பொருளாதாரம் - ஊரக தொழிற்சாலைகள் | 11th Economics : Chapter 10 : Rural Economics
ஊரக தொழிற்சாலைகள்
ஊரக பகுதிகளில், ஊரக மக்களால் நடத்தப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் ஊரக தொழிற்சாலைகள் ஆகும். உள்ளுரில் கிடைக்கும் கச்சாப் பொருட்கள், திறன்கள் மற்றும் சிறிய அளவிலான முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்தொழிற்சாலைகள் அமைகின்றன. ஊரக தொழிற்சாலைகள் பலவகைப்படும். அவை (a) குடிசைத்தொழில்கள் (b) ஊரக தொழில்கள் (c) சிறு தொழில்கள் (d) குறுந்தொழில்கள் மற்றும் (e) வேளாண் சார்ந்த தொழில்கள்.
குடிசைத் தொழில்கள்: பொதுவாக குடிசைத் தொழில்கள் விவசாயத்தையே சார்ந்துள்ளன. இதன் மூலம் ஊரக மக்கள் முழு நேர மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள்.
குடிசைத் தொழில்களின் முக்கிய சிறப்பியல்கள்
1. கைவினை தொழிலாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் வீட்டிலேயே குடும்ப வருமானத்திற்காக பொருட்களை தயாரிக்கின்றனர். வேறு ஒரு நிரந்திர பணியிணை செய்து கொண்டே குடிசைத் தொழிலை மேற்கொள்பவர்களும் உள்ளனர்.
2. குடிசைத்தொழிலில் உழைக்க வெளியிலிருந்து நபர்களை அமர்த்துவதில்லை. பொதுவாக குடும்ப உறுப்பினர்களே தேவையான உழைப்பினை தருகின்றனர்.
3. குடிசைத்தொழில்கள் பாரம்பரியமானவை மற்றும் பரம்பரைபரம்பரையாகவும் செய்துவரும் தொழிலாகும்.
4. மின்சாரத்தின் உபயோகமின்றி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன அல்லது குறைந்த அளவு மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகின்றது.
5. வழக்கமாக உள்ளூர் சந்தையிலேயே பொருட்கள் விற்கப்படுகின்றன. பொதுவாக பிற தொழிற்சாலைக்களுக்கு தேவையான உதிரிபாகங்களை வழங்குகின்றன.
பாய், கயிறு திரித்தல் மற்றும் கூடை முடைதல் ஆகியன உதாரணங்களாகும். இந்தியாவின் முதன்மை குடிசைத் தொழிலாக விளங்குபவை கைத்தறி, நெசவு (பருத்தி, பட்டு, சணல் முதலியன...) மட்பாண்டம் செய்தல், சலவை சோப்பு தயாரித்தல், சங்கு தொழில், கைகளால் காகிதம் தயாரித்தல், கொம்பு பொத்தான், முத்துச் சிப்பி பொத்தான், வீட்டு உபயோகக் கருவிகள் செய்தல், பூட்டு மற்றும் சாவி தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
கிராமத் தொழிற்சாலைகள்: கிராமத் தொழிற்சாலைகள் இயற்கை பராம்பரியமானது மற்றும் உள்ளூர் மூலப் பொருள்களை சார்ந்தது. அவை உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. கிராமத் தொழிற்சாலைகளுக்கு எடுத்துக்காட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரித்தல், பிரம்பு மற்றும் மூங்கில் கூடை செய்தல், காலணி தயாரித்தல் மட்பாண்டங்கள் மற்றும் தோல் பதனிடுதல் முதலியன. இவை அனைத்தும் குடிசைத் தொழில்கள் போன்றே அமைந்துள்ளன.
சிறு தொழில்கள் (SSIS): நகர்புற மையங்களுக்கு அருகிலேயே பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அங்காடிகளுக்கு பண்டங்களை உற்பத்தி செய்கின்றன. சிறுதொழில் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டு: விளையாட்டு உபகரணங்கள் தயாரித்தல், சோப்பு தயாரித்தல், மின் விசிறி தயாரித்தல், காலணிகள் தயாரித்தல், தையல் இயந்திரங்கள் மற்றும் கைத்தறி நெசவு உற்பத்தி முதலியன ஆகும்.
SSIs என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிச் சட்டம் 2006ன் படி இவை வகைப்படுத்தப்படுகின்றன.
இச்சட்டத்தின்படி உற்பத்தி தொழிற்சாலைகள் முதலீட்டின் அடிப்படையிலும், சேவை சார்ந்த தொழிற்சாலைகள் கருவிகள் மீதான முதலீட்டின் அடிப்படையிலும் பிரிக்கப்படுகின்றன.
வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள்:
வேளாண் உற்பத்தி பண்டங்களை நுகர்வுக்குரிய பொருட்களாக மற்றுகின்ற பணியில் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் ஈடுபடுகின்றன. வேளாண்சார்ந்த தொழிகள் குடிசைத்தொழில், சிறுதொழில் மற்றும் ஆலைத்தொழிலாகவும் உள்ளன. நிரந்தர பணியில் அதிக அளவு பணியாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதால் அதனருகிலேயே குடியேற்றங்கள் பெருகுகின்றன.எ.கா.ஜவுளி தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, காகித ஆலை, தாவர எண்ணெய் ஆலை, தேயிலை மற்றும் காபி தொழிற்சாலைகள்.