இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - வரலாறு - பாசிசத்தின், நாசிசத்தின் எழுச்சி | 10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars
பாசிசத்தின், நாசிசத்தின் எழுச்சி
மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராகத் திரும்பிய நாடுகளுள் முதல் நாடு இத்தாலியாகும். முதல் உலகப்போரில் இத்தாலியின் முதன்மையான சவாலான பணி ஆஸ்திரியர்களை தெற்கு முனையில் நிறுத்திவைப்பதாகும். அதே சமயத்தில் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர் ஆகியோர் பிளாண்டர்ஸ் போரில் ஜெர்மானியரை இக்கட்டாகச் சிக்கவைத்து பணியவைக்கவேண்டும் என்று எண்ணினர். போரில் பங்குகொண்டதால் ஏற்பட்ட பணச்செலவோ மிகப்பெரிது. மேலும் போருக்குப்பின்னர், போரின் ஆதாயங்கள் பகிரப்பட்டபோது இத்தாலி தான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவாகவே பெற்றது. சோசலிஸ்டுகளின் ஆஸ்திரிய ஆதரவு கத்தோலிக்கர்களின் ஆதரவைப் பெறாத இப்போரில் இத்தாலி பேரிழப்புகளைச் சந்தித்தது. வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் மூலமாக இத்தாலிக்கு மிகச்சிறிய பகுதிகளே கிடைத்ததால் தேசியவாதிகளும் மகிழ்வற்றே இருந்தனர். போரினால் ஏற்பட்ட பணவீக்கத்தைத் தொடர்ந்து பொருள்களின் விலைகள் உயர்ந்தன. எதிர்ப்புகளும், வேலைநிறுத்தங்களும் அடிக்கடி நடைபெற்றன. வெர்செய்ல்ஸில் ஏற்பட்ட அவமானத்திற்கு அப்போதைய இத்தாலியின் ஆட்சியர்களே பொறுப்பு என மக்கள் கருதினர்.
முசோலினியின் எழுச்சி
வெர்செய்ல்ஸ் உடன்படிக்கைக்குப் பின்னர், நடைபெற்றத் தேர்தலில் போல்ஷ்விசத்தை (சோவியத் கம்யூனிசம்) பின்பற்றுவதாகத் தங்களை அறிவித்துக்கொண்ட இத்தாலிய சோசலிஸ்டுகள் 1919 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு இடத்தைக் கைப்பற்றினர். இரும்பு வேலை செய்பவரின் மகனான முசோலினி, தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான தகுதியைப் பெற்றவர், சோசலிஸச் சிந்தனைகளுடன் பத்திரிக்கையாளர் ஆனார். ஆற்றல் மிக்க பேச்சாளரான முசோலினிமுதல் உலகப்போரில் இத்தாலி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த சோசலிஸ்டுகளிடமிருந்து பிரிந்து செல்வதற்கும், வன்முறையைப் பயன்படுத்துவதற்கும் ஆதரவளிக்கத் தொடங்கினார். 1919இல் பாசிசக்கட்சி தொடங்கப்பட்டபோது முசோலினி உடனடியாக அதில் உறுப்பினரானார். பாசிஸ்டுகள் அதிகாரம், வலிமை, ஒழுக்கம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியதால், தொழிலதிபர்கள், தேசியவாதிகள், முன்னாள் ராணுவத்தினர், நடுத்தரவர்க்கத்தினர், மனநிறைவற்ற இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவைப்பெற்றனர். பாசிஸ்டுகள் சுதந்திரமாக வன்முறையைக் கைக்கொண்டனர். 1922 அக்டோபரில் ஒரு நீண்ட அமைச்சரவைச் சிக்கலின் போது முசோலினி பாசிஸ்டுகளின் மாபெரும் அணிவகுப்பு ஒன்றை ரோமாபுரியை நோக்கி நடத்தினார். முசோலினியின் வலிமையைக் கண்டு வியந்துபோன அரசர் மூன்றாம் விக்டர் இம்மானுவேல், முசோலினியை ஆட்சியமைக்க வரவேற்றார். மக்களாட்சிக் கட்சியின் ஒருங்கிணைக்க முடியாத தன்மையும் உறுதியுடன் செயல்பட முடியாத இயலாமையும் முசோலினியின் வெற்றிக்கு உதவின.
