ஊரக வேலையின்மை
வேலையின்மை என்பது நடைமுறையிலுள்ள ஊதிய விகிதத்தில், தனி நபர் வேலை செய்ய விருப்பப்பட்டும் வேலை கிடைக்கப் பெறாத நிலையாகும். இதனால் மனிதவளம் மிகவும் வீணாகிறது மற்றும் குறைவாக பயன்படுத்தப்படுகிறது.
பணிக்கான படிப்பு (Jobs Study) T ஆய்விற்காக பீட்டர் டயமண்ட், டேல் மார்டின்கன் மற்றும் கிறிஸ்டோர் பிசாரிட்ஸ் ஆகிய பொருளாதார அறிஞர்கள் 2010ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டனர் இவர்கள் உருவாக்கிய முறைக்கு அல்லது கோட்பாட்டிற்கு DMP முறை எனப்படும். பொருளாதார கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் எப்படி வேலையின்மை, வேலைக்கான காலியிடங்கள் மற்றும் கூலி ஆகியவற்றை பாதிக்கிறது என அறிந்துகொள்ள DMP முறை உதவுகிறது.
வேலையின்மை நிலவுகின்ற வரை சமூக பிரச்சினைகளை தடுக்க முடியாது; பொருளாதாரம் முன்னேற்ற இலக்கினை அடைய முடியாது.
2016, அக்டோபர் 4, நிலவரப்படி, ஊரக வேலையின்மை 7.8 சதவீதமாகும். இது நகர்ப்புற வேலையின்மையை (10.1%) விட குறைவு ஆகும். இந்திய மொத்த வேலையின்மை 8.5% ஆகும்.
ஊரக வேலையின்மை என்பது மூன்று வகைப்படும்
i. வெளிப்படையான வேலையின்மை
ii. மறைமுக வேலையின்மை அல்லது குறை வேலையுடைமை
iii. பருவகால வேலையின்மை
i) வெளிப்படையான வேலையின்மை என்பது வேலைக்குத் தயாராக இருந்தும் எந்த வேலையும் கிடைக்காமல் வேலையில்லாத நிலையில் இருப்பது ஆகும். விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஊரககைவினைஞர்கள் மற்றும் கற்றவர்கள் ஆகியோர் இப்பிரிவைச் சார்ந்தவர்கள்.
ii) மறைமுக வேலையின்மையில் தகுதிக்கு குறைந்த வேலையில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் காண்பது கடினம். உபரியான வேலையாட்கள் நியமிக்கப்படுதல், மறைமுக வேலையின்மைக்குக் காரணமாகும். வேலையிலிருந்து சிலரை நீக்கினாலும் உற்பத்தியின் அளவு குறையாது. ஏனென்றால் அவர்களின் இறுதிநிலை உற்பத்தித் திறன் ஒன்றுமில்லை. இதுவே மறைமுக வேலையின்மை அல்லது குறைவேலையுடைமை எனப்படும். சிறு மற்றும் குறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் ஆகியோரிடையே குறைவேலையுடைமை காணப்படுகிறது. இவ்வகை வேலையின்மை நகர்புறத்தை விட, ஊரக பகுதிகளிலேயே அதிக மோசமாக காணப்படுகிறது. ஊரக பகுதிகளில் மறைமுக வேலையின்மை 25 முதல் 30 விழுக்காடு வரை காணப்படுகிறது.
iii) பருவகால வேலையின்மையில் இயற்கை சூழல் பொறுத்து ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் ஊரக மக்கள் வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள். எஞ்சியுள்ள காலகட்டத்தில் வேலையின்றியோ அல்லது பகுதி நேர வேலையிலோ ஈடுபட்டுள்ளனர். உழுதல், விதைத்தல், களை எடுத்தல் மற்றும் அறுவடை செய்தல் போன்ற பருவங்களில் வேலைக்கு ஆள் பற்றக்குறை நிலவுகிறது. ஆண்டின் பிற பருவங்களில் ஆட்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஒரு விவசாயி வருடத்திற்கு ஒரு பயிரை மட்டும் பயிரிடும் போது, கிட்டத்தட்ட 5 முதல் 7 மாதங்கள் வேலையின்றி தவிக்கும் பரிதாபமான சூழலுக்கு தள்ளப்படுகிறார்.
வோளாண்தொழிலாளர் விசாரணைக்குழு அறிக்கையின் படி, 84 சதவீத வேளாண்தொழிலாளர்கள் குறை வேலையுடமையில் உள்ளனர். அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 82 நாட்கள் வேலையின்றி உள்ளனர்
1. ஊரக வேலையின்மைக்கான காரணங்கள்
இந்தியாவில் ஊரக வேலையின்மைக்கான பல்வேறு காரணங்களை விவாதிக்கலாம்
1. திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் இன்மை :
ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கு அரசு போதிய பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பதே முக்கிய காரணமாகும்.
