இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் - வரலாறு - ஆப்பிரிக்காவில் காலனிய எதிர்ப்பியக்கங்கள் | 10th Social Science : History : Chapter 2 : The World between Two World Wars
ஆப்பிரிக்காவில்
காலனிய எதிர்ப்பியக்கங்கள்
ஆப்பிரிக்காவின்
கடற்கரைப்பகுதிகளில் பதினாறாம் நூற்றாண்டில் இட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒருசில
ஐரோப்பியக் குடியேற்றங்களும் உருவாயின. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி கால்
நூற்றாண்டு வரையிலும் ஆப்பிரிக்காவின் உட்பகுதிகள் வெளியுலகத்துக்குத் தெரியாமலேயே இருந்தது. 1875க்குப்
பின்னர் ஐரோப்பியர்களின் காலனிகள் இங்கு உருவாயின. 1884-1885
ஆண்டுகளில்
நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டில் காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத்
தங்கள் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் ஆங்கிலேயருக்கும் தென்னாப்பிரிக்க போயர்களுக்கும் இடையே நடைபெற்றப் போர்
இத்தீர்மானத்திற்கு எதிரான செயலாகும்.
இங்கிலாந்தின்
காலனிகளான நேட்டால், கேப்காலனி ஆகிய இரண்டிற்கும் சுதந்திர போயர்
நாடுகளான டிரான்ஸ்வால் மற்றும் ஆரஞ்சு சுதந்திர அரசு ஆகியவற்றுக்கிடையே நீண்ட
காலமாக நட்புறவு நிலவவில்லை. 1886இல் டிரான்ஸ்வால் பகுதியில்
தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில்
ஆங்கிலேயச் சுரங்கத்தொழில் சார்ந்தோர் ஜோகன்னெஸ்பர்க்கிலும் அதன்
சுற்றுப்புறங்களிலும் குடியேறினர். இவர்களை வெறுத்த போயர்கள் இவர்களை
யுட்லேண்டர்ஸ் (Uitlanders- அயலவர்)
என்றே குறிப்பிட்டனர். குடியேறியவர் மீது அதிக வரிகளை விதித்த போயர்கள்,
அவர்களுக்கு
அரசியல் உரிமைகளையும் மறுத்தனர். யுட்லேண்டர்ஸின் அரசியல் உரிமைகள் குறித்த
பேச்சுவார்த்தைகளில் உடன்பாடுகளேதும் ஏற்படவில்லை. எனவே தென்னாப்பிரிக்காவில் யார்
அதிகாரம் மிகுந்தவர்கள்? போயர்களா?
அல்லது
ஆங்கிலேயர்களா? எனும் கேள்வியெழுந்தது. ஆங்கிலேயர்களால்
தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் போயர்கள் ஆயுதம் தரித்தனர். ஆங்கிலேயர்களைத்
தாக்குவதெனவும் முடிவு செய்தனர்.
1899இல் தொடங்கிய போயர் போர்கள் 1902
வரை
மூன்றாண்டுகள் தொடர்ந்தன. போரின் தொடக்கத்தில் போயர்கள் வெற்றிபெற்றனர். ஆனால் 1900இல்
முதற்பாதியில் புதிதாக தருவிக்கப்பட்ட ஆங்கிலப்படைகளால் போயர்கள் தோற்கடிக்கப்பட்டு
பிரிட்டோரியா கைப்பற்றப்பட்டது. ஆங்கிலேயர் போர் முடிந்துவிட்டது எனக்கருதினர்.
ஆனால் போயர்கள் கொரில்லாப் போரைக் கைக்கொண்டனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு
நீடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஆங்கிலேயர் வயல்களையும் பயிர்களையும்
நாசம் செய்தனர். போயர் பெண்களையும் குழந்தைகளையும் பாசறைகளில் சிறைவைத்தனர். உணவு,
மருத்துவப்
பற்றாக்குறையின் காரணமாகவும் சுகாதார வசதிகளின்மையாலும் 26,000
போயர்
மக்கள் மாண்டனர். இரண்டு போயர் நாடுகளையும் ஆங்கிலேயர் இணைத்துக்கொண்டனர். ஆனால்
நாளடைவில் சுயாட்சி வழங்கப்படுமென போயர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. 1907இல்
டிரான்ஸ்வால், ஆரஞ்சு சுதந்திர அரசு ஆகிய இருநாடுகளுக்கும்
முழுமையான பொறுப்பாட்சி வழங்கப்பட்டது. பின்னர் இந்நான்கும் ஓர் ஒன்றியமாக
உருவானது. மேலும் 1909இல் இங்கிலாந்துப்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தென்னாப்பிரிக்கச் சட்டம் கேப் டவுனில் ஒன்றியப்
பாராளுமன்றத்தை அமைத்துக் கொடுத்தது. 1910ஆம்
ஆண்டு தென்னாப்பிரிக்க ஒன்றியம் (Union of South Africa) உதயமானது.
போயர் போர்
தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவளியினரே ஆப்பிரிக்கநேர்கள் என்றும் அழைக்கப்பட்ட போயர்கள் ஆவர். இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ்.
