இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - வரலாறு - தென் அமெரிக்காவில் அரசியல் வளர்ச்சிப் போக்குகள் | 10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars
தென்
அமெரிக்காவில் அரசியல் வளர்ச்சிப் போக்குகள்
ஐரோப்பியர்கள் அமெரிக்காவைக்
கண்டுபிடிப்பதற்கு முன்னர் மத்திய அமெரிக்காவில் மெக்சிகோ,
தென்
அமெரிக்காவில் பெரு ஆகிய பகுதிகளில் மூன்று நாகரிகங்களின் மையங்கள் இருந்துள்ளன.
மாயா, இன்கா,
அஸ்டெக்
நாகரிகங்கள் எனப்படும் இவைமிகவும் முன்னேறிய நாகரிகங்களாக இருந்துள்ளன.
இந்நாகரிகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பலநாடுகள் இருந்தன. சிறந்த நிர்வாகக்
கட்டமைப்புடன் வலிமைமிக்க அரசாங்கங்களை அவை கொண்டிருந்தன. 11ஆம்
நூற்றாண்டில் பெரிய நகரங்கள் இணைந்து மாயாபன் எனும் அமைப்பாக உருவானது (அமெரிக்க
மண்ணின் மைந்தர்களின் மாயா நாகரிக மையம்). இவ்வமைப்பு நூற்றுக்கும் மேற்பட்ட
ஆண்டுகள் செயல்பட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மாயாபன்
அழிக்கப்பட்டாலும் ஏனைய நகரங்கள் தொடர்ந்து இருந்தன. பதினான்காம் நூற்றாண்டில்
மெக்சிகோவிலிருந்து வந்த அஸ்டெக்குகள் மாயா நாட்டைக் கைப்பற்றி டெனோச்டிட்லான் எனும்
தலைநகரை நிறுவினர். ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் அஸ்டெக்குகள் தங்கள் பேரரசை ஆட்சி
செய்தனர்.
பதினாறாம் நூற்றாண்டில் (1519 தருவாயில்) அஸ்டெக்குகள் தங்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது ஹெர்னன் கோர்டஸ் எனும் ஸ்பானியரின் தலைமையில் வந்த விரல்விட்டு எண்ணக்கூடிய துணிச்சல்மிக்க வீரர்களின் முன்னர் மொத்தப் பேரரசும் நிலைகுலைந்தது. கோர்டஸின் படையெடுப்புடன் ஒட்டுமொத்த மெக்சிகன் நாகரிகமும் சீர்குலைந்தது. அத்துடன் பெருமை வாய்ந்த நகரமான டெனோச்டிட்லானும் அந்நாகரிகத்திற்கான சுவடுகளேதுமின்றி அழிந்துபோனது. இது உலகின் மிக மோசமான இனப்படுகொலைகளுள் ஒன்றாகும். மற்றொரு புகழ்பெற்ற படையெடுப்பாளர் பிரான்சிஸ்கோ பிசாரோ எனும் ஸ்பானியராவார். இவர் இன்கா பேரரசின் மீது படையெடுத்துக் கைப்பற்றினார். இன்கா பெயரிலேயே சில ஆண்டுகள் ஆட்சிபுரிய முயன்ற பிசாரோ அளவிடற்கரிய செல்வங்களைக் கைப்பற்றினார். பின்னர் ஸ்பானியர்கள் பெருவை தங்கள் பகுதிகளில் ஒன்றாய் மாற்றினர்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசியல், சுதந்திரம், நிர்வாக சுயாட்சி, பொருளாதாரத்தில் சுயாதிபத்திய உரிமை (சுயமாக முடிவெடுக்கும் உரிமை) ஆகிய கோரிக்கைகள் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவியது. ஹைதி நாட்டின் அடிமைகள், காலனியமக்கள் ஆகியோர்க்கும் ஆங்கிலேய, பிரெஞ்சு காலனி ஆதிக்க சக்திகளின் படைகளுக்குமிடையே கொடூரமான போர்கள் நடைபெற்றன. 1791-1804 காலப்பகுதிகளில் தௌசெயிண்ட் லூவெர்தூரி என்பவரின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டங்கள் பிரான்சின் காலனியாதிக்கக் கட்டுப்பாட்டிலிருந்து ஹைதி மக்கள் விடுதலை பெறுவதில் முடிந்தது. இவ்வாறு அடிமை முறையையும் பிரான்சின் காலனியர் கட்டுப்பாடுகளையும் தூக்கியெறிந்த முதல் கரீபிய நாடாக ஹைதி உருவெடுத்தது.
அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகள் லத்தீன் அமெரிக்கர்களுக்கு ஊக்கமளித்தன. 1808இல் நெப்போலியன் ஸ்பெயின், போர்த்துகல் ஆகிய நாடுகளின் மீது படையெடுத்தது தென் அமெரிக்காவில் விடுதலைப்போராட்டச் செயல்பாடுகளை விரைவுபடுத்தின. விடுதலை வீரர், ‘தளை தகர்ப்பாளர்' என அறியப்பட்டிருந்த சைமன் பொலிவர் என்பவரின் தலைமையில் ஏற்கனவே விடுதலை உணர்வு வளர்ந்து கொண்டிருந்தது. போர்த்துக்கலை நெப்போலியன் கைப்பற்றிய போது போர்த்துகீசிய அரச குடும்பம் லிஸ்பன் நகரைவிட்டு தப்பியோடியதால் போர்த்துகலின் காலனியாக இருந்த பிரேசில் சுதந்திர நாடானது. போர்த்துகல் அரியணைக்கான தனது உரிமையைத் துறந்த முதலாம் பெட்ரோ, பிரேசிலின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தார்.
