Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பொருளாதாரப் பெருமந்தம்

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - வரலாறு - பொருளாதாரப் பெருமந்தம் | 10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars

   Posted On :  05.07.2022 12:34 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

பொருளாதாரப் பெருமந்தம்

முதல் உலகப்போரானது போர்க்காலப் பெரும் வளர்ச்சி முடிவற்றுத் தொடரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட தொழில்களின் விரிவாக்கத்திற்கு வழிகோலியது.

பொருளாதாரப் பெருமந்தம்

முதல் உலகப்போருக்குப் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சிப்போக்குகள்

முதல் உலகப்போரானது போர்க்காலப் பெரும் வளர்ச்சி முடிவற்றுத் தொடரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட தொழில்களின் விரிவாக்கத்திற்கு வழிகோலியது. இருந்த போதிலும் போர் ஒரு முடிவுக்கு வந்தபோது, போர்த்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாகி வளர்ந்த சில தொழில்கள் கைவிடப்பட வேண்டியவைகளாக அல்லது மாற்றி அமைக்கப்பட வேண்டியவைகளாயின. வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல் சிக்கல்கள், நிலைமையை மேலும் மோசமாக்கியது. பொருளாதார தேசியவாதம் எனும் புதிய அலை பாதுகாப்பு அல்லது சுங்கத் தடைகள், இறக்குமதியாகும் பொருள்களின் மீது வரிசுமத்துவது எனும் பெயர்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, உலகவர்த்தகத்தைப் பாதித்தது. போர் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் மீதும் பெரும் கடன் சுமையை ஏற்றியது.

அமெரிக்காவில் பங்குச்சந்தையின் வீழ்ச்சி

முதல் பெரும்வீழ்ச்சி 1929 அக்டோபர் 24இல் அரங்கேறியது. அன்றைய தினம் நியூயார்க் நகரப் பங்குச்சந்தையில் பங்குகளின் விலைகள் செங்குத்தாய் சரிந்தன. நம்பிக்கை இழந்த முதலீட்டாளர்களும், வாடிக்கையாளர்களும் ஏனைய மக்களும் பங்குகளை விற்கத்துவங்கினர். இருப்பில் இருந்தனவற்றையும் விற்றுத்தீர்க்கத் தலைப்பட்டனர். ஆனால் அதனை வாங்குவதற்கு யாருமில்லை. இப்பெருவீழ்ச்சியும் முதலீட்டில் ஏற்பட்ட சரிவும் அமெரிக்க வங்கிகளின் தோல்விக்கு வழிவகுத்தன. அமெரிக்க முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் செய்திருந்த தங்கள் முதலீடுகளைத் திரும்பப்பெறும் கட்டாயத்திற்கு உள்ளாயினர்.

பன்னாட்டுச் செலாவணி முறையில் ஏற்பட்ட சீர்குலைவு

இங்கிலாந்தில் செலவுகளைச் சுருக்குதல், வரிகளை உயர்த்துதல் போன்ற அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே இங்கிலாந்து தங்க நாணய ஏற்பளவு (Gold Standard) முறையைக் கைவிட முடிவுசெய்தது. உடனடியாக ஏனைய பல நாடுகளும் தங்க நாணய ஏற்புமுறையை விட்டு விலகின. பெருங்கேட்டினை ஏற்படுத்தவல்ல இச்சூழலுக்கு எதிர்நடவடிக்கை மேற்கொள்ளவும், உள்நாட்டுச்சந்தையைப் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு நாடும் ஒரு பாதுகாப்புக் கொள்கையை மேற்கொண்டதோடு, பணத்தின் மதிப்பையும் குறைத்தன. பணமதிப்புக் குறைப்பால் கடன்கொடுப்போர், கடன் கொடுப்பதை நிறுத்தினர். இதனால் உலக அளவில் கடன் வழங்குதல், வாங்குதல் நடவடிக்கையில் பெருஞ்சுணக்கம் ஏற்பட்டது. இவ்வாறு தங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பல்வேறு நாடுகள் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத அளவில் உலகப்பொருளாதாரச் செயல்பாடுகளை சரிவுக்கு இட்டுச்சென்றது.இதனுடைய விளைவு ஆழமானதாகவும் நீண்டகாலம் நீடித்திருப்பதாகவும் அமைந்ததால் வரலாற்று அறிஞர்களும் பொருளாதார மேதைகளும் இதனைப் பெருமந்தம் என அழைக்கலாயினர்.

தங்கமதிப்பீட்டு அளவு என்பது ஒரு நாணயமுறை. இதில் ஒரு நாட்டினுடைய நாணயம் அல்லது காகிதப்பணம் தங்கத்தோடு நேரடித் தொடர்புடைய ஒரு மதிப்பினைப் பெற்றிருக்கும்.

அரசியலில் ஏற்படுத்திய அதிர்வுகள்

பெருமந்தம் பல நாடுகளின் அரசியல் நிலைமைகளை மாற்றியமைத்தது. இங்கிலாந்தில் 1931இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி தோற்கடிக்கப்பட்டது. அமெரிக்காவில் பெருமந்தத்திற்கு முந்தைய பெரும் வளர்ச்சிக்குத் தானே காரணம் என மார்தட்டிய குடியரசுக்கட்சி பெருமந்தத்திற்குப் பின்னர் இருபது ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் மக்களால் ஒதுக்கப்பட்டது.



Tags : World between Two World Wars | History இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - வரலாறு.
10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars : The Great Depression World between Two World Wars | History in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் : பொருளாதாரப் பெருமந்தம் - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - வரலாறு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 2 : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்