தென்னாப்பிரிக்காவில் இருமுக்கிய அரசியல்
கட்சிகள் செயல்பட்டன. அவை பெரும்பாலும் ஆங்கிலேயர்களைக் கொண்ட யூனியனிஸ்ட் கட்சி
மற்றும் ஆப்பிரிக்க நேர்கள் என்றழைக்கப்பட்ட போயர்களைப் பெரும்பான்மையாகக்
கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கக் கட்சி. முதல் பிரதம மந்திரியான போதா,
தென்
ஆப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்தவர் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து ஆட்சியை நடத்தினார்.
ஆனால் தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்த போராடும் குணமிக்க ஒரு பிரிவினர்
ஹெர்சாக் என்பவரின் தலைமையின் கீழ் தேசியக்கட்சி எனும் கட்சியைத் தொடங்கினர். 1920ஆம்
ஆண்டுத் தேர்தலில் தேசியக் கட்சி நாற்பத்து நான்கு இடங்களைக் கைப்பற்றியது.
தென்னாப்பிரிக்கக் கட்சி ஸ்மட்ஸ் என்பாரின் தலைமையில் நாற்பத்தொன்று இடங்களில்
வெற்றி பெற்றது. இத்தருவாயில் ஆங்கிலேயர் அதிகமிருந்த யூனியனிஸ்ட் கட்சி
தென்னாப்பிரிக்கக் கட்சியுடன் இணைந்தது. இதனால் போர்க்குணம் கொண்ட ஆப்பிரிக்க
நேர்களின் கட்டுப்பாட்டிலிருந்த தேசியக் கட்சியைக் காட்டிலும் ஸ்மட்ஸ்
பெரும்பான்மை பெற்றார்.
தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல்:
இன
ஒதுக்கல் என்பதன் பொருள் தனிமைப்படுத்துதல் அல்லது ஒதுக்கிவைத்தல் என்பதாகும். இது
1947இல் தேசியவாதக் கட்சியின் கொள்கையாயிற்று. 1950
முதல்
வரிசையாகப் பல சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. ஒட்டுமொத்த நாடும் பல்வேறு
இடங்களுக்கான தனித்தனிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டன. வெள்ளை இனத்தவருக்கும்
வெள்ளையரல்லாத இனத்தவருக்கும் இடையில் திருமணங்கள் தடைசெய்யப்பட்டன. ஏறத்தாழ
அனைத்துப் பள்ளிகளும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டன. இதன்மூலம்
வெள்ளையருக்கு வழங்கப்படும் கல்வியில் இருந்து மாறுபட்ட கல்வியை ஏனைய
ஆப்பிரிக்கர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. பல்கலைக்கழகக் கல்வியும் பிரித்து
வைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளை கறுப்பின மக்களுக்கிடையிலான அரசியல்
சமத்துவம் என்பது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும் கறுப்பின
மக்களின் ஆட்சியைக் குறிக்கும் உண்மையின் அடிப்படையிலேயே இன ஒதுக்கல் உருவானது.
நெல்சன் மண்டேலா அரசியல் வானில் பிரகாசிக்கத் தொடங்கிப் பொதுமக்களின் பேராதரவைப்
பெற்றபோது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சித் தடைசெய்யப்பட்டு நெல்சன் மண்டேலா
சிறை வைக்கப்பட்டார். உலக அளவிலான எதிர்ப்பலைகள் தென் ஆப்பிரிக்காவில் இனவாத
ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர உதவியது. 1990இல்
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டு மண்டேலா 27
ஆண்டுகளுக்குப்
பின் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் ஆப்பிரிக்க
மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. தேர்தலில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்
வெற்றிபெற்று மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினக் குடியரசுத்
தலைவரானார். இன ஒதுக்கல் கொள்கை ஒரு முடிவுக்கு வந்தாலும் ஆப்பிரிக்காவின்
பொருளாதார மண்டல முழு ஆதிக்கமும் வெள்ளை இனத்தவரிடமே உள்ளது.
ஆப்பிரிக்கநேர்கள்
கறுப்பின மக்களுக்கும் சிறுபான்மை இந்தியர்களுக்கும் எதிராக கடுமையான
இனக்கொள்கையைப் பின்பற்றினர். கறுப்பின மக்களின் குடியிருப்புகளை நகரங்களின் சில
குறிப்பிட்ட பகுதிகளுக்குள்ளாக கட்டுப்படுத்துவதற்காக 1923இல்
ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஏற்கனவே 1913இல்
இயற்றப்பட்ட சட்டம் வெள்ளை மற்றும் கறுப்பின விவசாயிகளைப் பிரித்து வைத்தது.
இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கறுப்பின மக்களால் நிலங்களை வாங்குவது
முடியாமலேயே போனது. 1924ஆம் ஆண்டுத் தேர்தலில்
வெள்ளையினச் சுரங்கத் தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொழிலாளர் இயக்கத்தின் ஆதரவுடன்
தேசியக்கட்சி வெற்றி பெற்றது. 1924இல் இயற்றப்பட்ட சட்டம்
கறுப்பின மக்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதிலிருந்தும் தொழிற்சங்கத்தில்
சேருவதில் இருந்தும் தடுத்தது. மாநிலத்தில் கறுப்பின மக்களின் வாக்குரிமை
பறிக்கப்பட்டது. இவ்வாறு மண்ணின் மைந்தர்களான கறுப்பின மக்கள் அனைத்து உரிமைகளும்
மறுக்கப்பட்டு அவர்கள் அரசியல், பொருளாதாரம்,
சமூகம்
ஆகிய அனைத்துத் தளங்களிலும் துன்புற்றனர்.