இந்தியப் பொருளாதாரம் - ஊரக பொருளாதாரத்தின் இயல்புகள் | 11th Economics : Chapter 10 : Rural Economics
ஊரக பொருளாதாரத்தின் இயல்புகள்
ஊரக பொருளாதாரத்தின் முக்கிய பண்புகளாவன
1. ஊரகம் ஒரு நிறுவனம்: கிராமம் என்பது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு, ஊரக சமுதாயத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. ஊரக மக்கள் அங்கு வசிக்கும் பிறருடன் தம் மக்கள் என்று ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாகவும், ஒற்றுமையுடனும் இருப்பர்.
2. வேளாண்மையைச் சார்ந்திருத்தல்: ஊரக பொருளாதாரம் இயற்கையையும், வேளாண் நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது. வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த செயல்களே ஊரக மக்களின் முக்கிய தொழிலாகும்.
3. ஊரக மக்களின் வாழ்க்கை முறை: ஊரக மக்களின் வாழ்க்கை முறை மிக எளிமையானது. பொதுப் பணிகளான கல்வி, வீட்டு வசதி, உடல்நலம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கி செயல்பாடு, சாலைகள் மற்றும் அங்காடி வசதிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கிறது. ஊரக மக்கள் மூடநம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலாச்சார நடைமுறைகளை சார்ந்துள்ளனர். ஊரக பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத்தரம் ஏழ்மை நிலையிலும், பரிதாபகரமாகவும் உள்ளது. ஊரக மக்கள் உற்பத்தி முறைகளிலும், சமூக அமைப்பிலும், அரசியல் சூழலிலும் நலிவடைந்த மற்றும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். சமீப ஆண்டுகளில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
4. மக்கள் தொகை அடர்த்தி: ஒரு சதுர கி.மீ நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை மக்கள் தொகை அடர்த்தி ஆகும். இது மிகவும் குறைவாகவும், வீடுகள் கிராமம் முழுக்க பரவியும் காணப்படுகின்றன.
5. வேலைவாய்ப்பு: வேலையில், பருவகால வேலையின்மை மற்றும் குறை வேலையுடைமை ஆகியன கிராமப்புறங்களில் நிலவுகின்றன. வேலையின்மை என்பது தொழிலாளர்கள் வேலை செய்ய தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது ஆகும். குறை வேலையுடைமை என்பது மறைமுக வேலையின்மையைக் குறிக்கும். தேவைக்கு அதிகமாக மிகுதியான தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது மறைமுக வேலையின்மை. மறைமுக வேலையின்மை என்பது தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டாலும் உற்பத்தியளவு அதிகரிக்காத நிலையை குறிக்கும். இவ்விரண்டு சூழ்நிலைகளும் பொதுவாக கிராமப்புறங்களில் நிலவுகின்றன.
6. வறுமை: வறுமை என்பது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலையாகும். 2011- 12 ன் மதிப்பீட்டின்படி ஊரகப் பகுதிகளில் சுமார் 22 கோடி மக்கள் ஏழையாகவும், வறுமைக் கோட்டிற்கு கீழும் வாழ்கின்றனர்.
7. கடன் சுமைகள்: ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்கள் வறுமையும், குறைவேலையுடைமையும், விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்க நிலை, குறை ஊதிய வேலை, பருவகால உற்பத்தி, குறைந்த அங்காடி வசதிகள் போன்றவைகளாகும். புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் சர் மால்கம் டார்லிங் (1925) கூற்றுப்படி, "ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டுச் செல்கின்றான்". முறையான கடன் வசதிகள் கிராமப் பகுதிகளில் கிடைக்காததால் அவர்கள் வட்டிக்கு பணம் தரும் உள்ளூர்வாசிகளை சார்ந்துள்ளனர். வட்டிக்குப் பணம் தருபவர்கள் கடன் பெற்ற கிராமங்களை அட்டையாக உறிஞ்சிவிடுகின்றனர். எனவே, கிராம மக்கள் கடனில் மூழ்கி தற்கொலைக்கு ஆளாகின்றனர்.
8. ஊரக வருமானம்: ஊரக பொருளாதாரம் ஊரக மக்களுக்கு போதுமான வருமானத்தை ஈட்டித்தரும் வேலைவாய்ப்புகளையோ, சுய வேலை வாய்ப்புகளையோ தர இயலவில்லை. பெரும்பாலான தொழிலாளர்களும் மற்றும் திறமை வாய்ந்தவர்களும் மிகவும் குறை வேலையுடையவர்களாக இருக்கிறார்கள் இவர்கள் வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்பு குறைவு.
9. சார்ந்திருத்தல் : ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்கள் நகரத்தில் வேலை செய்யும் தமது குடும்ப நபர்களின் வருவாய் மற்றும் சமூக நிதி உதவிகளையும் பெருமளவு சார்ந்துள்ளனர்.
10. இரட்டைத் தன்மை : எதிரிடையான இரண்டு அம்சங்கள் நிலவுவதே இரட்டைத் தன்மை ஆகும். வளர்ந்த மற்றும் பின் தங்கிய நிலை; அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத நிலை; பாரம்பரிய மற்றும் நவீன நிலை; ஒழுங்கு படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கு படுத்தப்படா நிலை; ஏழை மற்றும் பணக்காரர்; திறமைமிக்கவர் மற்றும் திறமையற்றவர் போன்ற முரண்பாடான சூழல்கள் ஊரக பகுதிகளில் நிலவுகின்றன.
11. ஏற்றத்தாழ்வு: ஊரக பகுதிகளில் வருமானம், சொத்து மற்றும் செல்வம் ஆகியவற்றின் பகிர்வு ஊரக மக்களிடையே ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது. சமூக, பொருளாதார அரசியல் மற்றும் வரலாற்றுக் காரணங்களினால் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. நிலக்கிழார்களும் நில உரிமையாளர்களும் கிராமப்புற நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நிலம், கால்நடை மற்றும் பிற சொத்துக்கள் சிலரிடம் மட்டுமே உள்ளது.
12. குடிப்பெயர்ச்சி: ஊரக மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி கிராமங்களிலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலை நகரங்கள் பெருகுவதற்குக் காரணமாகின்றன. பகைமை மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமை, கிராம மக்களை நகர்புறத்திற்கு இடம் பெயர வைக்கிறது. ஒருபுறம் கிராமங்கள் காலியாகவும் மறுபுறம் நகரங்கள் நெரிசலாகவும் உள்ளன. இதையே "இரட்டை நஞ்சாக்கல்" என சுமாசர் (Schumacher) குறிப்பிடுகிறார். தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று அவரின் ‘சிறியது அழகு’ என்ற நூலில் விளக்குகிறார்.