பொருளாதாரம் - ஊரக கடன் சுமை | 11th Economics : Chapter 10 : Rural Economics

   Posted On :  07.10.2023 12:01 am

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 10 : ஊரக பொருளாதாரம்

ஊரக கடன் சுமை

ஊரக கடன்சுமை என்பது கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையைக் குறிக்கும்.

ஊரக கடன் சுமை

ஊரக கடன்சுமை என்பது கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையைக் குறிக்கும். இந்தியாவின் நிதி கட்டமைப்பு பலவீனமாக இருப்பதனால் உதவி தேவைப்படும் விவசாயிகள், நிலமற்ற விவசாயிகள் மற்றும் வேளாண் கூலி தொழிலாளர்களின் கடன்சுமை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் குறைந்த வாழ்க்கைத் தரம், குறைந்த உற்பத்தித் திறன், தற்கொலைகள் போன்ற தீய விளைவுகள் ஏற்படுகின்றன.


வேளாண்மை செய்யுவும், வேளாண்மை இல்லாத காலங்களில் குடும்ப செலவிற்காகவும், கருவிகள் வாங்குவதற்காகவும், குடும்பவிழா கொண்டாட்டங்கள், மதுபான நுகர்வு மற்றும் மருத்துவச் செலவு போன்ற காரணங்களுக்காகவும் வரம்பின்றி விவசாயிகள் கடன் பெறுகின்றனர். வருமானம் குறைவாக உள்ளதால் அவர்கள் பெற்ற கடன்களையும், வட்டியையும் திருப்பி செலுத்த இயலாத நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (NSSO, 2002-2003) புள்ளிவிவரப்படி 30% ஏழைகள் மட்டுமே அரசுடமை வங்கிகளில் கடன் பெறுகின்றனர். அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வின் (AIDIS 2002) படி 1991ல் 66.3% ஆக இருந்த அமைப்புக் கடன் 2002ல் 57.1% ஆக குறைந்தது. இந்தக் குறைவு அமைப்புசாரா கடன்களின் அதிகரிப்பை காட்டுகிறது (RBI 2006).

இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் சாதி ரீதியான கணக்கீட்டின்படி, 73% மக்கள் ஊரக பகுதிகளில் வசிக்கின்றனர். இதில் 18.5% மக்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள, 11% மக்கள் பழங்குடியினர்.


1. ஊரக கடன்சுமைகளின் இயல்புகள்

இந்தியாவில் ஏறக்குறைய 4 ல் 3 பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர். சிறு விவசாயிகளுக்கு கடன் சுமை அதிகம். விவசாய தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர்.

பெரும்பாலான கடன்கள் குறுகிய கால கடன்கள் மற்றும் உற்பத்தி இயல்பற்றவை. அதிக வட்டிக்கு கடன் வாங்குபவர்களின் சதவிகிதமே அதிகமாக உள்ளது. பெரும்பான்மையான கிராம மக்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்தும், அதிகவட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்தும் கடன் பெறுகிறார்கள்.


2. ஊரக கடன்களுக்கான காரணங்கள்

ஊரக கடன்களுக்கான காரணங்கள் பின்வருமாறு

1. உழவர்களின் ஏழ்மை நிலை:

வறுமையில் நுகர்விற்காகவும், விவசாயத் தொழிலை மேற்கொள்வதற்காகவும் மற்றும் குடும்ப விழாக்களுக்காவும் விவசாயிகளை கடன் பெறத் தூண்டுகிறது. ஏழ்மை நிலை, கடன் மற்றும் கடனுக்கான அதிக வட்டி முதலியன விவசாயிகளைக் கடன் கொடுப்பவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது

2. பருவமழை பொய்த்தல்: 

அடிக்கடி பருவமழை பொய்த்துப் போவது விவசாயிகளுக்கு சாபமாக அமைகிறது. இயற்கை பொய்த்துப் போவதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், ஆதலால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் அவதிப்படுகின்றனர். விவசாயம் எப்போது சிறக்கும், கடன்களை அடைக்கலாமென அவர்களால் கணிக்க முடியவில்லை

3. வழக்குகள்: 

நிலங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால் அதற்காக செலவிட அதிக கடன் பெறுகிறார்கள். அவர்களின் கல்வியறிவின்மையாலும் அறியாமையாலும் வழக்குகள் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு அவர்கள் சேமிப்பு மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன

4. வட்டிக்குகடன் தருவோர் மற்றும் அதிக வட்டி வீதம்: 

உள்ளூரில் வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டி வசூலித்தல் மற்றும் அசலுடன் வட்டியைச் சேர்த்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் விவசாயிகள் கடனிலேயே மூழ்கும் நிலை உள்ளது.


