இந்தியப் பொருளாதாரம் - ஊரக பொருளாதாரம் | 11th Economics : Chapter 10 : Rural Economics
இயல் 10
ஊரக பொருளாதாரம்
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது - மகாத்மா காந்தி
கற்றல் நோக்கங்கள்
1. ஊரகப் பொருளாதாரத்தின் சிறப்புக் கூறுகள் ஊரக பகுதிகள் வளர்ச்சியுற செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளல்.
2. ஊரக பகுதியில் காணும் பிரச்சனைகளை வெளிக்கொணரவும் அவற்றை களைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிதல்.
முன்னுரை
ஊரக பொருளாதாரம் பொருளாதார கொள்கைகளை பயன்படுத்தி, ஊரக பகுதிகளை வளர்ச்சியடையச் செய்வதைக் குறிக்கிறது. ஊரக பகுதி என்பது நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதி ஆகும். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊரக பகுதிகளுக்கு அடிப்படை அலகாக அமைவது வருவாய் கிராமம் ஆகும். ஊரக பொருளாதாரம் என்பது கிராமங்களையும், ஊரக சமுதாயம் என்பது கிராமங்களில் வாழும் மக்களையும் குறிக்கும். ஊரக பகுதிகளில் பல பிரச்சனைகள் உள்ளன. அவை வேளாண்மையில் பின் தங்கிய நிலை, குறைந்த வருமானம், குறைவான வேலைவாய்ப்புகள், வறுமை, குறைந்த உள்கட்டமைப்பு வசதிகள், குறைவான எழுத்தறிவு, குறைவான தொழிலாளர் உற்பத்தித்திறன், வேளாண் பொருட்களுக்கு குறைந்த விலை, கடன்கள், உபரி தொழிலாளர்கள், அதிக மக்கள் தொகை, அதிக அளவு இடப்பெயர்ச்சி, இயற்கை மற்றும் இயற்கை வளங்களை அதிகமாக சார்ந்திருத்தல் ஆகியனவாகும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 6,40,867 கிராமங்கள் உள்ளன. 121 கோடியாக உள்ள மொத்த மக்கள் தொகையில், 68.84 சதவீத மக்கள் ஊரகங்களில் வாழ்கின்றனர்.