ஊரக வறுமை
கிராமங்களில் காணப்படும் வறுமையை ஊரக வறுமை எனலாம். இந்தியாவில் வறுமை என்பது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான வருமானத்தை ஈட்ட முடியாத நிலையாகும். வறுமை கோடு என்பது மக்களின் வருமானம் அல்லது நுகர்வு நிலையை பொறுத்து வறுமை கோட்டிற்கு மேல் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அனுமானிக்கும் கோடு ஆகும். பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச் சத்து உணவு எடுத்துக்கொள்ளுதல் அளவு அடிப்படையில் கிராமங்களில் வாழும் மக்கள் நாள் ஒன்றுக்கு 2,400 கலோரி அளவு மற்றும் அதற்குக் குறைவாக எடுத்துக்கொள்பவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவர். திட்டக்குழுவின் கணக்கீட்டின்படி 2009 – 2010ஆம் ஆண்டில் ஊரக பகுதியில் வறுமையில் உள்ள மக்கள் சதவீதம் 54.10 சதவீதம் இருந்தது. 2009 – 10ல் மொத்த வறுமை சதவீதம் 33.80 ஆகும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரிடையே வறுமை மிகுந்து காணப்படுகிறது. 2005-ஆம் ஆண்டில் இப்பிரிவினரில் 80 சதவீதம் பேர் ஊரக வறுமையில் இருந்தனர். இது மொத்த ஊரக மக்களில் தாழ்த்தப்பட்டோர் பங்கினைக் காட்டிலும் மிகக் குறைவாகும். இந்தியாவில் 2015- ஆம் ஆண்டில் 80 கோடி மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். அவர்களில் கால்பகுதி கிராமமக்கள் (22 கோடி மக்கள்) வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். உலக ஏழை மக்களின் தொகையில் 22% இந்தியாவில் உள்ளனர். மக்கட்தொகை வளர்ச்சிவீதத்தைக் காட்டிலும் ஏழைகளின் அளவு வீதத்தை குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளோம்.
ஊரக வறுமையை தீர்மானிக்கும் பல்வேறு காரணங்கள்
1. நிலங்கள் சரியாகப் பிரிக்கப்படாமை:
ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடமே குவிந்து காணப்படுகின்றன. பெரும்பான்மை கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்காக அந்நிலங்களில் கூலிக்கு வேலை செய்கின்றனர்.
2. பண்ணை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பின்மை: அதிகரிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பண்ணை சாராத தொழில்கள் வளரவில்லை. மிகுதியான தொழிலாளர்கள் ஊரகப்பகுதிகளில் உள்ளபடியால் குறைவான கூலியையே பெறுகின்றனர். இது வறுமைக்கு வழி வகுக்கிறது.
3. பொதுத்துறைகளில் முதலீடு இன்மை:
மனித வளத்தை மேம்படுத்துவதற்கான முதலீடு நமது நாட்டில் மிகக் குறைவாக உள்ளது, வறுமைக்கு அடிப்படையான காரணமாகும்.
4. பணவீக்கம் :
பொருட்களின் விலை அதிகரிப்பதால் ஊரக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து ஊரக வறுமைக்கு வழிவகுக்கிறது.
5. குறைந்த உற்பத்தித் திறன்:
ஊரக தொழிலாளர்களின் உற்பத்தித்திறனும் பண்ணைகளின் உற்பத்தித் திறனும் குறைவாக இருத்தல், வறுமைக்கு காரணமாக அமைந்தது.
6. வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை:
பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை நகர்புற பணக்காரர்களே அனுபவிப்பதால், சொத்துக்கள் அவர்களிடமே குவிந்து உள்ளன. குறைபாடுள்ள பொருளாதார அமைப்புகள் மற்றும் கொள்கைகளால், வளர்ச்சியின் நன்மைகள் ஏழை மக்களை சென்றடைவது இல்லை. அதை போல ஏழை மக்களின் பங்களிப்பு சரியாகக் கணக்கிடப்படவில்லை.
7. குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம்:
இந்திய பொருளாதார வளர்ச்சி பணக்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. நாடு அடைந்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் நன்மைகள் ஏழைமக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.
8. பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம்:
இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகளில் செய்யப்படும் அதிக முதலீடு நகர்புறத்தின் நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினரின் தேவைகளையே பூர்த்தி செய்கிறது. இந்த தொழிற்சாலைகள் இயந்திரங்களையே அதிகமாக பயன்படுத்துவதால் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறைவாகவே உள்ளது. ஆதலால் கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்பினை பெற முடியாத நிலையிலும், வறுமையிலிருந்து மீள முடியாமலும் உள்ளனர்.
9. சமூக குறைபாடுகள்:
சமுதாயத்தில் நிலவும் பழக்க வழக்கங்களும், நம்பிக்கைளும் ஆக்கமற்ற உற்பத்தி செலவை அதிகரிக்கிறன.
ஊரக வேலையின்மையும், ஊரக வறுமையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதால் வேலைவாய்ப்பினை ஊருவாக்குதல் மூலமாக வறுமையை ஒழிக்கலாம். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் காலத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தல், தொகுக்கப்படுதல் மற்றும் விரிவாக்கம் செய்தல் ஆகியன நடைபெறுகின்றன. ஆனாலும், வேலையின்மை, பிச்சையெடுத்தல், குப்பை பொறுக்குதல் மற்றும் குடிசைகளில் வாழ்வோர் போன்ற நிலைகள் தொடர்கின்றன. வேலை வாய்ப்பின்றி ஏழை மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது. பூனைக்கு மணி கட்டுவது யார்?
வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
திட்டங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு
20 அம்ச திட்டம் 1975
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம் (IRDP) 1978
ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி (TRYSEM) 1979 வேலைக்கு உணவுத்திட்டம் (FWP) 1977
தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் (NREP) 1980
ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (RLEGP) 1983 ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் (JRY) 1989
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGS) 2006
பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் யோஜனா (PMAGSY) 2010
பாரத் நிர்மான் யோஜனா 2005
இந்திரா ஆவாஸ் யோஜனா 1985 1986
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் (JNNURM) 2005
ராஜீவ் ஆவாஸ் யோஜனா (RAY) 2009
தேதிய ஊரக நலத்திட்டம் 2005
தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் 2011
தேசிய உணவுப் பாதுகாப்புத்திட்டம் 2013