3. ஊரக கடன்களை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

ஊரக் கடன்களைத் தீர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை ஒழுங்குபடுத்துதல், ஊரக வங்கிகளை மேம்படுத்துதல், வட்டார ஊரக வங்கிகள் (RRBs) தொடங்குதல், நுண்கடன்கள் வழங்குதல், சுயஉதவிக் குழுக்களை அமைத்தல் (SHGs), தொடக்க கூட்டுறவு வங்கிகள் மற்றும் நில வங்கிகள் தொடங்குதல், பயிர் கடன் வழங்குதல், முன்னோடி வங்கித்திட்டங்கள், சிறிய அலகு முன்னேற்ற மற்றும் மறு நிதியளிப்பு முகவர் வங்கி (MUDRA) தொடங்குதல், துணை தொழில்களை உருவாக்குதல், விவசாயம் சாரா தொழில்களை உருவாக்குதல், திறன் மேம்பாடு பயிற்சிகள் அளித்தல். இருப்பினும் ஏழைகள் மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு வட்டி வீதங்கள் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் வசதிமிக்கவர்களுக்கு கிடைப்பதைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக மகிழ்வுந்துக்கான கடனைவிட கல்விக்கடன் வட்டி அதிகமாக உள்ளது


வட்டார ஊரக வங்கிகள் (RRBs)

இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆராய, ஊரக வங்கிகளில் பணிபுரிந்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி, வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks) செயல்படுத்தப்பட்டன. சிறு மற்றும் குறு விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள், கிராம கைவினைஞர்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பிற உதவிகளை வழங்குவதன் மூலம் ஊரகப் பொருளாதாரம் மேம்பாடு அடைய வட்டார ஊரக வங்கிகள் பரிந்துரைக்கப்பட்டன. மத்திய மாநில அரசுகள் மற்றும் வணிக வங்கிகளின் கூட்டு முயற்சியால் உருவானதே வட்டார ஊரக வங்கிகள் ஆகும். தற்போது இந்தியாவில் 64 வட்டார ஊரக வங்கிகள் உள்ளன. பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு மட்டுமே RRBs - கடன் வழங்குகிறது. மற்றும் வங்கியின் வட்டி வீதமானது கூட்டுறவு சங்கங்களின் வட்டி வீதத்தைப்போல் இருக்கும்


குறுநிதி (Micro Finance)

குறுநிதி என்பது குறுகடன்களைக் குறிக்கும். இந்த நிதிச்சேவையானது கடன்கள், சேமிப்புகள், தொழில் முனைவோர்க்கான காப்பீடு வசதிகள், பாரம்பரிய மூலதன ஆதாரம் இல்லாத சிறு தொழில் முனைவோர் ஆகியோர்க்கு வங்கி அல்லது முதலீட்டாளர் போல செயல்படுவதாகும்.

சிறுதொழில்புரிவோருக்கு தேவையான நிதியை வழங்கி அவர்களை தொழில் அல்லது வணிகத்தில் முதலீடு செய்யவைப்பதே இதன் நோக்கமாகும்.

குறு நிதியானது குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதில் சிறிய, இலாப நோக்கமில்லாத நிறுவனங்களிலிருந்து பெரிய வங்கிகள் வரை அடங்கும். அரசு சாராத நிறுவனங்கள் (NGOs) இவ்வகைக் கடன் வழங்குவதில் முன்னோடியாக விளங்குகின்றன. இந்தியாவில் இந்த குறுங்கடன் வழங்கும் முறைகள் கடந்த 20 வருடங்களாக அதிக வளர்ச்சியடைந்துள்ளன. இந்தியாவில் 2009 ஆம் ஆண்டில் குறு கடன் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது (திரிபாதி 2014).


சுய உதவிக் குழுக்கள் (Self HelpGroup-SHG)


"சுயஉதவிக்குழு" என்பது ஒரே மாதிரியான சமூக பொருளாதாரப் பின்னணி கொண்ட 20 பெண்கள் வரை (சராசரியாக 14 பேர்) கொண்ட தன்னிச்சையான அமைப்பு ஆகும். இவற்றின் உறுப்பினர்கள் சுயஉதவி மற்றும் பரஸ்பர உதவி மூலம் பொதுவான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முயல்கின்றனர். சுயஉதவிக் குழுக்கள் உறுப்பினர்களின் சிறு சேமிப்பை அதிகரிக்க உதவுகின்றன. அவர்கள் மாதந்தோறும் சிறுதொகையான ரூ.10 முதல் ரூ.50 ரூபாய் வரை வங்கியில் சேமிக்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு 6 மாதங்கள் சேமித்த பிறகு சிறிய தொகைகளாக குழுவிலுள்ள தேவைப்படும் உறுப்பினர்களுக்கு வட்டிக்கு வழங்குகின்றனர். செயல்பாடுகளை வைத்து சுயஉதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள் (SBLP). இது 1992ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கும், ஊரக ஏழை மக்களை இணைப்பதற்கும், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், செயல்பாடுகளை திட்டமிடுவதற்கும், உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதற்கும், தொழில்நுட்ப வசதி, கடன் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும் உருவாக்கப்பட்ட நல்ல திட்டமாகும்.

