ஊரகப் பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்கள்
ஊரக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பின்வருமாறு
1. மக்கள் சார்ந்தவை.
2. வேளாண்மை சார்ந்தவை
3. உள்கட்டமைப்பு வசதிகள் சார்ந்தவை
4. பொருளாதாரம் சார்ந்தவை
5. சமூக மற்றும் கலாச்சாரம் சார்ந்தவை
6. தலைமை சார்ந்தவை
7. நிர்வாகம் சார்ந்தவை
1. மக்கள் தொடர்புடைய சிக்கல்கள்:
எழுத்தறிவின்மை, போதிய தொழில்நுட்ப அறிவின்மை, நம்பிக்கை குறைவு, பற்றுகள் மற்றும் நம்பிக்கைகள் இவற்றை சார்ந்து வாழ்க்கைத்தரம் அமைதல் ஆகியன ஊரக மக்களின் சிக்கல்கலாகும்.
2. வேளாண்மை சார்ந்த சிக்கல்கள்:
வேளாண்மை சார்ந்த சிக்கல்கள் கீழ்க்காண்பவற்றை உள்ளடக்கியது. 1. எதிர்பார்த்த அளவில் விழிப்புணர்வு, வேளாண் அறிவு, திறன் மற்றும் மனப்போக்கு போன்றவை இன்மை 2. உள்ளீடுகள் கிடைக்கப்பெறாமை 3. அங்காடிப்படுத்தும் வசதிகள் குறைவு 4. பற்றாக்குறையான பணியாளர்கள் மற்றும் சேவைகள் 5. பன்முக திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை 6. நிலங்கள் துண்டாடப்பட்டு சிறிது சிறிதாக இருத்தல். 7. சிறு நிலங்கள் மற்றும் சிறு சிறு துண்டுகளாக்கப்பட்ட நிலவுடைமைகள். 8. ஊரக பகுதிகளில் தங்கி பணியாற்றுவதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை. 9. பழமையான தொழில்நுட்ப முறைகள் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை குறைவாக பயன்படுத்துதல். 10. குறைவான அரசு முதலீடும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு தாங்களே விலையை நிர்ணயம் செய்ய இயலாமையும்.
3. உள்கட்டமைப்பு சார்ந்த சிக்கல்கள்:
ஊரக பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதிகளான நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு, பண்டக சேமிப்பு வசதி, வங்கி மற்றும் காப்பீடு போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை.
4. பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள்:
அதிகச் செலவு பிடிக்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்த இயலாமை, நலிவடைந்த ஊரக தொழிற்சாலைகள், குறைவான வருமானம், கடன் சுமை, நிலவுடைமை மற்றும் சொத்துகளில் உள்ள ஏற்றத்தாழ்வு ஆகியவை ஊரக பகுதிகளில் காணப்படும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களாக உள்ளன.
5. சமூக மற்றும் கலாச்சாரம் சார்ந்த சிக்கல்கள்:
இன்றளவும் ஊரக பகுதியில் சாதி முறை மாறாமல் உள்ளது. ஆதிக்க சாதியினர் பெருமளவு நிலவுடமை கொண்டிருப்பதால் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக உள்ளனர். வகுப்பு மற்றும் சாதி சார்ந்த சுரண்டல்கள் ஊரகப் பகுதியில் உச்சத்தில் உள்ளது. வறுமை, ஊட்டச்சத்துக் குறைவு, கல்வியறிவின்மை, குழந்தைத் திருமணம் போன்ற பலப் பிரச்சினைகள் இந்தியக் கிராமங்களில் நிலவுகின்றன.
இந்தியக் கிராமங்களில் ஆணவக் கொலைகள் நடப்பதற்கு கலப்புத் திருமணம் முக்கியக் காரணமாக உள்ளது. குழந்தைத் திருமணம் மற்றும் பெண் சிசுக்கொலை முதலியன மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
6. தலைமை சார்ந்த சிக்கல்கள்: ஊரகப் பகுதிகளில் தலைமை தொடர்பான சிக்கல்கள் உள்ளன. அவை: தகுதியற்ற மற்றும் செயல்படாத நபர்கள் தலைமை பொறுப்பை வகிப்பது; சுய விருப்புடன் செயல்படும் தலைவர்கள்; நடு நிலைமை அற்ற தலைவர்கள்; குறைந்த பேர சக்தி ஆற்றல் மற்றும் திறமையை மறுத்தல் மற்றும் அரசியல் தலைவர்களின் தலையீடு.
7. நிர்வாகம் சார்ந்த சிக்கல்கள்:
அரசியல் தலையீடு, ஊக்கமின்மை , ஆர்வமின்மை , குறைந்த கூலி, வரவு செலவுகளை சரிவர முறையாக பயன்படுத்தாமை , மேலாண்மையின்மை, ஊரக வளர்ச்சி திட்டங்களை மேற்பார்வையிடுவதற்கு சரியான கண்காணிப்பு இன்மை மற்றும் நடைமுறைபடுத்தாமை ஆகியவை ஊரக பகுதிகளில் காணப்படும் நிர்வாகச் சிக்கல்கள் ஆகும்.
கிராமப்புற வறுமை, கிராமப்புற வேலையின்மை கிராமப்புற தொழிற்சாலைகள், சிறு நிதி, ஊரக நலம் மற்றும் சுகாதாரம் மற்றும் ஊரக உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான சிக்கல்கள் விரிவான விதாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.