்றங்கள் காரணமாக உயிர்த் தொகையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு : சஹாரா பாலைவனம். ஒரு காலத்தில் இப்பகுதி ஆறுகள் பாய்ந்த பசுமையான நிலப்பரப்பாக இருந்தது. அதனால், ஏராளமான மரவகைகளும், விலங்குகளான நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, முதலை போன்றவையும் இங்கு வாழ்ந்தன. காலப்போக்கில் காலநிலை வறண்டதால், இப்பகுதி புவிக்கோளின் மிகப்பெரிய பாலைவனமாக மாறிவிட்டது. இங்கு வாழ்ந்த விலங்குகள் சாதகமான சூழல் நிலவும் அருகிலுள்ள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். (மூலம்: நேஷனல் ஜியாக்ரபி)


புல்வெளி உயிர்த்தொகை (Grassland Biome)

.* மித வெப்பமண்டலம் மற்றும் வெப்பமண்டலப் பகுதிகளில் புல்வெளி உயிர்த்தொகை காணப்படுகிறது. 

* இப்பகுதி, வெப்பமானகோடைக்காலத்தையும் குளிர்ச்சியான குளிர்காலத்தையும், சீரற்ற மழையையும் கொண்டது.

* அதிகமான காற்று வீசுவது இப்பகுதியின் தனிப்பட்ட பண்பு ஆகும்.

* குறைவான சீரற்ற மழையே மித வெப்ப மண்டல இலையுதிர் காடுகளுக்கும் மிதவெப்ப மண்டல புல்வெளிக்கும் இடையேயான வேறுபாடுகளை உருவாக்கும் காரணியாகும். 

* மறிமான், காட்டெருமை, ஜாக் முயல், தரை வாழ் அணில் மற்றும் பிரைரி நாய்கள் போன்ற தாவர உண்ணிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. 

* கோயோட், ஓநாய்கள், பருந்துகள் மற்றும் பாம்புகள் ஆகியன முக்கிய வேட்டையாடும் உயிரிகள் ஆகும். 

* இந்தியாவில் யானைகள், இந்தியக் காட்டெருமை, காண்டாமிருகம் மற்றும் மறிமான்கள் ஆகியவை புல்வெளியில் வாழ்கின்றன. 

* இப்பகுதியில் உள்ள தாவர இனங்கள், ஊதாநிற ஊசிப்புல், காட்டு ஓட்ஸ், தினை, ரை புல் மற்றும் எருமை புற்கள் ஆகும் (படம் 11.7).

 


உயர்மலைச் சாரல் உயிர்த்தொகை (Alpine Biome)

* மரம் வளர் பகுதிக்கும் பனி சூழ் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியான உயர் மலைச்சாரல் பகுதியில் முறையே இறங்கு வரிசையில் பனி சூழ் பகுதிக்குக் கீழே உள்ள பகுதி, புல்வெளிப் பகுதி மற்றும் புதர்ப்ப குதி (மரம் வளர் பகுதியுடன் இணையும் பகுதி) ஆகிய பகுதிகள் உள்ளன.  

* இமயமலைப் பகுதியில் உள்ள பனி சூழ் பகுதி கடல் மட்டத்திலிருந்து 5100 மீ உயரத்திலும் உயர்மலைச்சாரல் பகுதி கடல் மட்டத்திலிருந்து 3600 மீ உயரத்திலும் உள்ளது. சூழலியல் நோக்கில், மரம் வளர் பகுதிக்கும் மேலே உள்ள பகுதியில் காணப்படும் அதீத சுற்றுச்சூழல் காரணிகள் இங்கு வாழும் உயிரினங்களைப் பாதிக்கின்றன. 

* இமயமலையில் உள்ள உயர் மலைச்சாரல் பகுதியில் விலங்கினங்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. இங்கு வாழும் முதுகு நாணற்ற விலங்குகள் பெரும்பாலும் கொன்றுண்ணிகளாகவும், ஏரிகள், ஓடைகள் மற்றும் குளங்களில் வாழ்வதாகவும் உள்ளன. முதுகு நாணுள்ளவைகளில் மீன்கள் மற்றும் இருவாழ்விகள் ஆகியவை இங்கு காணப்படவில்லை, ஊர்வன இன உயிரிகள் அரிதாகக் காணப்படுகின்றன. 

* உயர் மலைச்சாரல் பகுதியில் உள்ள தாவர வகைகள், உயர்மலைச்சாரல் பாசிலியா, கரடிப்புற்கள், முள்கூம்பு பைன், பாசி காம்பியன், பாலிலெபிஸ் காடு, குள்ள கசப்பு வேர் மற்றும் காட்டு உருளை ஆகியவை ஆகும்.


வன உயிர்த்தொகை (Forest Biomes)

அடர்த்தியான மரங்கள் கொண்ட பகுதி வனப்பகுதி எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது (படம் 11.8). வனப்பகுதி உயிர்த்தொகையில் வெவ்வேறு வகையான உயிரினக் கூட்டங்கள் காணப்படுகின்றன. வெப்ப மண்டலக்காடுகள் மற்றும் மிதவெப்ப மண்டலக் காடுகள் ஆகியவை முக்கியமான வன உயிர்த்தொகைகள் ஆகும். 