பாசிஸம் என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட அதிதீவிர தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும். சர்வாதிகார வல்லமையும் எதிர்ப்பை வன்முறை கொண்டு அடக்குவதும் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் வலுவான மத்திய அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பதும் இதன் பண்புகளாகும். இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் ஐரோப்பாவில் முக்கியத்துவம் பெற்றது.
இத்தாலியில் 1924 தேர்தலில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்ட பின்னர் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன சோசலிஸ்டுகளின் தலைவரான மாட்டியோட்டி தேர்தல், விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறவில்லை எனக் கேள்வி எழுப்பியதால் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு எதிர்கட்சியினர் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இதன் விளைவாக முசோலினி எதிர்க்கட்சிகளைத் தடை செய்து பத்திரிகைகளைத் தணிக்கைக்கு உட்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது சிறைவைக்கப்பட்டனர். 1926இல் இரண்டாம் டியூஸ் (தலைவர்) எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்ட முசோலினி சட்டங்களை இயற்றும் அதிகாரத்துடன் சர்வாதிகாரியானார். வேலைநிறுத்தங்களையும், ஆலைமூடல்களையும் தடை செய்து சட்டங்கள் இயற்றினார். தொழிற்சங்கங்களும் தொழிற்சாலை முதலாளிகளும் இடம்பெறும் கழகங்கள் உருவாக்கப்பட்டன. 1938இல் பாராளுமன்றம் ஒழிக்கப்பட்டு அதற்கு மாற்றாகப் பாசிஸ்டுக்கட்சியின் மற்றும் கழகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்பட்டது. இவ்வேறுபாடு பொருளாதாரத்தின் மீதான முசோலினியின் சர்வாதிகாரக் கட்டுப்பாட்டுக்கு துணைநின்றதுடன், நிர்வாகம் மற்றும் ஆயுதப்படைகளின் தலைவராக மற்ற பிற அதிகாரத்தைச் செயல்படுத்தவும் அவருக்கு உதவியது.
பாசிஸ்ட் கட்சிக்கென ஒரு மரியாதையைப் பெறுவற்காக, வாட்டிகன் நகரத்தை ஒரு சுதந்திர அரசாக அங்கீகரிப்பதின் மூலம், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதரவைப் பெறுவதில் முசோலினி வெற்றிபெற்றார். இதற்குக் கைமாறாக திருச்சபை இத்தாலிய அரசை அங்கீகரித்தது. ரோமன் கத்தோலிக்கச் சமயம் இத்தாலியின் மதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் மதபோதனைகள் செய்வதற்கு ஆணையிடப்பட்டது. மேற்சொல்லப்பட்டவற்றை சரத்துக்களாகக் கொண்ட லேட்டரன் உடன்படிக்கை 1929இல் கையெழுத்தாயிற்று.
பொருளாதாரப் பெருமந்தக் காலத்தின் போது பெருமளவு விளம்பரம் செய்யப்பட்ட பொதுத்துறைப் பணிகளான புதிய பாலங்கள், சாலைகள், கால்வாய்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவை வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு சொல்லவில்லை . 1935இல் பன்னாட்டுச் சங்கம் முற்றிலுமாகச் செயலிழந்த பின்னர், பொருட்டு எத்தியோப்பியாவின் மீது படையெடுத்தார். அவருடைய படையெடுப்புப்பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பப் பயன்பட்டது.
(ஆ) முதல் உலகப் போருக்குப்பின் ஜெர்மனி
1918 முதல் 1933 முடிய ஜெர்மனி ஒரு குடியரசாக இருந்தது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் பாசிஸம் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் பலவாகும். 1871 முதல் 1914 வரையிலான காலப்பகுதியில் ஜெர்மனி அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சாதனைகளில் தலைச் சுற்றவைக்குமளவிலான உச்சத்தை எட்டியது. ஜெர்மனியின் பல்கலைக்கழகங்களும், அதன் அறிவியலும், தத்துவமும், இசையும் உலகம் முழுவதிலும் நன்கறியப்பட்டிருந்தன. தொழிற்சாலை உற்பத்தி சார்ந்த பல துறைகளில் ஜெர்மனியானது இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் காட்டிலும் சிறந்து விளங்கிக் காணப்பட்டது.