2009-10 ஆம் ஆண்டின்படி 1.59 மில்லியன் புதிய சுய உதவிக் குழுக்கள் இக்கடன் பெறும் வசதியோடு இணைக்கப்பட்டன. மற்றும் வங்கிகள் மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.14,453கோடிகடனாகவழங்கப்பட்டது. 2010 மார்ச் முடிவில் 6.95 மில்லியன் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் சேமிப்பு கணக்கை வைத்திருந்தனர்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது, வங்கிக் கடன் மற்றும் அரசாங்க மானியம் வழங்கி வருவாய் ஆதாரங்களை பெருக்கி, பயனாளிகளை ஏழ்மை கோட்டிற்கு மேல் முன்னேற்றமடைய செய்வதாகும். NABARD வங்கியின் கணக்கீட்டின்படி 2.2 மில்லியன் சுய உதவிக் குழுக்கள் இந்தியாவில் உள்ளன. அதில் 33 மில்லியன் உறுப்பினர்கள் வங்கி இணைப்புத் திட்டத்தின் கீழ்வங்கிக்கடன் பெற்றுள்ளனர்.

SHGs வங்கி இணைப்புத் திட்டம் தொடக்கம் முதலே சில மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களான ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

NABARDன் SHG வங்கி இணைப்பு திட்டத்தின்படி உறுப்பினர்கள் கடனை சரியாக திருப்பி செலுத்திய பதிவை வைத்திருக்கும் சுய உதவிக் குழுக்கள் வங்கியில் கடன் பெற இயலும். 2005-2006 ஆண்டில் தென் மாநிலங்களான ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன. இம்மாநிலங்கள் 60% சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு கடன் வசதியை பெற்றுள்ளன. (தருணா மற்றும் யாதவ், 2016)


சுய உதவிக் குழுக்களின் முக்கிய இயல்புகள்

1. சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் பொதுவாக ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் உள்ளவர்கள். குழுவினரிடையே உள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் உறுப்பினர்களை சுயமாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

2. பெரும்பாலான சுயஉதவிக் குழுக்கள் 10 முதல் 20 பெண் உறுப்பினர்களைக் கொண்டவை.

3. SHGs தமக்கென்று வடிவமைக்கப்பட்டச் சட்டங்களையும், விதிமுறைகளையும் கொண்டுள்ளன. தொடர்ச்சியாக கூட்டம் நடத்துதல் மற்றும் முறையாக பதிவேடுகளைப் பராமரித்தல், சேமிப்பு மற்றும் கடன் வழங்குதல் ஆகிய ஒழுங்கினை அவை கடைபிடிக்கின்றன

4. SHGக்கள் முழு பங்கேற்பினை அளித்து, அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதுடன் தங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்கின்றனர்.


சிறிய அலகு முன்னேற்றம் மற்றும் மறுநிதியளிக்கும் முகவர் வங்கி (MUDRA)

இது ஒரு பொதுத்துறை சார்ந்த நிதி நிறுவனம் ஆகும். இது சிறு, குறு நிதி நிறுவனங்களுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் (MSMEs) கடன் வழங்குகிறது. இது ஏப்ரல் 8, 2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.


குறு அலகுகள் வளர்ச்சி மற்றும் மறுநிதியாக்கம் நிறுவனம்

 குறு நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும் மறு நிதியாக்கம் செய்யவும் ஏற்படுத்தப்பட்டது.


முத்ரா வங்கியின் முதன்மை நோக்கங்கள்

1. குறுங்கடன் வாங்குபவரையும், பெறுபவரையும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் குறுங்கடன் வழங்குவதில் நிலைத்த தன்மையை ஏற்படுத்தல்

2. சிறு தொழில் புரிபவர்கள், சில்லறை வியாபாரிகள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடன் வழங்கும் சிறு நிதி நிறுவனங்களுக்கு, மேலும் நிதி மற்றும் கடன் வசதியை ஏற்படுத்தி தருதல்.

3. அனைத்து சிறு நிதி வழங்கும் நிறுவனங்களையும் பதிவு செய்தல் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை தரம் நிர்ணயம் செய்தல் மற்றும் முறையான ஒப்புதல் வழங்குதல்.

4. சிறு தொழில்களை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் கடன்களுக்கு உத்திரவாதம் வழங்குவதற்காக கடன் உத்திரவாத திட்டம் (CGS) ஆரம்பித்தல்

5. கடன் வழங்குதல், கடன் பெறுதல் மற்றும் பகிர்ந்தளிக்கப்படும் மூலதனத்தை மேற்பார்வையிடல் ஆகியவற்றுக்கு பொருத்தமான தொழில்நுட்ப உதவிகளை அறிமுகப்படுத்துதல்.

Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 10 : Rural Economics : Rural Indebtedness Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 10 : ஊரக பொருளாதாரம் : ஊரக கடன் சுமை - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 10 : ஊரக பொருளாதாரம்