Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | ஊரக உள்கட்டமைப்பு

இந்தியப் பொருளாதாரம் - ஊரக உள்கட்டமைப்பு | 11th Economics : Chapter 10 : Rural Economics

   Posted On :  07.10.2023 12:05 am

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 10 : ஊரக பொருளாதாரம்

ஊரக உள்கட்டமைப்பு

வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அடிப்படைத்தேவைகளுள் ஒன்றாகும்.சிறந்த வீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.

ஊரக உள்கட்டமைப்பு


ஊரக வீட்டு வசதி

வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அடிப்படைத்தேவைகளுள் ஒன்றாகும். சிறந்த வீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இப்பொழுது அனைவரும் தனிக் குடும்பமாக வசிக்க முனைவதால் வீட்டுமனை, வீடுகள் பெறுவதில் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. வீடுகளை ஏற்படுத்தி தருவது என்பது வீட்டினை வழங்குவது மட்டுமின்றி முறையான குடிநீர் வசதி, நல்ல சுகாதார வசதி, முறைப்படி கழிவுகளை அப்புறப்படுத்தும் வழிவகைகள் போன்றவற்றையும் ஏற்படுத்தித்தருவதாகும்.

குறைந்த செலவு தொழில்நுட்பத்தில் வீடு கட்டுவது, போதுமான வீட்டுக் கடன் வசதியை ஏற்படுத்தித் தருவது, மற்றும் ஊரக பகுதியிலுள்ள நிலமற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு மனையை அளிப்பது போன்ற வழிமுறைகளின் மூலம் வீட்டுமனை பெறுவதில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கலாம்.

NSSO புள்ளி விவரத்தின் படி 38 சதவீத குடும்பங்கள் ஓர் அறையையே வீடாகக் கொண்டும் மற்றொரு 36 சதவீத குடும்பங்கள் இரண்டு அறைகள் கொண்ட வீட்டிலும் வாழ்கின்றனர்.


ஊரக அங்காடி

ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை வாங்கவோ அல்லது விற்கவோ ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு ஊரக அங்காடியாகும். நகர்ப்புறம் மற்றும் இதர பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட இதர பொருட்கள் ஆகியவற்றை வாங்கவும் ஊரக அங்காடிகள் பயன்படுகின்றன.

விவசாயிகளிடம் பேரம் பேசும் ஆற்றல் குறைவு. இடைத்தரகர்கள், அங்காடி அமைப்பில் காணப்படும் குறைபாடுகள், சேமிப்பு கிடங்கு வசதிகள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதிகள் குறைவு, பண்டங்களை தரம் பிரித்தல் இன்மை, வேளாண் சார்ந்த தகவல் பற்றாக்குறை மற்றும் மோசமான அங்காடி அமைப்பு முறைகள் முதலியன ஊரக அங்காடியில் காணப்படும் குறைபாடுகளாகும்.

இந்தியாவின் ஊரக சாலை பகுதி 26.50 இலட்சம் கி.மீ ஆகும். இதில் 13.5 சதவீதம் பகுதிகளில் மட்டுமே சாலைகள் போடப்பட்டுள்ளன

இந்தியாவின் சாலை தொடர்பு வசதி அமைப்புகள் உலகிலேயே பெரிய அமைப்புகளுள் ஒன்றாகும். 1950 - 51ல் 4 இலட்சம் கி.மீட்டர் நீளமாக இருந்த இந்தியச் சாலைகளின் நீளம் தற்போது 2018-ல் 34 இலட்சம் கி.மீட்டர் ஆகும்.


ஊரக சாலைகள்

போக்குவரத்து முறைகளில் சாலை போக்குவரத்து மிகமுக்கிய பங்குவகிக்கிறது. ஊரக பொருளாதாரத்தில் ஊரக சாலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஊரக பகுதிகளில் நன்கு அமைக்கப்பட்ட சாலைகள், தொலைதூர கிராமங்களை பிற நகர்புற மையங்களோடு இணைப்பதற்கும், வேளாண் இடுபொருட்களின் போக்குவரத்து செலவைக் குறைப்பதற்கும், ஊரக உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் உதவுகின்றன.