ஜெர்மனியின் தோல்வியும் முதல் உலகப்போரின் இறுதியில் பட்ட அவமானமும் நாட்டுப்பற்றுகொண்ட ஜெர்மனியின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெருமந்தம் மேலும் அவர்களது ஏமாற்றத்தை அதிகமாக்கி அவர்களைக் குடியரசுக்கட்சியின் அரசுக்கெதிராய்த் திருப்பியது.
ஜெர்மனியில் பாசிசத்தின் தோற்றம் 1919லிருந்து தொடங்குகிறது. 1919ஆம் ஆண்டில், ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது, மியூனிச் நகரில் சந்தித்து தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் உழைப்பாளர் கட்சி சுருக்கமாக நாசி (Nazi) கட்சியை நிறுவியது. ஹிட்லரும் அவர்களுள் ஒருவராக இருந்தார். முதல் உலகப்போரின் போது பவேரியாவின் படையில் பணியாற்றினார். அவரின் ஆற்றல் மிக்க உரை வீரர்களைத் தட்டி எழுப்பியது. 1923இல் பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற அவர் முயற்சியை மேற்கொண்டார். மியூனிச் நகரில் முன்கூட்டியே திட்டமிடப்படாமல் அவர் மேற்கொண்ட தேசியப்புரட்சி அவரைச் சிறையில் தள்ளியது. சிறையில் இருந்தபோது தனது அரசியல் சிந்தனைகளை உள்ளடக்கிய சுயசரிதை நூலான மெயின் காம்ப் (Mein kampf - எனது போராட்டம்) எனும் நூலை எழுதினார். 1932இல் நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் 6,000,000 வாக்குகளைப் பெற்றனர். முதலாளிகள், சொத்து உரிமையாளர்கள் நாசிசத்தை ஆதரிக்க தொடங்கினர். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஹிட்லர் தவறான வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
ஹிட்லர்
சமூக ஜனநாயகக் கட்சியானது ஜெர்மன் பொதுத்தொழிலாளர் கழகம் என்ற பெயரில் 1863 மே 23இல் லிப்சிக் நகரத்தில் நிறுவப்பட்டது. அதனை நிறுவியவர் பெர்டினன்ட் லாஸ்ஸல்லி என்பவராவார். 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியைச் சேர்ந்த ஜெர்மானிய மேட்டுக் குடியினர் ஒரு சோசலிசக்கட்சியின் இருப்பையே புதிதாக ஒன்றிணைக்கப்பட்ட ரெய்க்கின் (குடியரசு) பாதுகாப்புக்கும் உறுதிப்பாட்டிற்கும் ஒரு அச்சுறுத்தலாகக் கருதினர். எனவே பிஸ்மார்க் 1878 முதல் 1890 வரை இக்கட்சியைத் தடைசெய்திருந்தார்.
1945இல் ஹிட்லரின் மூன்றாவது ரெய்க்கின் (குடியரசின்) வீழ்ச்சியைத் தொடர்ந்து இக்கட்சி புத்தெழுச்சி பெற்றது. ஹிட்லரை எதிர்த்த கட்சி என்ற பெயருடன் வெய்மர் காலத்திலிருந்து செயல்படும் ஒரேகட்சி இதுவேயாகும்.
கம்யூனிஸ்டுகள் சமூக ஜனநாயகக் கட்சியுடன் (Social Democratic Party) கூட்டணி வைக்க மறுத்ததால் ஜெர்மனியில் குடியரசு ஆட்சி கவிழ்ந்தது. அதன்விளைவாகத் தொழிலதிபர்களும் வங்கியாளர்களும் குடியாட்சிக் கட்சியினரும் ஹிட்லரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் 1933இல் ஹிட்லரை சான்சிலராக (முக்கிய அமைச்சர்) பதவியில் அமர்த்தும்படி குடியரசுத் தலைவர் வான் ஹிண்டன்பர்க் என்பாரை வற்புறுத்தினர். மூன்றாவது ரெய்க் (குடியரசு) என்றழைக்கப்பட்ட ஹிட்லரின் நாசி அரசு முதல் உலகப்போருக்குப் பின்னர் ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த பாராளுமன்ற ஜனநாயக அரசை முடிவுக்குக் கொண்டுவந்தது.