2. வேளாண்மை பருவகாலம் சார்ந்தது:
வேளாண் செயல்பாடுகள் பருவகால மாற்றங்களான இயற்கை மற்றும் மழையளவு ஆகியவற்றை சார்ந்துள்ளது. பருவகாலம் அற்ற நேரங்களில் உழைப்பிற்கான தேவை மிகவும் குறைவாக உள்ளது. எனவே வேளாண் சாரா வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
3. துணை தொழில்களின்மை:
போதிய முதலீட்டு நிதிவசதி மற்றும் அங்காடி வசதிகள் இல்லாததால், ஊரக மக்கள் கோழி வளர்ப்பு, கயிறு திரித்தல் மற்றும் பன்றி வளர்த்தல் போன்ற துணைத்தொழில்களை மேற்கொள்ள இயலவில்லை. இந்நிலை ஊரக வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வருமானத்தைக் குறைக்கிறது. ஊரக மக்களுக்கு தேவையான நிதிவசதியை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும். முறையான அமைப்புகளிடமிருந்து பணத்தை கடனாக பெற முடியாதால் உள்ளூரில் அதிகவட்டிக்கு பணம் கடன் பெறுகின்றனர்.
4. வேளாண்மையை இயந்திரமயமாக்கல் :
வேளாண் தொழிலாளர்கள் வேலைக்காக நிலக்கிழார்களையே முழுமையாக நம்பியுள்ளனர். வேளாண் செயல்பாடுகளான உழுதல், நீர்பாய்ச்சுதல், அறுவடை செய்தல், கதிர் அடித்தல் போன்றனவற்றில் இயந்திரங்களை பயன்படுத்துவதால் வேளாண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது.
5. மூலதன செறிவு தொழில்நுட்பம்:
நகர்புறங்களில் விரிவடைந்து வரும் தனியார் தொழில் துறை மூலதன செறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியவில்லை. அரசாங்கம், தொழில் நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் உபரி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
6. கல்விமுறையில் உள்ள குறைபாடுகள்:
தற்போதைய கல்வி முறை ஊரக வேலையின்மை பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. சமீப ஆண்டுகளில் பட்டதாரிகளை உருவாக்கும் கல்வி நிலையங்கள் ஏராளம். மேலும் மாணவர்களும் பட்டம் பெறுவதை மட்டுமே விரும்புகின்றனர். அவர்கள் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை. திறன் அடிப்படையில் பட்டங்கள் வழங்கப்படவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள போதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நாட்டில் ஊரக வேலையின்மையை குறைப்பதற்கு பல்வேறு நிலைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். சில தீர்வுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. துணை தொழில்கள்: பருவகால வேலையின்மையை தவிர்க்க ஊரக மக்களை, துணை தொழில்களை தொடங்குவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். கடன் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். உற்பத்தி செய்த பண்டங்களை சந்தைபடுத்துவதற்கான வசதிகளையும் செய்து தர வேண்டும்.
2. ஊரக வேலைத்திட்டம்: சாலைவசதி, வடிகால்கள், கால்வாய்கள் தோண்டும் பணிகள் போன்ற ஊரக சமுதாய ஆக்கப்பணிகள் செய்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளை திட்டமிட்டு வேளாண் பருவகாலம் அல்லாத நேரங்களில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வேலையற்றவர்களுக்கு ஆக்கப்பூர்வமான வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்.
3. நீர்ப்பாசன வசதிகள்: போதிய மழையாளவு இல்லாததால், நீர்ப்பாசன வசதியினை பயன்படுத்தி பலவகை பயிர்களை பயிர் செய்யும் முறையினை கையாள வேண்டும். தீவிர பயிர்சாகுபடி முறைகளை அதிகரிப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரிக்கும்.
4. ஊரக தொழில் மயமாக்கல்: வேலைவாய்ப்பினை உருவாக்க ஊரக பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். இது புதிய துறைகளில் வேலைவாய்ப்பினையும் மற்றும் ஊரக மக்களின் அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளின் ஈடுபடவேண்டும். தனியார்துறைக்கு இத்தகைய பொறுப்புகள் ஏதும் இல்லை .
5. தொழில்நுட்ப கல்வி: பள்ளிகளிலும், கல்லுரிகளிலும், வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகளை உருவாக்கி அதன் மூலம் கற்ற இளைஞர்களை சுயமாக தொழில் துவக்க வழிவகை செய்ய வேண்டும்.