ஊரக விவசாயிகளின் உற்பத்தியை நகர்ப்புற அங்காடிகளில் சந்தைப்படுத்துவதற்கும், தொலைதூர அங்காடிகளுக்கு செல்வதற்கும், பிற பணிகளை பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவுகிறது.


ஊரக மின்மயமாக்கல்

ஊரக மின்மயமாக்குதல் என்பது ஊரக பகுதிகளுக்கு மின் வசதியை ஏற்படுத்தித்தருவதாகும்.

ஊரக மின்மயமாக்குதலின் முக்கிய நோக்கங்கள்:

வேளாண் செயல்பாடுகளுக்கு மின் வசதியை அளிப்பதன் மூலம் வேளாண் உற்பத்தித் திறனை பெருக்குவது; பயிரிடும் நிலப்பரப்பை அதிகரிப்பது, ஊரக தொழிற்சாலைகளை மேம்படுத்துவது மற்றும் ஊரக பகுதிகளுக்கு மின்வசதியை ஏற்படுத்துதல் ஆகியன ஆகும். வேளாண் உற்பத்தியை அதிகப்டுத்த இந்தியாவின் பல மாநிலங்களில் மின்வசதி இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் ஊரக பகுதிகளில் மின் கட்டண வீதம் மிகக் குறைவாக உள்ளது.

2017 மார்ச் முடிவில் இந்தியாவின் 99.25 சதவீதம் கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன. 31.03.2017 ன்படி கீழ்க்கண்ட 20 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் முழுமையான அதாவது 100 சதவீத மின்வசதி பெற்றுள்ளன. அவை சண்டிகர், டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேளி, கோவா, குஜராத், மாஹாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா, அந்தோமான் நிக்கோபர் தீவுகள், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவை ஆகும்.

இந்தியாவில் ஊரக பகுதிகளில் மின்மயமாக்கிகளைப்பாதிக்கும் காரணிகள்

1. நிதிப் பற்றாக்குறை: மின்சாரம் உற்பத்திக்கும் அதனை விநியோகிப்பதற்கும் அதிக செலவு ஏற்படுகிறது இதற்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவு.

2. மாநிலங்களுக்கு கிடையேயுள்ள பிரச்சனைகள்: மின் திட்டங்களை நிர்வகிப்பதில்மாநிலங்ளுக்குகிடையே பிரச்சனைகள் நிலவுவதால் மின்சார விநியோகம் பாதிக்கப்படுகிறது

3. சீரற்ற நிலப்பரப்பு: கிராமப்புற பகுதிகள் சமமற்று இருப்பதால் (குண்டுகள், மலைகள்) முறையான மின் இணைப்பு வழங்குவது கடினமாகவும், புதிதாத மின் இணைப்பு கம்பிகள் அமைப்பதற்கு கடினமாகவும் அதிக செலவும் ஆகிறது.

4. மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பு: ஊரகபகுதிகளுக்குமின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பானது 25 சதவீதம் ஆகும்

5. மின் திருட்டு: வசதி படைத்த மக்கள் முறையற்ற வழிகளில் மின்சாரத்தைப் பயன்படுத்துதல் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுதல் போன்றவைகள் ஊரக பகுதிகளில் மின்மயமாக்குதலுக்கு தடையாக உள்ளன.


Tags : India | Economics இந்தியப் பொருளாதாரம்.
11th Economics : Chapter 10 : Rural Economics : Rural Infrastructure India | Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 10 : ஊரக பொருளாதாரம் : ஊரக உள்கட்டமைப்பு - இந்தியப் பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 10 : ஊரக பொருளாதாரம்