ஹிட்லர் வெய்மர் குடியரசின் கொடிக்குப் பதிலாக ஸ்வஸ்திக் சின்னம் () பொறிக்கப்பட்ட தேசிய சோசலிசக்கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். ஜெர்மனி மிகவும் மையப்படுத்தப்பட்ட நாடாக மாற்றப்பட்டது. நாசிச கட்சியைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என்று அறிவிக்கப்பட்டன. பழுப்புநிறச் சட்டை அணிந்த போர்வீரர்கள், முழங்கால்களுக்கு மேல் வரும் காலணிகள் அணிந்த புயல் படையினர் ஆகியோரின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது. ஹிட்லர் இளைஞர் அணியும், தொழிலாளர் அமைப்பும் நிறுவப்பட்டன. தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டன. அவற்றின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அனைத்துத் தொழிலாளர்களும் ஜெர்மன் தொழிலாளர் அமைப்பில் சேருவதற்கு வற்புறுத்தப்பட்டனர்.
வேலைநிறுத்தங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என அறிவிக்கப்பட்டன. தொழிலாளர்களின் ஊதியத்தை அரசே நிர்ணயித்தது. பத்திரிக்கைகள், அரங்குகள், திரைப்படங்கள், வானொலி, கல்வி ஆகிய அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
நாசி கட்சியின் பரப்புரைகளுக்கு ஜோசப் கோயபெல்ஸ் தலைமையேற்றார். இவர் திட்டமிடப்பட்ட பரப்புரைகளின் மூலம் பொதுமக்களின் கருத்துக்களை நாசிகளுக்கு ஆதரவாக மாற்றினார். கெஸ்டபோ எனும் ரகசியக் காவல்படை மற்றும் ஹிட்லரின் தேர்ந்தெடுக்கப்பட்ட மெய்க்காப்பாளர்களை ஹைட்ரிச் ஹிம்லர் என்பவர் நிர்வகித்தார்.
ஹிட்லருடைய அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளைப் பின்பற்றியதோடு யூத இன மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறைக் கொள்கையைப் பின்பற்றியது. யூதர்கள் அரசுப்பணிகளிலிருந்து நீக்கப்பட்டனர். பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்குக் குடியுரிமையும் மறுக்கப்பட்டது. யூதர்களின் வணிகங்கள் நிறுத்தப்பட்டன. அவர்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டன. இரண்டாவது உலகப்போர் வெடித்த பின்னர், மின்கம்பி வேலிகளால் சூழப்பெற்ற கண்காணிப்புக் கோபுரங்களுடன் கூடிய சித்ரவதை முகாம்கள் அமைக்கப்பெற்று அவற்றில் யூதர்கள் சிறை வைக்கப்பட்டனர். உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவைக் காட்டிலும் குறைவாகவே உணவு வழங்கப்பட்ட அவர்கள் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தப்பட்டார்கள். பின்னர் அவர்கள் பூண்டோடு அழிக்கப்படுவதற்கான முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொழிற்சாலை சார்ந்த முறைகளில் (விஷவாயு அறைகள்) கொல்லப்பட்டனர். இப்படுகொலை நாசிக்களால் இறுதித் தீர்வு (Final Solution) என்றழைக்கப்பட்டது.
1934ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் ஹிண்டென்பர்க் இயற்கை எய்தவே, சான்சிலராக இருந்த ஹிட்லர் குடியரசுத்தலைவராகவும் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் பொறுப்பேற்றார். ஹிட்லருடைய அயலுறவுக் கொள்கையானது ஜெர்மனியின் படைபலத்தை முன்பிருந்ததைப் போலவே பெருக்குவது, ஜெர்மனி வலுவிழந்து போவதற்குக் காரணமாயிருந்த வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை ஏற்காமல் மீறுவது என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.