உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் - வாழிடம் | 12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population
வாழிடம் (Habitat)
வாழிடம் என்பது ஒரு உயிரினம் அல்லது உயிரினச் சமுதாயம் வாழும் இடத்தையும், அவற்றை சுற்றியுள்ள சூழ்நிலை மண்டலத்தில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளையும் குறிப்பிடுகிறது. ஒரு சிற்றினத்தின் அனைத்து வாழிடங்களின் தொகுப்பு 'புவிப்பரவல் வீச்சு' (Geographical range) எனப்படும். ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் உயிரிகள் தங்களுக்குள் இசைந்து வாழ்வதோடு, ஊட்ட நிலையின் ஒரு பகுதியாக இருந்து உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலையை உருவாக்குகின்றன.
எடுத்துக்காட்டு: வறண்ட வாழிடத்தில் வாழும் ஒட்டகம் அவற்றின் தோல் மற்றும் சுவாச மண்டலத்தின் உதவியால், ஆவியாக்கிக் குளிர வைத்தலுக்காக நீரைத் திறம்படப் பயன்படுத்துகின்றன. அவை அதிகச் செறிவுள்ள சிறுநீரை உருவாக்குவதோடு, அதன் உடல் எடையில் 25% வரை நீரிழப்பைத் தாங்கும் திறன் பெற்றவை. அவற்றின் குளம்புகள் மற்றும் திமில்கள், வறண்ட மணல் நிரம்பிய சூழலில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளன.
நீர்வாழிடத்தில், தன்னிலை காத்தல் (Homeostasis) மற்றும் ஊடுகலப்பு ஒழுங்குபாட்டை பராமரித்தல் ஆகியவை சவாலாக உள்ளன. அதனால் செல் சுருங்குவதைத் தடுப்பதற்கேற்ற பொருத்தமான தகவமைப்புகளைக் கடல் வாழ் விலங்குகள் பெற்றுள்ளன. அதே வேளையில் நன்னீர் வாழ் விலங்குகள் செல் வெடிப்பதைத் தடுப்பதற்கான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. இவை தவிர மீன்கள் போன்ற உயிரினங்கள், துடுப்புகள் (இடப்பெயர்ச்சி), நீந்துவதற்கேற்ற படகுபோன்ற உடல் அமைப்பு (இயக்கவியல்), பக்கவாட்டு உணர் உறுப்புகள் (உணர்வு), செவுள்கள் (சுவாசம்) காற்றுப் பைகள் (மிதவைத் தன்மை) மற்றும் சிறுநீரகம் (கழிவு நீக்கம்) என பல தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமிக்க வாழிடத்தைப் பெற்றிருப்பது போல் சுற்றுச்சூழலில் சிறு வாழிடத்தையும் பெற்றுள்ளது. அதில் அந்த உயிரினம், சூழலில் ஆக்கிரமித்துள்ள பருவெளி (Physical space) மற்றும் அச்சமுதாயத்தில் அதன் செயல்பாடுகளின் பங்கு ஆகியவை அடங்கியுள்ளது. ஒரு உயிரினத்தின் சுற்றுச்சூழல் சிறுவாழிடம் என்பது அவ்வுயிரினம் வாழும் சிறு இடத்தைச் சார்ந்தது மட்டுமல்லாமல் அதன் சுற்றுச்சூழல் தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கியதுமாகும்.
ஒரு சமுதாயத்தில் வாழும் உயிரினங்களின் செயல்பாட்டு நிலையை உணர்த்தும் வகையில் 'சிறுவாழிடம்' என்ற சொல்லை சார்லஸ் எல்டன் (1927) என்பவர் முதன் முதலில் பயன்படுத்தினார். சுற்றுச்சூழலில் ஒப்பிடத்தக்க செயல்களைச் செய்யும் சிற்றினக்குழு மற்றும் ஒரு சமுதாயத்திற்குள் அக்குழுவிற்கான சிறுவாழிட பரப்பு ஆகியவை 'உயிரினச் சங்கமம்' (Guilds) என்று அழைக்கப்படுகிறது. வெவ்வேறு புவியியல் மண்டலங்களில் உள்ள, ஒரே வகையான சிறுவாழிடங்களில் வாழும் சிற்றினங்கள் 'சுற்றுச்சூழல் ஒத்த உயிரினங்கள்' (Ecological equivalents) என்று அழைக்கப்படும்.
பல விலங்கினங்கள் ஒரு பொதுவான வாழிடத்தைப் பகிர்ந்து வாழ்கின்றன. ஆனால் அவற்றின் சிறுவாழிடங்கள் / ஒதுக்கிடங்கள் நன்றாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரு வாழிடத்தில், ஒரு தனிப்பட்ட இனக்கூட்டத்தின் வாழ்க்கை முறை அதன் ஒதுக்கிடம் எனப்படும். எடுத்துக்காட்டாக சுவர்க் கோழிகள் (Crickets) மற்றும் வெட்டுக்கிளிகள் ஆகிய நெருங்கிய தொடர்புடைய பூச்சிகள் ஒரே வாழிடத்தில் இருந்தாலும் அவற்றின் சுற்றுச்சூழல் சார்ந்த சிறுவாழிடங்கள் வெவ்வேறாக உள்ளன. வெட்டுக்கிளி பகல் நேரத்தில் செயல்படுபவை. இவை தாவரங்கள் மீது வாழ்ந்து தாவரப் பகுதிகளை உண்டு வாழும். சுவர்க்கோழி, வெட்டுக்கிளியின் வாழிடத்தைப் பகிர்ந்து கொண்டாலும் அதன் செயல்பாடுகள் வேறானவை. பகல் நேரங்களில் இவை செயலற்றும், இலைகளுக்கிடையில் பதுங்கியும் இருக்கும். இவை இரவு நேரத்தில் செயல்படுபவை (Nocturnal). சுவர்க்கோழியும், வெட்டுக்கிளியும் ஒரே வாழிடத்திலிருந்தாலும் ஒன்றின் செயல்களில் மற்றொன்று தலையிடாமல் வாழ்கின்றன. எனவே ஒரு உயிரினத்தின் ஒதுக்கிடம் என்பது அது வாழும் சூழலில் அதற்குரிய சிறப்பு இடத்தையும் செயல்களையும் குறிப்பதாகும்.
கட்லா, ரோகு மற்றும் மிரிகால் ஆகிய மீன்கள் வாழும் குளச்சூழ்நிலை மண்டலத்தில் கட்லா என்ற மீன் குளத்தின் மேல் பரப்பையும், ரோகு, நீரின் செங்குத்து அடுக்கையும் மற்றும் மிரிகால், தரைப்பரப்பையும் சிறுவாழிடமாகக் கொண்டு அவ்வப்பகுதியில் தங்களின் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன. அவற்றின் வாய் அவை வாழும் சிறுவாழிடத்திற்கேற்ப அமைக்கப்பட்டிருப்பதால், அவை ஒரே வாழிடத்தில் வேறுபட்ட நிலைகளையும், செயல்களையும் கொண்டுள்ளன (படம் 11.1).