1815இல் நெப்போலியன் வீழ்ச்சியுற்ற போது விடுதலைப்
போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தது. ஆனால் இச்சமயத்தில் அமெரிக்கக்
குடியரசுத்தலைவர் மன்றோ தனது புகழ்பெற்ற மன்றோ கோட்பாட்டை முன்வைத்தார்.
அமெரிக்காவின் எந்த பகுதியிலும் அது வடக்கோ தெற்கோ
ஐரோப்பியர்கள் தலையிட்டால் அது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கெதிரான போராகக்
கருதப்படும் என அறிவித்தார். இப்பயமுறுத்தல் ஐரோப்பியர்களை அச்சங்கொள்ள வைத்து
அவர்களை தென் அமெரிக்க விவகாரங்களிலிருந்து விலகியிருக்கச் செய்தது. 1830வாக்கில்
ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன. இவ்வாறு
ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அமெரிக்கா, தென்
அமெரிக்கக் குடியரசுகளைக் காப்பாற்றியது. ஆனால் காப்பாற்றிய அமெரிக்காவிடமிருந்து,
தென்
அமெரிக்காவைக் காப்பாற்ற யாருமில்லை.
லத்தீன்
அமெரிக்க தேசியவாதிகள் ஸ்பெயின், போர்த்துகல் ஆகியவற்றுக்கு எதிராக மட்டும் போர் செய்யவில்லை.
தங்களுக்கிடையேயும் மோதிக்கொண்டனர். 1821இல் மத்திய அமெரிக்கா மெக்சிகோவிடம் இருந்து
பிரிந்தது. பின்னர் (1839) மத்திய அமெரிக்காவே ஐந்து குடியரசுகளாகப் (கோஸ்டாரிக்கா, எல் சால்வடார், கவுதமாலா, ஹோண்டுராஸ், நிகராகுவா)
பிரிந்தது. 1828இல் உருகுவே பிரேசிலிடமிருந்துப் பிரிந்தது. 1830இல் பொலிவரால்
உருவாக்கப்பட்ட கிரான் கொலம்பியாவிலிருந்து வெனிசூலாவும், ஈக்வடாரும் பிரிந்தன.
இருபதாம்
நூற்றாண்டு தொடக்கத்தில், 1898இல் ஸ்பானியர்களைத்
தோற்கடித்த அமெரிக்கா கியூபாவையும் போர்ட்டோ ரிக்கோவையும் கைப்பற்றிக்கொண்டது.1898
முதல்
1902 வரைகியூபா அமெரிக்காவின் இராணுவ ஆட்சியின்
கீழிருந்தது. இறுதியில் அமெரிக்கர்கள் கியூபாவை விட்டு வெளியேறிய போது கியூபாவில்
கப்பற்படைத்தளம் ஒன்றை மட்டும் தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். 1904இல்
ரூஸ்வெல்ட், மன்றோ கோட்பாட்டில் ஒரு திருத்தத்தைக்
கொண்டுவந்தார். இத்திருத்தம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக இலத்தீன் அமெரிக்கா
விவகாரங்களில் தலையிட அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
இத்திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்னர் அமெரிக்கா அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல்
பொருளாதாரரீதியாகவும் மேம்பட்ட செல்வாக்குப் பெற்ற நாடானது.
தென் அமெரிக்காவில் பெருமந்தம்
பொருளாதாரப்
பெருமந்தத்தால் உருவான சூழ்நிலையில் சிலரின் அல்லது சில குடும்பங்களின் ஆட்சியால்
பல உறுதியான குழுக்களின் எதிர்பார்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மெக்சிகோவில் அதிருப்திக் குழுக்கள், நடுத்தரவர்க்க
அறிவுஜீவிகள், வேளாண் சமூகங்கள் ஆகியோரை உள்ளடக்கிய வன்முறை சார்ந்த சமூக எதிர்ப்புகள்
அரங்கேறின. வேறு இடங்களில் தேர்தல் சீர்திருத்தங்கள் புதிய சமூக குழுக்கள்
வாக்குப்பெட்டிகள் வழியாக அரசியல் அதிகாரத்தைப் பெற உதவி செய்தன.
இலத்தீன்
அமெரிக்கா, அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்ததோடு,
டாலர்
ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை . 1933க்குப் பின்னர்
அமெரிக்காவின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தன்னுடைய 'நல்ல
அண்டை வீட்டுக்காரன்' கொள்கையில்,
அமெரிக்கா
வேறு எந்த நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடாது என்று
கூறியதோடு லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப்
பொருளாதார தொழில்நுட்ப உதவிகளைச் செய்யவும் ஒத்துக்கொண்டார்.
டாலர் ஏகாதிபத்தியம்: இச்சொல் தொலைதூர நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்வதன் மூலம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும், தக்கவைத்துக் கொள்ளவும், அமெரிக்கா பின்பற்றியக் கொள்கையை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாகும்.