வெப்பமண்டலக் காடுகள் (Tropical Forest) 

* இவை நிலநடுக்கோட்டிற்கு அருகே (23.5o வடக்கு மற்றும் 23.5o தெற்கு அட்சக்கோடுகளுக்கு இடையில்) உள்ளன. 

* இங்கு நிலவும் தெளிவான காலநிலைகள் வெப்பமண்டலக் காடுகளின் தனித்தன்மை ஆகும். மழைக்காலம் மற்றும் வறண்ட காலம் ஆகிய இரண்டு காலநிலைகள் மட்டும் உள்ளன. குளிர்காலம் காணப்படுவதில்லை . பகல் நேர சூரிய வெளிச்சம் ஏறத்தாழ 12 மணி நேரம் உள்ளது. இது சற்றே மாறுபடக் கூடியது. 

* ஒரு ஆண்டிற்கான சராசரி வெப்பநிலை அளவு 20°C முதல் 25°C ஆகும். 

* ஆண்டு முழுவதும் மழைப்பொழிவு காணப்படும். ஆண்டு மழைப்பொழிவு 2000 மி.மீக்கும் அதிகமாக உள்ளது. 

* மண்ணில் ஊட்டச்சத்து குறைவாகவும், அமிலத் தன்மை அதிகமாகவும் காணப்படும். சிதைதல் விரைவாக நடைபெறுகிறது. மேலும் மண் அதிக அளவில் கரைந்து பிரியும் தன்மையுடையதாக காணப்படுகிறது.

* மரங்களின் கவிகை (Canopy) பல அடுக்குகள் உடையதாகவும், தொடர்ச்சியாகவும் உள்ளதால் மிகக் குறைந்த அளவு சூரிய வெளிச்சமே ஊடுருவுகிறது. 

* இப்பகுதியின் தாவர பல்வகைமைமிக அதிகமாக உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மரசிற்றினங்கள் உள்ளன. மரங்கள் 25-35மீ உயரம், தாங்கும் அமைப்புடைய தண்டுகள், ஆழம் குறைவாகச் செல்லும் வேர்கள் மற்றும் அடர்பச்சை நிறம் கொண்ட பசுமைமாறா இலைகளையும் கொண்டுள்ளன. இப்பகுதியில் ஆர்க்கிடுகள், நீள் நாரிழைச் செடி வகைகள், திராட்சை, பெரணிகள், பாசிகள் மற்றும் பனை வகைத் தாவரங்கள் ஆகிய காணப்படுகின்றன. 

* இப்பகுதியில் பறவைகள், வௌவால்கள், சிறிய பாலூட்டிகள் மற்றும் பூச்சிகள் உள்ளிட்ட அதிக விலங்கினப் பல்வகைமை காணப்படுகிறது.

பூமியில் பாதிக்கும் மேற்பட்ட வெப்ப மண்டலக் காடுகள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டன.




மித வெப்ப மண்டலக் காடுகள் (Temperate Forest)

* இக்காடுகள், வடகிழக்கு அமெரிக்கா, வட மேற்கு ஆசியா, மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா பகுதிகளில் காணப்படுகின்றன. 

* இங்கு நன்கு வரையறுக்கப்பட்ட பருவ காலங்களும் தனித்துவமான பனிக்காலமும் காணப்படுகின்றன. மிதமான காலநிலையும் மேலும் 4 முதல் 6 மாதங்கள் வரையிலான உறைபனியற்ற காலத்தில் 140 - 200 நாட்கள் வளர்ச்சிக் காலமாகவும் இருப்பதால் மிதவெப்பக்காடுகள் தனித்துவமிக்கதாக உள்ளன. 

* ஆண்டு வெப்பநிலை - 30°C முதல் 30°C வரை வேறுபடுகிறது.

* ஆண்டு முழுவதும் சீராக (750-1500மி.மீ), மழை பொழிகிறது. 

* மண் வளமுடையதாகவும், மட்கும் குப்பையினால் வளமேற்றப் பட்டதாகவும் இருக்கும் 

* மரங்களின் கவிகை அடர்த்தி மிதமாகவும், ஒளி ஊடுறுவலை அனுமதிப்பதாகவும் உள்ளது. இதனால் இங்கு நல்ல பரவலைக் கொண்ட பல்வேறு வகையான கீழ் அடுக்குத் தாவரங்களும், விலங்கின அடுக்கமைவும் காணப்படுகின்றன. 

* ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 3 முதல் 4 வெவ்வேறு சிற்றினங்களை சேர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. மரங்களின் இலைகள் அகலமாகவும், ஆண்டுதோறும் உதிரக் கூடியதாகவும் உள்ளன. இங்குள்ள தாவர வகைகள், ஓக், ஹிக்கரி, பீச், ஹெம்லாக், மேப்பிள், பால் மரக்கட்டை, பருத்தி, எல்ம், வில்லோ மற்றும் வசந்த காலத்தில் மலரும் சிறுசெடிகள் ஆகியனவாகும். 

