ஊரக மேம்பாட்டிற்கான தேவை
இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு ஊரக மேம்பாடு என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும். அதற்கான காரணங்கள் பின்வருமாறு.
1. பெரும்பான்மையான மக்கள் கிராமபுறங்களில் வசிக்கின்றனர். அவர்களின் முன்னேற்றம் மற்றும் பங்களிப்பு நாட்டின் கட்டமைப்பு நடவடிக்கைகளில் துணை நிற்கின்றன. ஊரக பகுதியின் முன்னேற்றம் இன்றி நாட்டின் முன்னேற்றம் அமையாது.
2. நகர்புறத்திற்கு தேவையான குடிநீர்,பால், உணவு மற்றும் கச்சா பொருட்கள் கிராமப்புறத்தில் இருந்து அளிக்கப்படுகின்றன. ஆகவே கிராமபுறங்களின் பின்தங்கிய நிலைமை நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை அடைவதற்கும் தடையாக அமைகிறது.
3. ஊரக மக்களுக்கு முறையான கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை அளிப்பதன் மூலம் நகர்புறங்களில் காணப்படும் பிச்சையெடுத்தல், குப்பை பொறுக்குதல், சாலையோர குடிசைவாசிகள் போன்ற மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கலாம்.
4. வேளாண்மையையும் அதன் சார்புடைய தொழில்களையும் முன்னேற்றுவதன் மூலம், ஊரக பகுதிகளில் இலாபகரமான வேலைவாய்ப்புகளையும், ஒட்டுமொத்த உணவு உற்பத்தியையும் பெருக்க இயலும்.
5. கிராமங்களை முன்னேற்றுவதன் மூலம், வேலைவாய்ப்பை தேடி திறமைசாலிகள் இடம்பெயர்தல் மற்றும் கிராமங்களில் இருந்து நகர்புற பகுதிகளுக்கு குடிப்பெயர்ச்சி ஆகியவற்றை தடுக்கலாம்.
6. ஊரக பகுதிகளை முன்னேற்றுவதன் மூலம் பயன்படுத்தாத மற்றும் குறைவாக பயன்படுத்தி வரும் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த இயலும்.
7. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டினை குறைக்க முடியும். கிராமப்புறங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் PURA என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
8. ஊரக வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI), மகளிர் வல்லமைக் குறியீடு (WEI), பாலின வேறுபாட்டுக் குறியீடு (GDI), இயல் தர வாழ்க்கைக் குறியீடு (PQLI), மொத்த தேசிய மகிழ்ச்சிக் குறியீடு (GNHI) போன்ற பொருளாதாரக் குறியீடுகளை மேம்படுத்தி உலக அரங்கில் இந்தியாவின் நிலையை மேம்படுத்த இயலும்.