* விலங்கினங்களில் அணில்கள், முயல்கள், முடைவளி மான் (ஸ்கங்க்), பறவைகள், கரடிகள், மலைச்சிங்கம், சிவிங்கி பூனை, மரஓநாய்கள், நரி மற்றும் கருப்பு மான்கள் ஆகியவை அடங்கும்.

பூமியில், ஆங்காங்கே காணப்படும் எஞ்சிய மித வெப்ப மண்டலக் காடுகளே தற்போது உள்ளன.


பாலைவன உயிர்த் தொகுதிகள் (Desert Biomes)

* பூமியில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனமாக உள்ளது. ஆண்டு மழையளவு 500 மிமீக்கும் குறைவாக உள்ள பகுதிகளில் இவை காணப்படுகின்றன. 

* மழைப்பொழிவு மிகக் குறைவாக இருக்கும் அல்லது நீண்ட மழையற்ற காலங்களுக்குப் பின் குறுகிய கால அளவிலும் இருக்கும். மழைப்பொழிவு வீதத்தை விட ஆவியாதல் வீதம் அதிகமாக காணப்படும். 

* மண், துகள் தன்மையுடையதாகவும், ஆழமற்றதாகவும், பாறைத் தன்மை அல்லது சரளைக்கற்கள் உடையதாகவும் காணப்படும். மண்ணின் நீர் கடத்து திறன் அதிகமாகவும், மேற்பரப்பின் அடிப்புறம் நீரின்றியும் உள்ளது. நுண்ணிய தூசி மற்றும் மணல் துகள்கள் காற்றினால் அடித்து செல்லப்படுவதால் பெரிய துகள்கள் மட்டும் தங்குகின்றன. பொதுவாக மணல் மேடுகள் உள்ளன. 

* ஆண்டின் சராசரி வெப்பநிலை 20°C முதல் 25°C ஆகும். உச்ச அளவு வெப்பநிலை 43.5°C முதல் 49°C வரையும், குறைந்த அளவு வெப்பநிலை சில நேரங்களில் -18°C வரையும் இருக்கும். வெப்பநிலையின் அடிப்படையில், வெப்பப்பாலைவனம் மற்றும் குளிர் பாலைவனம் என இருவகைகள் உள்ளன. 

வெப்பப்பாலைவனம்

* வட ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனம், தென்மேற்கு அமெரிக்கா மெக்சிகோ, ஆஸ்திரேலியாமற்றும் இந்தியாவில் உள்ள பாலைவனங்கள் (தார் பாலைவனம்) ஆகியவை அட்சக்கோட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள வெப்பப் பாலைவனங்கள் ஆகும். 

* வெப்பப் பாலைவனங்களில் சிறப்பு வகைத் தாவரங்களான (வறண்ட நில தாவரங்கள்) கற்றாழை,பாசிகள், சப்பாத்திக்கள்ளி சிற்றினம் மற்றும் யுஃபோர்பியா ராய்ளியானா ஆகியவை காணப்படும். சிறப்பு வகை முதுகுநாணுடைய மற்றும் முதுகுநாணற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. 

* வெப்பமான பாலைவனங்களில் ஊர்வன மற்றும் சிறிய விலங்குகள் காணப்படும். இந்திய முள்வால் பல்லிகள், கருப்பு மான், வெள்ளைக் கால் நரி, ஆகியவை தார் பாலைவனத்தில் காணப்படும் பொதுவான விலங்குகள் ஆகும். இவை தவிர பூச்சிகள், அரக்னிடுகள் மற்றும் பறவைகளும் காணப்படுகின்றன. 

குளிர் பாலைவனம்

* இவை அண்டார்டிக், கிரீன்லாந்து மற்றும் நியார்க்டிக் பகுதி, அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் மற்றும் இந்தியாவின் லடாக் பகுதிகளிலும் காணப்படுகின்றன. 

* இப்பகுதியில் அதிகமாகப் பரவுயுள்ள விலங்குகள் ஜாக் முயல், கங்காரு எலி, கங்காரு சுண்டெலி , பை சுண்டெலி, வெட்டுக்கிளி எலி, மறிமான்கள் மற்றும் தரை அணில்கள் ஆகியவையாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

சிலியில் உள்ள அடகாமா பாலைவனத்தில் மிகக் குறைந்த மழைப்பொழிவு காணப்படுகிறது. இங்கு ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 15 மிமீக்கும் குறைவாகும். சில ஆண்டுகளில் மழையே பொழிவதில்லை. சஹாரா பாலைவனத்தின் உட்பகுதியிலும் மழைப்பொழிவு ஆண்டிற்கு 15 மிமீக்கும் குறைவாக உள்ளது. அமெரிக்கப் பாலைவனங்களில் மழைப்பொழிவு சற்று அதிகமாகக் (ஆண்டுக்கு 280மி.மீ) காணப்படுகிறது.


12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population : Concept of biome and their distribution in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : உயிர்த் தொகை மற்றும் அவற்றின் பரவல் குறித்த கோட்பாடுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்